Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 9:09 pm on November 13, 2013 Permalink | Reply  

  ஆடும் கிளி 

  • படம்: அமுதவல்லி
  • பாடல்: ஆடைகட்டி வந்த நிலவோ
  • எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்கள்: டி. ஆர். மகாலிங்கம், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

  கிளைதான் இருந்தும், கனியே சுமந்து

  தனியே கிடந்த கொடிதானே,

  கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம்தான் பெறக்

  காவினில் ஆடும் கிளிதானே!

  பட்டுக்கோட்டையார் கிளை, கனி, கொடி என்று எதையெல்லாம் வர்ணிக்கிறார் என்று யோசித்தபடி அடுத்த வரிக்கு வாருங்கள், அதென்ன ‘காவினில்’ ஆடும் கிளி?

  தமிழில் ‘கா’ என்ற சொல்லுக்குச் சோலை அல்லது தோட்டம் என்று பொருள், காக்கப்படும் (வேலி போட்ட) தோட்டம் என்று விவரிக்கிறவர்களும் உண்டு.

  இந்தச் சொல் நமக்கு அதிகப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், ‘காவிரி’ என்ற நதியின் பெயருக்கே ‘கா + விரி’, அதாவது, சோலைகளை விரித்துச் செல்லும் நீர்வளம் நிறைந்த ஆறு, அல்லது சோலைகளுக்குள் விரிந்து பரவும் ஆறு என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.

  அப்போ காவேரி?

  அதுவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கவேர முனிவரின் மகள் என்பதால் அவளுக்குக் ‘காவேரி’ என்று பெயர் வந்ததாம். ஜனகன் மகள் ஜானகி, கேகயன் மகள் கைகேயி என்பதுபோல!

  பெயர் / அதற்கான காரணம் எதுவானால் என்ன? ஆற்றில் தண்ணீர் வந்தால் சரி. நீரால் அமையும் உலகு!

  ***

  என். சொக்கன் …

  13 11 2013

  346/365

   
  • amas32 7:43 pm on November 15, 2013 Permalink | Reply

   பூங்கா என்பத்தும் பூஞ்சோலை தான். ஒரே எழுத்தில் எத்தனை அழகியப் பொருளைத் தரும் ஒரு சொல்லைத் தமிழ் தருகிறது! தமிழ் வாழ்க 🙂

   amas32

 • mokrish 11:30 am on June 18, 2013 Permalink | Reply  

  வேப்பமரம் புளியமரம்… 

  வசந்த் டிவியில் தினமும் மாலையில் வெவ்வேறு முருகன் கோவில்களின் படத்தொகுப்பை கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க  ஒளிபரப்புகிறார்கள். பலமுறை கேட்டதுதான். ஆனால் அன்று அந்த பட்டியலைக்  கூர்ந்து கவனித்தேன்.

  வல்லபூதம் வலாஷ்டிக பேய்கள்
  அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
  பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
  கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்
  பெண்களை தொடரும் பிரம்ம ராட்சதரும் ்,
  அடியனைக்  கண்டால் அலறி கலங்கிட

  ‘வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும்,உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்’ என்ற வேண்டுதல். http://muruganarul.blogspot.in/2012/10/8.html

  பேய்களில் பூதங்களில் இவ்வளவு variety யா? அதிலும் ‘கொள்ளிவாய் பேய்’ என்ற பிரயோகம் சுவாரஸ்யமாக இருந்தது. கொஞ்சம் கூகிளினால் கிடைத்த தகவல் ஆச்சரியம்.  Marshlands எனப்படும் வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும், ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் என்று நம்பினர். நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் ஒரு விளக்கம் .மெதேன் வாயுவுக்கு ‘கொள்ளிவாயு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதுதான் கொள்ளிவாய் ஆனதா? ஆங்கிலத்திலும் Swamp Gas பற்றி இதே போல் படித்திருக்கிறேன்.

  பேய்கள் பூதங்கள் என்றால் எனக்கு உடனே ஒரு பழைய திரைப்பாடல் நினைவுக்கு வரும். அரசிளங்குமரி படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா என்ற பாடல்.(இசை ஜி ராமநாதன், பாடியவர் டி எம் எஸ்) அதில் அவர் சொல்வது என்ன?   http://www.youtube.com/watch?v=7tlp04NBTM8

  வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு

  விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

  வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க – அந்த

  வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

  வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே -உந்தன்

  வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே – நீ

  அதிரடியான அறிவுரை. மகாகவி பாரதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொன்னதும் இதுதான்

  வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

  மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

  அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

  துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

  மகாநதி படத்தில் வாலியும் பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாதே என்று சொல்கிறார் http://www.youtube.com/watch?v=465RsI5PNOo ஆத்தங்கரையிலே  அரசமரத்தில, கோயில் குளத்துல, கோபுர உச்சியிலே பேய் இருக்குன்னு சொன்னாங்க அதை நம்பாதே என்கிறார் தொடர்ந்து எது பேய் எது பூதம் என்று definition சொல்கிறார்

  அச்சங்கள் என்னும் பூதம்

  உழைக்காம வம்பு பேசி அலைவானே அவன் பேய்

  பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே  அவன் பூதம்

  என்கிறார். பயம்தான் பேய் என்பது  பாரதி சொன்னதுதான்

  பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

  பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

  ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பேய்’களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

  இது எல்லா மதங்களிலும் இருக்கும் நம்பிக்கை. வேறு வேறு பெயர்கள். அவ்வளவுதான் ஆனால் கொஞ்சம் யோசித்தால் தீய எண்ணங்கள், பேராசை என்று மனிதனை தவறான பாதையில் செலுத்தும் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அதை சாத்தான் / பேய் என்று பல பெயர்களில் அழைத்தார்கள் என்று தோன்றுகிறது. அவற்றிலிருந்து விடுபட இறைவனை நோக்கி வேண்டுதல் வழக்கமாகியிருக்கும். கந்தர் சஷ்டி கவசம் சொல்வதும் அதுதான் கண்ணதாசன்

  ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

  ஆலய மணியோசை நெஞ்சில் கூடிவிட்டதடா

  என்று சொல்வதும் அதையேதான்.

  மோகனகிருஷ்ணன்

  199/365

   
  • Sakthivel 11:48 am on June 18, 2013 Permalink | Reply

   நீங்கள் சொல்லும் சதுப்பு நில கொள்ளிவாய் பேய்களுக்கான விளக்கம். ,பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் முதல் அத்தியாயத்தில் பூங்குழலி சொல்வது போல் கல்கி கூட சொல்லுவார். 🙂

  • rajnirams 11:14 pm on June 18, 2013 Permalink | Reply

   பதிவு அருமை. தமிழ்ல பேய்ப்பாட்டுன்னா “யார் நீ”ல வர்ற நானே வருவேன்,”ஆயிரம் ஜென்மங்கள்”படத்தில் வரும் வெண்மேகமே,”காற்றினிலே வரும் கீதம்”படத்தில் வரும் கண்டேன் எங்கும், சந்திரமுகியில் வரும் ரா ரா ,துணிவே துணை படத்தில் வரும் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் போன்றவை தான்.நன்றி.

  • amas32 (@amas32) 12:47 pm on June 19, 2013 Permalink | Reply

   In Pranic healing, which is one type of alternate medicine these evil qualities are considered as entities. Clairvoyants have seen them as dark cloud or dark reddish clouds in the aura of a person who is consumed with anger or jealousy. So yes, nothing but bad elements leading us to pitfalls.

   ரொம்ப வித்தியாசமான பதிவு மோகன், talking about an esoteric topic! கந்த சஷ்டி கவசம் படிக்கும் பொழுது வரிசையாக இறைவனிடம் பட்டியலிட்டு ஒவ்வொன்றிலிருந்தும் என்னைக் காப்பாற்று என்று ஏன் வேண்ட வேண்டும், blanket request ஆக எல்லாத் துன்பத்தில் இருந்தும் என்னைக் காப்பாற்று என்று சொல்லிவிட்டுப் போகலாமே என்று எண்ணுவேன். ஆனால் அதிலும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றையும் பட்டியலிடும் பொழுது அதைப் பற்றி மனம் சிந்தித்து இறைவனிடம் அதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் பொழுது நாமே நம்மை அதிலிருந்து விலக்கிக் கொள்ள subconscious ஆக நடவடிக்கை எடுக்கிறோம்.

   பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு பாடல்!

   எப்பவும் போல நல்ல பதிவு 🙂

   amas32

  • pvramaswamy 12:37 pm on November 18, 2013 Permalink | Reply

   அட்டகாசமான பதிவு, ஆரவாரமில்லாமல் அழகாக வந்திருக்கு. Super.

 • என். சொக்கன் 1:34 pm on April 17, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : முன்னோர்கள் 

  வைகைப்புயலார் வடிவேலுவின் மேனேஜ்மெண்ட் தத்துவங்களில் ஒன்று “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”. 

   

  நமக்கு முந்தையக் காலத்தில் வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிந்துக் கொள்ள, அவர்களைப் பற்றிய பதிவுகள் அவசியம். 

   

  அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கிய தங்கள் முன்னோர்களை,அடுத்தடுத்த தலைமுறையினர் பதிவு செய்வது கலை,அறிவியல்,விளையாட்டுக்களில் பரவலாக இருப்பதுதான்.

   

  நாம் இப்பொழுது பார்க்கப்போவது பதிவுகள் என்பதை விட குறிப்புகள் எனச் சொல்லாம் 🙂 

   

  தமிழ்சினிமா பாடல்வரிகளில் , ஒரு கவிஞர்,தான் எழுதியப் பாடல்களில் வேறு கவிஞரின் பெயரை உபயோகப்படுத்தியப் பாடல்களைப் பார்க்கலாம்.

   

  ரொம்ப பின்னோக்கிப் போனால், வள்ளுவர்,கம்பன்,பாரதி – இவர்களது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன். 

   

  “கம்பன் ஏமாந்தான் “

  ”கம்பனை வம்புக்கிழுத்தேன்”

  “கம்பன் காணாத கற்பனை”

  “பாரதியை படிச்சுப்புட்டா பெண்களுக்கும் வீரம் வரும்”

   

  என இவர்கள் பெயர் உள்ள பாடல்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். அதனால் இவர்களை விட்டுவிடலாம்.

   

  Immediate முன்னோர்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

   

  இதில் சட்டென நினைவுக்கு வரும் பாடல்கள் இவை. 

   

  “கண்ணதாசனே ,எந்தன் காதல் வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடு”      எழுதியவர்- காமகோடியான் –

   படம் – மரிக்கொழுந்து

   

  “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ”

  எழுதியவர் – வாலி

  படம்  – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

   

  சொன்னான் அந்தக் கண்ணதாசன் பாட்டுல 

  ( யார் எழுதியதெனத் தெரியவில்லை.) 

  படம் – “வரவு எட்டண்ணா செலவு எட்டண்ணா

   

  எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில் தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!! –  

  எழுதியவர்-வாலி – 

  படம் “சந்திரமுகி”

   

  பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
  நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு – 
  எழுதியவர்- வாலி 
  படம் – ”தூங்காதே தம்பி தூங்காதே தம்பி”

   

  “வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலயே”  – 

  எழுதியவர் – சிம்பு 

  படம் -வல்லவன்

  ”வாலி, வைரமுத்து… உன்போல யாரு கவிதை யோசிச்சா?”

  எழுதியவர் : கார்க்கி

  படம்: ரெண்டாவது படம்

  மேற்கண்ட வரிகளை எழுதிய கார்க்கியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார், இந்தப் பாடல் வரியில் இடம்பெற்ற வாலி, வைரமுத்து இருவருமே, தங்களது சொந்தப் பெயரையே தங்களுடைய பாடல்களில் இடம்பெறச் செய்துள்ளார்கள். இப்படி:

  • ”எதிர் நீச்சலடி, அட ஜாலியா வாலி சொன்னபடி” (படம்: எதிர்நீச்சல், எழுதியவர்: வாலி)
  • “பாட்டு கட்டும் நம்ம வைரமுத்தைக் கேட்டு, பாரதிராசா சொன்ன கிராமத்தைக் காட்டு” (படம்: தமிழ்ச்செல்வன், எழுதியவர்: வைரமுத்து)

  காளீஸ்

  (http://www.twitter.com/eestweets)

   
  • rajinirams 11:05 pm on April 17, 2013 Permalink | Reply

   சூப்பர் சார். வரவு எட்டணா பட பாடல் வாலி எழுதியது,அஞ்சாதே படத்தில் (மக்கள் கவிஞர்:-))?)கபிலன் எழுதிய பாடல் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்தி குடி பாடலுக்கு -ஆரம்பத்தில் இந்த பாடலுக்கு லேசான எதிர்ப்பு தோன்றி மறைந்தது. ஒரு படத்தின் நாயகனே பாடலை பாடுவதற்கு முன் எழுதியவர் பெயரை சொன்ன பெருமை வாலிக்கு மட்டுமே-நேற்று இன்று நாளை படத்தில் எம்ஜியார் பாடல்-வாலி என்று சொல்லிவிட்டு “தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று”என்று பாடுவார்.திமுகவின் நகராட்சி ஊழல்கள் பற்றிஎல்லாம் அமைந்த அந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் முழங்கி அதிமுகவின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. நன்றி.

   • GiRa ஜிரா 2:22 pm on April 19, 2013 Permalink | Reply

    அதே போல இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்திலும் பாடல்-வாலி, இசை-இளையராஜான்னு வரும். ஒரே நாள் உனை நான் பாட்டுக்கு முன்னாடி

   • GiRa ஜிரா 2:46 pm on April 19, 2013 Permalink | Reply

    மிக நல்ல பதிவு. உண்மையிலேயே வரலாறு முக்கியம். இந்த மாதிரி பெயர்களைப் பயன்படுத்தும் போது இலக்கியங்களின் காலத்தையும் கணிக்க பின்னாளில் உதவும்.

  • amas32 6:16 pm on April 18, 2013 Permalink | Reply

   இது ஒரு ஜாலி போச்ட்! ரொம்ப நன்றாக உள்ளது 🙂 முந்தய தலை முறையினறை நல்ல முறையில் போற்றி குறிப்பிடுவது, அட்லீச்ட் குறிப்பிடுவத்உ வரலாறுக்கு முக்கியம் தான்!

   amas32

 • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
  Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

  காசு மேலே, காசு வந்து… 

  ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

  ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

  அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

  பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

  எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
  பணத்தை எங்கே தேடுவேன்
  உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
  அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
  கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
  கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
  கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
  திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
  திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
  தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
  தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

  நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

  இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

  அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

  இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

  கையில வாங்கினேன்
  பையில போடல
  காசு போன எடம் தெரியல்லே
  என் காதலி பாப்பா காரணம் கேப்பா
  ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
  ஏழைக்கு காலம் சரியில்லே

  இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

  இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

  பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
  பூமேடை வாசல் பொங்கும் தேனாக
  ………………………………………………
  செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
  வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
  இன்பத்தின் மனதில் குளிப்பேன்
  என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

  இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

  காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
  வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
  அட சுக்கிரன் உச்சத்தில்
  லக்குதான் மச்சத்தில்
  வந்தது கைக்காசுதான்

  காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

  டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
  ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
  யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
  கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
  ……………………………………….
  கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
  கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

  என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

  பணம் என்னடா பணம் பணம்
  குணம் தானடா நிரந்தரம்

  பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

  பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
  எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
  கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
  காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
  டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

  அன்புடன்,
  ஜிரா

  114/365

   
  • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

   wow.. super.. thanks geeraa.. :)))))))

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

   ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி நண்பரே 🙂

  • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

   காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

   • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

    ஆமா ஆமா.

    ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

  • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

   போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

    அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

 • G.Ra ஜிரா 11:43 am on January 26, 2013 Permalink | Reply  

  கம்யூனிசம் கொடுத்த பக்தி 

  நான்கு வருடங்கள் மட்டும் காய்த்து விட்டு மாயமாய்ப் போன ஒரு கவிமரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அன்று அந்த மரம் காய்த்த காய்கள் இன்றைக்கும் சுவைக்கும் நித்யகனிகள்.

  பட்டுக்கோட்டை கம்யூசினச் சிந்தனையுள்ளவர். வயலில் இறங்கி உழுத பாட்டாளி. இவர் பள்ளியில் படித்தது குறைவு. ஆனால் இவர் தமிழ் படித்த இடம் மிகப் பெரிய இடம். ஆம். பாண்டிச்சேரி கனகசுப்புரத்தினம் என்னும் பாவேந்தரிடம் தமிழ் படித்திருக்கிறார்.

  தமிழ்த் திரையிசையில் பெரும்பாலான பக்திப் பாடல்கள் கவியரசரால் எழுதப்பட்டவை. அடுத்து வாலி நிறைய எழுதியிருக்கிறார். இருவருமே பக்திமான்கள். பக்தி என்ற உணர்வில் ஊறியவர்கள். அந்த உணர்வில் நூற்றுக்கணக்கான பாடல்களையும் நூல்களையும் எழுதியுள்ளார்கள்.

  ஆனால் பட்டுக்கோட்டையார்? கடவுளே இல்லை என்று நம்புகின்றவர். அவரிடம் போய் சாமிப்பாட்டு யாராவது கேட்பார்களா?

  கேட்டும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டதுக்கு ஏற்ற சிறப்பையும் செய்திருக்கிறார் கவிஞர்.

  காளமேகத்தை உறியில் கட்டி அடியில் நெருப்பு வைத்து பாடச் சொன்னார்களாம். அந்த அளவுக்குச் சிரமம் வைக்காமல் பட்டுக்கோட்டை தனது பாட்டுக் கோட்டையைக் கட்டியிருக்கிறார்.

  உலகமே மேடையாய் நின்றிருக்க அதிலேறி உடுக்கை தட்டி ஆடுகின்ற ஈசனைப் பாட ஒரு பாட்டு!

  உமையை ஒரு பாகமாய்க் கொண்டு மதுரையில் ஆட்சி செய்த சொக்கனைப் பாட ஒரு பாட்டு!

  பட்டுக்கோட்டையாரிடமிருந்து வரும் வரிகளைப் பாருங்கள்!

  கங்கை அணிந்தவா
  கண்டோர் தொழும் விலாசா
  சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா
  நின் தாள் துணை நீ தா

  தில்லை அம்பல நடராஜா
  செழுமை நாதனே பரமேசா
  அல்லல் தீர்த்தாண்டவா வா வா
  அமிழ்தானவா வா

  எங்கும் இன்பம் விளங்கவே
  அருள் உமாபதே
  எளிமை அகல வரம் தா வா வா
  வளம் பொங்க வா

  பலவித நாடும் கலையேடும்
  பணிவுடன் உனையே துதிபாடும்
  கலையலங்கார பாண்டிய ராணி நேசா
  மலை வாசா! மங்கா மதியானவா!

  இந்தப் பாடலை எழுதியவன் கடவுளை நம்பாதவன் என்று யாரும் சொல்ல முடியுமா?

  ஒரு நல்ல கவிஞன் எந்தச் சூழல் கொடுத்து எழுதச் சொன்னாலும் எழுதுவான். பாவேந்தரும் முருகன் மேல் நூல் எழுதியிருக்கிறாரே. அவருடைய சீடர் எழுதமாட்டாரா!

  இந்தப் பாட்டு மட்டுமல்ல. பதிபக்தி என்ற படத்தில் பாட்டாளிக் கடவுளின் மேல் ஒரு பாட்டும் எழுதியிருக்கிறார்.

  அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
  நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)

  ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
  ஏழை எங்கள் நிலைமையைத்தான்
  எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

  சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
  கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி
  குறைகள் தீரக் கொடுமைகள் மாற
  கருணைக்கண்ணால் பாருமம்மா!
  கும்பிடுபோடும் ஏழை எங்கள்
  குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)

  இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது
  எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
  பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
  பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
  துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
  சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
  சூதுக்காரர் தொட்டிலிலே
  காதும் கண்ணும் கெட்டு-நல்ல
  நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை
  நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி

  கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,
  சடச்சி,பெரியாட்சி
  காட்சி கொடுக்கும் மீனாட்சி!
  தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
  ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று
  பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
  பசியும் பிணியும் பந்தயம் போடுது!
  கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
  தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
  தேவைக்கேற்ற வகையில் உன்னை
  போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
  தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்
  திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

  அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி
  உதிரக்காளி
  நடனக்காளி சுடலைக்காளீ!
  குறைகள் தீரக் கொடுமைகள் மாற
  கருணைக் கண்ணால் பாருமம்மா!
  கும்பிடுபோடும் ஏழை மக்கள்
  குடும்பம் வாழ வேணுமம்மா!
  நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)

  ஏழைகளின் தெய்வத்தைப் பாடும் போது ஒரு ஏழையாகவே இருந்து அவர்களின் துன்பங்களையெல்லாம் அடுக்கியே பாடுகிறார்.

  இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – தில்லையம்பல நடராஜா
  எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  பாடியவர் – டி.எம். சௌந்தரராஜன்
  படம் – சௌபாக்கியவதி
  இசை – பெண்ட்யால நாகேஸ்வரராவ்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4

  பாடல் – அம்பிகையே முத்து மாரியம்மா
  எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.ராமமூர்த்தி
  படம் – பதிபக்தி
  பாடலின் சுட்டி – http://www.raaga.com/channels/tamil/album/T0001760.html

  அன்புடன்,
  ஜிரா

   
  • amas32 8:09 pm on January 27, 2013 Permalink | Reply

   //சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா// இதை எழுதியது நாத்திகரான பட்டுக்கோட்டையார்! கமல்ஹாசன் என்ற நாத்திகர் எழுதியது //உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்// இரு கலைஞர்களுமே இறைவனை அனுபவித்து தான் எழுதியிருபார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது அதற்கு ஈடாக வேறு எதுவோ நான் அறியேன் பராபரமே! 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel