விருந்தினர் பதிவு: சிரித்து வாழவேண்டும் 

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்,சிரித்து  கவலையை மறக்க தெரிந்தவன்,சிரியுங்கள் மனிதர்களே,இதை விட மருந்தில்லை வாழ்க்கையிலே என்று அமரகாவியம் படத்தில் பாடல் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே என்ற கவியரசரின் வார்த்தைக்கு இசையோடு சிரிப்பை இணைத்து ரசிக்க வைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.வாய் விட்டு சிரிப்பது மன அழுத்ததை குறைக்கும் என்பதால் கோபபடும் போது கூட சிரிப்பது போல வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள்.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்,பொம்பளை சிரிச்சா போச்சு,சிரித்தாலும் போதுமே,ஆணவ சிரிப்பு ஆனந்த சிரிப்பு என்று பல சிரிப்பு பாடல்கள் இருந்தாலும் இந்த மூன்று பாடல்கள் மனம் கவரும் வகையில் அமைந்தவை. தமிழ் பாடல் உலகின் மூவேந்தர்கள் எழுதியவை.மூன்றுமே வித்தியாசமான சூழல் அமைந்தவை.

இவரும் வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல “நல்ல மனிதர் போர்வையில் சிலர் செய்யும் அநியாயங்களை பட்டியலிட்டு மனம் நொந்து” சிரித்து பாடுவதாக அமைந்தது-

“மேடையேறி பேசும்போது ஆறு போல பேசு-கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு-உள்ள பணத்தை பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்லகணக்கை மாத்தி கள்ளகணக்கை ஏத்தி நல்ல நேரம் பார்த்து நண்பனை ஏமாத்து”…சிரிப்பு வருது சிரிப்பு வருது”சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது…..என்று அருமையாக எழுதியிருப்பார் கவியரசர்.

அடுத்து சில தீயவர்களால் மிரட்டப்பட்டு சிரிப்பையே தொலைத்திருந்த தன் தங்கை அச்சத்தை விட்டு சிரிக்கும்போது ஒரு அண்ணன் மனமகிழ்ந்து பாடும் பாடல் –

“வசந்தம் சிரித்தாலே வண்ண தேன் பூ மலரும்,வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்

அம்பிகை சிரித்தாலேஆலயம்அழகொளிரும் -அம்மமா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்”- என்று உவமையோடு கலக்கியிருப்பார் கவிஞர் வாலி-தங்கச்சி சிரித்தாளே செவ்விதழ் விரித்தாளே-மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே….

இன்னொரு வகையான பாடல் -“கலகலவென சிரி கண்ணில் நீர் வர சிரி -சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர்,சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் ” என்று ஒரு சிறிய விழாவில் நகைச்சுவை பரிமாற்றமாக அமைந்த பாடல்-பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமே,சிரி சிரி சிரி சிரி… என்று வித்தியாசமாக அமைந்த கவிஞர் வைரமுத்துவின் சிரிப்பு பாடல்.

என்ன…கவலைகளை கொஞ்சம் ஒதுக்கி நாமும் சிரித்து மகிழ்வோமே ….

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:

பாடல்-சிரிப்பு வருது சிரிப்பு வருது

படம்-ஆண்டவன் கட்டளை

எழுதியவர்-கவியரசர் கண்ணதாசன்

பாடியவர்-சந்திரபாபு

இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் சுட்டி- http://youtu.be/54qGTIOkuww

பாடல்-தங்கச்சி சிரித்தாளே

படம்-சிவப்பு சூரியன்

எழுதியவர்-கவிஞர் வாலி

பாடியவர்-மலேஷியா வாசுதேவன்

இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடலின் சுட்டி- http://youtu.be/QML2Nn-fhy0

பாடல்-சிரி சிரி சிரி சிரி

படம்-ஆளவந்தான்

எழுதியவர்-கவிஞர் வைரமுத்து

பாடியவர்கள்-கமலஹாசன்,மகாலக்ஷ்மி ஐயர்

இசை-ஷங்கர் இஷான் லாய்

பாடலின் சுட்டி –  http://youtu.be/PySy84R-DDo

நா. ராமச்சந்திரன்

பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams