குமரிப் பெண்ணும் குழந்தைப் பெண்ணும் 

காற்றின் வகைகள் பற்றி நண்பர் @ragavanG எழுதிய பதிவில்  ‘குழந்தைகள் கூட குமரியும் ஆட’ என்ற வரியைப் படித்தவுடன்  இந்த குழந்தை / குமரி வார்த்தைகள் ஜோடியாக  மற்ற பாடல்களிலும் வந்திருக்கிறதே என்று தோன்றியது. அப்புறம் நண்பர் @narraju எழுதிய அம்மானை பதிவில் கதாநாயகியை ஒரு குழந்தையாக பாவித்துக் காதலன் ‘பிள்ளைத் தமிழ்’  பாடுவது பற்றி படித்தவுடன் ஒரு சின்ன ஆராய்ச்சி.

குழந்தை , குமரி ஒன்றாக வருவது முதல் எழுத்து ஒன்றி வரும் மோனை நயத்துக்காக மட்டும்தானா? அல்லது பெண்ணின் வெவ்வேறு நிலைகள் சொல்ல எழுதியதா? அல்லது வேறு பொருள் சொன்னதுண்டா?

வைரமுத்து இதை வர்ணனை / காதல் / சிறுமி குமரியாகும் மாற்றம்  என்ற வட்டத்தில் பல பாடல்களில் உபயோகிக்கிறார். சிவாஜி படத்தில் வரும் வாஜி வாஜி என் ஜீவன் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஹரிஹரன், மதுஸ்ரீ ) http://www.youtube.com/watch?v=M7Et_8BgKFU

அடடடா குமரியின் வளங்கள், குழந்தையின் சிணுங்கல்

முரண்பாட்டு மூட்டை நீ

என்று ஒரு வரி. அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் SPB சரண், நவீன் ) http://www.youtube.com/watch?v=rmxs7b9Y5HE

ஓஹோ.. பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கையறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே

என்று வரிகள். தாஜ்மஹால் படத்தில் சொட்ட சொட்ட நனையுது (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் சுஜாதா  ) https://www.youtube.com/watch?v=VsWo2pVYSnQ

உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்

இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்

என்ற வரிகள் – இப்படி சிறு வட்டத்தில் சுழல்கிறார்.

கண்ணதாசன் பார்வை வேறு. கை கொடுத்த தெய்வம் படத்தில் வரும் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன், பாடியவர் டி எம் சௌந்தரராஜன் ) http://www.youtube.com/watch?v=NG7YOfSz8-A

உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ

பார்வையிலே குமரியம்மா

பழக்கத்திலே குழந்தையம்மா

என்று ஒரு வெகுளிப்பெண் பற்றி சொல்வது போல அழகான  வரிகள்.  அரங்கேற்றம் படத்தில் வரும் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர் பி சுசீலா) வரும் கண்ணதாசனின் வரிகள் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ள constraints என்ன என்று சொல்கிறது.

குழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு

அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு

அக்னி சாட்சி என்ற படத்தில் வாலியின் வரிகளை MSV இசையில் SPB பாடும் கனாக் காணும் கண்கள் மெல்ல என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=rPuFA8wSEwU

குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

நாயகி பெரும் மனக்குழப்பத்தில் இருக்கும்போது நாயகன் அவளை அமைதிப்படுத்த பாடும் ஒரு தாலாட்டு. வாலிக்கு ஜே!

அதே இரண்டு வார்த்தைகள். ஆனால் வேறு வேறு கோணங்கள். பார்வைகள். Interesting!

மோகனகிருஷ்ணன்

165/365