Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:06 am on May 10, 2013 Permalink | Reply  

    பேராசை தரும் பேரழகு! 

    பொதுவாகவே பெண்களின் அழகைப் பார்த்து ஆண்களுக்கு ஆசை வரும். அந்த அழகு ஒரு பெண்ணுக்கு அளவுக்கு மீறி கூடிக்கொண்டே போனால்?

    நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன். சில பெண்களை விட மாட்டேன்” என்று வைரமுத்து அவர்கள் எழுதிய நிலைதான் உண்டாகும்.

    அந்தப் பேரழகி நடக்கும் தெருவில் ஆண்கள் நுழைந்தால் அவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதால் ஆண்களை விடமாட்டேன் என்கிறான் காதலன். ஆனால் சில பெண்களையும் விட மாட்டானாம். ஏன்? அவளைப் பார்த்தால் பெண்களுக்கே பேராசை வந்து விடுமாம்.

    அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆம். செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலில் “பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுகிறார்.

    இப்படி பெண்ணுக்குப் பெண் பேராசை கொள்ளும் பெண்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குற்றாலத்தில் அப்படியொரு பெண் இருந்திருக்கிறாள். அவளைப் பற்றி திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியிருக்கிறார்.

    கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
    கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
    பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
    பேடையன்னம் போலவே வந்தாள்
    நூல் – திருக்குற்றாலக் குறவஞ்சி
    எழுதியவர் – திரிகூட ராசப்பக் கவிராயர்

    அவள் பெயர் வசந்தவல்லி. காலையில் எழுந்து குளித்து முடித்து அழகு செய்து கொண்டு கிளம்பி வந்தாள். குற்றாலத்துப் பெண்கள் அவளைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கண்களே அவர்களுக்கு வசந்தவல்லியின் அழகை விளக்கிவிடுகின்றன. அவளைப் பார்த்து பெண்கள் மயங்கும்படியாக பேடையன்னம் போல வசந்தவல்லி நடந்துவந்தாள்.

    அன்றைக்கே பெண்ணுக்குப் பெண் மயங்கும் அழகு இருந்திருக்கிறது. அதைப் பின்னாளில் கவியரசர் “உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும். பெண்களுக்கே ஆசை என்றால் என் நிலையை என்ன சொல்வேன்” என்று பூவும் பொட்டும் திரைப்படத்தில் எழுதினார்.

    பழமை மாறாத புதுமை” என்று மெல்லிசை மன்னர் அடிக்கடி சொல்வார். கண்ணதாசன் எழுதியதும் அப்படித்தான். புதுமையான முறையில் சொன்னார். ஆனால் பழையதையே சொன்னார். ஆம். கம்பராமாயணத்தில் சொல்லப்பட்ட பழைய கருத்தையே புதுமையாகச் சொன்னார். கவியரசர் படிக்காத கம்பராமாயணமா?!

    கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே; கண்ட
    பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு? என்றாள்
    நூல் – கம்பராமாயணம்
    காண்டம் – ஆரண்ய காண்டம்
    காட்சிக் குறிப்பு – சீதையைக் கண்ட சூர்ப்பனகை வியத்தல்
    எழுதியவர் – கம்பர்

    சூர்ப்பனகை இராமனைக் கண்டு மயங்கி அவனோடு பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப் பக்கமாக சீதை வருகிறாள். அவளைப் பார்த்ததுமே அவள் திருமகளோ என்று ஒரு ஐயம் சூர்ப்பனகைக்கு வருகிறது.

    சீதையினுடைய அழகு அவளையே மயக்கக் கண்டாள். அவளைப் பார்த்த கண்ணால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. அவள் அழகைக் கண்டு எண்ணிய கருத்தை வேறெதிலும் செலுத்த முடியவில்லை. ஒரு பெண்ணான தன்னுடைய நிலையே இப்படியிருக்கிறதே ஒரு ஆண் கண்டால் என்னாகும் என்று வியக்கிறாள்.

    அன்று சூர்ப்பனகை நினைத்ததையே ஆணின் கூற்றாக மாற்றி கவியரசர் எழுதியிருக்கிறார்.

    காலங்கள் மாறினாலும் காதலியின் அழகை ஆண்கள் இப்படிப் பெருமையோடு வருணித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    செந்தமிழ்த் தேன்மொழியாள்
    ………………………
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ
    படம் – மாலையிட்ட மங்கை
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.ஆர்.மகாலிங்கம்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் டி.கே.இராமமூர்த்தி
    பாடலின் சுட்டி – http://youtu.be/WPDRRh1Ve6M

    உன்னழகைக் கண்டுகொண்டால்
    பெண்களுக்கே ஆசை வரும்
    பெண்களுக்கே ஆசை வந்தால்
    என் நிலமை என்ன சொல்வேன்
    படம் – பூவும் பொட்டும்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை – ஆர்.கோவர்தனம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/o2Iu8lXOlcs

    டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
    …………………………….
    நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன்
    சில பெண்களை விடமாட்டேன்
    படம் – இந்தியன்
    பாடல் – வைரமுத்து
    பாடியவர் – ஹரிஹரன், ஹரிணி
    இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

    அன்புடன்,
    ஜிரா

    160/365

     
    • dagalti (@dagalti) 11:23 am on May 10, 2013 Permalink | Reply

      ஒரு ஆண் equivalenடும் கம்பன்ல வரும்.

      விஸ்வாமித்ரர் ராமனைப் பார்த்து

      ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்

      -னு விளிப்பார்

      ஆண்கள் தாங்கள் பெண்களாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்கவைக்கும் தோளழகு உடையவனே

    • rajnirams 11:27 am on May 10, 2013 Permalink | Reply

      ஹா ஹா,நல்ல தேர்வு.அருமையான பதிவு.காத்திருந்த கண்களில் கூட கண் படுமே பாடலில் மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம் என்ற கவியரசரின் வரிகளும் பிரசித்தம்.
      கொடி பறக்குது பாடலில் வைரமுத்துவின் வரிகளில் “நாயகியின் தற்பெருமை”வரிகள்-“புடவை மாற்றும் போது கர்வம் வந்தது” என்ற காதல் என்னை காதலிக்கவில்லை பாடல் வரிகள்.நன்றி.

    • Arun Rajendran 12:21 pm on May 10, 2013 Permalink | Reply

      “வெங் களி விழிக்கு ஒரு
      விழவும் ஆய். அவர்
      கண்களின் காணவே
      களிப்பு நல்கலால்.
      மங்கையர்க்கு இனியது ஓர்
      மருந்தும் ஆயவள்.
      எங்கள் நாயகற்கு. இனி.
      யாவது ஆம்கொலோ?”
      (மிதிலைக் காட்சிப் படலம் – கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு – பாடல் எண்: 596)

      பார்க்கும் ஆண்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய அழகைக் கொண்டப் பெண்கள் கூட சீதையின் அழகால் கவரப்படுகின்றனர்-னு கம்பன் சீதையின் அழகை கட்டியம் கூறுகிறார்..
      நன்றிகள் ஜிரா

    • amas32 9:08 am on May 11, 2013 Permalink | Reply

      அழகு என்றுமே கண்ணுக்கு விருந்து. அது மலரோ, மலையோ, மகவோ, ஆணோ அல்லது பெண்ணோ 🙂

      பெண்ணே பெண்ணைப் பார்த்துப் பொறாமை கொள்ளும் அழகு பல பேரிடம் உள்ளது. அந்த கால வைஜயந்தி மாலா, லலிதா பத்மினி ராகினி முதல் இன்றைய ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப் வரை அசந்து போகும் அழகை சிலருக்கு வாரி வழங்கியிருக்கிறான் பிரம்மன்.

      இந்த அழகை ரசிக்கும் தன்மையில் சற்றே வித்தியாசமாக பெண்ணே பெண்ணின் மேல் ஆசைக் கொள்ளும் அழகு என்கிறார்கள் கவிஞர்கள். அதுவும் நடக்கக் கூடியது தானே.

      ஆனால் அசாத்திய அழகு பல சமயங்களில் பெண்ணுக்கே எதிரியாகிவிடுகிறது. எத்தனை சான்றுகள் அதற்கு! அகலிகை, சீதை, தெரிந்த கதைகள். தெரியாமல் மறைக்கப்பட்டன எத்தனையோ?

      amas32

  • என். சொக்கன் 12:40 pm on March 9, 2013 Permalink | Reply  

    குற்றால நிலவு 

    • படம்: உலகம் சுற்றும் வாலிபன்
    • பாடல்: நிலவு ஒரு பெண்ணாகி
    • எழுதியவர்: வாலி
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
    • Link: http://www.youtube.com/watch?v=drcBFuf2y8U

    புருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக,

    பருவம் ஒரு தளமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ!

    குறுநகையின் வண்ணத்தில், குழி விழுந்த கன்னத்தில்,

    தேன் சுவையைத்தான் குழைத்து, கொடுத்ததெல்லாம் இவள்தானோ!

    பெண்களின் வளைந்த புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவது பழைய மரபு. அந்த வில்லில் எய்யப்படுகிற அம்பாக அவர்களுடைய விழிகளை வர்ணித்து, அதன்மூலம் ஆண்கள்மீது பெண்கள் போர் தொடுப்பதாகக் கற்பனை செய்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. செய்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.

    உலகம் சுற்றும் வாலிபன், குற்றாலத்துக்கு வரமாட்டானா என்ன? திரிகூட ராசப்பக் கவிராயரின் அந்தக் கற்பனையை மிக அழகான இந்த வர்ணனைப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.

    பால் ஏறும் விடையில் வரும் திரிகூடப்பெருமானார் பவனி காணக்

    கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள்

    சேல் ஏறும் கலக விழிக் கணை தீட்டிப், புருவ நெடும் சிலைகள் கோட்டி,

    மால் ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே!

    ’பால் ஏறும் விடை’ என்றால், பால் போன்ற வெள்ளை வண்ணத்தைக் கொண்ட எருது, அதன்மீது ஏறிப் பவனி வருகிறார் திரிகூடப் பெருமான், அதாவது, சிவன்.

    அவருடைய பவனியை வேடிக்கை பார்க்கப் பல பெண்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் யார் தெரியுமா?

    ’கால் ஏறும் காமன்’, அதாவது காற்றில் பறந்து வரும் மன்மதன், அவனுடைய படையில் உள்ள வீராங்கனைகள்தான் இந்தப் பெண்கள்.

    வெறும் வீராங்கனைகள்மட்டும் போதுமா? சண்டை போட ஆயுதம் வேண்டாமா?

    ஆயுதம் இல்லாமலா? மீன் போன்ற அவர்களுடைய விழிகள்தான் அம்புகள், அவற்றால் ஒரு பார்வை பார்த்தால் போதும், உலகம் கலகமாகிவிடும்!

    அப்படிப்பட்ட அம்பை நன்கு தீட்டி, புருவம் என்கிற நீண்ட வில்களில் பொருத்தி எய்யத் தயாராகிறார்கள் அந்தப் பெண்கள். அந்த அம்பால் தாக்கப்பட்ட ஆண்கள், உடனே மயங்கி விழவேண்டியதுதான்.

    வீராங்கனைகள் ரெடி, ஆயுதமும் ரெடி, போர் அறிவிக்க முரசு வேண்டாமா?

    அதுவும் உண்டு. அவர்களுடைய கால்களில் உள்ள மணிச் சிலம்புகளின் சத்தம்தான், மன்மத யுத்தம் தொடங்கப்போவதற்கான அறிவிப்பு.

    இனி, ஆண்கள் கதி என்னாகும்?

    ***

    என். சொக்கன் …

    09 03 2013

    098/365

     
    • GiRa ஜிரா 9:51 am on March 10, 2013 Permalink | Reply

      இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ….

      கண்ணையும் புருவத்தையும் வெச்சே கவிஞர்கள் ஆயிரம் பாட்டு எழுதுவாங்க போல. அப்பப்பா.. கண்ணாலே வலை விரிச்சான்.. கண்களும் கவிபாடுதே.. கண்விழி என்பது கட்டளையிட்டது.. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே…

      பாரதியார் கூட வேலை ஒதுக்கிவிட்டு வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா ஆங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா என்று எழுதியிருக்கிறார்.

      குற்றாலக் குறவஞ்சி பாடல் மிகமிக அழகு.

      இதே போல அருணகிரியும் ஒரு பாட்டு எழுதியிருக்காரு
      சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
      மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
      வேல்பட்டழிந்து வேலையும் சூரனும் வெற்பும் அவன்
      கால் பட்டழிந்தது இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே

      அது சரி… பால் ஏறும் கால் ஏறும் சேல் ஏறும்னு எல்லாத்துக்கும் விளக்கம் சொன்ன நீங்க… மால் ஏறப் பொருதுங்குறதுக்கு விளக்கம் சொன்னா இன்னும் கொஞ்சம் ரசிச்சுக்குவேன் 🙂

      • என். சொக்கன் 10:02 am on March 10, 2013 Permalink | Reply

        மால் ஏறப் பொருத, மயக்கம் ஏற்படும்படி போர் செய்த 🙂

    • N Rajaram 3:46 pm on March 11, 2013 Permalink | Reply

      “புருவம் என்கிற நீண்ட அம்புகளில் பொருத்தி” – புருவம் என்னும் நீண்ட விற்களில்’ என்றல்லவா இருக்க வேண்டும்?

      • என். சொக்கன் 4:41 pm on March 11, 2013 Permalink | Reply

        Sorry, my mistake. Corrected now

        • N Rajaram 12:56 pm on March 12, 2013 Permalink

          விற்கள் – வில்கள்

          thanks for correcting my mistake too 😉

          இலவச கொத்தனாரின் புத்தகத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை 😉

        • என். சொக்கன் 12:57 pm on March 12, 2013 Permalink

          நீங்கள் எழுதியதில் Mistake எதுவும் இல்லைங்க, வில்கள், விற்கள் ரெண்டு கட்சியும் உண்டு, நான் முதல் கட்சி, அவ்ளோதான்!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel