Updates from February, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:48 am on February 10, 2013 Permalink | Reply  

  மலையாளக் காற்று 

  தமிழ்மொழிக்கும் மலையாளத்துக்கும் நிறைய நெருக்கங்கள் உண்டு. அதனால்தானோ என்னவோ மலையாளப் படங்களில் தமிழ்ப்பாத்திரங்களும் தமிழ்ப்படங்களில் மலையாளப் பாத்திரங்களும் விரவிக்கிடக்கும். மணிச்சித்ரதாழு, ஒரு யாத்ராமொழி மற்றும் மேலேபரம்பில் ஆண்வீடு ஆகிய படங்கள் சிறந்த உதாரணம். தமிழிலும் நிறைய சொல்லலாம்.

  ஆனால் பாடல்கள்? மலையாளப் பாத்திரங்கள் கதையோடு ஒட்டி வருகையில்தான் மலையாளப் பாடல்கள் தமிழ்த்திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

  அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பி.பானுமதி பாடிய “லட்டு லட்டு மிட்டாய் வேணுமா” என்ற பாடலின் நடுவில் மலையாள வரிகளையும் பாடுவார். இதே கதை நீரும் நெருப்பும் படமாக வந்த போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈசுவரி “விருந்தோ நல்ல விருந்து” என்று பாடும் போது மலையாளத்து வரிகளையும் பாடுவார். இந்தப் பாடல்களைப் பற்றி Multi Cuisine Songs என்ற பதிவில் முன்பே பார்த்தோம்.

  பாரதவிலாஸ் என்றதொரு திரைப்படம் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த போது அதில் மலையாள முஸ்லீமாக வி.கே.ராமசாமியும் அவரது மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்தார்கள். அந்தப் படத்தில் இடம்பெற்ற ”இந்திய நாடு என் வீடு” என்ற பலமொழிக் கதம்பப் பாட்டில் தமிழும் மலையாளமும் கலந்து எம்.எஸ்.விசுவநாதனும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடுவார்கள்.

  படச்சோன் படச்சோன் எங்கள படச்சோன்
  அல்லாஹு அல்லா எங்கள் அல்லா
  தேக்கு தென்னை பாக்குமரங்கள் இவிடே நோக்கனும் நீங்க
  தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து வெள்ளையன் வந்தான் வாங்க… படச்சோன் படச்சோன்

  அடுத்து வந்தது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நான் அவன் இல்லை என்ற திரைப்படம். இது பல பெண்களை ஏமாற்றிய ஒருவனின் கதை. மலையாள தேசத்துக்கும் போகிறான் அவன். நீராடுகிறாள் ஒருத்தி. அவளோடு ஆட விரும்புகிறான். முள்ளை முள்ளால் எடுப்பது போல மலையாளத்து நாரியை மலையாளத்தால் எடுக்கிறான் அவன்.

  மந்தார மலரே மந்தார மலரே
  நீராட்டு களிஞ்ஞில்லே
  மன்மத்த ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூடவருனில்லே
  என்று அவள் பாடும் போது
  மன்மதன் இவிடத்தன்னே உண்டு
  என்று அவன் பாடத்தொடங்குவான்.

  ஜெயசந்திரனும் வாணிஜெயராமும் பாடிய இந்த இனிய பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் பாடலில் “மன்மதன் இவிடத்தன்னே உண்டு” என்று ஜெயச்சந்திரன் பாடியதும் ஒரு அழகிய இசைக்கோர்ப்பு வரும். அதைத்தொடர்ந்து “ஓ எந்தோ” என்று எல்.ஆர்.ஈசுவரி சொல்வது மிக மிக அழகு.

  கடைசியில் சிலவரிகள் தமிழில் இருந்தாலும் இப்படி மலையாள மொழி தமிழ்ப் படத்தில் மிகச்சிறந்த இசையோடு வந்தது இதுவே முதன்முறை.

  இதே திரைப்படம் நான் அவனில்லை என்று பல ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்டது. அதில் இதே காட்சியமைப்பு உண்டு. ஆனால் மந்தாரமலரே பாடல் அளவுக்கு ஒரு கலைநயம் மிகுந்த பாடலாக இல்லை. கடலினக்கரே போனோரே என்ற மலையாளைப் பாடல்களைக் கேலி செய்வது போல பாடியிருப்பார்கள். சற்றும் கற்பனைத்திறம் இல்லாத இது போன்ற பாடல்கள் தமிழ்த்திரையிசையின் தேய்வுக்கு எடுத்துக்காட்டு.

  சரி. மறுபடியும் பின்னோக்கிச் செல்வோம். எழுபத்து ஒன்பதில் மீண்டுமொரு இனிய மலையாளப்பாடல் தமிழில் இளையராஜாவின் கைவண்ணத்தில் வந்தது. எம். ஜி. வல்லபன் எழுத, ஜென்சி ஆண்டனி என்ற கேரளநாட்டுப் பாடகியின் குரலில் “ஞான் ஞான் பாடனும் ஊஞ்ஞால் ஆடனும்” என்று தேவராஜ்-மோகன் இயக்கத்தில் பூந்தளிர் பூத்தது.

  கேரளத்துக்குச் செல்லும் சிவகுமாரின் பாத்திரம் அங்கிருக்கும் சுஜாதாவின் மீது காதல் கொள்கிறது. சுஜாதாவும் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவரை ஓவியமாக வரையும் காட்சியில் இந்தப் பாடல் வரும். நல்ல பாடலாக இருந்தாலும் இதே படத்தில் வந்த “மனதில் என்ன நினைவுகளோ”, “வா பொன்மயிலே” மற்றும் “ராஜா சின்ன ராஜா” போன்ற பிரபல பாடல்களால் அமுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

  அதற்குப் பிறகு பெரிய இடைவெளி. ஏ.ஆர்.ரகுமான் வரவினால் தமிழில் இரண்டு பாடல்களில் மலையாளம் கலந்து வந்தது. முத்து திரைப்படத்தில் வரும் குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ என்ற பாடலில் “ஓமணத்திங்ஙள் கிடாவோ” என்ற சுவாதி திருநாளின் சாகித்யம் பயன்படுத்தப்பட்டது. இதுவொரு தாலாட்டுப் பாட்டு. அதே போல உயிரே திரைப்படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலில் ”கொஞ்ஞிரி தஞ்ஞிக் கொஞ்ஞிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ” என்று மலையாள வரிகள் நடுநடுவாக வரும்.

  ஆனால் தனிப்பாடல் என்றால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் வந்த ஆரோமோளே என்ற பாடலைத்தான் சொல்ல வேண்டும். கேரளத்துக்குக் காதலியைத் தேடிச் செல்லும் தமிழ்க் காதலனின் ஏக்கக் குரலாக ஒலித்தது அந்தப் பாடல்.

  பொதுவாகவே தமிழ்ப்பாடல்கள் கேரளத்தில் பிரபலம் ஆகும் அளவுக்கு மலையாளப்பாடல்கள் தமிழ்நாட்டில் பிரபலமாவதில்லை. அதற்குக் காரணம் சதுக்க காலத்து நடையும் எந்தப் பாட்டுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒருவித சோகமும் மென்மையாக ஒலிக்கும் ஆண்பாடகர்களின் குரலும் காரணம் என்பது என் கருத்து. ஆரோமோளே பாட்டில் ஏ.ஆர்.ரகுமான் அந்தச் சோகத்தை மெல்லியதாகப் புகுத்தியதும் கரகரப்பான பெண்குரல் போல ஆண்குரல் ஒலிக்கச் செய்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

  இதற்கு நடுவில் ஒரு வித்யாசமான இனிய பாடல் ஆட்டோகிராப் வழியாக நமக்குக் கிடைத்தது. இந்த முறை இசையமைத்தவர் பரத்வாஜ். சிநேகன் எழுதி ஹரிஷ் ராகவேந்திராவும் ரேஷ்மியும் பாடிய ”மனசுக்குள்ளே காதல் வந்துச்சா வந்துச்சா” பாடல் அந்த பொழுதின் இனிய பாடலாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பாடலில் கேரளக் காதலி மலையாளத்தில் பாடவும் தமிழ்க்காதலன் தமிழில் பாடவும் தொடங்கும். இருவருடைய உள்ளமும் இணைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல பாடல் முடியும் போது ஆண் மலையாளத்திலும் பெண் தமிழிலும் பாடுவதாக இருக்கும்.

  இத்தனை பாடல்கள் இருந்தாலும் அத்தனையிலும் உச்சப் பாடலாக நான் கருதுவது அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் கவிதை அரங்கேறும் நேரம் பாடலைத்தான்.

  தமிழில் எடுக்கப்பட்ட படம் பின்னால் எல்லா மொழியிலும் எடுக்கப்பட்டது என்பது அந்தக் கதையமைப்பின் சிறப்பையும் கே.பாக்கியராஜின் இயக்கும் திறமையையும் சொல்லும்.

  மேலே இத்தனை பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாத்திரமும் நமக்கு மனதில் தங்காதவை. ஆனால் பாலக்காட்டு மாதவன் நாயரை தமிழ் சினிமா விரும்பிகள் மறக்க முடியுமா? சரியோ முறையோ குறையோ பிழையோ, அந்தப் பாத்திரம் ஓட்டைத் தமிழில் சொல்லும் “எண்டே காதலி நிங்கள் மனைவியாகும். ஆனால் நிங்கள் மனைவி எனிக்கி காதலியாக மாட்டாள்” என்ற வசனம் அவ்வளவு பிரபலமானது.

  அப்படியொரு பாத்திரத்துக்கு “கவிதை அரங்கேறும் நேரம்” பாடல் மிகப் பொருத்தம். பாடலின் தொடக்கத்தில் ஜெயச்சந்திரனின் ஆலாபணை ஒன்று போதும். அது முடித்து ஷப்த ஸ்வரதேவி உணரு என்று பாடல் தொடரும் பொழுது மீளா இசைச்சுழலில் நாம் மூழ்கிவிடுகிறோம்.

  இந்தப் பாடலை எழுதியது யார் தெரியுமா? இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய “தென்றல் அது உன்னிடத்தில்” என்ற பாடலும் வைரமுத்து எழுதிய “எண்ணில் இருந்த ஈடேற” என்ற பாடலும் மிகமிகப் பிரபலம்தான். ஆனால் அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்ட இந்தப் பாடல் அந்த அளவுக்குப் பிரபலமாகாத குருவிக்கரம்பை சண்முகம் அவர்களால் எழுதப்பட்டது. அவர் திறமைக்கு இந்த ஒரு பாட்டு எடுத்துக்காட்டாய் எப்போதும் நிற்கும்.

  இந்தப் படத்தில் இன்னொரு அழகான பாட்டு உண்டு. “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ” பாடலைப் போல தமிழும் மலையாளமும் கலந்த பாடல். ஆனால் படத்தில் இடம் பெறவில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட யாரும் இந்தப் பாடலில் மயங்காமல் இருக்கவே முடியாது. ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் பாடிய இந்தப் பாடலின் தமிழ் வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். மலையாள வரிகளை எழுதியவர் தெரியவில்லை. மெல்லிசை மென்னரும் இந்தப் பாடலை வேறு எந்தப் படத்திலும் பயன்படுத்தாதது நமக்கெல்லாம் இழப்பே. இந்தப் பாடலின் தாளமாக ஒலிக்கும் செண்டை மேளங்களின் பயன்பாடு மிகமிக நேர்த்தியானது. நல்லவேளையாகப் பாடலின் ஒலிவடிவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

  இப்படிப் பட்ட பாடல்களை நாம் ரசித்துக் கேட்கிறோம் என்பதே நமக்கு மகிழ்ச்சியானது.

  இந்தப் பதிவில் உள்ள பாடல்களைப் பார்க்க கேட்க….

  மந்தார மலரே மந்தார மலரே (நான் அவன் இல்லை) – http://youtu.be/46KA5mwksMs
  கடலினக்கர போனோரே (நான் அவன் இல்லை-ரீமேக்) – http://youtu.be/V_tlLfligkw
  இந்திய நாடு என் வீடு (பாரதவிலாஸ்) – http://youtu.be/kG2Get7rZuU
  ஞான் ஞான் பாடனும் (பூந்தளிர்) – http://youtu.be/S0dXtaX0FX0
  குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ (முத்து) – http://youtu.be/C89P-eN9CCw
  நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே) – http://youtu.be/YhmsG_2yudk
  ஆரோமோளே (வின்னைத் தாண்டி வருவாயா) – http://youtu.be/_9exfKUDt6Y
  மனசுக்குள்ளே காதல் வந்துச்சா (ஆட்டோகிராப்) – http://youtu.be/KLQk4jacuVk
  ஷப்த ஸ்வரதேவியுணரு (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/OvSdzh2S12w
  ஸ்வர ராக சுத தூகும் (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/MqcbOgkS4m0

  அன்புடன்,
  ஜிரா

  071/365

   
  • gbsivakumar 12:31 pm on February 10, 2013 Permalink | Reply

   manasukkule thaagam vanthucha song written by snehan. Not pa.vijay

   • என். சொக்கன் 5:33 pm on February 10, 2013 Permalink | Reply

    Corrected now, Thanks for pointing out the info error

  • Rajnirams 9:50 am on February 11, 2013 Permalink | Reply

   super.அபாரம்.

   • Kaarthik Arul 2:30 pm on July 16, 2013 Permalink | Reply

    How come sundari neeyum sundaran nyAnum from MMKR is missing in this post?

  • Kana Praba 4:55 pm on July 16, 2013 Permalink | Reply

   kalakkals

 • G.Ra ஜிரா 8:54 am on December 3, 2012 Permalink | Reply
  Tags: , , , மயில்   

  மயிலின் தோகை 

  கதாநாயகியை மயிலாகப் பார்க்காத கவிஞர்கள் உண்டா? மிகப்பிரபலமான இரண்டு வாலியின் பாடல்களைப் பார்க்கலாம்.

  பாடல்-1
  படம் – கடவுள் அமைத்து வைத்த மேடை
  ஆண்டு – 1979
  இசை – இளையராஜா
  பாடியவர்கள் – ஜென்சி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  மயிலே மயிலே உன் தோகை எங்கே
  ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
  குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ

  பாடல்-2
  படம் – இரு மலர்கள்
  ஆண்டு – 1967
  இசை – எம்.எஸ்.விசுவநாதன்
  பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
  மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்
  வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
  காதல் மழை பொழியும் கார் முகிலாள்
  அன்புக் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்

  இந்த இரண்டு பாட்டுகளிலும் பெண்ணைத்தான் மயிலாக உருகவித்திருக்கிறார் கவிஞர். அதிலும் தோகை என்னு அழகை பெண்ணுக்கு உரித்தாக்கியிருக்கிறார்.

  ஆனால் அதில் ஒரு முரண் இருக்கிறதே! ஆண் மயிலுக்குத்தானே தோகை உண்டு. அப்படியிருக்க பெண்ணை மயிலுக்கு ஒப்பிடுவதும் தோகை என்னும் அழகை பெண்ணுக்கு இணைப்பதும் சரியாக இருக்க முடியுமா? இது இலக்கணப்படி சரியாகுமா?

  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இலக்கத்தில் விடை உண்டு என்பதே வியப்பு. ஆம். தொல்காப்பியம் இதற்கு அழகான விளக்கம் சொல்லியிருக்கிறது.

  தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்.
  1. எழுத்ததிகாரம்
  2. சொல்லதிகாரம்
  3. பொருளதிகாரம்

  பொருளதிகாரத்தில் மரபியல் என்று ஒரு பகுதி. எது எது என்ன என்ன என்று சொல்லும் மரபுகளை விளக்கும் பகுதி அது. அதனால் அதற்கு மரபியல் என்று பெயர்.

  அந்த மரபியலில் கீழ்க்கண்ட வரிகளைப் பார்ப்போம்.
  சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
  மா இருந் தூவி மயில் அலங்கடையே

  இந்த இரண்டு வரிகளையும் விளக்கவே நான்கைந்து பக்கங்கள் தேவை. சுருக்கமா பொருளை மட்டும் பார்க்கலாம்.

  பறவைகளின் ஆண் பறவைகளுக்கு என்ன பெயர்? இந்த மரபைச் சொல்லும் வரிகள்தான் இவை.

  பொதுவாகவே ஆண் பறவைகளுக்குச் சேவல் என்று பெயர். அது எந்தப் பறவையின் ஆணாக இருந்தாலும் அது சேவல்தான். எடுத்துக்காட்டாக உவணச் சேவல் என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதற்கு இன்றைய பெயர் கருடன். பருந்தின் ஆண்பறவைக்கு உவணச் சேவல் என்று பெயர்.

  ஆனால் இந்தச் சேவல் என்ற பெயர் எல்லாப் பறவைகளுக்கும் பொருந்தி ஒரேயொரு பறவைக்கு மட்டும் பொருந்தாதாம்.

  அந்தப் பொருந்தாப் பறவை மயில்.

  ஏன் பொருந்ததாது?

  அதற்கு மயிலின் அழகிய தோகை (மா இரும் தூவி) காரணம்.

  அப்படி அழகிய தோகையைக் கொண்டிருப்பதால் மயிலின் ஆண் பறவைக்குச் சேவல் என்ற பெயர் பொருந்ததாதாம்.

  இப்போது புரிந்திருக்குமே ஏன் திரைப்படக் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் மயிலை பெண்ணுக்கே உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று!

  இது போல வேறு எந்தப் பாடல்களில் எல்லாம் பெண்ணை வர்ணிக்க மயிலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

  அன்புடன்,
  ஜிரா
  03/12/2012
  002/365

   
  • BaalHanuman 9:24 am on December 3, 2012 Permalink | Reply

   பாடல்-3
   படம் – பாரதி
   ஆண்டு – 2000
   இசை – இளையராஜா
   பாடியவர் – பவதாரிணி
   கவிஞர்: மு.மேத்தா

   மயில் போல பொண்ணு ஒண்ணு…

   • GiRa ஜிரா 8:48 pm on December 3, 2012 Permalink | Reply

    அழகான பாடல். பவதாரணிக்கு தேசியவிருது பெற்றுத் தந்தது அல்லவா?

  • Prasannaa S (@tcsprasan) 11:00 am on December 3, 2012 Permalink | Reply

   Nice GiRa. Superb

   • GiRa ஜிரா 8:48 pm on December 3, 2012 Permalink | Reply

    thanks Prasanna 🙂

  • anonymous 2:33 pm on December 3, 2012 Permalink | Reply

   பெண்ணை மயிலாய்ப் பாவிப்பது… வினைத் தொகை போல முக்காலமும் உண்டு!
   சங்கத் தமிழ் முதல் சினிமாத் தமிழ் வரை உண்டு:)
   நீங்கள் குடுத்துள்ள ஜென்சி பாட்டும் மயில் போல் அழகுத் தெரிவு தான்; நன்றி
   ——-

   சற்றே பழைய பாடல்கள்:

   ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
   ஒரு “கோல மயில்” என் துணையிருப்பு
   (ரத்தத் திலகம் – கவிஞர் கண்ணதாசன்)

   “புள்ளி மயில்” புன்னகையில் என்ன மயக்கம்?
   அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்?
   வண்ணக் கிளி சொன்ன மொழி..
   ( – வாலி)
   ——-

   நேற்றைய பழைய பாடல்கள்:

   கண்ணே கலைமானே
   “கன்னி மயில்” எனக் கண்டேன் உனை நானே
   (மூன்றாம் பிறை – கவிஞர் கண்ணதாசன்)

   தனிமையிலே வெறுமையிலே – எத்தனை நாளடி “இள மயிலே”
   கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் – இமைகளும் சுமையடி இளமையிலே
   அந்தி மழை பொழிகிறது..
   (ராஜ பார்வை – வைரமுத்து)

   “மலையோரம் மயிலே” விளையாடும் குயிலே
   விளையாட்டைச் சொல்லித் தந்ததாரு?
   (ஒருவர் வாழும் ஆலயம் – )
   ——-

   இன்றைய பாடல்கள் – நாளைய பழைய பாடல்கள்:

   “மயில் தோகை” ஒன்று மடியில் வந்து சாய்ந்து கொள்ள..
   காஞ்சனமாலா காஞ்சனமாலா காஞ்சனமாலா
   கொல்லாமல் கொல்லும் உன் – கண் என்ன வேலா?
   (வந்தான் வென்றான் – கவிஞர் தாமரை)

   அடடா மழடா அடை மழைடா, அழகாச் சிரிச்சா புயல் மழைடா
   “மயில் தோகை” போல இவ மழையில் ஆடும் போது
   ரயில் தாளம் போல என் மனசு வாழும் பாரு..
   (பையா – )

   • anonymous 3:10 pm on December 3, 2012 Permalink | Reply

    சில நேரங்களில், சில கவிஞர்கள்… ஆண்களையும் மயிலாய்ப் பாவித்துப் பாடியுள்ளார்கள்:)
    என்ன தான் இருந்தாலும், தோகையழகு, உண்மையிலேயே ஆண் மயிலுக்குத் தானே சொந்தம்? அதான் போலவோ?:)
    —–

    தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
    அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே
    (கலாபக் காதலன் – கவிஞர் தாமரை)

    சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதின்
    கான மஞ்ஞை கட்சி சேக்கும்
    கல் அகத்தது எம் ஊரே!
    -ன்னு குறிப்புப் பொருளில், ஒரு ஆணை மயிலாய்க் காட்டுவாரு, சங்கப் பெருங் கவிஞர் கபிலர்:)
    —–

    மஞ்ஞை – மயிலுக்கு அழகிய தமிழ்ப் பெயர்
    – மெல்லின எழுத்து மட்டுமே இருக்கும் ஒரு தமிழ்ச் சொல்
    – இறகின் கனம் பறப்பதற்குப் பாரம் ஆயினும் கூட, அதைச் சுமந்து வரும் ஒயில் – அந்த மென்மையால் – “மஞ்ஞை”

    மஞ்
    – மஞ்சு (மேகம்) – மஞ்சள் – மஞ்ஞை -ன்னு வேர்ச் சொற்கள்!

    பல் பொறி மஞ்ஞை
    ஆடு சீர் மஞ்ஞை
    மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை
    நறு வீ ஆடிய, பொறி வரி மஞ்ஞை
    -ன்னு சங்கச் சொல் அடர்த்தி மஞ்ஞைக்கு;

    எல்லாத்துக்கும் மேலா…”அவன்” ஏறிய மயில் ஆதலாலே…
    செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க!

  • ச.ந. கண்ணன் 4:19 pm on December 3, 2012 Permalink | Reply

   ஜிரா, ஆண் மயிலை சேவல் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஓகே. ஆனால், ’பெண்ணை மயிலுக்கு ஒப்பிடுவது ஏன், தோகை என்னும் அழகை பெண்ணுக்கு இணைப்பதும் சரியாக இருக்க முடியுமா?’ என்கிற கேள்விகளுக்கான பதில் சரியாக விளங்கவில்லை. இன்னும் தெளிவாக, விவரமாக சொல்லமுடியுமா?

   • GiRa ஜிரா 8:52 pm on December 3, 2012 Permalink | Reply

    ஏன் தோகை என்று சொல்லக் கூடாது? தோகையின் காரணமாக. தோகை அழகைக் குறிப்பது. ஆணுக்கு அழகு தோளில். பெண்ணுக்கு அழகு முகத்தில் என்று சொல்வார்கள். அப்படி பெண்மைக்கு இலக்கணமாகச் சொல்லப்படும் அழகானது தோகையின் மூலம் பெற்றுள்ளதால், மயிலுக்கு ஆண்மைப் பெயரான சேவல் விலக்கப்பட்டுள்ளது. அதனால் ஆண்மைக்கு அடையாளம் சொல்ல முடியாத மயில் பெண்மைக்கு அடையாளமாகிப் போனது. இப்போது புரிகிறதா?

  • sm 7:52 pm on December 3, 2012 Permalink | Reply

   payanagal mudivathillai — தொகை இளம் மயில் ஆடிவருகுது

   • GiRa ஜிரா 8:53 pm on December 3, 2012 Permalink | Reply

    தோகை இளமயில் பாட்டை யாராவது சொல்வார்களா என்று நினைத்தேன். நீங்க சொல்லிட்டிங்க 🙂

  • Sagar (@npodiyan) 10:01 pm on December 3, 2012 Permalink | Reply

   அருமையான விளக்கம்! உடனடியாக ஞாபத்துக்கு வந்த மற்றுமொரு பாடல்:
   வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது – பூந்தளிர்

   • GiRa ஜிரா 2:17 pm on December 4, 2012 Permalink | Reply

    சூப்பர் பாட்டு இது. எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு.

  • @rmdeva 8:27 am on December 4, 2012 Permalink | Reply

   ஜிரா, மயில் போல் அழகு. எனக்கு நினைவுக்கு வரும் பாடல்..மயில் ஆடும் தோப்பில் மான் ஆட கண்டெண்

   • GiRa ஜிரா 2:18 pm on December 4, 2012 Permalink | Reply

    wonderful. எத்தனையெத்தனை மயில் பாடல்கள்! இன்னும் எத்தனையிருக்கோ!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel