Updates from March, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 1:00 pm on March 5, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: உற்றார், உறவினர் 

    இன்றைக்கு காலையில் ஒரு திருமண அழைப்பிதழ் மின்னஞ்சலில் வந்தது. பாரம்பரிய வடிவ அழைப்பிதழ் ஆனால் வந்தது மின்னஞ்சலில். பழமையும் புதுமையும் என்பது இதுதான் இல்லையா. எல்லா அழைப்பிதழ்களிலும் இருக்கும் வழமையான வரி இதிலும் இருந்தது – உற்றார் உறவினருடன் வந்திருந்து தம்பதிகளை வாழ்த்த வேண்டும். இதைப் படிக்கும் பொழுது திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் ஞானப்பழத்தைப் பிழிந்து தரும் பழம் நீயப்பா பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது. அதில் வரும் ஒரு வரி

    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

    கண்ணதாசன் கூட உறவுண்டு உற்றார் பெற்றாரும் உண்டுன்னு எழுதி இருக்கார். அது என்ன உற்றார், உறவினர்? உறவினர்ன்னா relatives அப்படின்னு பொதுப்படையாச் சொல்லிடறோம். அப்போ உற்றார்ன்னா யாரு? அவர்களும் relativesதான். ஆனா இது ரெண்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.

    உற்றார் என்பவர் ஒருவனின் பிறப்பால் அவனுக்கு சொந்தமானவர்கள். உறவினர் என்போர் அவனுடைய தேர்ந்தெடுப்பினால் வரும் சொந்தம். அதாவது திருமண பந்தம் மூலமாக வரும் சொந்தங்கள், ஏன் நண்பர்கள் கூட உறவினர்கள்தாம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் Relatives by birth and Relatives by choice.

    உறு என்றால் கிட்டு, கிடை என்று பொருள். உற்றது என்றால் கிட்டியது, கிடைத்தது. கண்ணுற்றேன், பயமுற்றேன்னு எல்லாம் சொல்லறோமே. அது இந்தப் பொருளில்தான். நம் பிறப்பால் நமக்கு கிட்டிய, கிடைத்த சொந்தங்கள் உற்றார். அவரைப் பெரியப்பாவா வெச்சுக்கறேன், இவங்களை சித்தி முறைக்கு சேர்த்துக்கறேன்னு சொல்ல முடியுமா? அதெல்லாம் சாய்ஸே கிடையாது. இவர்கள் உற்றார், நமக்குக் கிடைத்தவர்.

    உறவுன்னு சொன்னா சம்பந்தம், நட்பு. இவர்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நமக்கு யாரு மாமனாராய் வரணும்ன்னு நம்மால் தேர்ந்தெடுக்கமுடியும். நம்முடைய நண்பர்கள் யார் யார்ன்னு நம்மால் முடிவு செய்ய முடியும். இவர்கள் எல்லோரும் நம் உறவினர்கள். உறவு முறிய முடியும். ஆனால் உற்றது என்னிக்கும் மாறாது.

    இதுதான் உற்றோருக்கும் உறவினருக்குமான வித்தியாசம். இன்னிக்கு உறவினர்கள் என்றால் சொந்தக்காரர்கள் என்றும் நண்பர்களை இவர்களில் இருந்து வேறுபட்ட ஒரு குழுவாகவும் மாத்திட்டோம். இந்த மாதிரி நுட்பமான வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமா இழந்துக்கிட்டு வரோம்.

    போகட்டும். திரும்ப கண்ணதாசனுக்கு வரலாம். அந்த வரியைக் கண்டு நான் அதிசயிக்கக் காரணம் இந்த உற்றார் உறவினர் மேட்டர் மட்டும் இல்லை. அதில் சொல்லி இருக்கும் வரிசைதான். அதையும் பார்ப்போமா? முதலில் அந்த வரியை மீண்டும் ஒரு முறை படிக்கலாம் – ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

    ஊருண்டு – அதாவது ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு.
    பேருண்டு – சாதிக்காரங்க. சாதியை பெயரில் சேர்த்துக் கொள்வதும் சரி. குறிப்பிட்ட பெயர்களை கொள்வதாலும்கூட
    உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும்
    சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம்
    உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம்
    பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா

    பாருங்க.. ஊர்ல ஆரம்பிச்சு.. பொறந்த தாய்மடி வரைக்கும் படிப்படியா ஜூம் பண்றாப்பல இல்ல இந்த வரி? இதை அவர் யோசிச்சு எழுதினாரா இல்லை அப்படியே வந்து விழுந்த சொற்களான்னு தெரியாது. ஆனா இப்போ படிக்கும் பொழுது அவரைப் பற்றிச் சொல்லத் தோன்றுவது – ப்ரில்லியண்ட்!

    இலவசக் கொத்தனார்

    ட்விட்டரில் ‘வாத்தி’ என்று செல்லமாக விளிக்கப்படும் இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார். இணையத்தில் எழுத்துப் பிழைகளுக்கே முகம் சுளிக்கிற, இலக்கணப் பிழைகளைத் திருத்த முற்படுகிற மைனாரிட்டி அப்பாவிகளில் ஒருவர். இன்னொருபக்கம், சிலேடை, வெண்பா, வார்த்தை விளையாட்டு, ’எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவைதான்’ என்கிற ரேஞ்சுக்கு நகைச்சுவைப் பதிவுகள் எனக் கலவையான ரசனை கொண்டவர். இவரது சமீபத்திய நூலான ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் செம ஹிட்!

    இலவசக் கொத்தனாரின் வலைப்பதிவு: http://elavasam.blogspot.in/

     
    • amas32 (@amas32) 8:16 am on March 6, 2013 Permalink | Reply

      என்ன ஒரு அருமையான பாடல்! கண்ணதாசனுக்கு ஈடு இணை கிடையாது. Blood is thicker than water என்பதை வரிசை மூலம் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது. யாருக்கு பாத்தியதை அதிகம் என்று இந்த வரிசை மூலம் தெரிகிறது. சிறுகூடல்பட்டி அம்மனின் அருள் பெற்றவர், வார்த்தைகள் தானாகவே வந்து விழும்! அதை அனுபவிப்பவர்கள் என்னவோ நாம் தானே!

      அழகாக இதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு ரொம்ப நன்றி 🙂

      amas32

  • G.Ra ஜிரா 10:22 am on March 1, 2013 Permalink | Reply
    Tags: கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம்   

    மாத்தி வாசி 

    பொருள்கோள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது ஒரு பாடலை எப்படியெல்லாம் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லும் இலக்கணம் அது.

    சொற்கள் உள்ளது உள்ளபடியே வரிசையாகப் படித்து அப்படியே பொருள் கொண்டால் அது ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

    அதே போல விற்பூட்டு பொருள்கோள் என்று உள்ளது. பூட்டுவிற் பொருள்கோள் என்றும் இதற்குப் பெயருண்டு.

    அதாவது செய்யுளின் கடைசிச் சொல்லை அங்கிருந்து எடுத்து செய்யுளின் முதலில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

    என்னுடைய நண்பன் ஒருவன் பேசுவதெல்லாம் கூட இந்தப் பூட்டுவிற் பொருள்கோள் வகையில்தான் வரும். சற்றே நகைச்சுவையும் கிண்டலும் கலந்துதான் எப்போதும் பேசுவான் அவன். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்கள்.

    அவனுக்கெல்லாம் உக்கார வெச்சு வெட்டனும்… தலைமுடிய. காடு மாதிரி வளந்திருக்கு.”

    இதில் தலைமுடி என்பதை வரியின் முன்னால் சொன்னால் அதுவொரு சாதாரண கருத்து போல ஆகிவிடும். ஆனால் அதை வேண்டுமென்றே பின்னால் சொன்னதால் எதையோ ஆபாசமாகச் சொல்ல வருகிறான் என்று நினைத்து கடைசியில் சாதாரணமாக முடியும்.

    இது போல முயற்சிகள் திரைப்படங்களிலும் நடந்தன. முதன்முதலில் கண்ணதாசன் இந்த முறையை கந்தன் கருணை திரைப்படத்தில் மிகச்சிறப்பாகச் செய்தார். அடுத்து கே.டி.சந்தானம் அகத்தியர் திரைப்படத்தில் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு 80களில் முழுக்க முழுக்க ஆபாசமாகவே ஒரு பாடல் வந்தது. “குத்துறேன் குத்துறேன்னு சொல்லிப்புட்டு குத்தாமதான் போறீங்களே.. பச்சைய” என்றெல்லாம் வரிகள் வரும். சரி. அதை விட்டு விட்டு முதல் இரண்டு முயற்சிகளைப் பார்ப்போம்.

    கந்தண் கருணை படத்தில் அரியது பெரியது கொடியது இனியது என்று ஔவையாரின் பாடல்களை முருகன் பாடச் சொல்லிக் கேட்பது போல ஒரு காட்சி. இவையெல்லாம் ஆனதும் முருகன் “ஔவையே புதியது என்ன?” என்று முருகன் கேட்டதும் கவியரசரின் வரிகளைக் கே.பி.சுந்தராம்பாள் பாடுவார்.

    என்றும் புதியது
    பாடல் என்றும் புதியது
    பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    முருகா, உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

    இப்படி அடுக்கி அடுக்கி எழுதியிருப்பார் கண்ணதாசன். இதற்குப் பிறகுதான் பாடலே தொடங்கும். இப்படி வேண்டுமென்று ஏ.பி.நாகராஜன் கேட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் அகத்தியர் படத்தில் லேசாக இதே முயற்சியை கே.டி.சந்தானம் செய்திருப்பதிலிருந்து ஏ.பி.நாகராஜனுக்கு இந்த முயற்சி பிடித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இசையாய் தமிழாய் இருப்பவனே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

    இந்தப் பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் டி.ஆர்.மகாலிங்கமும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள்.

    பொதுவாக ஆற்றுநீர்ப் பொருள்கோளாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய பாடல்களுக்கு நடுவில் இப்படியான விளையாட்டுகள் நிறைந்த இந்தப் பாடல்களையும் கேட்பது சுகமே.

    இதுபோல நீங்கள் எங்கும் பயன்படுத்தியிருக்கின்றீர்களா? கேட்டிருக்கின்றீர்களா? படித்திருக்கின்றீர்களா? அவைகளை இங்கே எடுத்துச் சொல்லுங்களேன்.

    பாடலின் சுட்டி
    அரியது கேட்கின் (கந்தன் கருணை) –http://youtu.be/HYmH8wOZ4Yg
    இசையாய் தமிழாய் (அகத்தியர்) – http://youtu.be/467Y_UeokDo

    அன்புடன்,
    ஜிரா

    090/365

     
    • Arun Rajendran 2:37 pm on March 1, 2013 Permalink | Reply

      சூரல் பம்பிய சிறுகான் யாறே-னு ஒரு செய்யுள்..

      வரிகள எப்படி மாத்திப் போட்டாலும் பொருள் தரும் ..அடிமறிமாற்றுப் பொருள்கோள்-னு ஞாபகம்..

      கல்யாண தேன் நிலா
      காய்ச்சாத பால் நிலா
      நீதானே வான் நிலா
      என்னோடு வா நிலா
      தேயாத வெண்ணிலா
      உன் காதல் கண்ணிலா
      ஆகாயம் மண்ணிலா
      ——இந்தப் பாட்டு முழுதும் “அடிமறிமாற்று” மாதிரியே வருவதா என் எண்ணம்..

      தவறாயிருப்பின் திருத்துங்கள்…

    • Prabhu 10:15 pm on March 3, 2013 Permalink | Reply

      Does it include songs where the end of charanam and start of pallavi are merged and song is continued? THat would mean a lot of songs could be inclueded

    • Prabhu 10:19 pm on March 3, 2013 Permalink | Reply

      Like in that Ninnu kori varanam, when it ends like ‘உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கயில், நின்னுக்கோரி வரணம்’ or ‘அழகி எனது வரனே, அனுதினமும் நின்னுக்கோரி வரணம்’ இப்படியெல்லாம் முடிவையும் ஆரம்பத்தையும் மொபியஸ் வளையம் போல இணைத்து எழுதப் பட்டவை?

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel