கூட்டம் கூட்டமாக 

சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை  பிடித்து முதுமலை வனச் சரணாலயம், ஆனைமலை வனச் சரணாலயத்தில் விட தமிழக அரசு ‘ஆபரேஷன் மலை’ என்ற நடவடிக்கை எடுத்தது. இது பற்றிய செய்திகளை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்த எனக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கில ஊடகங்கள் ‘herd of elephants’ என்று எழுத தமிழில்  யானைக் கூட்டம் என்றே இருந்தது.

ஆங்கிலத்தில் இந்த Collective Nouns மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொரு பறவை, விலங்கு குழுவுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர். பல சொற்கள் கவிதை போல் இருக்கும். Colony of Ants, Troop of Apes, Swarm of bees, Flock of Birds, Pack of Hounds, Pride of Lions , School of fish என்று கேட்கும் போதே ஒரு graphic பிம்பம் தோன்றும். காக்கை கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? A murder of Crows! யாரோ ஒரு ரசிகன் யோசித்து வைத்த பெயர்கள்.

http://users.tinyonline.co.uk/gswithenbank/collnoun.htm#Birds

தமிழில் எல்லாவற்றையும் கூட்டம் என்றே சொல்கிறார்களா? இலக்கியத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் திரைப்பாடல்களில்  அப்படித்தான் என்று தோன்றுகிறது.

எங்க வீட்டு பிள்ளை படத்தில் வாலி எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பிரபலமான பாடலில் காக்கைகள் கூட்டம் என்று எழுதி பின்னர் மாற்றப்பட்ட வரி ஒன்று வரும்

அரச கட்டளை படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)  முயல் கூட்டம் என்கிறார்

http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

வைரமுத்து சிவப்பு மல்லி படத்தில் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் டி எம் எஸ் டி எல் மகராஜன்) சிங்க கூட்டம் என்கிறார்

http://www.inbaminge.com/t/s/Sivappu%20Malli/Erimalai%20Eppadi.eng.html

சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

கண்ணதாசன் அக்கரை பச்சை படத்தில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் SPB, எல் ஆர் ஈஸ்வரி) கிளிக் கூட்டம் என்கிறார்

http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Oorgolam%20Poginra.eng.html

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்

ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

நா முத்துக்குமார் உனக்கும் எனக்கும் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே என்ற பாடலில் (இசை தேவி ஸ்ரீபிரசாத் பாடியவர் சங்கர் மகாதேவன்)

http://www.youtube.com/watch?v=xAWGS5tB9Lw

காட்டுக்குள்ள நீயும் போகாதே

கொட்டுகிற தேனீ கூட்டம்

தேனெடுக்க உதட்ட சுத்துமடி

இப்படி இன்னும் பல பாடல்கள். பறவைக்  கூட்டம், நரிகள் கூட்டம்  குயில் கூட்டம் குட்டி போட்ட ஆட்டுக் கூட்டம், மான் கூட்டம், கடல்மீன் கூட்டம், வண்டுகள் கூட்டம், பட்டாம்பூச்சி கூட்டம் – என்று எல்லா கவிஞர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட மெட்டின் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் தொலைத்து கூட்டம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இது சரியா?

ஆடுகளும் மாடுகளும் மந்தை. கொஞ்சம் தேடினால் flock என்ற வார்த்தைக்கு இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம் என்ற அர்த்தம் கண்ணில் படுகிறது.  Swarm என்றால் வண்டின் மொய்திரள் என்ற அழகான விளக்கம்  கண்ணில் படுகிறது.

தமிழில் Collective nouns உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்

மோகனகிருஷ்ணன்

295/365