Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 6:52 pm on August 23, 2013 Permalink | Reply  

  கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் 

  இந்த ஆடி மாதம் சென்னையில் சென்ற இடமெல்லாம் சாலையோரம் பந்தல் , சீரியல் விளக்கு அலங்காரம் எல்லாம் அமைத்து பூஜைகள் நடப்பதைப் பார்த்தேன். இதில் சில  ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி சின்ன இடத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி மட்டும் வைத்து கட்டப்பட்ட makeshift  கோவில்கள். நம்பிக்கையுடன் பலர் கூடியிருந்தனர்.

  Never question someone’s faith என்று சொல்வார்கள். ஆனால் சிவவாக்கியர் என்ற சித்தர் கேள்வி எழுப்பினார்

  நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே

  சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

  நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்

  சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

  தெய்வம் நமக்குள்ளே இருக்கும்போது ஏன் கல்லை வணங்கவேண்டும் என்கிறார்.  நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை வணங்கும் கூட்டத்திடம் இதே கேள்வியை எழுப்புவார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அடிக்கடி ‘கடவுள் என் கல்லானான்’ என்ற  கேள்வியை எழுப்புவது வழக்கம்.

  கண்ணதாசன் இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்கிறார்.   பார்த்தால் பசி தீரும் படத்தில் உள்ளம் என்பது ஆமை என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

  http://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k

  தெய்வம் என்றால் அது தெய்வம்

  அது சிலை என்றால் வெறும் சிலை தான்

  உண்டென்றால் அது உண்டு

  இல்லையென்றால் அது இல்லை

  வாலியும் இது அவரவர் பார்வை சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார். தசாவதாரம் படத்தில் (இசை ஹிமேஷ் ரெஷாம்மியா பாடியவர் ஹரிஹரன் )

  http://www.youtube.com/watch?v=GiLjLX03jWY

  கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது,

  கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது..

  ஹாஸ்டலில் தனியாக தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்கள். ஒருவன் தன் தாயின் ஞாபகம் வரும்போது புகைப்படத்தைப்  பார்த்துக்கொள்வான். இன்னொருவன் தாயின் புடவையை தன் பெட்டியில் வைத்துக்கொண்டிருப்பான். மூன்றாமவன் எந்த ஒரு பொருளின் துணையும் இல்லாமல் தாயை நினைத்துக்கொள்வான். எல்லாரும் தாயை நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்கும் வழி வேறு. (சோ சொன்ன விளக்கம்  என் வார்த்தைகளில்)

  அதே போல் கல்லாய் வந்தவன் கடவுளடா என்று வழிபடுவதும் சரிதானே?

  மோகனகிருஷ்ணன்

  265/365

   
  • amas32 7:20 pm on August 23, 2013 Permalink | Reply

   மகர தீபத்தைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்று கூறுவர்!

   கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பது நாயை அடிக்கக் கல் இருக்கும்போது நாய் தென்படாது, நாய் தென்படும்போது கல் கிடைக்காது என்பது அல்ல பொருள். கற்சிற்பத்தில் நாயை மட்டும் நாம் கவனிக்கும் பொழுது கல்லை நாம் கவனிக்கமாட்டோம். கல்லாக பார்த்தால் நாய் தெரியாது.

   அப்படித்தான் சிலையாக நினைத்தால் சிலை, இறைவனாக நினைத்தால் இறைவன்.

   amas32

  • successfulsathya 10:15 am on August 24, 2013 Permalink | Reply

   சூப்பர் மச்சி

  • rajinirams 1:26 am on August 25, 2013 Permalink | Reply

   இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று குழந்தையின் புன்னகையை குறித்த வாலியின் வரிகளும் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற வாலியின்(அண்ணா)வரிகளையும் நினைவுபடுத்திய நல்ல பதிவு.

 • என். சொக்கன் 9:32 am on May 20, 2013 Permalink | Reply  

  பொம்மைகளோ பெண்கள்? 

  • படம்: வறுமையின் நிறம் சிகப்பு
  • பாடல்: சிப்பி இருக்குது
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=D9pcqoObM7A

  தேவை, பாவை பார்வை!

  நினைக்கவைத்து, நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

  மயக்கம் தந்தது யார்?

  தமிழோ, அமுதோ, கவியோ!

  தமிழ் சினிமாப் பாடல்களுக்கென்று ஓர் அகராதி தயாரித்தால், அதில் ‘பாவை’ என்ற சொல்லுக்குப் பொருள் ‘பெண்’ என்பதாக இருக்கும்.

  உதாரணமாக, இந்தப் பாடலில் வரும் ‘தேவை பாவை பார்வை’, அப்புறம் ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’, ‘தேடும் பெண் பாவை வருவாள்’, ‘பால் நிலாவைப் போல வந்த பாவை அல்லவா’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களை அடுக்கலாம். இவை அனைத்திலும் பாவை என்றால், பெண் என்பதுதான் பொருள்.

  உண்மையில், பாவை என்றால் அதன் நேரடிப் பொருள், பதுமை, பொம்மை என்பதுதான். ’தோல் பாவைக் கூத்து’ என்று ஒரு நாட்டுப்புறக்கலையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், தோலால் செய்யப்பட்ட பொம்மை உருவங்களைக் கொண்டு நிகழ்த்தப்படுவது அது.

  அபூர்வமாக, சில சினிமாப் பாடல்களிலும் பாவை என்பதைப் பொம்மை என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக, ‘வார்த்தை தவறிவிட்டாய்’ என்று பாரதி வரியை முதலாகக் கொண்டு வாலி எழுதிய திரைப் பாடலில், ‘பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி’ என்று ஒரு வரி வரும். அதன் பொருள், ’பார்க்கும் பெண்களெல்லாம் உன்னைப்போலத் தெரிகிறார்கள்’ என்பதல்ல, ’பார்க்கும் இடத்திலெல்லாம் உன் உருவம் தெரிகிறது’ என்கிறான் அந்தக் காதலன், நந்தலாலாவின் காதல் வடிவம் இது!

  அப்படியானால், ‘தேவை பாவை பார்வை’ என்று கண்ணதாசன் எழுதியது தவறா?

  பொதுவாக பொம்மைகள் குழந்தைகளைக் கவரவேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் அழகாகதான் உருவாக்கப்படும். ஆகவே, அழகான ஒரு பெண்ணைப் ‘பாவை போன்றவள்’ என்று உவமை சொல்லலாம். அதுவே அந்தப் பெண்ணுக்குப் பெயராகவும் ஆகிவரலாம்.

  அதன்படி, பாவை = பெண், உவமையாகுபெயர்!

  இதை உறுதிப்படுத்தும்வகையில், வாலியின் பாடல் ஒன்று ‘பாவை’யின் இரு பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்துகிறது. ஒரு பெண் இப்படிப் பாடுவதாக:

  என்ன செய்ய?

  நானோ தோல் பாவைதான்,

  உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவைதான்!

  இங்கே முதலில் வரும் ‘தோல் பாவை’ என்பதைத் தோலால் செய்யப்பட்ட அஃறிணைப் பொம்மை என்றும் பொருள் கொள்ளலாம், தோலால் போர்த்தப்பட்ட மனிதப் பெண் என்றும் பொருள் கொள்ளலாம், நூல் கொண்டு அந்தப் பெண்ணைப் பொம்மையாக ஆட்டிவைக்கிறவன், அந்த முகுந்தன்!

  ***

  என். சொக்கன் …

  20 05 2013

  170/365

   
  • Saba-Thambi 6:07 pm on May 20, 2013 Permalink | Reply

   அழகான பதிவு!

   ஒரு கேள்வி?

   ’தோல் பாவைக் கூத்து’ம் பொம்மலாட்டமும் ஒரே வகை நாட்டுக் கூத்துக்களா அல்லது வித்தியாசமானவையா?

   • என். சொக்கன் 6:46 pm on May 20, 2013 Permalink | Reply

    They are different, தோல் பாவை has two dimensional bommais, while பொம்மலாட்டம் has 3D bommais

    • Saba-Thambi 6:53 pm on May 20, 2013 Permalink

     oh I see, thanks for the explanation, the penny has dropped! 🙂

  • app_engine 7:15 pm on May 20, 2013 Permalink | Reply

   எஸ்.பி.பி. அபூர்வமாக உச்சரிப்புப்பிழை செய்த இடங்களில் ஒன்று… “தேவை பாவள் பார்வை” என்று பாடுவார்… நானும் என் பெரியம்மா பையனும் இதை வானொலியில் கேட்கும் காலங்களில் கேலி செய்தது நினைவுக்கு வருகிறது!

  • amas32 5:40 am on May 21, 2013 Permalink | Reply

   இந்தப் பதிவை படிக்க ஆரம்பிக்கும் போதே வாலி எழுதிய தசாவதாரப் படப் பாடல் முகுந்தா முகுந்தா தான் நினைவிற்கு வந்தது.

   /நானோ தோல் பாவைதான்,

   உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவைதான்!/
   இந்தப் பாடலில், ஆட்டிவைத்தால் யாரொருவன் ஆடாதாரோ கண்ணா என்ற பொருளில் பாடும் பெண் தான் கண்ணனின் கைப்பாவை என்று வருகிறது.

   ஆனால் உண்மையில் பல ஆண்களின் கைப்பாவையாக பெண்கள் இருப்பது சோகமே.

   amas32

  • GiRa ஜிரா 9:06 am on May 21, 2013 Permalink | Reply

   நீங்க சொன்னதைக் கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

   சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் நடமாடிப் பார்க்கட்டுமே என்ற பாடல். பாட்டும் பரதமும் படத்தில்.

   இது ஒரு போட்டிப் பாட்டு. அதில் இப்படி ஒரு வரி வரும்.

   ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார்
   ஆடாத பதுமை என்று பாவையர் என்றார்

   இந்த வரிக்கு பாட்டெழுதுனப்போ கவியரசர் என்ன நெனச்சு எழுதுனாரோ தெரியாது. ஆனா நான் விதம்விதமா பொருள் எடுத்துக்கிட்டு சிரிப்பேன்.

   (பொண்டாட்டி சொன்னபடி) ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார்
   (கணவன் காலில் விழுந்து கெஞ்சினாலும் மனம்) ஆடாத பதுமை என்று பாவையர் என்றார்

   அன்புடன்,
   ஜிரா

 • என். சொக்கன் 1:15 pm on February 20, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : எந்த அவதாரம் 

  • படம்: தசாவதாரம்
  • பாடல்: முகுந்தா முகுந்தா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஹிமேஷ் ராஷ்மியா
  • பாடியவர்: சாதனா சர்கம், கமலஹாசன்
  • Link: http://www.youtube.com/watch?v=ahKeeQrhVXg
  அமெரிக்காவில் ,தன் ஆராய்ச்சியில் உருவான ,உலகை அழிக்கவல்ல கிருமி ஒன்று தவறுதலாக இந்தியாவுக்கு பார்சலாகிவிட , அதைத் தேடி அழிக்க/பாதுகாக்க அந்த விஞ்ஞானியும், அவரைத் தேடி ஒரு கொலைக்கார ஏஜண்ட்டும்(அமெரிக்கன்) இந்தியா வருகிறார்கள். அந்தப் பார்சல் சிதம்பரத்தில் இருக்கும் ஒரு பாட்டியிடம் வந்து சேர்கிறது. அதைத் தெரிந்துக்கொண்டு விஞ்ஞானி,ஏஜண்ட் மற்றும் இவர்களை பின் தொடர்ந்து ஒரு ரா அதிகாரியும் சிதம்பரத்துக்குப் புறப்படும் இடத்தில் இந்தப் பாடல் அந்தப் பாட்டி இருக்கும் மடத்தில் கதாநாயகியால் பாடப்படுவதாக வருகிறது. இவ்வளவு பரபரப்பானக் கதையில் சரியான இடத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். 
   
  பாடலில் 2 சரணங்கள் உண்டு. ஆனால் இந்த 2வது சரணம் மட்டும் தான் படத்தில் வந்தது என நினைக்கிறேன்.

  மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
  கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
  வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
  நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
  ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
  கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் 

  கூர்மம் – ஆமை. தேவர்களுக்கு அசுரர்களுக்கும் நடக்கும் சண்டையில் ஆமையாக அவதாரமெடுத்து உதவி செய்தார்.

  வராக அவதாரத்தில் தான் பூமியைக் காத்தார்.

  என் மனைவிதான் இதை முதலில் கவனித்து என்னிடம் சொன்னது.ஆனா இரண்டு பேருக்கும் கூர்மம்,வராகத்தில் குழப்பமிருந்தது. எது ஆமை, எது பன்றி என.. அப்போது நான் சொன்னது “ பாட்டு எழுதினது வாலி. இந்த டாப்பிக்கில் அவர் தப்பு செய்ய வாய்ப்பே இல்லை”…

  அவருக்கு மிகவும் பிடித்த ஏரியா இது. அதனால் கண்டிப்பாகத் கூர்மம்/வராகம் குழப்பத்தில் இப்படி எழுதியிருக்கமாட்டார் என நம்புகிறேன்.

  அப்படியென்றால் வேறு என்ன சாத்தியங்கள் இருக்கலாம்!

  • ’வராகமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்’ என்றே அவர் எழுதியிருக்கலாம். “வராகமாஹ” ட்யுன் சே பைட்டியே நஹிஜின்னு இசையமைப்பாளர் நச்சரித்து,இவர் கடுப்பில் ”போய்யா கூர்மமாகன்னு போட்டுக்கோ,சரியா வரும் என சொல்லியிருக்கலாம் :))
  • சரி. “கூர்மமாக” என மாத்தியாச்சு. அப்படியே பின்னால் உள்ள வரியை மாத்திருக்கலாமே. இந்தக் கதையே உலகத்தை ஒரு கிருமியில் இருந்துக் காக்க முயல்பவனின் கதை தான். அதை இந்தப் பாடலில் தொட்டுவிடலாம் என நினைத்திருக்கலாம்

  ஒருவேளை ஏதோ ஞாபகத்தில் வாலியே மாத்தி எழுதிருந்தால் , அவர் எழுதிய பேப்பரில் இருந்து நம் காதுகளுக்கு வந்து சேர 7 கடல் 7 மலை தாண்டித்தான் வந்திருக்கும். ஒருவர் கூடவா கவனிக்கவில்லை!?

  இசையமைப்பாளருக்கும் பாடலைப் பாடியவருக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  படத்தில் கூட இந்த வரிக்கு வராகவதாரத்தைத் தான் காட்டுவார்கள்.

  சூட்டிங்கில் கமல் கவனிக்கவில்லையா!! அது சரி! அவர் பாவம் ஏதாவது மூலையில் வாயைக்கூட அசைக்கமுடியாதபடி மேக்கப் போட்டிட்டிருந்திருப்பாரு.

  யாராவது ஒரு உதவியாளர் கவனித்துச் சொல்லிருந்தால் கூட ” பாட்டு எழுதினது வாலி. இந்த டாப்பிக்கில் அவர் தப்பு செய்ய வாய்ப்பே இல்லை” என அவருக்கு மேல் உள்ளவரால் அமைதியாக்கப்பட்டிருப்பார் 🙂

  காளீஸ் 

   
  • LakshmiNarayanan 5:40 pm on February 20, 2013 Permalink | Reply

   Super da..!!! Paadal varigalai …..ivvalavu nunukama aaraya mudiyum nnu …ippo thaan
   theriyudhu ///

  • amas32 3:16 pm on February 21, 2013 Permalink | Reply

   ஆராயக் கூடாது அனுபவிக்கணம் என்று கமல் பேசும் கிரேசி மோகனின் ஒரு பேமஸ் டயலாக் உண்டு. அனுபவி ஆனால் கூடவே ஆராய்ச்சியும் பண்ணு என்கிறது #4varinote ! Super 🙂

   amas32

  • Mohanakrishnan 6:28 pm on February 21, 2013 Permalink | Reply

   Super. I have heard this song so many times but missed this point.
   கண்ணதாசன் திருமால் பெருமையில் தெளிவாக சொன்னது

   அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள்
   அச்சுதனே உந்தன் அவதாரம் கூர்ம அவதாரம்
   பூமியை காத்திட ஒரு காலம் நீ
   புனைந்தது மற்றொரு அவதாரம் வராக அவதாரம்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel