யாழிசை உந்தன் மொழி 

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா
பாடல் – பாவேந்தர் பாரதிதாசன்
இசை – ஆர்.சுதர்சனம்
பாடியவர்கள் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா
படம் – ஓர் இரவு
நடிகர்கள் – லலிதா, அக்கினேனி நாகேஸ்வரராவ்
பாடலின் சுட்டி – http://youtu.be/MW4Rm1YkVuo

திரைப்படப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா என்று விவாதிக்கும் நேரத்தில் இலக்கியங்களும் திரைப்படப் பாடல்கள் ஆனதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

பாவேந்தரின் கவிதையில் நிறைந்து ததும்பும் தீந்தமிழானது யாழிசையாய் நெஞ்சில் கலந்து அல்லல் நீக்கி இன்பம் சேர்ப்பது உண்மைதான்.

ஆனால் யாழ் பாரம்பரிய இசை மேடைகளில் இன்று இல்லை. ஆனாலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் வழியாகவும் யாழ் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

அதையும் விட இன்னொரு எளிய வழி இருக்கிறது. அதுதான் விபுலானந்த அடிகளார் எழுதிய யாழ்நூல் என்ற நூலைப் படிப்பது. இலங்கை யாழ்பாணத்து மட்டக்களப்பில் பிறந்த மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய செறிவான நூல்தான் “யாழ்நூல்

யாழ்நூல் 1947ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி இலங்கையின் திருக்கொள்ளம் புதூர் கோயிலில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனவாம். அந்த யாழ்களை இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம் அடிகளார் மீட்டி இன்னிசை பொழிந்தாராம். அந்த யாழ்களுக்கும் பின்னாளில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

சரி. யாழின் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாக யாழ் மூன்று விதங்களில் வகைப்படுத்தபடும்.
1. யாழின் வடிவம்
2. யாழ் பயன்படுத்தப்பட நிலம்
3. வாசிக்கப்படும் பண்கள் மற்றும் இசைமுறைகள்

வடிவத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்
வில்யாழ் – வில்லின் வடிவில் இருப்பது
சீறியாழ் – சிறிய யாழ்
பேரியாழ் – பெரிய யாழ். இதில் 21 நரம்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஐவகை நிலங்கள் நாம் அறிந்ததே. அந்த நிலங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட யாழ்களும் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தந்த நிலப்பகுதிகள் இந்த யாழ்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
குறிஞ்சியாழ்
முல்லையாழ்
மருதயாழ்
நெய்தல்யாழ்
பாலையாழ்

இசை வளர்ச்சியின் அடிப்படையிலும் வாசிக்கப்படும் பண்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்.
மகர யாழ்
செங்கோட்டு யாழ்
பேரியாழ்
சகோடயாழ்
மருத்துவயாழ்

யாழ் வாசிக்கின்றவருக்குப் பண்ணறிவும் பாட்டறிவும் யாழிலக்கண அறிவும் நிறைந்திருக்க வேண்டும். யாழ் வாசிக்கின்றவரை யாழாசிரியர் என்றே அழைத்தார்கள்.

யாழ் வாசிப்பதில் மிகச்சிறந்த திறம் பெற்றவர்களில் திரூநிலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். இவர் பக்தி இலக்கிய காலத்தவர். பாணர் குலத்தில் பிறந்திருந்ததால் திறமை இருந்தும் கோயிலின் வாயிலில் நின்றே யாழ் வாசிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானவர். இவரால் வாசிக்க முடியாதவாறு ஒரு பண்ணை திருஞானசம்பந்தர் பாடியதாகவும் சொல்வார்கள். அந்தப் பண் யாழ்முறிப்பண் என்றே அழைக்கப்பட்டது.

தாம் பெற்ற மக்களின் மழகைக் குரலுக்கு அடுத்த படியாக குழலும் யாழும் இனிமை என்று திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்

அன்புடன்,
ஜிரா
142/365