Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

  நீ பார்த்த பார்வைக்கொரு 

  இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

  http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

  அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

  கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

  ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

  ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

  இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

  ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

  வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

  இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

  http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

  அப்படி பாக்குறதுன்னா வேணாம்

  கண் மேலே தாக்குறது வேணாம்
  தத்தி தாவுறதுன்னா னா னா
  தள்ளாடும் ஆசைகள் தானா
  என்ன கேட்காமல் கண்கள் செல்ல
  உன் பக்கம் பார்த்தேன்
  மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
  காணாமல் போனேன்

  கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

  இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

  இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

  இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

  இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

  இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

  நான் கேட்டதை தருவாய் இன்றாவது

  கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

  மோகனகிருஷ்ணன்

   
  • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

   நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
   மறைத்த முகத்திரை திறப்பாயோ
   திறந்து அகத்திரை இருப்பாயோ!!
   இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

   உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

   ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

   மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

  • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
   “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

  • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

   //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

   இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

   நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

   இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

   amas32

  • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

   I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

 • mokrish 9:22 pm on September 22, 2013 Permalink | Reply  

  கூட்டம் கூட்டமாக 

  சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை  பிடித்து முதுமலை வனச் சரணாலயம், ஆனைமலை வனச் சரணாலயத்தில் விட தமிழக அரசு ‘ஆபரேஷன் மலை’ என்ற நடவடிக்கை எடுத்தது. இது பற்றிய செய்திகளை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்த எனக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கில ஊடகங்கள் ‘herd of elephants’ என்று எழுத தமிழில்  யானைக் கூட்டம் என்றே இருந்தது.

  ஆங்கிலத்தில் இந்த Collective Nouns மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொரு பறவை, விலங்கு குழுவுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர். பல சொற்கள் கவிதை போல் இருக்கும். Colony of Ants, Troop of Apes, Swarm of bees, Flock of Birds, Pack of Hounds, Pride of Lions , School of fish என்று கேட்கும் போதே ஒரு graphic பிம்பம் தோன்றும். காக்கை கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? A murder of Crows! யாரோ ஒரு ரசிகன் யோசித்து வைத்த பெயர்கள்.

  http://users.tinyonline.co.uk/gswithenbank/collnoun.htm#Birds

  தமிழில் எல்லாவற்றையும் கூட்டம் என்றே சொல்கிறார்களா? இலக்கியத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் திரைப்பாடல்களில்  அப்படித்தான் என்று தோன்றுகிறது.

  எங்க வீட்டு பிள்ளை படத்தில் வாலி எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பிரபலமான பாடலில் காக்கைகள் கூட்டம் என்று எழுதி பின்னர் மாற்றப்பட்ட வரி ஒன்று வரும்

  அரச கட்டளை படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)  முயல் கூட்டம் என்கிறார்

  http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html

  மயிலாட வான்கோழி தடை செய்வதோ
  மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
  முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
  அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

  வைரமுத்து சிவப்பு மல்லி படத்தில் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் டி எம் எஸ் டி எல் மகராஜன்) சிங்க கூட்டம் என்கிறார்

  http://www.inbaminge.com/t/s/Sivappu%20Malli/Erimalai%20Eppadi.eng.html

  சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
  துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
  நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
  இனி அழுதால் வராது நீதி

  கண்ணதாசன் அக்கரை பச்சை படத்தில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் SPB, எல் ஆர் ஈஸ்வரி) கிளிக் கூட்டம் என்கிறார்

  http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Oorgolam%20Poginra.eng.html

  ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்

  ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

  நா முத்துக்குமார் உனக்கும் எனக்கும் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே என்ற பாடலில் (இசை தேவி ஸ்ரீபிரசாத் பாடியவர் சங்கர் மகாதேவன்)

  http://www.youtube.com/watch?v=xAWGS5tB9Lw

  காட்டுக்குள்ள நீயும் போகாதே

  கொட்டுகிற தேனீ கூட்டம்

  தேனெடுக்க உதட்ட சுத்துமடி

  இப்படி இன்னும் பல பாடல்கள். பறவைக்  கூட்டம், நரிகள் கூட்டம்  குயில் கூட்டம் குட்டி போட்ட ஆட்டுக் கூட்டம், மான் கூட்டம், கடல்மீன் கூட்டம், வண்டுகள் கூட்டம், பட்டாம்பூச்சி கூட்டம் – என்று எல்லா கவிஞர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட மெட்டின் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் தொலைத்து கூட்டம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இது சரியா?

  ஆடுகளும் மாடுகளும் மந்தை. கொஞ்சம் தேடினால் flock என்ற வார்த்தைக்கு இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம் என்ற அர்த்தம் கண்ணில் படுகிறது.  Swarm என்றால் வண்டின் மொய்திரள் என்ற அழகான விளக்கம்  கண்ணில் படுகிறது.

  தமிழில் Collective nouns உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்

  மோகனகிருஷ்ணன்

  295/365

   
  • rajinirams 11:41 pm on September 22, 2013 Permalink | Reply

   யானைக்கூட்டத்தை பார்த்து ஒரு நல்ல பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.இளம்பெண்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து காதல் மலர் கூட்டம் ஒன்று என்றதெய்வமகன் வரிகள் நினைவு வருகிறது. போருக்கு செல்லும் கூட்டத்தை மட்டும் படை என்றே கூறுவர்..வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்”படை” வெல்லும். நன்றி.

  • rajinirams 11:45 pm on September 22, 2013 Permalink | Reply

   இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வித்துவான் வெ.லட்சுமணன் வரிகள் கட்சி தொண்டர் படையையும் குறித்து எழுதினார்.

  • Niranjan 11:47 pm on September 22, 2013 Permalink | Reply

   தொல்காப்பியத்தில் இருக்கிறது. நான் கூட புதிய தலைமுறை நிகழ்ச்சியில் செய்திருக்கிறேன்.

   • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

    லிங்க் ப்ளிஸ் 🙂

    amas32

  • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

   சிங்கம் சிங்கிளா தான் வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று தலைவர் அன்றே சொல்லிவிட்டார்! 🙂 அதனால் விலங்குகள்/பறவைகள் கூட்டம் என்பது தான் நானும் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்டு மந்தை, மாட்டு மந்தை இன்றும் வழக்கில் உண்டு.

   amas32

   • rajinirams 5:56 pm on September 23, 2013 Permalink | Reply

    ஹா ஹா,சூப்பர்:-))

   • Mohanakrishnan 6:57 pm on September 23, 2013 Permalink | Reply

    சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது factually wrong. சுஜாதா என்ற யானைக்கும் அடி சறுக்கும் !

    • amas32 9:11 pm on September 24, 2013 Permalink

     அதெல்லாம் poetic liberty மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு டயலாக் எழுதும் போது இதெல்லாம் கண்டுக்கக் கூடாது ;-))

     amas32

    • mokrish 10:17 pm on September 24, 2013 Permalink

     அது சரி! மத்த படமெல்லாம் உலக சினிமா மாதிரி வேணும். இங்க வேற ரூலா?

  • Uma Chelvan 3:30 am on September 25, 2013 Permalink | Reply

   சிங்கிளா வந்த சிங்கத்தின் நிலையை பாரீர்!!!

   Sorry about the words at the bottom, since I copied this image from another site!!!):

 • என். சொக்கன் 11:03 pm on August 7, 2013 Permalink | Reply  

  உயிர்மூச்சு! 

  • படம்: குஷி
  • பாடல்: கட்டிப்புடி கட்டிப்புடிடா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=XN4jzIORJtM

  ஆக்ஸிஜன் இல்லாமல், இமயமலை ஏறாதே,

  கற்பனை இல்லாமல், கட்டில்மேல் சேராதே!

  தமிழ்ப் பாடல்களில் இலக்கியம் (பாரதிக்கு கண்ணம்மா, நீ எனக்கு உயிரம்மா), இலக்கணம் (இன்னிசை அளபெடையே), கலை (ரவிவர்மன் எழுதாத கலையோ), ஆங்கிலம் (கம்பன் எங்கே போனான், ஷெல்லி என்ன ஆனான்), வரலாறு (ராஜராஜ சோழன் நான்), புவியியல் (நதிகள் இல்லாத அரபு தேசம் நான்), தாவரவியல் (ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி, ஆணி வேர்வரையில் ஆடிவிட்டதடி), விலங்கியல் (கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை), கணக்கு(ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, உன்மேல் ஆசை உண்டு), ஜியாமிட்ரி (பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்) எல்லாம் வந்ததுண்டு, வேதியியல்?

  வைரமுத்து இருக்க பயமேன்? ஆக்ஸிஜன்மேல் கவிஞருக்கு அப்படி என்ன பிரியமோ, தன்னுடைய பாடல்களில் இந்தப் பிராண வாயுபற்றிய விவரங்களை அள்ளித் தூவியிடுக்கிறார். உதாரணமாக, இந்தப் பாடலில் ‘மலையேற்றத்துக்கு ஆக்ஸிஜன் அவசியம்’ என்கிற உண்மையைச் சொல்லி, அதைக் குறும்பாகக் கட்டிலோடு இணைக்கிறார். கட்டிலேற்றத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன், ”கற்பனை”யாம். அட்டகாசம்!

  அவரே எழுதிய இன்னும் சில ‘ஆக்ஸிஜன்’ வரிகள்:

  ‘அன்பே அன்பே’ பாடலில், ‘அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்.’

  ‘காதல் அணுக்கள்’ பாடலில், ‘ஓடுகிற தண்ணியில் ஆக்ஸிஜன் மிக அதிகம், பாடுகிற மனசுக்குள் ஆசைகள் மிக அதிகம்.’

  வேதிப்பொருளாக அன்றி, வேகம் / துடிப்பு என்கிற அர்த்தத்திலும் வைரமுத்து ஆக்ஸிஜனைப் பயன்படுத்தியதுண்டு. ’உலக நாயகனே’ என்ற பாடலில் கமலஹாசனைப் புகழ்ந்து எழுதும்போது, ‘ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும், ஆக்ஸிஜன் குறையவில்லை’ என்பார் அழகாக.

  ஆக்ஸிஜனுடைய அதே தத்தகாரம்தான் நைட்ரஜன், ஹைட்ரஜன், ஹீலியம், பேரியம், ரேடியம் எல்லாமே. ஆனால் ஏனோ, அவையெல்லாம் இந்த அளவுக்குப் பாடப்படவில்லை!

  அது சரி, தமிழ்த் திரைப் பாடல்களில் அல்ஜீப்ரா உண்டா?

  இல்லை என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது ‘எக்ஸ் மச்சி, வொய் மச்சி’ என்று ஒரு பாடல் சிக்கியது. பலே!

  ***

  என். சொக்கன் …

  07 08 2013

  249/365

   
  • C.M.Lokesh 6:58 am on August 8, 2013 Permalink | Reply

   ‘தசாவதாரம்’ படத்தில் இடம் பெற்ற ‘உலக நாயகனே’ பாடலை எழுதியதும் வைரமுத்து அவர்கள் தான். ‘அல்ஜீப்ரா’ இடம் பெற்ற இன்னொரு பாடலும் உண்டு. அது நா.முத்துகுமார் எழுதிய ‘காதல் யானை’ என்ற பாடல். இது தான் அந்த வரிகள் —-> ‘அல்ஜீப்ரா இவன் தேகம், அமீபாவாய் உரு மாறும்’

  • amas32 6:59 am on August 8, 2013 Permalink | Reply

   :-))) ஆமாம் ஜிரா மொக்ரிஷ் ஸ்டைலில் எழுதியுள்ளீர்கள், ஆனாலும் உங்க பாணி தான். சுருக், நறுக் :-))
   அது ஏன் யாரும் பிராண வாயு என்று எழுதவில்லை. எல்லோருமே ஆக்சிஜன் தான்!

   amas32

  • என். சொக்கன் 11:06 am on August 8, 2013 Permalink | Reply

   பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி C. M. Lokesh, பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்

 • என். சொக்கன் 2:15 pm on March 30, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : வைஃபாலஜி 

  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆயிரம் விஷயம் இருக்கிறது. அந்த நொடியில்தான் அறிமுகம் ஆகி இருந்தாலுமே கூட,  எந்தக் கடையில இந்தப்புடவை வாங்கினே, இன்னிக்கு என்ன சமைச்சே, எப்படி அதைச் செய்யறது, குழந்தை சாப்பிடவே மாட்டேங்கறான், அந்த சீரியல் பார்த்தியா, இவர் வீட்டுக்கு வரை பத்து பத்தரை ஆயிடும்..விஷயத்துக்குப் பஞ்சமே இல்லை.

  ஆனால் அதிக அறிமுகம் இல்லாத ஆண்கள் பேசிக்கொள்வதற்கான விஷயங்கள் மிகவும் குறைவே. ஆஃபீஸ் பற்றியோ சொந்த விஷயங்கள் பற்றியோ அறிமுகமில்லாதவக்ளிடம் பேச எப்போதுமே தயக்கம்தான். ஆனால் பொத்தாம் பொதுவாக, ஆஃபீஸ் பாஸைக் கிண்டல் அடிப்பதும் வீட்டு பாஸைக் கிண்டல் அடிப்பதும்தான் மிகச் சுலபமாக ஆண்களைக் கனெக்ட் செய்ய உதவும் விஷயங்கள். அதனால்தான் வைஃபாலஜி போன்ற விஷயங்கள் சூப்பர் ஹிட்டாகிவிடுகின்றன.

  ஆனால் இது 4 வரி நோட் இல்லையா? சினிமாப்பாட்டுப் பற்றிதானே பேசவேண்டும்? வைஃபாலஜியை அழகாகச் சொன்ன சினிமாப்பாடல்கள் மிகக் குறைவுதான்.

  செப்டம்பர் மாதம் வாழ்வில் துன்பத்தைத் தொலைத்து விட்டோம், அக்டோபர் மாதம் வாழ்வில் இன்பத்தைத் தொலைத்துவிட்டோம்.. துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ, இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் ஆனதே அப்போ..

  இது ஒரு உதாரணம்தான், ஆனாலும் எனக்கு இந்தப்பாட்டு அந்த அளவுக்குப் பிடிக்காது. காரணம் 2.

  1. மொழி நடை என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துபவன் நான். /ஆனந்த பாஷ்பத்தோடு அவளை நெருங்கி “என்னாம்மே இப்படிக்கீறே” என்றான்/ என்ற வரியைப்பாருங்கள். இதில் என்ன குறை? நினைக்கும் மொழிக்கும் பேசும் மொழிக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசம். கிட்டத்தட்டவாவது ஒரு கதையில்., பாட்டில் இந்த வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது என் அபிப்பிராயம். இந்தப்பாட்டில் மற்ற இடங்களில் எல்லாம் தூய தமிழைப் போட்டுவிட்டு எப்போ அப்போ என்று பேச்சுத்தமிழைக் கலந்திருக்கிறார் எழுத்தாளர். (மய்யா மய்யா பாடலிலும் இடஞ்சுட்டிப் பொருள்விளக்கு என்றெல்லாம் விளையாடிவிட்டு என் பேர் எழுதிருக்கு என்று கொச்சையில் இறங்கிவிட்டிருப்பார். )

  2. பல்லவிக்குள் “பெண்கள் இல்லாத ஊரில் ஆண்களுக்கு ஆறுதல் கிடைக்காது – பெண்கள் இல்லாத ஊரில் ஆறுதலே தேவை இருக்காது” என்று பழைய ஜோக்கை உல்டா செய்த வரிகள். அதில் ஒன்றும் தப்பில்லை. இரண்டாவது பல்லவியில் அதையே ஆண்கள் பெண்களை இண்டர்சேஞ்ச் செய்திருக்கும் கற்பனைப்பஞ்சம்.

  இவ்வளவு திட்டுகிறேனே, அப்போது நல்ல வைஃபாலஜிப்பாடலையும் அடையாளம் காட்டவேண்டும் இல்லையா?

  கல்யாணம் செய்யக்கூடாது என்பதை எளிய உதாரணங்களோடு “எதிர்க்காத்துல எச்சி உமியாதே, நெருப்பாண்ட குப்பையக் கொட்டாதே” என்று ஆணி அடித்து விளக்கும் கந்தசாமியா ராமசாமியா என்ற கமலஹாசன் எழுதின பாடல்தான் அது.

  “எதிரே ட்ராஃபிக்கு இல்லாத ரோடு இது.. குதிரை ஒண்ணு மட்டும் போட்டி ஜெயிக்கும் ரேஸு இது” ரெண்டு வரிதான். ஆண்களின் அத்தனைக் கஷ்டத்தையும் அடக்கி வைத்திருக்கிறார் கவிஞர் 🙂

  “ஆறுபடை வூடு கட்னவரு கொஞ்சம் நாட்டி ஆனாரு, டபுளு டூட்டி செஞ்சாரு, அப்பால பட்ஜெட்டுத்தாளாம பழனிமலையில ஆண்டியா நின்னாரு.. தம்பி ஏழுமலையான் நிலையப்பார் எக்கச்சக்கமா கடனப்பார் – ஆண்டவனுக்கே இந்தக் கதின்னா அல்பங்க கதிய நினைச்சுப்பார்” – என்று மரணபயம் காட்டுகிறார்.

  “ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு தத்து எடுத்துக்கயேன் – அதை நீ பெக்கத் தேவையில்லையே, உன்ன நாஸ்தி பண்ணுற கோஷ்டிகளால நோவத்தேவையில்லையே” என்று மாற்றுவழியும் காட்டுகிறார்.

  போன பாடலில் சொன்ன இரண்டு குறைகளையும் அநாயாசமாகத் தூக்கி எரிந்திருக்கிறார் கமல். சென்னை முதலியார்க் குடும்ப டயலெக்டைப் படம்முழுக்கப் பேசியதோடு மட்டுமில்லாமல், அந்த வட்டாரவழக்கில் முழுப்பாடலையும் எங்கும் பிறழாமல் எழுதி இருக்கிறார். பல்லவியிலேயே கூட எதிர்க்காத்துல எச்சி உமியாதே ரிப்பீட் ஆகவில்லை – வரிக்கு வரி வித்தியாசம் நிச்சயமாகவே இருக்கிறது.

  பொதுவாகவே பாடல்வரிகளை சிலாகிக்கும் எவரும் சென்னை பாஷைக் கவிதைகளை எல்லாம் தொட்டுக்கொள்ள மாட்டார்கள். “நைனா உன் நினைப்பால நான் நாஸ்தா துன்னு நாளாச்சி” என்னும் வா வாத்யாரே ஊட்டாண்டே வரிகள் எந்த மற்ற சிலாகிக்கப்படும் வரிகளை விடக் குறைந்ததில்லை என்பது என் எண்ணம்.

  இந்த வசை என்னாற் கழிந்ததன்றே!

  பெனாத்தல் சுரேஷ்

  புத்தகங்களில் ‘ராம் சுரேஷ்’ எனப் பெயர் வாங்குவதற்கு முன்பாகவே (பின்பாகவும்) இணையத்தில் ‘பெனாத்தல் சுரேஷ்’ ரொம்பப் பிரபலம். உலகம் சுற்றும் (நிஜ) வாத்தியார். சீவக சிந்தாமணியைச் சுவையான நாவல் வடிவத்தில் தந்தவர். சமீபத்தில் இவரது இரண்டு த்ரில்லர் நாவல்கள் வெளிவந்துள்ளன.

  பெனாத்தல் சுரேஷ் இணைய தளம்: http://penathal.blogspot.in/

  ட்விட்டர்: https://twitter.com/penathal

   
  • Saba 3:23 pm on March 30, 2013 Permalink | Reply

   Amused by the wifeology blog, the other half had a good laugh 🙂 Sharing the link with other Y chromosomes.

  • amas32 (@amas32) 8:39 pm on March 30, 2013 Permalink | Reply

   ஒரு பாட்டை எடுத்து சிலாகித்து எழுதும் போது தான் மறைந்து கிடந்த அந்த பாட்டின் அருமை தூக்கலாகத் தெரிகிறது. அந்த விதத்தில் இன்று நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஓன்று. கமலே எழுதி, பாடி, நடித்தும் இருப்பது இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பு. அனுபவித்து செய்திருப்பார் 😉

   சென்னையை மிகவும் நேசிப்பவள் நான், சென்னை தமிழை சற்றே கூடுதலாக! 🙂

   amas32

  • GiRa ஜிரா 8:54 am on April 1, 2013 Permalink | Reply

   வைஃபாலஜின்னு தொடர் எழுதுனவருக்கு இந்தப் பதிவெல்லாம் சாதாரணம். ஆனா படிக்கிறவங்களுக்கு? ரசிக்க வைக்கும் ஒரு பதிவு.

   கேட்ட பாட்டுதான். ஆனா அதுக்கு ஒரு அருமையான விளக்கம். நகைச்சுவை முந்திரிப்பருப்பு தூவிய பாயாசம் 🙂

 • என். சொக்கன் 2:06 pm on March 30, 2013 Permalink | Reply  

  மார்பெழுத்து 

  • படம்: முதல்வன்
  • பாடல்: முதல்வனே, என்னைக் கண் பாராய்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=w0XW5GFiDEA

  கொஞ்ச நேரம் ஒதுக்கி, கூந்தல் ஒதுக்கி,

  குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்!

  பீலி ஒன்றை எடுத்து, தேனில் நனைத்து,

  கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்!

  முதலமைச்சரைக் காதலிக்கும் ஒரு பெண் அவனுடைய நேரத்தை வேண்டிப் பாடுவதாக அமைந்த பாடல் இது. அதற்கு ஏற்ப முதல்வர், அமைச்சர், அதிகாரி, அரசாங்க அலுவலகம் சார்ந்த administration, hierarchy, bureaucracy, red tapism வார்த்தைகளாகத் தேடித் தொகுத்து, அதேசமயம் இதனை ஒரு ரசமான காதல் பாடலாகவும் தந்திருப்பார் வைரமுத்து. உதாரணமாக: கொடியேற்றம், பஞ்சம், நிவாரணம், நேரம் ஒதுக்குதல், குறிப்பு எழுதுதல், கையொப்பம், நிதி ஒதுக்குதல், திறப்பு விழா, ஊரடங்கு, வரிகள், நகர்வலம்…

  இதற்கெல்லாம் நடுவில், நம்முடைய தினசரிப் பேச்சிலும், சினிமாப் பாடல்களிலும்கூட அதிகம் பயன்படாத ஒரு வார்த்தை, ‘பீலி’.

  இந்த வார்த்தையைக் கேட்டதும், பள்ளியில் படித்த ஒரு திருக்குறள் ஞாபகம் வரும், ‘பீலிபெய் சாகாடும் அச்சு இறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’. இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள், என்னதான் லேசான மயில் இறகு என்றாலும், அதை Overload செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் வண்டி உடைந்துவிடும்.

  ஆக, பீலி என்றால் மயில் இறகு?

  ’பீலி சிவம்’ என்று ஒரு பிரபலமான நடிகர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணன் தலையில் மயில் இறகு உண்டு, சிவனுக்கும் பீலிக்கும் என்ன சம்பந்தம்?

  எனக்குத் தெரியவில்லை, ஓர் ஊகத்தைச் சொல்கிறேன், கோவையாக வருகிறதா என்று பாருங்கள்!

  கந்த புராணத்தில் ’குரண்டாசுரன்’ என்று ஓர் அசுரன், கொக்கு வடிவத்தில் திரிந்தவன், அவனை வீழ்த்தினார் சிவன், அந்த வெற்றிக்கு அடையாளமாக, அந்தக் கொக்கின் சிறகைத் தலையில் சூடிக்கொண்டார். இதைப் போற்றிப் பாடும் மாணிக்கவாசகரின் பாடல் வரி, ‘குலம் பாடி, கொக்கு இறகும் பாடி, கோல் வளையாள் நலம் பாடி…’

  சிவனுக்குப் ‘பிஞ்ஞகன்’ என்று ஒரு பெயர் உண்டு. இதற்குப் ‘பீலி அணிந்தவன்’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இதுதான் ‘பீலி சிவம்’ என்று மாறியிருக்குமோ?

  எனக்குத் தெரிந்து சிவன் மயில் இறகை அணியவில்லை, கொக்கின் இறகைதான் அணிந்தார். அப்படியானால் ‘பீலி’ என்பது மயிலிறகா, அல்லது வெறும் இறகா?

  பெரிய புராணத்தில் ஒரு பாடலில் ‘மயில் பீலி’ என்று ஒரு வார்த்தை வருகிறது. ஒருவேளை ‘பீலி’ என்பதே மயிலிறகாக இருந்தால், ‘மயில் பீலி’ என்று தனியே குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லையே!

  மேலே நாம் பார்த்த திருக்குறளில்கூட, மயிலுக்கு வேலையே இல்லை, இறகு என்று பொருள் கொண்டாலே அதன் அர்த்தம் கச்சிதமாகப் பொருந்துகிறது.

  ஆக, ‘பீலி’ = இறகு என்பது என் கணிப்பு. உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!

  அது நிற்க. சொல் ஆராய்ச்சி நிறைய செய்தாகிவிட்டது, கொஞ்சம் ஜொள் ஆராய்ச்சியும் செய்வோம்.

  இந்தப் பாடலில் வரும் முதல்வர் பீலியை எடுத்து (அதாவது, இறகுப் பேனாவை எடுத்து) தேனில் நனைத்து, காதலியின் மார்பில் கையொப்பம் இடுகிறார். இதென்ன விநோதப் பழக்கம்?

  இன்றைக்குப் பெண்கள் கையிலும் தோளிலும் காலிலும் மருதாணி அணிவதுபோல், அன்றைக்குத் தங்களின் மார்பில்கூட சந்தனத்தால் பலவிதமான பூ அலங்காரங்களை வரைந்துகொள்வார்கள். ஒருவிதமான மேக்கப். அதன் பெயர் ‘தொய்யில்’.

  அதைதான் இந்த முதல்வர் சுட்டிக்காட்டுகிறார், ‘பெண்ணே, உன் மார்பில் சந்தனத்தால் பூ அலங்காரமெல்லாம் எதற்கு? தேனைத் தொட்டு என் கையெழுத்தைப் போடுகிறேன்.’

  ***

  என். சொக்கன் …

  30 03 2013

  119/365

   
  • David 2:21 pm on March 30, 2013 Permalink | Reply

   எங்கள் ஊரில் பனங்கிழங்குக்கு நடுவில் இருக்கும் அந்த ஒற்றை குருத்துக்கு ‘பீலி’ என்றும் சொல்வர்.

   • Saba 3:27 pm on March 30, 2013 Permalink | Reply

    நம்ம ஊரிலும் அதே தான்

  • இசக்கியப்பன் 2:26 pm on March 30, 2013 Permalink | Reply

   பனங்(கொட்டை)கிழங்கில் இருந்து வரும் முதல் இலையையும் பீலி என்று அழைப்பதுன்டு

  • Saba 3:52 pm on March 30, 2013 Permalink | Reply

   பதிவை படித்த பின் அகராதி புரட்டியபோது……

   பீலி: 1. மயில், மயில் தோகை, மயில் தோகை விசிறி,
   2. வெண் குடை (white umbrella)
   3. பொன்
   4. மகளிரின் கால் விரல் அணி ((toe-ring)
   5. சிறு ஊது கொம்பு (small trumpet)
   6. மலை
   7. கோட்டை மதில்
   8. நத்தை ஓடு
   9. பனங்குருத்து
   10. நீர்த்தொட்டி (water trough)

   Could it be #5 ??

  • PVR 4:08 pm on March 30, 2013 Permalink | Reply

   செத்தி மந்தாரம், துளசி, பிச்சக மாலை
   சார்த்தி குருவாயுரப்பா நின்னெ கணி காணேணம்

   என்று மிகவும் புகழ்பெற்ற மலையாளப்பாட்டு. அதில் அடுத்த வரி, “மயில்பீலி சூடிக்கொண்டும், மஞ்சள் துகில் சுற்றிக்கொண்டும்…” என்று வரும்.

   ஆக, பீலி=இறகு. அதிகம் பேசப்படுவது, மயிலிறகு. 🙂

   http://m.youtube.com/#/watch?v=peFYo1MZzRQ&desktop_uri=%2Fwatch%3Fv%3DpeFYo1MZzRQ

   • amas32 (@amas32) 8:42 pm on March 30, 2013 Permalink | Reply

    இந்த பாட்டுக்கான லின்குக்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙂

    amas32

  • Vijay 4:27 pm on March 30, 2013 Permalink | Reply

   அப்டியே லாபி என்ற சொல்லைக் குறித்து ஒரு சிறிய விளக்கம் தர முடியுமா?
   முதலில் இது தமிழ்ச் சொல்லா? அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டும் உரிய சொல்லா?

   • என். சொக்கன் 5:15 pm on March 30, 2013 Permalink | Reply

    Lobby : very popular English word

  • amas32 (@amas32) 8:47 pm on March 30, 2013 Permalink | Reply

   கவிதைக்கு வேண்டுமானால் தேனைத் தொட்டு கையெழுத்துப் போடுவது ரொமான்டிக்காக இருக்கலாம். ஆனால் உண்மையில் சருமம் பிசு பிசுவென்று இருந்து ஈயும் எறும்பும் தான் மொய்க்கும்! 🙂

   பீலி என்றால் இறகு என்ற பொருளில் தான் சரியாக வருகிறது இல்லையா?

   amas32

  • GiRa ஜிரா 8:59 am on April 1, 2013 Permalink | Reply

   பீலியை இறகு என்று எடுத்துக் கொள்வது மிகப் பொருத்தம். பீலி சிவம்… ஒரு நல்ல நடிகர். முந்தியெல்லாம் டிவி நாடகங்கள்ள தவறாம வருவாரு. பழைய படங்கள்ளயும் வந்திருக்காரு. இப்போது நம்மோடு இல்லைன்னு நெனைக்கிறேன்.

  • Kaarthik Arul 1:06 pm on April 3, 2013 Permalink | Reply

   மயில் பீலி என்று மலையாளத்தில் அதிகமான பாடல்களில் பயன்படுத்தப் படுகிறது. அதனால் இறகு என்ற அர்த்தம்தான் சரி

 • என். சொக்கன் 11:29 am on March 20, 2013 Permalink | Reply  

  இலக்கணம் மாற்றுதோ 

  • படம்: சங்கமம்
  • பாடல்: வராக நதிக்கரை ஓரம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=t3PObFxpoBI

  பஞ்ச வர்ணக் கிளி நீ, பறந்தபின்னாலும்

  அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு!

  தமிழில் அடிப்படை எண்களைக் குறிப்பிடும் சொற்கள், சின்னக் குழந்தைக்கும் தெரியும்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்து.

  ஆனால் இவற்றை உச்சரிக்கும்போது நாம் பல மாற்றங்களைச் செய்கிறோம். ‘ஒன்று’ என்பது ‘ஒண்ணு’ ஆகிறது, ‘இரண்டு’ என்பது ‘ரெண்டு’ ஆகிறது, இப்படியே மூணு, நாலு, அஞ்சு, ஒம்பது என ஆறு எண்கள் எழுத்திலிருந்து மாறுபடுகின்றன.

  மற்றதெல்லாம்கூடப் பரவாயில்லை ஐ.ந்.து என்ற சொல் எப்படி அ.ஞ்.சு என்று மாறுகிறது? இந்த இரு சொற்களுக்கும் கொஞ்சம்கூடச் சம்பந்தம் இல்லையே, ’ஐ’க்குப் பதில் ‘அ’, ’ந்’க்குப் பதில் ‘ஞ்’, ‘து’க்குப் பதில் ‘சு’ என மூன்று எழுத்துகளும் மாறிவிட்டனவே, இது என்ன நியாயம்?

  இப்படி ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் இன்னோர் எழுத்து தோன்றுவதைத் தமிழில் ‘போலி’ என்பார்கள். உதாரணமாக, ‘உரம்’ என்பதை ‘உரன்’ என்று எழுதுவார்கள், ‘மனம்’ என்பதை ‘மனது’, ‘மனசு’ என்று எழுதுவார்கள்.

  இதுபோல் ஓர் எழுத்து இப்படி அப்படி மாறினால் பரவாயில்லை, இருக்கிற மூன்று எழுத்துகளுமே மாறினால்?

  அதற்கும் இலக்கணப் பெயர் உண்டு, ‘முற்றுப் போலி’, அதாவது ஒரு சொல்லில் இருக்கும் அனைத்து எழுத்துகளும் முழுமையாக மாறி, போலி வடிவம் நிலை பெற்றுவிடுவது. ‘ஐந்து’ என்பது ‘அஞ்சு’ என மாறுவதுபோல.

  சரி, இதற்கெல்லாம் ஏதாவது சூத்திரங்கள் உண்டா? அல்லது இஷ்டம்போல் மாற்றலாமா?

  தமிழில் எல்லாவற்றுக்கும் தெளிவான வரையறைகள் உண்டு. பிழையைக்கூட இப்படிதான் செய்யவேண்டும் என்று வகுத்துவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

  உதாரணமாக, ‘ஐந்து’ என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். மூன்று சூத்திரங்களின் அடிப்படையில் அது ‘அஞ்சு’ என எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

  Rule 1 : தகரமும் சகரமும் ஒன்றுக்கொன்று போலியாக வரும்

  இதன்படி, ஐந்து என்ற சொல்லில் 3வதாக வரும் ‘து’ என்ற எழுத்து மாறி, ‘சு’ என ஆகிறது, ‘ஐந்சு’

  Rule 2 : நன்னூல் சூத்திரம், ‘ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே’, அதாவது, ஐ என்ற எழுத்தைத் தொடர்ந்து ‘ந’கர எழுத்து வந்தால், அது ‘ஞ’கரமாக மாறும்

  இதன்படி, ‘ஐந்சு’ என்ற சொல்லில் ‘ஐ’யைத் தொடர்ந்து 2வதாக வரும் ‘ந்’ என்ற எழுத்து மாறி, ‘ஞ்’ என ஆகிறது, ‘ஐஞ்சு’

  Rule 3 : அதே நன்னூலில் வேறொரு சூத்திரம், ‘அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்’, அதாவது ச, ஞ, ய என்ற எழுத்துக் குடும்பங்களுக்கு முன்னால் அ அல்லது ஐ வந்தால், அவை மாறித் தோன்றும், அதாவது, ‘அ’ என்பது ‘ஐ’ ஆகும், ‘ஐ’ என்பது ‘அ’ ஆகும்

  இதன்படி, ‘ஐஞ்சு’ என்ற சொல்லின் முதலில் வரும் ‘ஐ’, அடுத்து வரும் ‘ஞ்’ காரணமாக, ‘அ’ என மாறுகிறது, ‘அஞ்சு’.

  ஆக, ‘ஐந்து’ போச்சு (இலக்கண முறைப்படி) ’அஞ்சு’ வந்தது டும் டும் டும்!

  ***

  என். சொக்கன் …

  20 03 2013

  109/365

   
  • Saba 11:38 am on March 20, 2013 Permalink | Reply

   அருமை!!.
   உங்கள் விளக்கங்களில் இருந்து ஒவ்வொரு முறையும் புதுசாக தமிழ் படிகிறேன். மிக்க நன்றி. தொடர்க உங்கள் விளக்கங்கள்.

  • சஞ்சீவிக் குமார் S (@SSanjeeviK) 11:42 am on March 20, 2013 Permalink | Reply

   Super info on Suepr Tamil. But Vairamuthu wrote அஞ்சு வர்ணம் instea of அஞ்சு வர்ணங்கள். ஏதோ என்னால முடிஞ்சது ).

  • amas32 (@amas32) 12:00 pm on March 20, 2013 Permalink | Reply

   திரைப்பாடலிலும் இலக்கண அழகை ஆராயும் நீவிர் வாழ்க!

   ஐந்து கூட அஞ்சு என இலக்கணப்படி தான் மாறியுள்ளதா? அப்போ நாம் பேச்சு வழக்கில் மாற்றிப் பேசும் சொற்கள் கூட முறைப்படி தான் மாற்றிப் பேசுகிறோமோ? தமிழன் கிரேட் தான்! 🙂

   ஆனாலும் ஒரே பொருளில் வரும் பஞ்சும், அஞ்சும் ரைம் ஆகிறதே. அங்கே வைரமுத்து நிற்கிறார்!

   amas32

   • anonymous 8:49 am on March 21, 2013 Permalink | Reply

    excuse me, வாலியும், இதுல கலக்கி இருக்காரு அம்மா:))
    “கொஞ்ச நேரம் கொஞ்சலாமா” – பாட்டு நினைவு வருதா? All numbers, he putting in one line:)

    ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
    எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
    நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
    கொஞ்ச நேரம் கொஞ்சலாமா?
    ——-

    one more…
    பஞ்சு மிட்டாய், அஞ்சு ரூவா…
    நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூவா:)
    ——-

    எங்க தல, கம்பரும் பாடிக் கீறாரு:)

    “அஞ்சிலே” ஒன்று பெற்றான், “அஞ்சிலே” ஒன்றைத் தாவி
    “அஞ்சிலே” ஒன்று ஆறாக, அரு-இயர்க்காக ஏகி
    “அஞ்சிலே” ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில்
    “அஞ்சிலே” ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்!

  • Vijay 7:32 pm on March 20, 2013 Permalink | Reply

   Chokkan Sir,

   I am big fan of ur “Ilakkana” posts. I get to reminisce my school days, without my tamil ammas “vidiyamoonji payale” ,, ottru enga da?? Thanx.

  • anonymous 10:02 pm on March 20, 2013 Permalink | Reply

   சிறப்பானதொரு பதிவு, திரு. சொக்கன் ஐயா
    
   எந்த எண்ணுக்கு மட்டும் போலியே கிடையாது? சொல்லுங்க பார்ப்போம்;
   முருகனின் எண்ணுக்குத் தான்:))
   ஆறு = இதுக்கு என்ன போலிச் சொல்?:)
    
   ஒன்று = ஒன்னு
   இரண்டு = ரெண்டு
   மூன்று = மூனு
   நான்கு = நாலு
   ஐந்து = அஞ்சு
   ஆறு = ?
    
   Chummaa, I told:)
   ஏழு-க்கும் அப்படியே!
    
   சொல்லப் போனா, ஆறு = அறு ஆகும்!
   ஏழு = எழு ஆகும்
   எட்டு = எண் ஆகும்
   ஒன்பது = ஒம்போது
   பத்து = பதின்
    
   எதுக்குய்யா, இந்தத் தமிழ்-ல, ஒரு பேரை வச்சிட்டு, வேற வேற பேருலயும் கூப்பிடணும்?
   அதுக்குப் பேசாம, கூப்புடு பேரையே, பேரா வச்சிட்டுப் போகலாமே?:) Any clues?;)

   • anonymous 10:03 pm on March 20, 2013 Permalink | Reply

    “போலி”-ன்னாலே, போலிச் சான்றிதழ், போலிச் சாமியார், போலி மருத்துவர் –ன்னு இன்னிக்கி ஆக்கிட்டோம்;
    Kinda –ve meaning! ஆனா அதுவல்ல!
     
    போல் = அது “போல்” இது = போலி
    போலுவதால் போலி…
     
    நம்ம தினப்படி வாழ்க்கையிலேயே “நல்ல போலிகள்” நெறைய உண்டு;
    *கார Donut = போலி to மெது வடை
    *வீட்டுப் பூசையறை = போலி to கோயில்!
    “போல்வது” = போலி
    —–
     
    தமிழ் மொழி ரொம்ப “ஜனநாயகமான” மொழி
    It allows to customize, flexible etc etc
    அதான் அதன் அழகும், இளமையும் இன்றும் இருக்கு!
     
    *பந்தல் = பந்தர்
    *வளம் = வளன்
    “இதெல்லாம் ஏதோ கவிதை சந்தத்துக்காக, பாட்டில் மாத்திக்கறது;
    இதெல்லாம் “இலக்கணப் பிரகாரம் தப்பு” –ன்னு சிலரு அவசர கோலத்தில் இப்பல்லாம் பேசுறாங்க; Totally flawed:(
     
    தமிழ் = ஓசை/ஒலிப்பு சார்ந்த செம்மொழி
    It allows in itself regional variation & new new coinages!
    தமிழ், மக்கள் இயலை ஒத்துச் செல்லும்;
    வேறு சில மொழிகளைப் போல், “அக்ஷர சுத்தம்” –ன்னு ரொம்ப புடிச்சி நெருக்காது (Rigidity);
     
    எங்கு நெகிழணுமோ, அங்கே நெகிழ இடங் குடுக்கும் மொழி = தமிழ் மொழி!
    *கண்ணே, “நலம்” அறிய ஆவல்
    *கண்ணே, “நலன்” அறிய ஆவல்
    -ன்னு இரட்டைப் பயன்பாட்டுக்கும் இடம் குடுக்கும்!
     
    உடனே, சிலரு, வாழைப்பழம் = வாளைப்பளம் –ன்னு சொல்ல வேண்டியது தானே?-ன்னு நக்கலாக் கேப்பாங்க:)
    அங்கே தான், தமிழ், நக்கலுக்கும், நல்ல பதிலைச் சொல்லுது!
    —–
     
    எழுத்து மாறி + பொருள் மாறாம இருந்தாத் தான் = போலி
    *நலம் = நலன் = போலி
    *பழம் = பலம் = போலி அல்ல! பொருள் மாறீரும்!
    *வாழை = வாளை; போலி அல்ல! ஒன்னு பழம், இன்னோன்னு மீனு = ரெண்டுமே வறுத்துத் திங்கலாம்:)
     
    “போலி முறையைத் தழுவிப் வரும் சொற்கள் மொழியை வளப்படுத்தும்” என்று சொல்லுவார் பெரும் தமிழறிஞர் மறைமலை அடிகள்!
     
    எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை,
    முதல்நிலை, இடைநிலை, ஈற்றுநிலை, போலி, பதம், புணர்ச்சி என்ற 12 பருவங்கள்;
    “போலி”யும் பருவத்தில் ஒன்னாத் தான், தமிழ் வச்சிருக்கு! = இல்லையேல் மொழி வளர்ச்சிக்கு இடமில்லை in a tight compartment!
     
    சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!
    “போலி” வாழ்க!;)

  • anonymous 8:42 am on March 21, 2013 Permalink | Reply

   இன்னோன்னு சொல்ல மறந்து போச்சு!
   தசை = சதை ; இப்படி “interchange” ஆவதும் போலி தான்!

   வீட்டுக்குள் நுழைவது = இல்லத்தின் வாய் = இல் வாய்!
   ஆனா இல்-வாய் ன்னா சொல்லுறோம்? வாயில் -ன்னு தானே சொல்லுறோம்!

   இப்படி “interchange” செய்வதால், pronunciation (ஒலிப்பு) எளிதாகிறது;
   சொல்லிப் பாருங்க:
   தோரண-இல்வாய் நல்லாருக்கா? தோரண-வாயில் நல்லாருக்கா?:)
   இதுவும் “போலியால்” வரும் நன்மை தான்!

   இதே போல் இல்-முன்=முன்றில்; தானை-முன்=முன்றானை etc etc
   —-

   **இப்பிடி எழுத்து மாறி, ஆனா (பெயரின்) பொருள் மாறாம இருக்கணும்!
   அது மட்டுமல்ல..
   **எழுத்தை மாத்தலாம் -ன்னு இடம் குடுத்ததால்…. வடமொழி/ கிரந்த எழுத்தையெல்லாம் போட்டு “நுழைக்கக்” கூடாது! தமிழ் மட்டுமே!

   (இடத்தைக் குடுத்தா, மடத்தைப் பிடுங்கல் கதை Not allowed:))

   அதே போல், ஒருத்தரோட பேரு, ஊரு எல்லாம், Proper Nouns! அதுல போலி கூடாது -ன்னும் சொல்வதும் தமிழே!
   சோழ மன்னன் = சோள ராஜா -ன்னு not allowed (though some history pundits write like that)

   ஈழம் = ஈளம்/ ஈழன் -ன்னு ஆகாது!
   “இலங்கு”வதால் = இலங்கை!
   —–

   என்றுமில்லா உணர்ச்சி வெளிப்பாடாக, பத்தினி வெகுண்டது போல், மாணவர்கள் ஒன்று திரளும் கண்ணீர் + போராட்டம்…
   இலங்கையை, “இலங்க” வைக்கட்டும்! இதயங்களில் இந்த விதையைத், துலங்க வைக்கட்டும்!
   முருகனருள் என்றே நம்பி நம்பி….

  • @npodiyan 8:36 pm on March 25, 2013 Permalink | Reply

   அட! அஞ்சுக்குப் பின்னால் இப்படி ஒரு இலக்கணம் இருக்கா?
   இஞ்சேருங்கோ பாடல் கூட இதற்கு பொருத்தம் இல்லையா? இஞ்சே = இங்கே

 • என். சொக்கன் 10:48 am on January 31, 2013 Permalink | Reply  

  உலகை மறந்த பூங்கோதை 

  • படம்: விஸ்வரூபம்
  • பாடல்: உன்னைக் காணாது
  • எழுதியவர்: கமலஹாசன்
  • இசை: சங்கர், எஹ்சான், லாய்
  • பாடியவர்கள்: கமலஹாசன், சங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=fJ0LEFx44bY

  பின்னிருந்து வந்து எனைப் பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு

  உலகுண்ட பெருவாயன் என் வாயோடு வாய் பதித்தான்,

  இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

  இந்தப் பூங்கோதை மறந்தாளடி!

  ’விஸ்வரூப’த்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை முதல்முறை கேட்கும்போதே, ‘ஆண்டாள் Dictate செய்ய, கமலஹாசன் எழுதியதுபோல் இருக்கிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டேன். அந்த அளவுக்கு இந்தப் பாடலின் வரிகளில் ஆழ்வார் நிழல். நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள் நேரடியாகவும், மற்ற பல ஆழ்வார்கள் நாயகி பாவத்திலும் எழுதிய காதல் வரிகளை அடியொற்றி மிக அழகான ஒரு நவீனக் காதல் பாடலை எழுதியுள்ளார் கமலஹாசன்.

  குறிப்பாக, ‘உலகுண்ட பெருவாயன்’ என்ற வர்ணனை பலரை ஈர்த்துள்ளது. திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரி அது:

  இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம், இலங்கு ஒலி நீர் பெரும்பௌவம் மண்டி உண்ட

  பெரு வயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம், பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ

  ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெருவாயர் இங்கே வந்து, என்

  பொருகயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

  தோழி,

  என் காதலனாகிய திருமால், பெரிய சத்தத்தை எழுப்பும் அலைகளைக் கொண்ட கடலுக்குள் மூழ்கி, அந்தத் தண்ணீர் மொத்தத்தையும் குடிக்கும் அளவுக்குப் பெரிய வயிறைக் கொண்டவன், உலகத்தையே கையில் ஏந்தி உண்ணும் அளவுக்குப் பெருவாயன், கருத்த மேகத்தைப்போன்றது அவனுடைய வண்ணம், பெரும் தவங்களைச் செய்த முனிவர்கள் சூழ, ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரத்துடன் அவன் இங்கே வந்தான்.

  ஆனால், அவன் இங்கேயே (என்னுடன்) நிரந்தரமாகத் தங்கவில்லை. ‘தண்ணீரால் சூழப்பட்ட திருவரங்கம்தான் என்னுடைய ஊர்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டான்.

  அவன் என்னை விட்டுப் பிரிந்ததால் சண்டையிடும் கயல் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களில் நீர் ததும்பியது, எனது உடல் மெலிந்தது, இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தன.

  சுமாரான விளக்கவுரைதான். ஆழ்வார் தமிழை அழகு குறையாமல் Remix செய்வது அத்தனை சுலபமில்லையே!

  ஆனால், இதை வைத்து உங்களுக்குக் காட்சி புரிந்திருக்கும். திருமாலின்மீது காதல் கொண்ட பெண், தன்னுடைய தோழியிடம் இப்படிச் சொல்கிறாள். திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான் என்று ஊகிக்கிறேன். ஆண் குரல்கள் பாடியிருப்பதுதான் ஒரே வித்தியாசம்.

  அதனால் என்ன? திருமங்கை ஆழ்வாரும் ஆண்தானே?

  ***

  என். சொக்கன் …

  31 01 2013

  061/365

   
  • Jayashree Govindarajan 11:07 am on January 31, 2013 Permalink | Reply

   “உலகமுண்ட பெருவாயா”- என்று முதலில் அழைத்தவர் நம்மாழ்வார். (ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி முதல் பாசுரம்)

   கமல் கவிதையில் எழுதிய “அதுஇதுஉது” (மன்மதன் அம்பு) கூட நம்மாழ்வாரிடம் எடுத்ததே.

  • amas32 (@amas32) 2:00 pm on February 1, 2013 Permalink | Reply

   தற்போது எனக்கு மிகவும் விருப்பமான வரிகளைக் கொண்ட திரைப்பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி 🙂

   ஆமாம், எனக்கும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது ஆழ்வார்கள் நினைவு தான் வரும். நாயகி பாவத்தில் எழுதப்பட்ட வரிகள். வைஷ்ணவ சம்பிரதாயப் படி திருமால் ஒருவனே ஆண் மற்ற அனைத்து ஜீவராசிகளும் பெண்கள் தான். அதனால் தான் காதல் ரசம் சொட்ட இருக்கும் பாடல் கூட பக்திப் பாடலாக உருமாறிவிடுகிறது!

   amas32

  • Mohanakrishnan 11:18 pm on February 1, 2013 Permalink | Reply

   சொன்னது நம்மாழ்வாரோ திருமங்கையாழ்வாரோ. ஆனால் திருமாலை உலகுண்ட பெருவாயனாக நேரில் பார்த்தது யசோதை தான் என்று நினைக்கிறேன். கண்ணனின் அந்த சின்ன வாயில் உலகம் கண்டவள் அவள்.

  • Mohanakrishnan 11:19 pm on February 1, 2013 Permalink | Reply

   எப்போதோ படித்த கவிதை ஒன்று

   ‘கண்ணன் வாயை திறக்கட்டும்
   உலகம் தெரியவில்லை என்றால்
   நீ யசோதை இல்லை’

 • என். சொக்கன் 1:51 pm on December 31, 2012 Permalink | Reply  

  தும்பு துலக்குதல் 

  • படம்: சத்தம் போடாதே
  • பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
  • எழுதியவர்: நா. முத்துக்குமார்
  • இசை: யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=GOc05aY_OWs

  நீ சிணுங்கும் மொழி கேட்டால், சங்கீதம் கற்றிடலாம்!

  தண்டவாளம் இல்லாத ரயிலை,

  தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்!

  வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்!

  ’என்கிட்ட வம்பு, தும்பு வெச்சுக்காதே’ என்று அடிக்கடி சொல்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்?

  ‘வம்பு’ என்றால் வீண் சண்டை என்று பொருள், அது நமக்குத் தெரியும். அதென்ன தும்பு? ’காசு, கீசு’, ‘காப்பி, கீப்பி’ என்று சும்மா இணைத்துச் சொல்வதுபோல் பொருளற்ற ஒரு சொல்லா அது?

  தமிழில் சும்மா ஓசை நயத்துக்காகச் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருளற்ற சொற்கள் ‘கிகர’ வரிசையில் அமைவதுதான் வழக்கம். குழந்தை, கிழந்தை, கல்யாணம், கில்யாணம், கம்ப்யூட்டர், கிம்ப்யூட்டர், பாட்டு, கீட்டு…

  அந்த வழக்கத்தின்படி, வம்புக்குத் துணையாகக் கிம்புதானே வரணும்? ஏன் தும்பு? அப்படியானால் ‘தும்பு’வுக்கு வேறு அர்த்தம் இருக்கிறதோ?

  என்னிடம் உள்ள தமிழ் அகராதியில் தும்புக்கு இரண்டு பொருள்கள் தந்துள்ளார்கள்: கயிறு / நார்.

  உதாரணமாக, ‘தும்பை விட்டு வாலைப் பிடி’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் அர்த்தம், மாட்டைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அதன் கழுத்தில் உள்ள கயிறை(தும்பு)தான் பிடிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு வாலைப் பிடித்தால் பலன் இருக்காது.

  வீட்டைச் சுத்தப்படுத்தும்போது, ‘ஒரு தூசு தும்பு இல்லாம க்ளீன் பண்ணிட்டேன்’ என்கிறோம். இங்கே ’தும்பு’வின் பொருள் நார், அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு சின்னஞ்சிறிய குப்பை.

  ஒரே பிரச்னை, கயிறு, நார் என்ற இந்த இரண்டு விளக்கங்களும் ’வம்பு தும்பு’வுக்குப் பொருந்தாது. மூன்றாவதாக இன்னோர் அர்த்தம் இருக்கிறதா? கொஞ்சம் துப்(ம்)பு துலக்க முயற்சி செய்தேன்.

  ’தும்பு’ என்று நேரடியாக இல்லாவிட்டாலும், ‘தும்பு பிடுங்குதல்’ என்று ஒரு பயன்பாடு இருக்கிறதாம். அதன் பொருள் ஒருவர்மீது குற்றம் சொல்லுதல், Accusing, போட்டுக்கொடுத்தல்.

  இந்தத் தும்பு அந்த வம்புவுடன் அழகாகப் பொருந்துகிறது. ‘அவன்கிட்ட வம்பு தும்பு வெச்சுக்காதே’ என்றால், அவனை வீண் சண்டைக்கு அழைக்காதே, அவனாக ஏதாவது தப்புச் செய்தாலும் இன்னொருவரிடம் சென்று போட்டுக்கொடுக்காதே’ என்று அர்த்தம் என ஊகிக்கிறேன்.

  சரிதானா? உங்களுடைய விளக்கங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

  ***

  என். சொக்கன் …

  31 12 2012

  030/365

   
  • Rie 2:40 pm on December 31, 2012 Permalink | Reply

   சீவக சிந்தாமணியில் இருக்குதாம் இந்த வார்த்தை. “தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன”. தும்பு அற இது சொல், அதாவது குழப்பாமல் தெளிவாகச் சொல்.

  • elavasam 11:40 am on January 1, 2013 Permalink | Reply

   ஐயா

   என்னிடம் உள்ள அகராதியில் தும்பு என்ற சொல்லுக்குப் பொருளாக இப்படி இருக்கிறது.

   தும்பு (p. 536) [ tumpu ] , s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.

   தூசு தும்பில்லாது எனச் சொல்லும் பொழுது 4. dust என்பது பொருத்தமாக இருக்கிறது. வம்பு தும்பு எனும் பொழுது கடைசி பொருளான குற்றம் என்பது சரியாக வருகிறது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel