Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 9:37 pm on September 21, 2013 Permalink | Reply  

  மன்னவன் ஒருவன் 

  • படம்: மன்மதன் அம்பு
  • பாடல்: நீல வானம்
  • எழுதியவர்: கமல் ஹாசன்
  • இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
  • பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
  • Link: http://www.youtube.com/watch?v=qfTB6KhPzHU

  என்னைப்போலே பெண் குழந்தை,

  உன்னைப் போலே ஒரு ஆண் குழந்தை,

  நாம் வாழ்ந்த வாழ்வுக்குச் சான்றாவது

  இன்னொரு உயிர்தானடி!

  ஆங்கிலத்தில் ஒரே ஒரு பொருள், அல்லது மனிதர் அல்லது விலங்கைக் குறிப்பிடுவதற்கு ‘a’ மற்றும் ‘an’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். அதூவே பன்மையாக வந்தால் ‘few’, ‘some’, ‘many’ என்பதுபோன்ற சொற்கள் உள்ளன.

  இவற்றுக்கு இணையாகத் தமிழில் உள்ள சொற்கள்: ‘ஒரு’, ‘ஓர்’, ‘சில’, ‘பல’…

  உதாரணமாக, “a ball” என்பது ”ஒரு பந்து” என மாறும், “few balls” என்பது “சில பந்துகள்” என்று ஆகும், “an ant” என்பது “ஓர் எறும்பு” என எழுதப்படும்.

  இந்தச் சொற்களைப் பயன்படுத்தும்போது ஒரே ஒரு பிரச்னை, ‘ஒரு’ அல்லது ‘சில’ என்றால் அது உயர்திணையா, அஃறிணையா, ஆணா, பெண்ணா என்று வித்தியாசம் காணமுடியாது.

  ஆங்கிலத்தில் இதற்குத் தீர்வு கிடையாது. தமிழில் உண்டு.

  ஒரு பந்து, ஓர் எறும்பு என்ற சொற்களைத் தமிழில் வேறுவிதமாகவும் சொல்லமுடியும்: பந்து ஒன்று, எறும்பு ஒன்று.

  அப்படியானால், ‘ஒரு ராஜா’, ‘ஒரு ராணி’ என்பதை எப்படி எழுதுவது?

  ‘ராஜா ஒருவன்’, ‘ராணி ஒருத்தி’.

  ‘சில ராஜாக்கள்’ என்பதை?

  ‘ராஜாக்கள் சிலர்’!

  ஆக, பெயர்ச்சொல்லுக்கு முன்னால் ஒரு, ஓர், சில, பல போன்றவற்றைப் பயன்படுத்தாமல், அதைத் தூக்கிப் பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் போட்டால், ஒருவன், ஒருத்தி, ஒன்று, சிலர், சிலது, பலர், பலது என்று அது பலவிதமாக மாறி, சம்பந்தப்பட்ட பெயர்ச் சொல் ஆணா அல்லது பெண்ணா, உயர்திணையா அல்லது அஃறிணையா, ஒருமையா அல்லது பன்மையா என்றெல்லாம் அழகாகக் காண்பித்துவிடுகிறது.

  சொல்லப்போனால், உயர்திணைக்கு ‘ஒரு’, ‘ஓர்’, ‘சில’, ‘பல’ போன்றவற்றைப் பயன்படுத்தவே கூடாது என்கிறார்கள். ‘ஒரு மன்னன்’ என்பதைவிட ‘மன்னன் ஒருவன்’ என்பதுதான் சரியாம். இதற்கு இலக்கண நெறிகள் எதையும் கண்டதில்லை. ஆனால் இதுதான் மரபு என்று வாசித்துள்ளேன்.

  அந்த மரபுப்படி, நீல வானத்தின்கீழ் இந்தக் காதலனும் காதலியும் விரும்புவது, ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை ஒருவன், பெண் குழந்தை ஒருத்தி!

  ***

  என். சொக்கன் …

  21 09 2013

  294/365

   
  • amas32 9:19 pm on September 24, 2013 Permalink | Reply

   “சிங்கம் ஒன்று புறப்பட்டதே”, இந்த மரபின் கீழ் வரும். “மன்னவன் வந்தானடி தோழி” என்ற வரியும் இந்த மரபின் கீழ் வருமா?

   //நாம் வாழ்ந்த வாழ்வுக்குச் சான்றாவது

   இன்னொரு உயிர்தானடி!//

   என்ன உண்மையான உணர்வு!

   amas32

  • rajinirams 10:41 am on September 26, 2013 Permalink | Reply

   அறிந்திராத அருமையான தகவல். பாடல்களை பார்த்தால் “பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்” என்றும் ஒரு பெண்ணை பார்த்து ,ஒரு ராஜா ராணியிடம் என்றெல்லாம் மெட்டுக்கு ஏற்றவாறே வந்திருக்கின்றன. நன்றி.

  • rajinirams 12:09 pm on September 26, 2013 Permalink | Reply

   ஒரு பொண்ணு ஒண்ணை நான் பார்த்தேன் என்ற குஷியான வரிகள் தவறு தானே சார்.

 • G.Ra ஜிரா 12:11 pm on July 16, 2013 Permalink | Reply  

  சிங்Gun 

  விழிகளை வேலோடும் வாளோடும் எத்தனையெத்தனையோ கவிஞர்கள் எத்தனையெத்தனையோ பாடல்களில் எழுதிவிட்டார்கள்.

  அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்வதனால்தானோ” என்று கண்ணதாசன் கண்களை ஆயுதங்களாகச் சொன்னதுக்கான காரணத்தை விளக்குகிறார்.

  காதல் கொண்ட விழியின் பார்வையைத் தாங்கும் வல்லமை யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

  கண்களால் உண்டான காயங்கள் எக்கச்சக்கம். அந்தக் காயங்களுக்கு மருந்தே கிடையாது என்பதுதான் மிகமிக விசித்திரம்.

  காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆயுதங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வேலும் வாளும் அம்பும் கோயிலில் கடவுள் கையில்தான் இன்று காணக்கிடைக்கும்.

  கையடக்கமாக ஒரு துப்பாக்கி இருந்தால் குறிதவறாமல் சுட்டு விடலாம். அதனால் உண்டாகும் இழப்பும் வில்லையும் வாளையும் விட நிறையவே இருக்கும்.

  அப்படிப் பட்ட கண்ணை Gunனோடு ஒப்பிடாமல் இருப்பார்களா கவிஞர்கள்?!?

  உன் கண்ணுக்குள்ள Gunன வெச்சு என்னச் சுடாத
  உன் காக்கிச் சட்ட காலரத்தான் தூக்கி விடாத

  இது சிங்கம்-2 படத்துக்காக விவேகா எழுதிய வரிகள்.

  நாயகன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது காதலி பாடும் போது அவன் காவல் தொழிலோடு தொடர்புடைய கருப்பொருட்களைப் பாட்டில் வைத்துப் பாடுவது பொருத்தம் தானே? அதனால்தான் பாட்டில் துப்பாக்கியும் காக்கிச் சட்டையும் வருகின்றன.

  கண் Gunனானால் பார்வை தோட்டாவாகும். பார்வை தோட்டாவானால் பாவை இதயம் பாட்டாகும் என்பது எவ்வளவு உண்மை.

  சரி. கண்ணை Gunனோடு ஒப்பிட்டு வந்த முதல் பாட்டு இதுதானா?

  இல்லை. இல்லை. இல்லை.

  கோடைமழை படத்தில் நா.காமராசன் ஏற்கனவே எழுதிவிட்டார்.

  ஆனாலும் ஒரு வித்யாசம். கவிஞர் விவேகா ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணை Gun என்றால் நா.காமராசன் ஒரு பெண்ணின் கண்ணை Gun என்கிறார். அதுவும் கொக்கு சுடப் போன ஒரு குறவன் வாயால்.

  துப்பாக்கி கையிலெடுத்து
  ரெண்டு தோட்டாவும் பையிலெடுத்து
  கொக்கு சுடப் போகும் வழியில்
  என்ன சுட்டதென்ன Gunன்னு
  இந்த கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

  அடுத்து என்னென்ன ஆயுதங்கள் புதிது புதிதாக வரப் போகின்றனவோ.. கவிஞர்கள் அவைகளையெல்லாம் பாட்டில் வைக்கப் போகிறார்களோ!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – உன் கண்ணுக்குள்ள
  வரிகள் – விவேகா
  பாடியவர்கள் – ப்ரியா ஹிமேஷ், ஜாவித் அலி
  இசை – தேவிஸ்ரீ பிரசாத்
  படம் – சிங்கம்-2
  பாடலில் சுட்டி – http://youtu.be/lRPjWUndJ6w

  பாடல் – துப்பாக்கி கையிலெடுத்து
  வரிகள் – நா.காமராசன்
  பாடியவர் – இசைஞானி இளையராஜா
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – கோடைமழை
  பாடலின் சுட்டி – http://youtu.be/5duNvDDXJxc

  அன்புடன்,
  ஜிரா

  227/365

   
  • amas32 9:56 pm on July 16, 2013 Permalink | Reply

   why do we always fall in love? Is it because of the hurt that follows… என்று நான் கல்லூரி பருவத்தில் கட்டுரை ஒன்றில் எழுதினேன், அது தான் நினைவிற்கு வருகிறது. அம்பு விழி என்று ஏன் சொன்னான்…. அது பாய்வதினால் தானோ ….

   அதே பொருளில் தான் இந்தக் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் உள்ளது விவேகா எழுதிய சிங்கம் 2 படப் பாடலும்.

   காதல் வலியை வரவழைத்தாலும், காதலி நெஞ்சை துளைத்தாலும் இன்றும் காதலில் விழுவதில் பேரானந்தம் உள்ளதால் தானே காதல் வாழ்க என்று காதலர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள்!

   amas32

   • GiRa ஜிரா 8:04 am on July 18, 2013 Permalink | Reply

    well said அம்மா. அப்போ கல்லூரி காலத்திலிருந்தே நீங்க எழுத்துப்பழக்கம் கொண்டவரா இருந்திருக்கிங்க 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel