Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 12:18 pm on August 3, 2013 Permalink | Reply  

    திகிலோ திகில் 

    முன்னெச்சரிக்கை – பலவீனமானவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும். பின்னால் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது.

    இருக்கிறதா? இல்லையா?

    எது?

    பேய்தான்.

    என்னதான் சொல்லுங்கள். பேய் பிசாசு என்று சொல்லும் போது ஏதோ ஒரு இனம் புரியாத திகில் மனதில் உண்டாகத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இருட்டுப் பகுதிகளில் அந்தத் திகிலின் அளவு கூடும்.

    அப்படிப் பட்ட நிலையில் ஒரு கவிஞரை அழைத்து, “நீங்கள் பாட்டெழுத வேண்டும். திரைப்படத்தில் அந்தப் பாட்டைப் பாடப் போவது ஒரு பேய்” என்று சொன்னால் அவர்கள் என்ன எழுதியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். தமிழ்த் திரைப்படங்களில் பேய்கள் பாடிய பாடல்கள் எல்லாம் கண்முன் ஒரு நிமிடம் வந்து சென்றன.

    சிலிர்த்துப் போன முதுகுத் தண்டோடு அந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். என்னைப் போல் இல்லாமல் நீங்கள் துணிச்சலாக இருக்க வேண்டும். சரியா?

    வேறுவழியே இல்லாமல் கண்ணதாசனைத்தான் வழக்கம் போல முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது. நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் அவர் எழுதிய பாடலை மக்கள் நெஞ்சம் மறப்பதில்லை.

    நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழப்பதில்லை
    காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களும் மூடவில்லை

    இந்தப் பாடலுக்காக எம்.எஸ்.விசுவநாதன் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாராம். அமானுஷ்யம் மட்டும் இல்லாமல் பாடலில் காதலும் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மெனக்கிடல். பி.சுசீலாவின் குரலில் கண்ணதாசன் வரிகள் ஒருவித மர்மத்தையும் திகிலையும் கிளப்பிவிடுவது உண்மைதான்.

    யார் நீ படத்திலும் ஒரு பாடல். அவன் பூங்காவில் அமர்ந்திருக்கிறான். அருகில் ஒரு ஏரி. அது மலைப்பகுதி. மெல்லிய பனி மூடியிருக்கிறது. குரல்களிலெல்லாம் இனிய குரல் உருவமில்லாமல் ஒலிக்கிறது. யாருமில்லாத படகு ஏரியில் தானக நகர்கிறது. அந்தப் படகிலிருந்தால் குரல் வருகிறது. ஆனால் யாரும் இல்லை. பாடும் குரலில் ஒரு ஏக்கம். அந்த ஏக்கத்துக்கான வரிகளைக் கண்ணதாசன் இப்படி எழுதுகிறார்.
    நானே வருவேன் இங்கும் அங்கும்
    உன் மங்கல மாலைப் பெண்ணாக
    உன் மஞ்சள் குங்குமம் மலராக
    நான் வந்தேன் உன்னிடம் உறவாட

    கணவனோடு இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருத்தி இறந்து போகிறாள். இல்லை இல்லை. இறந்தாள். ஆனால் போகவில்லை. அவளில்லாமல் கணவன் படும்பாட்டை அவளால் காணச் சகிக்கவில்லை. ஆவியாய் வருகிறாள். ஆனால் ஆறுதலாய் வருகிறாள். அழுகின்ற கணவனை சமாதானப் படுத்துகிறாள். இந்தக் காட்சிக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கு வரிகளைக் கொடுத்தது வாலி. குரலைக் கொடுத்தது பி.சுசீலா.
    மன்னவனே அழலாமா
    கண்ணீரை விடலாமா
    உன்னுயிராய் நானிருக்க
    என்னுயிராய் நீயிருக்க

    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். அதிலும் கொலைக்குற்றம் செய்தவர் நெஞ்சம்? அதிலும் இறந்தவர் ஆவியாய் வந்தால்? அப்படி ஒரு நிலையில் மாட்டிக் கொள்கிறான் கொலை செய்தவன். விடாது துரத்துகிறது இறந்தவள் ஆவி. தன்னைக் கொன்றவன் இன்னும் உயிருடன் இருப்பதை அந்த ஆவி விரும்பவில்லை. அவன் வரவை விரும்பிக் காத்திருக்கிறது ஆவி. இந்தக் காட்சிக்கு எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில் வாலி என்ன வரிகளை எழுதியிருப்பார்?
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒருநாள் வரும் வரையில்
    நானிருப்பேன் நதிக்கரையில்

    என்ன இது? எல்லா பேய்ப் பாடல்களையும் சுசீலாம்மாவே பாடிவிட்டாரா? இல்லை. எழுபதுகளின் இறுதியில் எம்.எஸ்.வி ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார். இந்த முறை பேய்க்கு குரல் கொடுத்தது எஸ்.ஜானகி. ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் பேய்ப்பாட்டு எழுதியவர் கண்ணதாசன். கதாநாயகிக்கு மட்டும் பேய்ப்பாட்டு கேட்கிறது. ஏனென்றால் இறந்து போனவளின் காதலனை அவள்தான் திருமணம் செய்திருக்கிறாள்.
    வெண்மேகமே வெண்மேகமே
    கேளடி என் கதையை
    மோகம் சோகம் என் விரகதாபம்
    தாகத்தில் பிறக்கும் இனிய ராகம்

    எம்பதுகளின் ராஜாவான இளையராஜா இசையிலும் பேய்களுக்குப் பாட விருப்பம் இருந்திருக்கின்றன. நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.
    உருகுதே இதயமே அருகிலே வா வா
    நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
    ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்

    குறும்புக்கார ஆவி ஒன்று. அவளைப் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கிக் கொன்று விட்டார்கள் இருவர். அவளைக் கொடுமைப் படுத்தி அவர்கள் பாடிய பாடலை அவர்களுக்கே திருப்பிப் பாடுகிறது ஆவி. கங்கையமரனின் குறும்பு வரிகளில் எஸ்.ஜானகியின் குரலில் அமர்க்களம் பண்ணும் ஆவிக்கு மெட்டுப் போட்டுக் கொடுத்தவர் இளையராஜா.
    சும்மா வரவும் மாட்டேன்
    வந்தா விடவும் மாட்டேன்
    புடிச்சேன்னா புடிச்சதுதான்
    நான் நெனச்சேன்னா நெனச்சதுதான்
    மனசுக்குள்ள நெனச்சேன்னா நெனச்சதுதான்

    அது ஒரு பெரிய மாளிகை. அந்த மாளிகையில் தனியாக இருக்கப் போகிறான் ஒருவன். ஆனால் அவனை இருக்க விடாமல் விரட்டப் பார்க்கிறது ஒரு ஆவி. அவனுடைய மனதைப் பிழியும் வகையில் சோகத்தோடும் நெஞ்சுக்குள் ஊசியாய் இறங்கும் திகிலோடும் பாடுகிறது ஆவி. இந்த முறை ஆவிக்குக் குரல் கொடுத்தவர் எஸ்.ஜானகி.
    அன்பே வா அருகிலே
    என் வாசல் வழியிலே
    உல்லாச மாளிகை மாளிகை
    இங்கே ஓர் தேவதை தேவதை
    நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்

    நடுவிலேயே வழக்கொழிந்து போயிருந்த ஆவியை மறுபடியும் கையைப் பிடித்து திரைப்படத்துக்கு கூட்டி வந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் ஒரு திருநங்கையின் ஆவி ஒருவன் உடம்பில் ஏறிக்கொள்கிறது. அவளது குடும்பத்தை அழித்தவனைப் பழிவாங்கப் பாடுகிறது. ராகவா லாரண்ஸ் இசையில் விவேகா பேய்ப்பாட்டு எழுத பேய்க்குரல் காட்டியவர்கள் ஸ்ரீகாந்த் தேவா,எம்எல்ஆர்.கார்த்திகேயன், மாலதி.
    கொடியவனின் கதைய முடிக்க
    கொரவளையத்தேடிக்கடிக்க
    நாரு நாரா ஒடம்ப கிழிக்க
    நடுத்தெருவில் செதற அடிக்க
    புழுவப்போல நசுக்கி எரிய

    வா அருகில் வா என்றொரு படம் வந்தது. அந்தப் படத்தில் கலைவாணன் கண்ணதாசன் இசையில் எஸ்.ஜானகி குரலில் ஒரு பேய்ப்பாட்டு உண்டு. மூத்தமனைவி கொலை செய்யப்படுகிறாள். அது தெரியாமல் அவள் ஓடிப் போய்விட்டதாக நினைக்கும் கணவன். அவனுக்கு இன்னொரு திருமணமும் ஆகிறது. அப்போது தன் கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேய் பாடுகிறது. இந்தப் படத்தில் கலைவாணன் கண்ணாதாசன், பஞ்சு அருணாச்சலம், உமா கண்ணதாசன், கண்மணி சுப்பு ஆகியோர் பாட்டெழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாட்டை எழுதியது யாரென்று தெரியவில்லை.

    என்ன வேதன என்ன சோதன” என்று தொடங்கும் பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை. அதன் வரிகளும் கிடைக்கவில்லை.

    அதெல்லாம் சரி. இதுவரையில் பார்த்த பாடல்களில் வந்த பேய்கள் எல்லாம் பெண் பேய்களாகவே இருக்கிறதே! அதிலும் பெரும்பாலும் காதல் ஏக்கத்தில் பாடும் பாடல்களாகவே இருக்கின்றன. இரண்டு பாடல்கள்தான் பழிவாங்கும் பாடல்கள்.

    அப்படியானால் பெண் பேய்கள் மட்டும்தான் இருக்கின்றனவா? ஆண் பேய்கள் இல்லையா? அவைகள் பாடுவதில்லையா? ஆடுவதில்லையா?

    ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் ஒரு ஆண்பேய் வந்தது. ஆனால் அது நல்ல பேய். குறும்பு பிடித்த பேய். அது யாரையும் அச்சுறுத்தவில்லை. யாரையும் பழிவாங்கவில்லை. ஜப்பானுக்குப் போன அந்த பேய்க்கு தூங்க நல்ல முருங்கைமரம் கிடைக்கவில்லை. ஒருவழியாக அங்கு பேய்கள் இருக்கும் பாழடைந்த மாளிகையைக் கண்டுபிடிக்கிறது. அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் பேய்களோடு மகிழ்ச்சியாக ஆடிப்பாடுகிறது.
    வாய்யா வாய்யா போய்யா போய்யா
    பூலோகமா மேலோகமா ஆகாயாமா பாதாளமா
    அம்மாடி ஆத்தாடியோவ் வேட்டி வரிஞ்சுகட்டு

    இவை மட்டுமல்ல 13ம் நம்பர் வீடு, யார், மை டியர் லிசா, பிட்சா போன்ற படங்களும் மக்களுக்கு பீதி கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஆனால் அந்தப் படங்களில் எல்லாம் பேய்கள் பாடுவது போலக் காட்சி அமையவில்லை.

    சரி. இத்தோடு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன். ஒரே நேரத்தில் இத்தனை பேய்ப்பாட்டுகளைப் படித்திருக்கின்றீர்கள். தனியாக எங்கும் போகாதீர்கள். பயந்து கொள்ளாதீர்கள். இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு நிம்மதியாக இருங்கள்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    1. நெஞ்சம் மறப்பதில்லை – கண்ணதாசன் – விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பி.சுசீலா – நெஞ்சம் மறப்பதில்லை http://youtu.be/TyPPUBH6otg
    2. நானே வருவேன் – பி.சுசீலா – கண்ணதாசன் – வேதா – யார் நீ – http://youtu.be/sF0bRsHrRJU
    3. மன்னவனே அழலாமா – வாலி – பி.சுசீலா – எம்.எஸ்.வி -கற்பகம் – http://youtu.be/6SRv7XESHZM
    4. நீ எங்கே என் நினைவுகள் அங்கே – வாலி, பி.சுசீலா, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, மன்னிப்பு – http://youtu.be/OJqRM7UPd3A
    5. வெண்மேகமே வெண்மேகமே – கண்ணதாசன் – எஸ்.ஜானகி – எம்.எஸ்.வி – ஆயிரம் ஜென்மங்கள் – http://youtu.be/yENYEusswXs
    6. உருகுதே இதயமே அருகிலே – முத்துலிங்கம் – வாணி ஜெயராம் – இளையராஜா – நூறாவது நாள் – http://youtu.be/BEOI0xX9GBk
    7. என்ன வேதன என்ன சோதன – வா அருகில் வா – எஸ்.ஜானகி – கலைவாணன் கண்ணதாசன் – http://www.musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/1173/3/1/1
    8. அன்பே வா அருகிலே – வாலி – எஸ்.ஜானகி – இளையராஜா – கிளிப்பேச்சு கேட்கவா- http://youtu.be/Fpg1IeUCMvs
    9. சும்மா வரவுமாட்டேன் – கங்கை அமரன் – எஸ்.ஜானகி – இளையராஜா – முதல் வசந்தம் – http://youtu.be/54xk4v52Q68
    10. கொடியவனின் கதைமுடிக்க – காஞ்சனா – விவேகா – ஸ்ரீகாந்த் தேவா,எம்எல்ஆர்.கார்த்திகேயன், மாலதி – ராகவா லாரன்ஸ் – http://youtu.be/DtowKXH8oJs
    11. வாய்யா வாய்யா போய்யா போய்யா – வாலி – எஸ்.பி.பி – இளையராஜா – http://youtu.be/RIkBc57vo_s

    அன்புடன்,
    ஜிரா

    245/365

     
    • saravanamani 2:52 pm on August 4, 2013 Permalink | Reply

      adhe kangal-vaa arugil vaa missing

    • rajinirams 4:52 pm on August 4, 2013 Permalink | Reply

      செம பதிவு. மற்ற விஷயங்களுக்கு போடற பதிவையும் பாடல்களையும் விட இதுக்கு அதிகம்,”பேய்”க்கு ரொம்ப இடம் கொடுத்துட்டீங்க:-))
      கொஞ்சம் பேய் சாயல்ல வர்ற இன்னும் சில பாடல்கள்-ஆகாயத்தில் தொட்டில் -துணிவே துணை.2)கண்டேன் எங்கும்-காற்றினிலே வரும் கீதம்.

    • krish 12:31 pm on August 12, 2014 Permalink | Reply

      super sir

  • G.Ra ஜிரா 12:11 pm on July 16, 2013 Permalink | Reply  

    சிங்Gun 

    விழிகளை வேலோடும் வாளோடும் எத்தனையெத்தனையோ கவிஞர்கள் எத்தனையெத்தனையோ பாடல்களில் எழுதிவிட்டார்கள்.

    அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்வதனால்தானோ” என்று கண்ணதாசன் கண்களை ஆயுதங்களாகச் சொன்னதுக்கான காரணத்தை விளக்குகிறார்.

    காதல் கொண்ட விழியின் பார்வையைத் தாங்கும் வல்லமை யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    கண்களால் உண்டான காயங்கள் எக்கச்சக்கம். அந்தக் காயங்களுக்கு மருந்தே கிடையாது என்பதுதான் மிகமிக விசித்திரம்.

    காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆயுதங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வேலும் வாளும் அம்பும் கோயிலில் கடவுள் கையில்தான் இன்று காணக்கிடைக்கும்.

    கையடக்கமாக ஒரு துப்பாக்கி இருந்தால் குறிதவறாமல் சுட்டு விடலாம். அதனால் உண்டாகும் இழப்பும் வில்லையும் வாளையும் விட நிறையவே இருக்கும்.

    அப்படிப் பட்ட கண்ணை Gunனோடு ஒப்பிடாமல் இருப்பார்களா கவிஞர்கள்?!?

    உன் கண்ணுக்குள்ள Gunன வெச்சு என்னச் சுடாத
    உன் காக்கிச் சட்ட காலரத்தான் தூக்கி விடாத

    இது சிங்கம்-2 படத்துக்காக விவேகா எழுதிய வரிகள்.

    நாயகன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது காதலி பாடும் போது அவன் காவல் தொழிலோடு தொடர்புடைய கருப்பொருட்களைப் பாட்டில் வைத்துப் பாடுவது பொருத்தம் தானே? அதனால்தான் பாட்டில் துப்பாக்கியும் காக்கிச் சட்டையும் வருகின்றன.

    கண் Gunனானால் பார்வை தோட்டாவாகும். பார்வை தோட்டாவானால் பாவை இதயம் பாட்டாகும் என்பது எவ்வளவு உண்மை.

    சரி. கண்ணை Gunனோடு ஒப்பிட்டு வந்த முதல் பாட்டு இதுதானா?

    இல்லை. இல்லை. இல்லை.

    கோடைமழை படத்தில் நா.காமராசன் ஏற்கனவே எழுதிவிட்டார்.

    ஆனாலும் ஒரு வித்யாசம். கவிஞர் விவேகா ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணை Gun என்றால் நா.காமராசன் ஒரு பெண்ணின் கண்ணை Gun என்கிறார். அதுவும் கொக்கு சுடப் போன ஒரு குறவன் வாயால்.

    துப்பாக்கி கையிலெடுத்து
    ரெண்டு தோட்டாவும் பையிலெடுத்து
    கொக்கு சுடப் போகும் வழியில்
    என்ன சுட்டதென்ன Gunன்னு
    இந்த கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

    அடுத்து என்னென்ன ஆயுதங்கள் புதிது புதிதாக வரப் போகின்றனவோ.. கவிஞர்கள் அவைகளையெல்லாம் பாட்டில் வைக்கப் போகிறார்களோ!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – உன் கண்ணுக்குள்ள
    வரிகள் – விவேகா
    பாடியவர்கள் – ப்ரியா ஹிமேஷ், ஜாவித் அலி
    இசை – தேவிஸ்ரீ பிரசாத்
    படம் – சிங்கம்-2
    பாடலில் சுட்டி – http://youtu.be/lRPjWUndJ6w

    பாடல் – துப்பாக்கி கையிலெடுத்து
    வரிகள் – நா.காமராசன்
    பாடியவர் – இசைஞானி இளையராஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோடைமழை
    பாடலின் சுட்டி – http://youtu.be/5duNvDDXJxc

    அன்புடன்,
    ஜிரா

    227/365

     
    • amas32 9:56 pm on July 16, 2013 Permalink | Reply

      why do we always fall in love? Is it because of the hurt that follows… என்று நான் கல்லூரி பருவத்தில் கட்டுரை ஒன்றில் எழுதினேன், அது தான் நினைவிற்கு வருகிறது. அம்பு விழி என்று ஏன் சொன்னான்…. அது பாய்வதினால் தானோ ….

      அதே பொருளில் தான் இந்தக் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் உள்ளது விவேகா எழுதிய சிங்கம் 2 படப் பாடலும்.

      காதல் வலியை வரவழைத்தாலும், காதலி நெஞ்சை துளைத்தாலும் இன்றும் காதலில் விழுவதில் பேரானந்தம் உள்ளதால் தானே காதல் வாழ்க என்று காதலர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள்!

      amas32

      • GiRa ஜிரா 8:04 am on July 18, 2013 Permalink | Reply

        well said அம்மா. அப்போ கல்லூரி காலத்திலிருந்தே நீங்க எழுத்துப்பழக்கம் கொண்டவரா இருந்திருக்கிங்க 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel