வட்டங்களும் கோடுகளும் 

விளையாட்டோ வாழ்க்கையோ இரண்டிலும் விதிகளும் மரபுகளும் உண்டு. நாகரிக வளர்ச்சியில் இது சரி இது தவறு என்று உருவாக்கப்பட்ட பல விதிமுறைகள் இன்றும் வாழ்க்கைக்கு வசதியாக இருப்பதால் நாம் கடைப்பிடித்துவருகிறோம் -அவ்வப்போது சிறு சிறு விதி மீறல்கள் செய்துகொண்டே. சிவப்பு சிக்னலை தாண்டி, சுவரேறி குதித்து, மாமரத்தில் கல் எரிந்து, பதின்ம வயதில் களவாடிய பொழுதுகள் என்று நாம் தாண்டிய கோடுகள் மறக்காத நினைவுகளாய்.

கோடு என்றதும் ராமாயணத்தில் லக்ஷ்மணன் கோடு போட்டு சீதை அதை தாண்டினாள் என்று ஒரு காட்சி நினைவுக்கு வரும். கண்ணதாசன்  இதை அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் அடி என்னடி உலகம் என்ற பாடலில் (இசை எம் எஸ்  விஸ்வநாதன், பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி ) https://www.youtube.com/watch?v=MRoZCJPn3oA 

கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை  நிற்கவில்லையே

சீதை அன்று நின்றிருந்தால் இராமன் கதை இல்லையே

என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு நிகழ்வை வால்மீகியும் சொல்லவில்லை கம்பனும் சொல்லவில்லை என்று படித்திருக்கிறேன் . இதை முதலில் சொன்னது யாரென்று தெரியவில்லை. ஆனால் இன்றும் மீறக்கூடாத விதிகள் / மரபுகள் என்பதை லக்ஷ்மண ரேகா என்றே  குறிப்பிடுகிறார்கள்.

திரைப்பாடல்களில் ‘இந்த விதிகளை மாற்றுங்கள் ‘ என்ற கோஷம் காதலின் தடைகள் என்ன என்று சொல்லும்போதும் கம்யூனிசம் பேசும்போதும் வரும்.

வைரமுத்து கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடலில் (படம் : வேதம் புதிது, பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, இசை : தேவேந்திரன்) இதை ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் விவாதம் போல் எழுதுகிறார். https://www.youtube.com/watch?v=NHUF4F6UatI

ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்

கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்

வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

சாஸ்திரம் போட்ட வட்டங்களை தாண்டி வரத்தயங்கும் ஒரு பெண்ணின் குழப்பம் சொல்லும் வரிகள். ஆனால் காதல் பற்றிய இந்த வட்டங்களை போட்டது சாஸ்திரமில்லை, மனிதர்கள்தான். கண்ணதாசன் பாலிருக்கும் பழமிருக்கும் என்ற பாடலில் (படம் பாவ மன்னிப்பு இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா) https://www.youtube.com/watch?v=xqofnfgytws

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே,

அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே..

என்று தெளிவாக சொல்கிறார்.

வைரமுத்து மனிதர்கள் போடும் இந்த விதிகள் மாறும் என்று வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது (படம் புதுக்கவிதை இசை இளையராஜா பாடியவர்கள் கே ஜே ஜேசுதாஸ் எஸ் ஜானகி ) என்ற பாடலில் சொல்கிறார் https://www.youtube.com/watch?v=4zRmprbzkJg

வரையறைகளை மாற்றும்போது

தலைமுறைகளும் மாறுமே

இதை cause – effect மாற்றி தலைமுறைகள் மாறும்போது வரையறைகளும் மாறுமே என்று படித்தாலும் அர்த்தம் வருவது போல் இருக்கிறது. நாம் கண்கூடாக பார்க்கும் உண்மை. காலம் மாறும்போது சில விதிகளும் மரபுகளும் மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. நல்லது, கெட்டது, தீங்கற்றது, தீங்கானது, ஏற்புடையது , ஏற்புடையதல்லாதது, எது taboo , எது விலக்கப்பட்ட கனி  என்பதெல்லாம் வெவ்வேறு காலக்கட்டங்களில் மாறிவிடுகிறது.. ஏன்? கண்ணதாசன் அடி என்னடி உலகம் பாடலில் சொல்லும் காரணம்

கோடு, வட்டம் என்பதெல்லாம், கடவுள் போட்டதல்லடி;

கொள்ளும் போது கொள்ளு, தாண்டிச் செல்லும் போது செல்லடி

வைரமுத்துவும் இதையே சொல்கிறார் கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில்

ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது

வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

நமக்கு நாமே போட்டுக்கொண்ட வேலி. மெல்லிய நூலால் ஆனது. அதை அவ்வப்போது மாற்றிக்கட்டலாம். ஆனால் அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

மோகனகிருஷ்ணன்

169/365