Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 7:16 pm on October 16, 2013 Permalink | Reply  

  உயர் 

  • படம்: புதிய மன்னர்கள்
  • பாடல்: வானில் ஏணி போட்டு
  • எழுதியவர்: பழநிபாரதி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: மனோ
  • Link: http://www.youtube.com/watch?v=HWmbi8YCEvs

  வானில் ஏணி போட்டு கொடி கட்டு!

  மின்னல் நமக்கு தங்கச் சங்கிலி,

  விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி,

  வானவில்தான் நம் வாலிப தேசக்கொடி!

  சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் அலுவலகம். ஆனாலும் எப்படியோ பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழுக்கும் சம உரிமை அளித்திருந்தார்கள்.

  என்னுடன் வந்திருந்த நண்பர் ‘மின் தூக்கி’ என்ற பெயரைப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தார். ‘அபத்தமான மொழிபெயர்ப்பு’ என்றார்.

  ‘ஏன்? Liftங்கறது ஆங்கிலப் பெயர், அதற்கு இணையான தமிழ்ச்சொல் தூக்குதல், அப்படின்னா மின்சாரத்தால இயங்கற ”தூக்கி”ங்கற பெயர் சரியாதானே இருக்கு?’ என்றேன்.

  ‘அதென்னவோ, எனக்குத் தூக்கிங்கற பெயர் இயல்பாத் தோணலை’ என்றார் அவர், ‘இதையே ஏணின்னு சொல்லிப்பாருங்க, அது ரொம்ப இயல்பா இருக்கு!’

  நண்பருக்கு விளக்க முயன்றேன். ‘நம்மைத் தூக்கிச் செல்லுதல்’ என்பது செயல், அதைச் செய்யும் கருவியைத் ‘தூக்கி’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

  சொல்லப்போனால், ‘ஏணி’ என்ற சொல்லே இப்படி வந்ததுதான்.

  தமிழில் ‘ஏண்’ என்றால் உயர்வு என்று அர்த்தம். ‘ஏணிலேன்’ என்று திருமங்கை ஆழ்வார் தன்னைச் சொல்லிக்கொள்வார். அதாவது, ஏண் இலேன், கடவுளுக்கு முன்னால் நான் எந்த உயர்வும் இல்லாத சாதாரண ஆள் என்று பொருள்.

  ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

  அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல் வரலாம்தானே?

  ***

  என். சொக்கன் …

  16 10 2013

  318/365

   
  • rajinirams 10:49 pm on October 16, 2013 Permalink | Reply

   “ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

   அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல்”

   எளிமையான விளக்கம்,அருமையான பதிவு.

  • amas32 9:41 pm on October 17, 2013 Permalink | Reply

   ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய். இவை நான்கும் இருக்கும் இடத்திலேயே இருக்கும் ஆனால் நம்மை உயரவோ அல்லது நல்ல நிலைக்கோ அழைத்துச் செல்லும். ஏணி நம்மை ஏற்றிவிடும். ஆனால் அதற்கு மற்றப்படி மதிப்பில்லை. தோணி இக்கரையில் இருந்து அக்கரைக்கு இட்டுச் செல்லும் ஆனால் அதன் வாழ்வு அந்த நதியில் தான்.அண்ணாவி என்பது ஆசிரியர். அவர் நமக்கு ஆசானாக இருந்து நமக்குச் சொல்லிக் கொடுத்து நாம் மருத்துவராகவோ கலெக்டராகவோ ஆகிவிடுவோம். அவர் அதே ஆசிரியர் நிலைமை தான். நார்த்தங்காய் வேண்டாத சோற்றைக் கூட சாப்பிட உதவும் ஆனால் ஏப்பம் வரும் போதெல்லாம் நார்த்தங்காய் சுவை இருந்துக் கொண்டே இருக்கும். 🙂

   உங்கள் ஏண் என்னை இந்த விளக்கத்தை எழுத வைத்துவிட்டது 🙂

   நல்ல பதிவு, நன்றி 🙂

   amas32

   • Uma Chelvan 3:07 am on October 18, 2013 Permalink | Reply

    amas32…..அண்ணாவி. —ஆசிரியர் …….இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை. தமிழ்தானா அல்லது வேறு எதாவது மொழியா?

  • Uma Chelvan 7:30 am on October 18, 2013 Permalink | Reply

   நார்த்தங்காய் பொதுவாக காய்சல் னின் பொது வரும் தலை சுத்தல் , வாய் கசப்பு, மயக்கம், வாந்தி வருவது போன்ற ( ஆனால் வராது, nausea ) உணர்வு போனறவகளை தடுக்கும் எனபதால் காரம் இல்லாமல் சாப்டும் (bland diet ) கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

 • mokrish 11:46 pm on August 14, 2013 Permalink | Reply  

  என்ன சத்தம் இந்த நேரம் 

  ஒரு நண்பருடன் கொஞ்ச நேரம்  பேசிக்கொண்டிருந்தேன்  அவர் பேச்சில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்க்க, நிதானமாக யோசித்து  ரீவைண்ட் செய்து பார்த்தேன். அவர் டமால், டங்குன்னு, வெடுக்குனு, தொபுக், லொட லொட, சல்லுனு போன்ற வார்த்தைகள் போட்டே ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடுக்கிறார். பத்து நிமிடம் பேசினாலே அவரின் இந்த ஸ்டைல் தனியாகத் தெரியும்.

  தமிழ்நாட்டில் தினத்தந்தி பிரபலப்படுத்திய ‘சதக் சதக் என்று குத்தினான் குபுக்கென்று ரத்தம் வந்தது’ எல்லாரும் அறிந்தது. இது சித்திரக்கதைகளைப் படிப்பவர்களுக்கு பரிச்சயமான விஷயம். ஒரு பலூனில் Boom, whack, vroom போன்ற வார்த்தைகள் இருக்கும். இவை ஒலிக்குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில்  onomatopoeia. இது வார்த்தைகளோடு ஒலியையும் உணர்த்தும் ஒரு முறை. வார்த்தைகளே ஒலி போல் நடிக்கும்.

  திரைப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் மேல் ஒரு அபார மோகம். கண்ணதாசன் பாசம் படத்தில் எழுதிய பாடல் ஒன்று (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

  http://www.inbaminge.com/t/p/Paasam/Jal%20Jal%20Enum%20Salangai.eng.html

  ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
  சல சல சல வென சாலையிலே
  செல் செல் செல்லுங்கள் காளைகளே
  சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

  ஈரமான ரோஜாவே படத்தில் பிறைசூடன் எழுதிய ஒரு அருமையான பாடல் (இசை இளையராஜா பாடியவர்கள் மனோ எஸ் ஜானகி)

  http://www.youtube.com/watch?v=Eq9nsMZyyT8

  கலகலக்கும் மணியோசை

  சலசலக்கும் குயிலோசை

  மனதினில் பல கனவுகள் மலரும்

  இது போல் நிறைய பாடல்கள் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் வரும் ஒமக சீயா இந்த வகையில் வராது.

  எனக்கொரு சந்தேகம். கண்ணதாசன் புதிய வார்ப்புகள் படத்தில் வான் மேகங்களே பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி)

  http://www.youtube.com/watch?v=Q8MPSbmZjy4

  பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்

  பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே

  டான் டான் டான் டான்

  சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ..

  சங்கின் ஒலிக்கு ஏன் டான் டான் டான்? இது ஏதோ பில்லா போல் டானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  மோகனகிருஷ்ணன்

  256/365

   
  • Rajaraman 1:24 am on August 15, 2013 Permalink | Reply

   டான் டான் டான் டான் –பாவையின் கோவில் மணி ஓசை ????

  • Arun Rajendran 2:33 am on August 15, 2013 Permalink | Reply

   சார்,

   எனக்கென்னமோ ஜானகி அம்மா பாடுற ”டான் டண்ட டான் “ ஒலி குறிப்பது கோவில் மணியையே…வாசு சார் பாடிய வரியின் ஒலியாக்கம் ..

   சங்கின் ஒலி -> பள்ளி(அறை)க்கு வந்தாச்சு இனி கல்/லவி எப்பொழுது துவங்குமோ என்று இலைமறைகாயாக தலைவி வினவுதல் ..

   இவண்,
   அருண்

 • G.Ra ஜிரா 11:58 am on August 9, 2013 Permalink | Reply  

  வெத்தல போட்ட ஷோக்குல! 

  ஒவ்வொரு நடிகர்களுக்கும் தான் எழுதியதில் பிடித்த பாடலைச் சொல்லும் போது வைரமுத்து அவர்கள் சரத்குமாருக்கு எழுதியதில் “கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்” பாட்டைக் குறிப்பிட்டாராம்.

  வெற்றிலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. “வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி” என்று பில்லா படத்துக்காக எழுதினார்.

  கங்கை அமரனும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துக்காக “வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ” என்று எழுதினார்.

  வெத்தலை போடுவது” என்பது நாள் கிழமை திருவிழா திருமணம் என்று கூடினால் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.

  முன்பெல்லாம் “வெத்தலை போடுவது” தினப்படி பழக்கமாகவே பலருக்கு இருந்தது. ஊர்ப்பக்கத்து பெரியவர்கள் பல்லெல்லாம் விழுந்த பிறகும் வெற்றிலையை பாக்கோடும் சுண்ணாம்போடும் உரலில் இடித்து மென்று தின்பதைக் காணலாம்.

  வெற்றிலை மடிப்பது என்பதே ஒரு கலை. அப்படி மடிப்பதற்குச் சரியான வெற்றிலையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு கலை. தென்னாட்டில் கருவெத்தலை நிறைய கிடைக்கும். கொங்கு நாட்டிலும் சோழமண்டலத்திலும் வெள்ளவெத்தலை நிறைய விளையும்.

  கருவெத்தலையில் காரம் அதிகம். புதிதாக வெத்திலை போடுகின்றவர்களுக்கு வெள்ளவெத்திலைதான் சரி. சொகுசு வெத்திலை என்பார்கள்… செல்லப்பெட்டியில் (வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்துக் கொள்ளும் பெட்டி) வெள்ளவெத்திலையும் சீவலும் வாசனைச் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு மென்று கொண்டேயிருக்கும் சொகுசாளிகளையும் உலகம் நிறையவே கண்டிருக்கிறது. தில்லானா மோகனாம்பாள் கதையில் வரும் சவடால் வைத்தியும் அந்த வகைதான்.

  ஆனால் சொகுசு வெத்திலை உழைக்கும் மக்களுக்கு போதாது. காரமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் விரும்புவது காரவெத்திலையைத்தான்.

  பாக்கிலும் பலவகை உண்டு. கொட்டைப்பாக்கு, களிப்பாக்கு, வெட்டுப்பாக்கு, பாக்குத்தூள், வாசனைப் பாக்குத்தூள், சீவல் என்று அடுக்கலாம். கொட்டைப் பாக்கு உருண்டையாகவும் கடிப்பதற்கு கடுக்கென்றும் இருக்கும். களிப்பாக்கு மெல்வதற்கு எளிதானது. வெட்டுப்பாக்கு என்பது கொட்டைப் பாக்கை அரைவட்டமாக ஆரஞ்சுச் சுளை வடிவில் வெட்டி வைத்திருப்பது. பாக்குத்தூளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அதுதான் கடைகளில் கிடைக்கிறது. பாக்கை மெல்லிசாக சீவியெடுத்தால் சீவல் கிடைக்கும்.

  வெற்றிலையின் காம்பைக் கிள்ளி.. நடுநரம்பை உரித்து… வெற்றிலையின் பின்பக்கத்தில் சுண்ணாம்பை ஆட்காட்டி விரலில் தொட்டு குழந்தைக்கு திருநீறு பூசுவது போல அளவாகப் பூச வேண்டும். பாக்குத்தூளை தேவைக்கு வைத்து மடித்துக் கொடுப்பது எல்லாருக்கும் எளிதில் கைவந்து விடாது.

  வெற்றிலை மடிக்கும் போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வெற்றிலை போட்ட வாய் சிவக்காது. சுண்ணாம்பின் அளவு கூடினால் வாய் வெந்து போகும். பாசத்தோடு மடிக்கும் போதுதான் எல்லா அளவுகளும் சரியாக இருக்கும்.

  வெற்றிலை போடுவது பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் இரண்டு பாடல்கள் உள்ளன.

  கைசெய்து கமழு நூறுங் காழ்க்கும்வெள் ளிலையுங்
  காம மெய்தநன் குணர்ந்த நீரா ரின்முக வாச மூட்டிப்
  பெய்தபொற் செப்பு மாலைப் பெருமணிச் செப்புஞ் சுண்ணந்
  தொய்யறப் பெய்த தூநீர்த் தொடுகடற் பவளச் செப்பும்

  மேலே சொன்ன பாடலின் முதல் வரியில் வெற்றிலையும் சுண்ணாம்பும் வருகிறது.

  கை செய்து கமுழும் நூறும் – இங்கே நூறு என்பது சுண்ணாம்பைக் குறிக்கும். நூறுதல் என்றால் அரைத்தல். சுண்ணாம்புக்கட்டிகளை அரைத்து மென்மையாக்கி வெற்றிலைக்கு ஏற்க செய்வதால் அதற்கு நூறு என்றே பெயர். (அந்தக்காலத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் சுண்ணாம்பு அரைப்பார்கள்)

  காழ்க்கும் வெள்ளிலையும் – வெள்ளிலை என்பது வெற்றிலையைக் குறிக்கும் பழைய பெயர். காழ்ப்புச் சுவையுடையது என்பதால் காழ்க்கும் வெள்ளிலை எனப்படுகிறது.

  இன்னொரு பாட்டைப் பார்க்கலாம்.

  கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
  யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
  மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
  மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்

  கூந்தலேந்திய கமுகங்காய்குலை” என்பது பாக்குமரத்தில் தொங்கும் பாக்குக்குலைகளைக் குறிக்கும். அந்த பாக்கோடு “ஆய்ந்த மெல்லிலை”… அதாவது வெற்றிலையையும் வாசனைப் பொருட்களையும் கலந்து மாந்தர்கள் உண்டார்களாம். அப்போதே சுண்ணாம்புக்கும் பாக்குக்கும் வாசனையேற்றும் வேலை நடந்திருக்கிறது.

  அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்த வெற்றிலைப் பழக்கம் இன்று கல்யாண வீடுகளிலும் ஓட்டல் வாசல் பான்பீடா கடைகளிலும் குறுகி விட்டது என்பது உண்மைதான். எது எப்படியோ.. கண்டதையும் வெற்றிலையில் கலந்து குதப்பி எல்லா இடங்களிலும் துப்பாமல் இருந்தாலே போதும்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை, சிற்பி, எஸ்.ஜானகி, மனோ)
  வெத்தலைய போட்டேண்டி (பில்லா, எம்.எஸ்.விசுவநாதன், மலேசியா வாசுதேவன்)
  வெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்)

  அன்புடன்,
  ஜிரா

  251/365

   
  • kamala chandramani 2:20 pm on August 9, 2013 Permalink | Reply

   வெற்றிலை பாக்கை தாம்பூலம் என்பர். தாம்பூலம் மாத்தாம கல்யாணமா? எல்லா பூஜைகளிலும் முதலிடம் அதற்குத்தானே?”கர்ப்பூரவீடிகாமோத -ஸமாகர்ஷி – திகந்தராயை” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். (ஏலம்,வவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேசரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த தாம்பூலம் கர்ப்பூர வீடிகா)
   ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை விசேஷம்! வாழ்க்கை பசுமையாக இருக்கவேண்டும் என்று வெற்றிலப் பழக்கம் ஏற்பட்டது போலும்! வெற்றிலை போடுவது ஒரு கலை! பிடித்தால் விடாது!

  • rajinirams 12:22 pm on August 14, 2013 Permalink | Reply

   சினிமா பாடல்களால் மட்டுமல்ல சீவக சீவகசிந்தாமணி பாடல்களை வைத்தும் வெத்தலை சீவல் பாக்கை வைத்து கலக்கியிருக்கிறீர்கள்-வழக்கம் போலவே.சூப்பர் பதிவு.

  • amas32 5:57 pm on August 14, 2013 Permalink | Reply

   எங்கள் வீட்டில் என் பாட்டியின் பாக்கு வெட்டி ஒன்று உண்டு. உங்கள் பதிவைப் படித்ததும் அதைத் தேடி கண்டுபிடிக்கும் ஆர்வம் வந்துள்ளது 🙂 திருமணம் ஆகாத இளைஞர்கள் வெற்றிலைப் பாக்குப் போடக் கூடாது என்று ஒரு ஐதீகம் உண்டு. திருமணத்தன்று தான் முதன் முதலில் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுப்பாள்!

   நல்ல விருந்துக்குப் பின் வெற்றிலைப் போட்டால் தான் நிறைந்த திருப்தி ஏற்படுவது என்னவோ உண்மை தான் 🙂

   amas32

 • என். சொக்கன் 10:59 am on August 1, 2013 Permalink | Reply  

  ஒரே ஜீவன் 

  • படம்: நாயகன்
  • பாடல்: நீ ஒரு காதல் சங்கீதம்
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=E2NA3TzvQsM

  வானம்பாடி பறவைகள் ரெண்டு, ஊர்வலம் எங்கோ போகிறது,

  ’காதல்’, ‘காதல்’ எனும் ஒரு கீதம், பாடிடும் ஓசை கேட்கிறது

  இசை மழை எங்கும் பொழிகிறது,

  எங்களின் ஜீவன் நனைகிறது!

  ஊர்வலம் சென்ற வானம்பாடிப் பறவைகள் இரண்டு, பன்மை, அப்படியானால், ‘போகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? ‘போகிறது’ என்பது தவறல்லவா?

  ’எங்களின் ஜீவன்’ என்று சொல்லும்போதே, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் (பன்மை) என்பது புரிகிறது. அப்படியானால், ‘நனைகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? நனைகிறது என்பது தவறல்லவா?

  இந்த வரிகளை எழுதியவர் சாதாரண கவிஞர் அல்ல, புலமைப் பித்தன், அதுவும் ”புலவர்” புலமைப் பித்தன். மெட்டுக்குப் பொருந்தவேண்டும் என்பதற்காக அவர் இலக்கண சுத்தமற்ற வரிகளை எழுதியிருப்பாரா?

  கவிதை இருக்கட்டும், கொஞ்சம் லோக்கலாக வருவோம். தினமும் காலை எழுந்தவுடன் பல் தேய்க்கிறோம். ஒரு பல்லா, முப்பத்திரண்டு பற்களா? ‘பற்களைத் தேய்க்கிறோம்’ என்று பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொல்வது ஏன்?

  ‘சொந்தக் காலில் நிற்கிறேன்’ என்று சபதம் செய்கிறார் ஒருவர். ஒற்றைக் காலில் நிற்க அவர் என்ன கொக்கா? அவருக்கு இரண்டு கால்கள் உள்ளனவே, அவர் ஏன் ‘சொந்தக் கால்களில் நிற்கிறேன்’ என்று சொல்வதில்லை?

  ‘கண்ணால் பார்த்தேன்’ என்று சாட்சி சொல்கிறார் இன்னொருவர். ஏன் ஒருமை? ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பார்த்தாரா?

  தமிழில் ஒன்றாகச் செயல்படும் விஷயங்களைச் சொல்லும்போது, பன்மை அவசியமில்லை. இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், முப்பத்திரண்டு பற்கள் என்றாலும், பேசும்போதும் எழுதும்போதும் ‘கண்ணால் பார்த்தேன்’, ‘கையால் சமைத்தேன்’, ‘பல்லால் சிரித்தேன்’ என்று ஒருமையில் சொல்லலாம்.

  அதுபோல, இந்தப் பாடலில் வரும் காதல் ஜோடி ஒன்றாக இணைந்துவிட்ட தருணம். ‘எங்களின் ஜீவன் நனைகிறது’ என்று ஒருமையில் சொல்லி அவர்கள் ஒன்று கலந்துவிட்டதைச் சொல்லிவிடுகிறார் புலமைப்பித்தன்.

  கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது!

  ***

  என். சொக்கன் …

  01 08 2013

  243/365

   
  • Mahendiran 11:11 am on August 1, 2013 Permalink | Reply

   Arumai, naNbarE!

  • amas32 11:19 am on August 1, 2013 Permalink | Reply

   அருமை! இந்த 4 வரி நோட்டில் எழுதும் உங்கள் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. பாடலில் ஒரு சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் விளக்கத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லி மகிழ்விக்கிறீர்கள்! நன்றி 🙂

   amas32

  • Azhagan 11:45 am on August 1, 2013 Permalink | Reply

   இன்னைக்கு ஏன் இவ்வளோ புளோவா வருதுன்னு உங்களுக்கே தெரியலயோ

  • Vaishnavi 1:05 pm on August 1, 2013 Permalink | Reply

   Arumai nanbarae…..

  • GiRa ஜிரா 2:35 pm on August 1, 2013 Permalink | Reply

   ”கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது”ன்னு முடிச்சிங்க பாருங்க. அங்க நிக்கிறிங்க நீங்க 🙂

   புலவர் புலமைப்பித்தன் பாடல்களையா எடுத்துப் பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப எளிமையா அழகா பாடல்களை எழுதியிருக்காரு. சுயவிற்பனை தெரியாதவர் போல.

  • tcsprasan 2:44 pm on August 1, 2013 Permalink | Reply

   அருமை 🙂

  • app_engine 5:19 pm on August 1, 2013 Permalink | Reply

   நல்ல சுவை 🙂

   இனிய, எளிய விளக்கம்!

  • kamala chandramani 9:20 pm on August 1, 2013 Permalink | Reply

   எனக்கு மிகவும் பிடித்த பாடல். இனிய இசையில் ஜீவனை நனைக்கும்! எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.

  • பாலா அறம்வளர்த்தான் 10:58 pm on August 1, 2013 Permalink | Reply

   உங்களுக்கு முன்பே அனுப்பியதுதான் – சும்மா இங்கேயும் 🙂

   ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்று MKT காலம் முதல் இன்று வரை வந்த காதல் டூயட் பாடல்களில் பெண்களின் கண், கூந்தல், பல் என்று அங்கங்களை வர்ணிக்கும் வரிகள் இல்லாத காதல் பாடல் எதாவது இருக்குமா தெரியவில்லை. சமீபத்தில், பாடலாசிரியர் புலமைப் பித்தன் சொன்னது:

   ‘நாயகன்’ படத்தில் வரும் இந்த பாடலுக்கு பாடல் எழுத புலமைப்பித்தனை கூப்பிட்ட போது இளையராஜா – “ரகுபதி ராகவ ராஜாராம் மாதிரியான புனிதமான ட்யூன் இது. காதல் பாட்டுத்தான்.. ஆனால் உடல் அங்கங்களை வர்ணித்து ஒரு வரி கூட வராமல் எழுதித் தர முடியுமா? ” என்று கேட்டாராம். அப்படி எழுதிய பாட்டுத்தான் இது. இந்த பாடல் ‘ஷ்யாம்’ என்றொரு ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது.

   ‘நாயகன்’ படத்தில் இந்த பாடல் வரும் காட்சியை நினைத்துப் பாருங்கள். ஹீரோ ஹீரோயினை விபச்சார விடுதியில் பார்த்து, இரக்கம்/காதல் கொண்டு அவளை மீட்டு, காதலித்து, கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெரும் வரை காட்சிகள் அமைந்திருக்கும் (Including few highly romantic scenes). இந்த உறவு உடல் கவர்ச்சியினால் அல்ல என்பதை, ராஜா ட்யூன், வரிகள் என்று எல்லாவற்றிலும் சொல்லி ‘audience’ ஐ வேறு நிலைக்கு கொண்டு போகிறார்.

   I’ve absolutely no idea whether there is any other music director who thinks like this 🙂

  • Ravi_aa 4:08 pm on August 2, 2013 Permalink | Reply

   Like in English à pair of specs ?

  • rajinirams 4:48 pm on August 4, 2013 Permalink | Reply

   சூப்பர்.கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது-செம பஞ்ச்:-))

 • G.Ra ஜிரா 11:43 am on July 14, 2013 Permalink | Reply  

  படைத்தவன் யாரோ? 

  நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

  முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

  கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

  அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

  யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

  கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

  படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

  புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

  ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

  மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

  கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

  சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

  அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

  தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
  தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
  பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
  அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

  மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

  அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

  தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
  தாமரைப் பூ மீது விழுந்தனவோ
  இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
  படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

  அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

  வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

  கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

  பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

  இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

  பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
  அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

  பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

  பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
  அடடா பிரம்மன் கஞ்சனடி
  சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
  ஆஹா அவனே வள்ளலடி

  அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

  பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
  என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
  உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
  நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
  பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
  அய்யோ இது வரமா சாபமா

  இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

  இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

  மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
  கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
  ………………..
  பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

  இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

  அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
  நீ என் மனைவியாக வேண்டும் என்று
  ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
  ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

  அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

  பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

  பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
  ………………..
  பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

  இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

  நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

  வானத்தையே எட்டி புடிப்பேன்
  பூமியையும் சுத்தி வருவேன்
  …………………
  அடி பெண்ணே நீயும் பெண்தானோ
  இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

  வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

  பிரம்மா உன் படைப்பினிலே…
  எத்தனையோ பெண்கள் உண்டு
  ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
  இவளைக் கண்டு
  அழகினிலே.. இவளைக்கண்டு
  வாடா வாடா பையா

  இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

  இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

  பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
  படம் – உயிருள்ளவரை உஷா
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  பாடல் & இசை – டி.ராஜேந்தர்
  பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

  பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
  படம் – ஜீன்ஸ்
  பாடல் – வைரமுத்து
  பாடியவர் – ஹரிஹரன்
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

  பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
  படம் – எல்லோரும் நல்லவரே
  பாடல் – கண்ணதாசன்
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  இசை – வி.குமார்
  பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

  பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
  படம் – தேவதையைக் கண்டேன்
  பாடல் – பா.விஜய்
  பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
  இசை – தேவா
  பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

  பாடல் – அண்ணாமல அண்ணாமல
  படம் – அண்ணாமலை
  பாடல் – வைரமுத்து
  பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
  இசை – தேவா
  பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

  பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
  படம் – வழக்கு எண் 18/9
  பாடல் – நா.முத்துக்குமார்
  பாடகர் – தண்டபாணி
  இசை – ஆர்.பிரசன்னா
  பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

  பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
  படம் – ஜெமினி
  பாடல் – வைரமுத்து
  இசை – பரத்வாஜ்
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

  பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
  படம் – கச்சேரி ஆரம்பம்
  பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
  பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
  இசை – டி.இமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

  பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
  படம் – பிரியமான தோழி
  பாடல் – பா.விஜய்
  பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
  இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

  பாடல் – மணியே மணிக்குயிலே
  படம் – நாடோடித் தென்றல்
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
  பாடல் & இசை – இளையராஜா
  பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

  பாடல் – ஒரு பொன் மானை நான் காண
  படம் – மைதிலி என்னைக் காதலி
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  பாடல் & இசை – டி.ராஜேந்தர்
  பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

  பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
  படம் – இந்தியன்
  பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
  பாடல் – வைரமுத்து
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

  அன்புடன்,
  ஜிரா

  225/365

   
  • மணிகண்டன் துரை 2:19 pm on July 14, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு

  • rajinirams 2:49 pm on July 14, 2013 Permalink | Reply

   அடடா பிரமாதம். எல்லா பாடல்களுமே சூப்பர். புதியவன் படத்தில் வைரமுத்துவின் “நானோ கண் பார்த்தேன்” பாடலில் பருவம் அடடா பஞ்சம் இல்லை,அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை என்று வரும். எல்லோரும் நல்லவரே பாடல் படைத்தானே பிரம்மதேவன் பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியது. (பகை கொண்ட உள்ளம்,சிகப்புகல்லு போன்றவை புலமைப்பித்தன் எழுதியவை).திருவருள் படத்தில் வரும் கந்தன் காலடியை பாடலில் “அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்” என்ற வரி வரும். நன்றி.

  • amas32 5:49 pm on July 14, 2013 Permalink | Reply

   எத்தனை எத்தனைப் பாடல்களைத் தேடி எடுத்து அடுக்கியிருக்கிறீர்கள்! படைப்புக் கடவுளான பிரம்மா சும்மா இல்லை! 🙂 அவருக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை என்றாலும் திரைப் பாடல்கள் அவரை துதிப்பது அவருக்குப் பெருமை தான் 🙂

   amas32

 • mokrish 9:52 am on June 3, 2013 Permalink | Reply  

  இருக்கும் இடத்தை விட்டு… 

  ஒரு இடத்திலிருந்து விலகி இன்னொரு இடத்துக்கு நகர்ந்து வாழ்க்கையை தொடரவேண்டிய கட்டாயம் நம் எல்லாருக்கும் உண்டு. நூறு  காரணங்கள். படிப்புக்காக, வேலை, திருமணம், சொந்த வீடு வாங்கி, பிரபல பள்ளியின் பக்கத்தில், என்று வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணங்கள். வீடு மாறி ஊர் மாறி நாடு விட்டு நாடு மாறி என்று வாழ்வில் நடக்கும் இடம் பெயர்தல் மகிழ்ச்சி தரலாம் சில சமயங்களில் வலியாகவும் இருக்கலாம்.

  ஒரு பெண்ணின் வாழ்வில் இந்த இடமாற்றம் திருமணம் சார்ந்து நடக்கும்.(கால மாற்றத்தில் இப்போது இது ஆண்களுக்கும் நடக்கிற நிகழ்வு)  இது ஒரு mixed feeling தருணம். புது வாழ்வு தொடங்கும் மகிழ்ச்சியான நேரம். ஆனால் வளர்ந்த வீட்டையும் தாய் தந்தை உடன்பிறப்புகள் என்று கூடவே வாழ்ந்தவர்களைப் பிரிந்து இன்னொரு குடும்பம், வேறு வீடு, பல சமயங்களில் வேறு ஊர் /நாடு என்று போக வேண்டிய வேளை. பிரிவின் வேதனையை வைரமுத்து வண்டி மாடு எட்டு வச்சு என்ற பாடலில் (படம்: கிழக்குச் சீமையிலே இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர்கள் : ஜெயசந்திரன், எஸ். ஜானகி) அழகாக பதிவு செய்கிறார்.

  http://www.inbaminge.com/t/k/Kizhakku%20Cheemaiyile/Kathalang%20Kattu.eng.html

  வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா

  வாக்க பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

  எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா

  பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

  வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு

  பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

  சரி மாற்றம் மகிழ்ச்சியும் தருமா?  யாரும் விளையாடும் தோட்டம் என்ற பாடலில் ஒரு கூட்டம் சந்தோஷமாக இடம் பெயர்வதைச்  சொல்லும் இளையராஜாவின் வரிகளை  பாருங்கள்  (படம்: நாடோடித் தென்றல், பாடியவர்கள்  சித்ரா, மனோ, இசை: இளையராஜா) 

  http://www.inbaminge.com/t/n/Naadodi%20Thendral/Yarum%20Vilaiyaadum.eng.html

  யாரும் விளையாடும் தோட்டம்

  தினந்தோறும் ஆட்டம் பாட்டம் போட்டாலும் பொறுத்துக் கொண்டு

  பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

  கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு

  ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

  இந்தப்பாடலில் நாடோடிகளின் வாழ்வியல், அவர்கள் ஊர் மாற என்ன காரணங்கள் பற்றி நண்பர் @naaraju  சொல்லும் விளக்கங்கள் இந்த  பதிவில் காணலாம்.

  ஆனால் கூட்டமாக இடம் பெயர்வது எப்போதும் மகிழ்ச்சியான நிகழ்வாகவே இருக்கும் என்பதில்லை. வெள்ளம், வறட்சி, போர் என்று பல நிர்ப்பந்தங்களால் நிகழும் இடமாற்றம் மிகுந்த வலி தரக்கூடியது. வைரமுத்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எழுதிய விடை கொடு எங்கள் நாடே என்ற பாடல் வரிகள் (இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: MS விஸ்வநாதன் AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி) இடம் பெயரும் வலியை சொல்கிறது

  http://www.youtube.com/watch?v=QX0aLn580dg

  விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே

  பனை மர காடே பறவைகள் கூடே

  மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

  உதட்டில் புன்னகை புதைத்தோம்

  உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

  வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

  பள்ளிக்கூடம் போக முரண்டு பிடிக்கும் குழந்தையைப் போல் வாழ்ந்த வளர்ந்த இடத்தின் இதமான கதகதப்பில் இருந்து வெளியே வர மறுக்கும் மனம் படும் வேதனையை காட்சியாய் சொல்லும் வரிகள்.

  மாற்றம் தான் நிரந்தரம். அது மகிழ்வான நிகழ்வாக அமைவது வரம்.

  மோகனகிருஷ்ணன்

  184/365

   
  • தேவா 10:05 am on June 3, 2013 Permalink | Reply

   மோகன், சிறப்பான பதிவு மேற் குறிப்பிட்ட மூன்று பாடல்களூம் மாற்றத்தினை சிறப்பாக ப்ரதிபலித்திருக்கும் வரிகள், எல்லொருடைய மாற்றங்களும் ம்கிழ்வான நிகழ்வுகளை எதிர்பார்த்தே…

  • kamala chandramani 11:28 am on June 3, 2013 Permalink | Reply

   ‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே’ கல்லூரி மாணவர்களிடையே பிரபலமான பாடல்.’To meet, to know, to love and then part is the sad tale of many a human heart’ -வாழ்க்கை!

  • anonymous 1:24 pm on June 3, 2013 Permalink | Reply

   //பனை மரக் காடே பறவைகள் கூடே
   மறுமுறை ஒரு முறை பார்ப்போமா//

   இப்பவும், எங்கூரு வாழைப்பந்தல் கிராமத்துக்குப் போனாலே, “பனை மரக் காடு” தான்;
   ஞான சம்பந்தர், ஆண் பனைகளை -> பெண் பனைகளா மாற்றிய தலம் (செய்யாறு) -ன்னும் சொல்லுவாங்க;

   பனை மரத்தை, எட்ட இருந்து பார்த்தாலே, ஒரு பாசம் வந்துரும்; கிட்டக்கப் போனா, வாசம் வந்துரும்;

   ஊருக்குள் கால் எடுத்து வைக்கும் போதே, கண்ணுல தண்ணி தளும்பும்;
   இன்னும் ரெண்டே நாள்-ல்ல இத விட்டுப் போயீறணுமா? -ன்னு, மகிழ்ச்சியைக் கூட முழுக்க அனுபவிக்க முடியாது;

   புதுசாக் கண்ணாலம் கட்டிப் போன பொண்ணு, சாங்கியத்துக்குச் சொந்த ஊருக்கு வந்தா போல…
   புதுப் பொண்ணுக்குப், புருசன் குடுக்கும் சுகத்தை விடச், சுகமா இருக்கும் பனை மரக் காடு!
   ——-

   ஊரோ, பேரோ…
   மனசுக்குள் இருக்கும் ஒருவரை/ ஒன்றை விட்டு போவது-ன்னாலே,
   “மனசுக்குள்ள மேகம் சூழ்ந்துக்குது”….

  • anonymous 1:35 pm on June 3, 2013 Permalink | Reply

   முருகா, எப்படி @mokrish முக்கியமான “பயணப் பாடலை” விட்டீங்க?:)

   போறாளே பொன்னுத்தாயி
   பொல பொலவென்று கண்ணீர் விட்டு
   தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு
   பால் பீச்சும் மாட்ட விட்டு,
   பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
   ———

   இதுல ஒரு வரி வரும்!

   பொதி மாட்டு வண்டி மேலே
   போட்டு வச்ச மூட்டை போல
   ……போறாளே பொன்னுத்தாயி

   மூட்டை, தானா ஊரை வுட்டுப் போவுமா?
   இல்ல… பொதி சொமக்குற மாட்டுக்குத் தான், மூட்டை மனசு தெரியுமா?

   இப்படி, மாட்டுக்கும் சொமக்க ஆசையில்ல; மூட்டைக்கும் போவ ஆசையில்ல,
   ஆனாலும் வாழ்க்கை வண்டி ஓடுது:(
   ———

   நீ வச்ச பாசம், நான் சொன்ன நேசம்
   கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி

   உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி
   கடைசியில் சாமிக்கு நேர்ந்தது, சாதிக்கு ஆனதடி…
   போறாளே….

   • anonymous 1:56 pm on June 3, 2013 Permalink | Reply

    சொந்த ஊரு-ன்னு இல்ல… மனசைக் குடுத்துட்ட சில இடங்களி்லும் இப்படித் தான் நெலமை…

    திருச்செந்தூர் = இங்கிட்டு போகவே பிடிக்காது;
    ஒரே காரணம்: பிரிஞ்சி வரணுமே -ங்கிறது தான்!

    ஊருல எத்தனையோ முருகன் கோயிலு, பெருமாள் கோயிலு…
    ஆனா செந்தூரைப் பிரியும் போது மட்டும், சோகம் அப்பும்;

    ஆழ்வார், “வாசல் படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே” -ம்பாரு!
    அப்படிச், செந்தூரில், நடை சாத்தினாலும், பிரியாது இருக்கும் வாசப்படியா மாறிட்டா, ஒரு வேளை இந்தக் காமம் அடங்குமோ? என்னவோ?

  • Saba-Thambi 1:39 pm on June 3, 2013 Permalink | Reply

   அனுபவித்தவருக்குத் தான் தெரியும் – இன்பமும் துன்பமும்

   போர் நிமித்தமாக வலோற்கராமா 75ம் வயதில் இடம் பெயர்ந்தவர் எனது தகப்பனார் – மீண்டும் பிறந்த இடத்தை பார்க்காமலே போய் சேர்ந்து விட்டார். -இப்படி பல இலங்கைத் தமிழரின் வாழ்க்கை இன்றும் அல்லோலப் படுகிறது.
   கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் எப்போது கேட்டாலும் கண்களில் ஈரம் கசியும். so close to the bone.

   A question “what would you do if you have super powers?” was asked at school and our daughter’s answer was “I loved to visit where my parents were growing up” – well we had to wait 10 more years to fulfill her dreams.

   A very nice post balancing all type of migration. kudos!!

   One more song comes to the mind in the same category :
   வேதம் புதிது: மாட்டு வண்டி….

  • anonymous 2:19 pm on June 3, 2013 Permalink | Reply

   Some more பயணப் பாடல்கள் (both sad & happy)

   *குடகு மலைக் காற்றில் வரும் பாட்டு கேக்குதா
   *தென் கிழக்குச் சீமையிலே, செங்காத்துப் பூமியிலே… ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரம் இருக்கு

   *ஜல் ஜல் ஜல் எனும் சலங்கையொலி
   *மாட்டு வண்டி கட்டிக்கிட்டு, மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
   *கொட்டாம் பட்டி ரோட்டிலே (class of kunnakudi :))))

  • rajnirams 2:35 pm on June 3, 2013 Permalink | Reply

   சூப்பர். மூன்று விதமான பயணங்களும் அருமையான பாடல்களுடன் கூடிய அருமையான பதிவு.

  • anonymous 2:37 pm on June 3, 2013 Permalink | Reply

   பிரிஞ்சிப் போகும் போது, வெசனப் படுற பாட்டு = சினிமாவில் இருக்கு – தெரியும்!
   ஆனா ஆழ்வாரும் சினிமா பாத்தாரே என்னவோ? பாடுறாரு!

   நல்ல வயலும் வரப்புமா இருக்குற வில்லிபுத்தூரை விட்டுப்புட்டு,
   நகரம்/ நரகமா இருக்குற மதுரைக்குப் போறாளே:)

   இல்லம் வெறியோடிற் றாலோ என்மகளை எங்கும் காணேன்
   நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் குளம் விடுத்து…
   …..மதுரைப் புறம் புக்காள் கொலோ?

   ——-

   ஒருமகள் தன்னை உடையேன் – உலகம் நிறைந்த புகழால்
   திருமகள் போல வளர்த்தேன் – செங்கண்மால் கொண்டு போனான்!

   அப்பறமா, மாப்பிள்ளையைத் திட்டுறாரு:)
   நாராயணன் செய்த தீமையாம்! = பாடுறது “பெரிய” ஆழ்வாரு:))

   நன்றும் கிறிசெய்து போனான் – “நாராயணன் செய்த தீமை”
   என்றும் எமர்கள் குடிக்கு – ஓர் ஏச்சுச் சொல் ஆயிடுங் கொலோ?
   ——-

   எம் பொண்ணு, சமைக்கலீன்னாக் கூடப், பழம் தின்னுட்டு இருப்பேனே!
   அங்கிட்டு, அவ கையில், தயிர் கடைஞ்சிக் கடைஞ்சி, கைத் தழும்பே வந்துருச்சி, பாவிங்களா

   நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
   இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி
   கடைக் கயிறே பற்றி – கைதழும்பு ஏறிடுங் கொலோ?
   ——-

   இம்புட்டும் திட்டிப் போட்டு…
   இந் நற்றமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே!:)

  • amas32 6:51 am on June 4, 2013 Permalink | Reply

   The song that always tugs my heart is
   //விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே

   பனை மர காடே பறவைகள் கூடே

   மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

   உதட்டில் புன்னகை புதைத்தோம்

   உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

   வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்//

   புலம் பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் வலி அது. வைரமுத்துவுக்கும் புலம் பெயர்ந்த வலியுண்டு, அதனாலோ என்னவோ இந்தப் பாடல் வரிகள் மனத்தின் ஆழத்தைத் தொடும்படி உள்ளது.

   பெண்கள் புகுந்த வீட்டிற்குப் போகும் போதும் ஒரு வலி தான். சில எதிர்ப்பார்ப்புக்கள் இருப்பதாலும், பெண்ணெனப் பட்டவள் இன்னொரு வீடு செல்ல வேண்டும் என்று ஆதியிலிருந்து சொல்லிவைக்கப் படுவதாலும் அதில் அவ்வளவு சோகம் இருக்காது. நான் திருமணம் முடிந்து டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்க்டன் என்ற நகரத்துக்குச் சென்ற போது என் தாய் தந்தையரைப் பிரிந்த சோகத்தோடு கோவிலில்லா ஊரில் குடியிருந்த சோகம் என்னை மிகவும் பாதித்தது. ஏழு மாதங்கள் கழித்துத் தைப் பூச நன்னாளில் என் முருகன் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் அவன் கோவிலுக்கு என்னை அழைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. Some thread to hold on to your native land where you had your roots is so required to find happiness in your adopted place.

   amas32

 • G.Ra ஜிரா 11:02 am on May 13, 2013 Permalink | Reply  

  மருதாணிச் சாறெடுத்து… 

  சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்காவின் ஓரமாக வரிசையாக வடக்கத்தி இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம் பெண்கள் கைகளில் விதம்விதமாக மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண அலங்காரத்திலும் மெஹந்தி முக்கியமாக இருக்கிறது.

  மெஹந்தி என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது.

  என்னுடைய சிறுவயதில் வீடுகளில் மருதாணி அரைத்து பெண்களும் சிறுமிகளும் இட்டுக் கொள்வார்கள். சிறுவர்களும் கூடத்தான்.

  மருதாணி இலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அம்மியில் அரைப்பவர்களும் உண்டு. அத்தோடு கொட்டைப்பாக்கு, புளி, தயிர் ஆகியவைகளையும் சேர்த்து அரைப்பவர்களும் உண்டு.

  வீட்டில் ஒருவர்தான் எல்லாருக்கும் மருதாணி இடுவார். இட்டு முடித்திருக்கும் போது அவர் விரல்கள் தாமாகவே சிவந்திருக்கும். அதெல்லாம் அந்தக்காலம். பிறகு மருதாணிச் செடிகள் வைக்க வீடுகளில் இடமில்லாமல் போன போது மருதாணிப் பொடி பாக்கெட்டுகளில் வந்தது. ஆனால் அது அவ்வளவு பிரபலமாகவில்லை. அதற்குப் பின்னால் வந்த மெஹந்தி கூம்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

  கை படாமல் இட்டுக் கொள்ள முடியும். மெல்லிதாகவும் இட முடியும். இப்படி வசதிகள் வந்த பிறகு மருதாணி அரைப்பது என்பதே இல்லாமல் போனது. அரைக்க விரும்பினாலும் எத்தனை வீடுகளில் அம்மி இருக்கிறது?

  இந்த மருதாணி திரைப்படங்களில் நிறைய வந்திருக்கிறது.

  மருதாணி விழியில் ஏன்” என்று கண்கள் சிவந்திருப்பதை வாலி அழகாக சக்கரக்கட்டி படத்தில் உவமித்திருக்கிறார்.
  மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில் நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறார்.
  மருதாணி வெச்ச பொண்ணு இவதான்” என்று கிராமத்துப் பெண்ணை அன்னை வயல் படத்தில் இனங்காட்டுகிறார் பழனிபாரதி.
  மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா” என்று கூட பாட்டு உண்டு.
  இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள் உண்டு. பட்டியல் பெரிது.

  மருதாணிக்கு மருதாணி என்று பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? அதன் பழைய பெயர் மருதோன்றி.

  இலையின் சாறினால் சிவந்த மரு தோன்றுவதால் மருதோன்றி என்று அதற்குப் பெயர். பழைய இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்திருக்கிறார்கள். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் இப்படியொரு பாட்டு.

  கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
  றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
  முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
  இன்சொற் பலவு முரைத்து

  இந்தப் பாடலுக்கு இரண்டு விதப் பொருள்கள் தோன்றுகின்றன. இரண்டையும் தருகிறேன். பொருத்தமானதைக் கொள்க.

  கார்காலம் வந்து விட்டது. கருவிளை மலர்கள் மாதரார் மாவடுக் கண்கள் போல விழித்துப் பூத்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணிப்பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டன காதலியின் கைகள். பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

  அடுத்த பொருள். கார்காலம் வந்து விட்டது. தலைவியின் கண்கள் கருவிளை மலர்களைப் போன்று பூத்து தலைவன் வருகைக்காக விழித்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன. பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

  இந்தச் செய்யுளில் தோன்று என்று அழைக்கப்படுவது மருதோன்றி.

  அது சரி. யாரெல்லாம் தங்கள் கைகளில் மருதாணி இட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள்? 🙂

  அன்புடன்,
  ஜிரா

  163/365

   
  • amas32 11:17 am on May 13, 2013 Permalink | Reply

   மருதாணியை மிக்சியில் போட்டு அரைப்பது கடினம். சரியாகவே அரைபடாது. திப்பி திப்பியாக இருக்கும். அதற்கு அம்மி அல்லது கல்லுரல் தான் சரி. மருதாணி இட்டுக் கொள்ள பிடிக்காத பெண்களே இருக்க முடியாது என்று சொல்லல்லாம். சில வீடுகளில் சிறுவர்களும் முன் காலத்தில் இட்டுக் கொள்வர் 🙂 மணமகனுக்கு நலுங்கு வைப்பது போல கையில் மருதாணி இடுவதும் வழக்கம்.

   மருதாணி பூக்களுக்கு நல்ல நறுமணம் உண்டு. இரவு நேரத்தில் கும்மென்று மணம் வீசும். கதம்ப மாலையில் சேர்த்துக் கட்டுவது வழக்கம்.

   மருதாணி இட்ட கைகளால் உண்ணும்போது அந்த உணவுக்கும் தனி மணம் வரும். கையில் இட்ட மெஹந்தி கோலங்கள முதல் சில நாட்கள் நன்றாக இருந்தாலும் அதன் பின் கை மோர்குழம்பு மாதிரி ஆகிவிடும். ஆனால் அரைத்து இட்டுக் கொள்ளும் மருதாணி ரொம்ப நாட்கள் அழியாமல் அழகாகக் காட்சியளிக்கும் 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

    உண்மை. உரல் அல்லது அம்மியில்தான் அரைக்க வேண்டும். ஒரேயொரு கொட்டைப்பாக்கையும் வைத்து அரைத்துவிட்டால் அட்டகாசம்.

  • vaduvurkumar 1:48 pm on May 13, 2013 Permalink | Reply

   பல முறை இட்டுக்கொண்டுள்ளேன்.

   • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

    சிறுவயதில் எல்லாரும் வெச்சிருப்போம்னு நெனைக்கிறேன். 🙂

  • kamala chandramani 2:29 pm on May 13, 2013 Permalink | Reply

   மருதாணிப்பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். நல்ல மணம் வீசும். 15 நாட்களுக்கு ஒருமுறை இட்டுக்கொள்ள நகங்கள் நகப்பூச்சு(nailpolish) பூசியதுபோல் அழகாக இருக்கும். கால் நகங்களுக்கு பாதுகாப்பு. கால் ஆணிக்கு மருந்து. உடலுக்கு குளிர்ச்சி. மெஹந்தி சீக்கிரம் போய்விடும். கைமணக்க நிறைய நாள் இருக்கும் மருதாணி.

   • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

    மெஹந்தியில் ஏதோ கெமிக்கல் சேக்கிறாங்களாம். அதான் பக்குன்னு ஒடனே பிடிச்சுக்குதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டா மருதாணிதான் சிறப்புன்னு சொல்வேன் 🙂

  • saba 7:54 pm on May 14, 2013 Permalink | Reply

   இயற்கையாக இருக்கும் மருதாணிச் சாறு சந்ததி சந்ததியாக பாவிக்கப்பட்டது. ஒரு பக்க விளைவயும் தோற்றுவிக்கவில்லை.
   தற்போது கூம்புகளில் விற்கப்படும் ஒரு வகை black “ஹென்னா” தோல்களில் கெடுதலை விளைவிக்கிற்து.
   A chemical PPD is added to make the stain darker for the temporary tattoo and it creates rashes on the skin. these are mainly use in Bali , an Indonesian Island.
   check the link below:
   (http://www.expat.or.id/medical/blackhennareactions.html)

   • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

    சரியான தகவலை எடுத்துக் கொடுத்தீர்கள். இயற்கையான முறைகளை விட்டுவிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை.

 • என். சொக்கன் 2:04 pm on April 9, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : தோட்டம் 

  பாடல் : யாரும் விளையாடும் தோட்டம்.

  படம்: நாடோடித் தென்றல்.

  எழுதி இசையமைத்தவர்: இளையராஜா.

  பாடியோர் : சித்ரா,மனோ.

  இளையராஜாவை நாம் இசையமைப்பாளராகக் கொண்டாடிய அளவிற்கு, பாடலாசிரியராகக் கொண்டாடவில்லை என்று படுகிறது. மெட்டுகள் மட்டுமல்ல,மெட்டுகளுக்கேற்ப எளிமையினும் எளிமையான வார்த்தைகளைப் போட்டு, அருமையாக அமர வைப்பது இராஜாவிற்கு கை வந்த கலை. உதாரணத்திற்கு ‘யாரும் விளையாடும் தோட்டம்’ (நாடோடித் தென்றல்) பாடலை எடுத்துக் கொள்வோம். வாத்து மேய்க்கும் நாடோடிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண், புது இடமொன்றை கண்டடைய வேண்டிச் செல்லும் வழியில் பாடும் பாடல்.

  “போட்டாலும் பொறுத்துக்கொண்டு,

  பொன்னு தரும் சாமி;

  இந்த மண்ணு நம்ம பூமி”

  என்று ‘நிலமெனும் நல்லாளை’ இறை வணக்கம் போல வைத்துப் புகழ்ந்து விட்டு, அவளுடைய வாழ்வியல் தேவைக்கு வருகிறாள் நாயகி.

  “கோபங்கள் வேணாம் கொஞ்சம் ஆறப் போடு

  ஆறோடும் ஊரப் பார்த்து டேராப் போடு”

  இவளுடைய தொழிலோ வாத்து மேய்த்தல். வாத்துகளுக்கு இன்றியமையாதது நீர். போலவே மனிதர்களுக்கும். ஆதலால், ஆறைப் பார்த்துப் போடு டேரா! எளிமையாக வரும் கிராமியத் தமிழில் இந்த ‘டேரா’ என்ற வடமொழிச் சொல் இடறுகிறதா…? டேரா என்றால் ஓரிடத்தில் தற்காலிகமாக‌ குடில் அமைத்துத் தங்குதல். (சீக்கிய மத குரு இராம் ராய் என்பவர்,பள்ளத்தாக்கு ஒன்றில் குடிலமைத்துத் தங்கியதாலேயே, அவ்வூருக்கு ‘டேராடூன்’ என்று பெயர் வந்தது) பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் கொஞ்சம் நீக்கு போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதால், அந்த கோபங்கள் வேண்டாமெனும் சிறு அறிவுரை. இதே பாடலின் சரணத்தில் வரும் மற்றொரு வரியான “ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு” என்பதைப் பார்த்தால் சிறு விஷயமாகத் தோன்றலாம். மாநிலங்களுக்கிடையிலான சமகால நீர் அரசியலைப் பொருத்திப் பாருங்கள்.விளங்கும்!

  பல்லவியில், தன் வாழ்வியலைப் பாடியவள், சரணத்தில் ஊர் அடைந்ததற்கான மகிழ்ச்சியைப் பாடுகிறாள்.  ”ஆஹா! இந்த ஊர்ல் மணிமாடம்,பள்ளிக்கூடம்ல்லாம் இருக்கு. என்ன, ஊர் மனுஷங்களுக்குள்ளதான் சின்ன சின்ன வம்பு தும்பு இருக்கு. அதனலென்ன, எல்லா ஊர்லயும் இருக்கறதுதானே.” என்பது மாதிரியான சமாதானத்துடன் கூடிய மகிழ்ச்சி!

  “தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடம் உண்டு”

  இங்கு பள்ளு என்பது தமிழின் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. ’ஆடுவோமே, பள்ளு பாடுவோமே’ என்ற சுதந்திர தினப் பாடல் நினைவிற்கு வருகிறதா..? மேலும் பள்ளு என்பதில் ஞானப்பள்ளு, சீர்காழி பள்ளு, குற்றாலப் பள்ளு என பலவகைகள் உண்டு. அது சரி, ஏன் குறிப்பாக ‘பள்ளு’வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குறவஞ்சியையோ, பரணியையோ, உலாவையோ பாடியிருக்கக் கூடாதா..? காரணம் இருக்கிறது. பாடலின் நாயகி, ஆற்றைத் தேடிப் போகின்றாள். ஆறு என்பது மருதத்திணையின் நீராதாரம். ’பள்ளு’ -வும் கூட மருத நிலத்தின் இலக்கியம். அதனால்தான் அவ்வூரின் பள்ளிக்கூடத்தில், குறிப்பாக பள்ளு-வைப் பாடுகிறார்கள். பள்ளிக்கூடம் என்பதை கலையரங்கம் மாதிரியாதனாகக் கூட புரிந்து கொள்ளலாம்.

  அடுத்ததாக, பாடலில் வருவது குறும்பு எபிசோட். ஊர் தேடி வருமவளை, நாயகன் கலாய்க்கும் பகுதி.

  “டேராவை பார்த்து போடு ஓலத்தோடு

  வேறூரு போய்ச்சேரு நேரத்தோடு”

  வாத்துகளோடு சேர்த்து, அவளை மட்டம் தட்டுவதோடு அவளுடையப் பாடலையும் ‘ஓலம்’ என்கிறான். இதைத்தான் மதுரைப் பக்கம் ’உடைசலைக் கொடுத்தல்’ என்பார்கள். தொடர்ந்து வரும் வரிகளில்,

  ”சேராத தாமரைப்பூ தண்ணி போலே

  மாறாதே எங்க வாழ்வு வானம் போலே”

  எனப் பாடுகிறாள். ஏனோ இராஜாவின் வரிகளில் தொனிக்கும் மென் சோகம் பாடகி சித்ராவின் குரலில் தொனிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. எத்தனையோ பூக்கள் இருக்க ஏன் தாமரைப் பூ..? again மருத நிலம். ஆமாம், மருத நிலத்திற்குரிய பூக்களுள் ஒன்று தாமரை. of course, தாமரை இலையில்தான் தண்ணீர் சேராது!

  ராஜூ

  பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம். கடந்த ஆறாண்டுகளாக தமிழிணைய வாசி. இது அது என்று வகை தொகையின்றி எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது பிடித்த செயல்.

  வலைப்பூ : – http://www.tucklasssu.blogspot.com
  ட்விட்டரில் : – http://www.twitter.com/naaraju

   
 • என். சொக்கன் 11:24 am on March 14, 2013 Permalink | Reply  

  ஆகுபெயர் 

  • படம்: ராஜாதிராஜா
  • பாடல்: எங்கிட்ட மோதாதே
  • எழுதியவர்: பொன்னடியான்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=f7hoMEG9SXU

  சுண்டல் பயறை ஊற வெச்சு, காலையிலே தின்றுவிட்டு,

  தண்டால் எடு, குண்டால் எடு, பஸ்கி எடு, குஸ்தி போடு,

  வேட்டி எடுத்து, வரிஞ்சு கட்டி, மீசையத்தான் முறுக்கி முறுக்கி,

  சிலம்பை எடுத்துச் சுழற்று சுழற்று, ஆம்பளையா வளரு வளரு!

  நேற்று வீட்டில் பச்சைப் பட்டாணி சுண்டல் செய்திருந்தார்கள். பொறியலுக்கும் சுண்டலுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்தபடி சாப்பிட்டேன்.

  பத்தாங்கிளாஸ் இலக்கணப் புத்தகத்தில் ‘ஆகுபெயர்’ என்று ஒரு பாடம் இருந்தது. அதாவது, ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகிவருவது.

  இதற்குப் பிரபலமான உதாரணம், ‘ஊர் சிரித்தது’. உண்மையில் சிரித்தது ஊர் அல்ல, அதில் உள்ள மக்கள், ஆனால் அது ஊரே சிரித்ததாகச் சொல்லப்படும்.

  இதேபோல், ‘ரோஜா பயிரிட்டிருக்கிறேன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் மண்ணில் ரோஜாவை விதைத்துள்ளார் என்று அர்த்தம் இல்லை, அவர் செடியைப் பயிரிட்டுள்ளார், அதில் பூக்கும் ரோஜாப்பூ அந்தச் செடிக்கே பெயராக ஆகிவருகிறது.

  ஆகுபெயர்களில் பல வகைகள் உண்டு. சினையாகுபெயர், இடவாகுபெயர், பண்பாகுபெயர் என்று அது ஒரு பெரிய லிஸ்ட்.

  அந்தப் பட்டியலில் ஒரு வகை, தொழிலாகுபெயர். ஒரு தொழில் அதனால் உருவாகும் பொருளுக்குப் பெயராக மாறுவது.

  உதாரணமாக, ‘சுண்டல்’ என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்வோம், அது பெயர்ச்சொல் (Noun) அல்ல, வினைச்சொல் (Verb), இதன் அர்த்தம், ஒரு பொருளை நீர் வற்றும்படி சுருக்குவது, ‘பாலைச் சுண்டக் காய்ச்சினான்’ என்று சொல்கிறோம் அல்லவா, அதுதான் இது.

  ஆக, பச்சைப் பட்டாணியைச் சூடாக்கி நீரை வற்றவைத்துச் சுண்டச் செய்வது என்ற தொழில், அதனால் கிடைக்கும் உணவுப்பொருளுக்கே பெயராகிவிட்டது. ’சுண்டல்’ என்பது தொழிலாகுபெயர்.

  சுண்டல்மட்டுமில்லை, வறுவல், பொரியல், அவியல், மசியல், துவையல், பொங்கல் எல்லாமே Verbகள்தாம். அதனால் கிடைக்கும் உணவுப்பொருள்களுக்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டோம்!

  அடுத்தமுறை யாராவது ‘கடலைச் சுண்டல் செய்தேன்’ என்று சொன்னால், ‘கடலையே வற்றவைத்தாயா? நீ என்ன பெரிய அகத்தியரா?’ என்று கேட்டுவிடுங்கள் :>)

  ***

  என். சொக்கன் …

  14 03 2013

  103/365

   
  • tcsprasan 11:57 am on March 14, 2013 Permalink | Reply

   Nice. ஆனா பொறியலா? பொரியலா?

   • என். சொக்கன் 12:08 pm on March 14, 2013 Permalink | Reply

    என்னுடைய பிழைதான், அது பொரியல் என்று இருக்கவேண்டும். சரி செய்துவிட்டேன்

  • gokulraj 11:59 am on March 14, 2013 Permalink | Reply

   பொறியல், பொரியல் என்ன வித்தியாசம் !!

   • என். சொக்கன் 12:08 pm on March 14, 2013 Permalink | Reply

    என்னுடைய பிழைதான், அது பொரியல் என்று இருக்கவேண்டும். சரி செய்துவிட்டேன்

   • என். சொக்கன் 12:10 pm on March 14, 2013 Permalink | Reply

    உருளைக்கிழங்கை ருசியாகப் பொரித்துத் தந்தார் அவர், அதைச் சாப்பிட்டபின், அந்தச் சுவையில் லயித்து, ’ஐயா, உங்கள் பெயரைத் தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்துவைக்கலாம்’ என்று பாராட்டினேன்

    • Saba-Thambi 6:32 pm on March 15, 2013 Permalink

     நல்ல வியாக்கியாணம். அருமை!

  • amas32 (@amas32) 8:33 pm on March 14, 2013 Permalink | Reply

   சுண்டாட்டம் என்று புதிய திரைப்படம் வெளிவந்துள்ளது. (கேரம் போர்ட் ஆட்டம்) பெயரே என்னை ஈர்த்தது. சுண்டி விளையாடுவதால் சுண்டாட்டம். இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது சுண்ட வைத்து செய்யும் சுண்டல் பற்றி.

   எங்கிட்டே மோதாதே என்ற பாடலை எழுதியவர் பொன்னடியான் என்று பார்க்க சிறிது ஆச்சர்யமாக உள்ளது. அவர் இறைவன் மேல் ஏதாவது பாடல் எழுதுபவரோ என்று தான் முதலில் தோன்றியது 🙂

   amas32

  • GiRa ஜிரா 9:46 am on March 15, 2013 Permalink | Reply

   தொழிலாகுபெயர். மிக அழகான விளக்கம்.

   எல்லாம் போட்டுக் குழம்புவதால் குழம்பு. ஊறுகின்ற காயாதலாம் ஊறுகாய். வதக்கப்படுவதால் வதக்கல். நீர் வற்றிப் போவதால் வற்றல். வறுக்கப்படுவதால் வறுவல். சாப்பிட்டிலும் தமிழ் விளையாடுகிறது.

  • anonymous 6:41 pm on March 15, 2013 Permalink | Reply

   “சுண்டுதல்” என்னும் வினையை மறைத்து (அணைத்து), பெயர்ச்சொல்லாகவே காட்டி விடுவதால்.. இது “வினையால் அணையும் பெயர்” அல்லவா?;)

   • anonymous 6:58 pm on March 15, 2013 Permalink | Reply

    வினையாலணையும் பெயர் அல்ல;)
    சொக்கன் சொன்ன ஆகுபெயர் என்பதே சரி; ஏன்?

    வினையாலணையும்பெயர் காலம் காட்டும்; ஆகுபெயர் காட்டாது;
    *படித்தவன் – வினையால் அணையும் பெயர்; முன்பே படித்தவன் என்ற இறந்த காலம் காட்டும்;
    *படிப்பு – ஆகுபெயர், படிப்பதால் படிப்பு, காலம் காட்டாது;

    வடுப்பதால் = வடை
    தோய்ப்பதால் = தோசை
    இடுவதால் = இட்டிலி;)
    சுண்டுவதால் = சுண்டல்

    Just a thought on difference between the two-வினையால் அணையும் பெயர் & ஆகுபெயர்.

  • anonymous 8:35 pm on March 15, 2013 Permalink | Reply

   “சுண்டுவதால்” = சுண்டல் –ன்னா,
   “ஆகுவதால்” = ஆகுபெயர்
    
   அட, “ஆகு பெயர்” என்பதே ஒரு ஆகுபெயரா?:)
   என்னே தமிழின் விளையாட்டு:)
   —–
    
   Wait, Wait, அவசரப்பட்டு எறங்கீறக் கூடாது..
   ஆகு பெயர் is actually வினைத் தொகை!
   (ஆன பெயர், ஆகின்ற பெயர், ஆகும் பெயர்)
    
   சுண்டல் போலவே, “ஆகல்”-ன்னு பேரு வச்சிருந்தா, அப்போ (தொழில்) ஆகுபெயர்
   ஆனா, இங்கு “ஆகு” என்பதன் பின்னாடி “பெயர்” –ன்னு இன்னோரு பெயரைச் சேர்த்து விட்டதால், இது ஆகுபெயர் ஆகாது;
    
   இனிய-நுண்ணிய வேறுபாடுகள்
   1. காலம் காட்டாமல் ஆகி வந்தால் = தொழில்-ஆகுபெயர் (படிப்பு)
   2. காலம் காட்டினால் = வினையால் அணையும் பெயர் (படித்தவன்)
   3. மூன்று காலமும், காட்டாமல் காட்டினால் = வினைத் தொகை (படி குழாம்)
   —–
    

   படித்தல் = ஒரே வினை தான்…

   ஆனா, வேறு வேறு சூழல்களில் எப்படி மாறுது பாருங்க!

   ஒரே இறைவன் தான்…

   வேறு வேறு சூழல் கொள்வது போல்… = திருமால்/ முருகன்/ அல்லா/ சிவபெருமான்…
    
   படிப்பு –ன்னு பேரு கொண்டால் = தொழிலாகு பெயர்
   படித்த-வன் ன்னு பேரு கொண்டால் = வினையாலணையும் பெயர்
   திருமால்-ன்னு பேரு கொண்டால் = முல்லை, காத்தல் (miss u)
   முருகன்-ன்னு பேரு கொண்டால் = குறிஞ்சி, புணர்தல் (love u)
    
   இதுவே தமிழ் தரும் பாடம்!

   • anonymous 8:39 pm on March 15, 2013 Permalink | Reply

    Movie என்பதே ஆகுபெயர் தான் (Move ஆவதால்:))
    தமிழ்ச் சினிமாவை வச்சிக்கிட்டே மொத்த இலக்கணமும் சொல்லிக் குடுத்துறலாம்:))
     
    *(படிக்காதவன்) = வினையால் அணையும் பெயர்
    *பட்டப் (படிப்பு) = தொழிலாகு பெயர்
    *(படிக்காத) மேதை = பெயரெச்சம் (எச்ச வினை)
    *(படித்தால்) மட்டும் போதுமா = வினையெச்சம் (ஐய வினை – எதிர்காலம்)
     
    வாழ்க (நல்ல) தமிழ்ச் சினிமா!
    வாழ்க திரைத்தமிழ் இலக்கியம்

 • என். சொக்கன் 10:27 am on December 20, 2012 Permalink | Reply  

  மணம்! 

  • படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
  • பாடல்: மதுர மரிக்கொழுந்து
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=78z-g_mB2ls

  மதுர, மரிக்கொழுந்து வாசம்,

  என் ராசாத்தி உன்னுடைய நேசம்!

  மானோட பார்வை, மீனோட சேரும்,

  மாறாம என்னைத் தொட்டுப் பேசும்!

  ’மரிக்கொழுந்து’ என்று கங்கை அமரன் எழுதிவிட்டார், மனோ, சித்ராவும் அப்படியே பாடிவிட்டார்கள். நாமும் தினசரி வாழ்க்கையில் அப்படியே பயன்படுத்துகிறோம்.

  உண்மையில் அந்தச் சொல் ‘மருக்கொழுந்து’ என்றுதான் இருக்கவேண்டும், பின்னர் பேச்சு நடையில் ‘மரிக்கொழுந்து’ எனத் திரிந்துவிட்டது. இப்போது இருவிதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

  தமிழில் ’மரு’ என்றால் வாசனை என்று அர்த்தம். ‘மரு அமர் குழல் உமை’ என்று திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அதாவது, வாசனை மிகுந்த கூந்தலைக் கொண்ட உமாதேவி.

  அதேபோல், இங்கே மரு + கொழுந்து = வாசனை மிகுந்த கொழுந்து!

  ***

  என். சொக்கன் …

  20 12 2012

  019/365

   
  • GiRa ஜிரா 7:16 pm on December 20, 2012 Permalink | Reply

   அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க நாகா.

   பொதுவா மலர்கள் மணம் மிகுந்து இருக்கும். இலைகளில் மணம் இருந்து, அதுவும் மலர்களின் மணத்தைத் தூக்கியடிக்கும் என்றால் அது மருக்கொழுந்துதான்.

   கதம்பம் என்று விற்பார்கள். இப்போது அதைக் காண முடியவில்லை.

   கனகாம்பரம் மல்லி மருக்கொழுந்து ஆகியவைகளைக் கலந்து கட்டுவார்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel