பெண்களின் பண்கள் 

தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

ஒருத்தி:
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

இன்னொருத்தி
அடி போடி பைத்தியக்காரி
நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி

பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலைத்தானே மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ
ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

கடவுள் தந்த இருமலர்கள்
கண் மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே

சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

பாடல் – உனது மலர் கொடியிலே
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
படம் – பாதகாணிக்கை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
படம் – எங்க வீட்டுப் பிள்ளை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

பாடல் – அடி போடி பைத்தியக்காரி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தாமரை நெஞ்சம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தேனும் பாலும்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

பாடல் – காலம் காலமாய் பெண் தானே
வரிகள் – கங்கையமரன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
இசை – கங்கையமரன்
படம் – கற்பூரதீபம்
பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

பாடல் – மல்லிகையே மல்லிகையே
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – நினைத்தேன் வந்தாய்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தேவியின் திருமணம்
பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – இருமலர்கள்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
இசை – வி.குமார்
படம் – இருகோடுகள்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – பஞ்சதந்திரம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
இசை – சி.இராமச்சந்திரா
படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

அன்புடன்,
ஜிரா

361/365