Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 9:23 pm on November 10, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள் 

    தாமரை இலை-நீர் நீதானா?
    தனியொரு அன்றில் நீதானா?|
    புயல் தரும் தென்றல் நீதானா?
    புதையல் நீதானா?
     
    பாடல்: கருகரு விழிகளால்
    படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
    பாடலாசிரியர்: தாமரை
    பாடியவர்: கார்த்திக்
     
    தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

    தனியொரு அன்றில் என்றால்?

    இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

    அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்  (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

    கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
    “அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
    ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
    பிரியாதே..விட்டுப்பிரியாதே”
    என்று எழுதியிருக்கிறார்.
    சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
    தமிழ்

    நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.

    பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.

    பார்க்க:

    thamizhg.wordpress.com

    isaipaa.wordpress.com

     
    • rajinirams 10:14 am on November 11, 2013 Permalink | Reply

      சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.

    • amas32 7:18 pm on November 11, 2013 Permalink | Reply

      “அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂

      சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

      நன்றி

      amas32

  • mokrish 11:27 am on March 24, 2013 Permalink | Reply
    Tags: நாணம்   

    ஜாடை நாடகம் 

    ஒரு பக்கம் பார்த்து, ஒரு கண்ணை சாய்த்து, உதட்டையும்  நகத்தையும்  கடித்து, மெதுவாக சிரித்து கால் பெருவிரலால் கோலமிட்டு என்று இலக்கியத்திலும் கதையிலும் கவிதையிலும் திரைப்படங்களிலும் பதிவாக்கப்பட்ட ஒரு பிம்பம் – பெண்களின் Exclusive உணர்வு-நாணம்! பெண்களுக்கு வகுக்கப்பட்ட நால் வகை பண்புகளில் ஒன்று . பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா என்று கவிஞர்கள் வியந்த ஒன்று.

    திரைப்பாடல்களில் நிறைய காதல் பாடல்கள் உண்டென்பதால் நாணம் / வெட்கம் பற்றியும் அவள் கன்னம் சிவந்தது பற்றியும் சொல்லும் வரிகள் ஏராளம். ஆண் எப்போதும் பெண்ணை இந்த வட்டத்தை விட்டு வரச்சொல்வதும் பெண் இந்த ‘சங்கிலியை’ உடைக்கமுடியாமல் மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல என்று  தவிப்பதும் ஐயோ நாணம் அத்துப்போக புலம்புவதும் என்றும் பல பாடல்கள்.

    முதலில் ஒரு definition. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் நாணமோ இன்னும் நாணமோ என்ற கண்ணதாசன் பாடல்.

    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்தப் பார்வை கூறுவதென்ன
    நாணமோ நாணமோ

    இந்த ஜாடை நாடகமும் பார்வை சொல்லுவதும் என்ன என்று ஆண் கேட்கும் கேள்வி. பெண் என்ன பதில் சொல்லுவாள்? அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்

    ஆடவர் கண்களில் காணாதது
    அதுகாலங்கள் மாறியும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது அது இது

    தொடர்ந்து எதெல்லாம் நாணம் என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். கண்ணதாசன் விளைந்து நிற்கும் வயலை பார்த்து பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா ‘பருவம் வந்த பெண்ணைப்போல நாணம் என்ன சொல்லம்மா என்று சொன்னவர். நாணம் பற்றி இவர் சொல்வதென்ன?

    ராஜா ராஜஸ்ரீ ராணி வந்தாள் என்ற ஊட்டி வரி உறவு படத்தின் பாடலில்

    மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது

    மெல்ல மெல்ல நாணத்தின் தேரும் வந்தது

    இடையொரு வேதனை நடையொரு வேதனை கொள்ள

    இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல

    என்று பெண்ணின் eternal conflict பற்றி அழகாக சொல்கிறார். வாலியும் ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ என்ற பாடலில் இதே conflict பற்றி சொல்லும் வரிகள்

    மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
    நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை

    சிவந்த மண் படத்தில் ஒரு கன்னம் சிவந்த பெண்ணைப்பற்றி கண்ணதாசன் சொல்வதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=_rXdHS5a5iY

    ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்

    அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ

    நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ

    வள்ளுவன் நாணென ஒன்றோ அறியலம் என்று சொன்ன கருத்தை பாலும் பழமும் படத்தின் காதல் சிறகை காற்றினில் விரித்து என்ற பாடலில் (வழக்கம் போல) எளிமையாக சொல்கிறார்

    முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா
    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
    பரம்பரை நாணம் தோன்றுமா

    இதையே ஆயிரத்தில் ஒருவன் பாடலில் சொல்கிறார்

    தன்னை நாடும் காதலன் முன்னே
    திரு நாளைத் தேடிடும் பெண்மை
    நாணுமோ நாணுமோ

    சமீபத்தில் வந்த சிவப்பதிகாரம் படத்தில் சித்திரையில் என்ன வரும் என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=UrvBQz-hPRc

    கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க

    கூனி  முதுகாக  செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க

    என்று பெண் பாட ஆண் சொல்வதாக யுகபாரதியின்  ஒரு அருமையான கற்பனை.

    மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற

    நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற…

    அட இது Sustained Release மருந்து போல் நாவிடுக்கில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி …படுத்தி – ஆஹா

    இது பெண்களின் Intrinsic குணம் என்றே தோன்றுகிறது. வைரமுத்து  ஏன் அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு என்று சொன்னார் ?

    மோகனகிருஷ்ணன்

    113/365

     
    • rajnirams 11:30 am on March 24, 2013 Permalink | Reply

      நாணமோ பாடல் கண்ணதாசன் எழுதியது.

      • rajnirams 11:38 am on March 24, 2013 Permalink | Reply

        அருமை.வித்தியாசமான பார்வை.பாராட்டுக்கள்.சி.ஐ.டி.சங்கரில்,கண்ணதாசனின் “நாண த்தாலே கன்னம் மின்ன”பாடலும் அருமையாக இருக்கும்.பார்த்தால் பசி தீரும் -கண்ணதாசனின் கொடி அசைந்ததும் பாட்டிலும் பெண்மை என்பதால் நாணம் வந்ததாவும் ஒரு உதாரணம். நன்றி:-))

    • amas32 1:10 pm on March 24, 2013 Permalink | Reply

      நாணம் இன்றைய யுவதிகளிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று ஒரு Stand up comedy நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் வந்திருந்தவர்களில் 99விழுக்காடுகள் இளைஞர்கள். ஆண் பெண் ஜோடியாக தான் வந்திருந்தனர். சிலர் தனித் தனியாக வந்திருந்தனர். “நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை” இதைத் தான் அங்கிருந்த பெண்களிடம் கண்டேன். காதல் சூழல் இல்லை, நீங்கள் சொல்ல வரும் கருத்தை பரிசோதிக்க. ஆனால் தயக்கமில்லாமல் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். அதற்குப் பதிலாக ஆண்கள் பெண்களிடம் பேசத் தயங்குவதை கவனிக்கிறேன் 🙂 வாழ்க்கை ஒரு வட்டம் தான் :-)) வைரமுத்து அதைத் தான் சொல்லியிருக்கிறார் 🙂

      நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

      amas32

    • அழகேசன் 5:57 pm on March 24, 2013 Permalink | Reply

      சார்.. வர வர ரொம்ப அறுக்கறீங்க

  • mokrish 10:15 am on February 28, 2013 Permalink | Reply  

    இரு வரிக் கவிதை 

    பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

    கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

    • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

    • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

    • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

    சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

    உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
    அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

    கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

    அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

    உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

    நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

    தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

    ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

    ராவணன் படத்தில் ஒரு பாடல்.

    உசுரே போகுதே உசுரே போகுதே

    உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

    மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

    செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

    வெளுத்தன செந்நிற இதழ்கள்

    வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

    அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

    சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
    பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
    ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

    உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

    கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

    மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

    எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

    ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

    நீ அல்லவோ சிலுப்புகிறாய்

    அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

    ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

    இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

    மோகனகிருஷ்ணன்

    089/365

     
    • என். சொக்கன் 10:23 am on February 28, 2013 Permalink | Reply

      //சிவந்தன விழிகள், வெளுத்தன இதழ்கள்//

      இதே வரி ‘1000 நிலவே வா’ பாட்டிலும் வரும் (புலமைப்பித்தன்?), அக்னி நட்சத்திரம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலில் வாலியே இதே வரிகளை மீண்டும் எழுதியிருப்பார்,

      அனைத்துக்கும் Source ஒன்றே : கந்த புராணம் : ’வெளுத்தன சேயிதழ், விழி சிவந்தன’ 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel