Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 6:04 pm on August 30, 2013 Permalink | Reply  

    பொருத்தம் 

    எல்லாம் நன்றாகப் பொருந்தி வந்தால் மட்டுமே எதுவும் பெரும் வெற்றி பெறும்.

    எது பொருந்த வேண்டும்? அப்படிப் பொருந்தினால் எது வெற்றி பெறும்?

    காதலைத்தான் சொல்கிறேன். காதல் வெற்றி பெற மனப் பொருத்தம் வேண்டும். இல்லையென்றால் தோல்விதான். அதனால்தான் இலக்கியம் கூட பொருந்தாக் காமம் என்று ஒரு வகையையே வைத்திருக்கிறது. பெயரிலேயே தெள்ளத்தெளிவாக அது பொருந்தாது என்பதையும் முடிவு செய்திருக்கிறது இலக்கியம்.

    அப்படி உள்ளம் சிறப்பாகப் பொருந்திய காதலர்கள் பாடினால் எப்படி பாடுவார்கள்? கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது.

    என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்
    காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே
    படம் – ரகசிய போலீஸ் 115
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    காதலர் இருவருக்கும் மனப் பொருத்தம் மிகப் பொருத்தமாக இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியதுதான்.

    அதெல்லாம் சரி. கல்யாணத்தில் பத்து பொருத்தங்கள் பார்ப்பார்களாமே. அவை எவையெவை?

    வைதிக முறைப்படி நடக்கும் திருமணங்களில் பார்க்கப்படும் பொருத்தங்கள் பத்து மட்டுமல்ல. மொத்தம் பதினாறு. அந்தப் பதினாறில் பத்து பொருந்தினாலே திருமணம் செய்யலாம் என்பது கருத்து. அந்த பதினாறு பொருத்தங்கள் எவையெவை எனப் பார்க்கலாமா?

    1. கிரக பொருத்தம்
    2. நட்சத்திர பொருத்தம்
    3. கண பொருத்தம் (மணமக்களின் குணப் பொருத்தத்தை இது குறிக்கும்)
    4. மகேந்திர பொருத்தம் (குழந்தைப் பேறு)
    5. ஸ்திரி தீர்க்க பொருத்தம் (தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெருமை)
    6. யோனி பொருத்தம் (இன்பமான இல்லறவாழ்க்கைக்காக)
    7. இராசி பொருத்தம்
    8. இராசியதிபதி (மணமக்களின் மனவொற்றுமைக்கு)
    9. வசிய பொருத்தம் (ஒருவர் மீது ஒருவருக்கு உண்டாகும் ஈர்ப்பு)
    10. இரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பலம்)
    11. வேதை பொருத்தம் (வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைக் காட்டும்)
    12. விருஷ பொருத்தம் (வம்சா விருத்தி)
    13. ஆயுள் பொருத்தம்
    14. புத்திர பொருத்தம்
    15. நாடி பொருத்தம்
    16. கிரக பாவ பொருத்தம் (செய்த செய்யப் போகும் பாவங்கள் பற்றியது)

    மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொருவருக்குமான உடற் பொருத்தமும் தேவை. அது இருந்தால்தான் இன்பம் பெருகி இல்லறம் நிலைக்கும். அதையும் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்.

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
    மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
    பொருத்தம் உடலிலும் வேண்டும்
    புரிந்தவன் துணையாக வேண்டும்
    படம் – மன்மதலீலை
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்

    இப்படியெல்லாம் பொருந்தி வாழும் கணவன் மனைவியரைக் கண்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சி வரும். சிலருக்கு மட்டும் பொறாமை வரும். அதற்கும் உண்டு ஒரு கண்ணதாசன் பாட்டு.

    எனக்கும் உனக்குந்தான் பொருத்தம்
    அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
    படம் – முகராசி
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

    காதலரோடுதான் பொருத்தம் பார்க்க வேண்டுமா? கடவுளோடும் பொருத்தம் பார்க்கிறார் வள்ளலார்.

    எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
    இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ

    முருகப் பெருமானின் திருவருள் முழுமையாகப் பெற்றவர் வள்ளலார். வெற்றுக் கண்ணாடியில் மயிலேறி கந்தன் வரக்கண்ட மாமணி அவர்.

    ஆனால் பாடலில் முருகனை மெய்ப்பொருள் வடிவமாகவே எழுதியிருக்கிறார். அந்த மெய்ப்பொருளோடு தனக்கு உண்டான பொருத்தத்தை வியந்து பாராட்டுகிறார்.

    ஆண்டவனோடு பொருந்திய உள்ளத்தில் துன்பமில்லை. துயரமில்லை. வலிகள் இல்லை. வேதனை இல்லை. எல்லாம் இன்ப மயம். பேரின்பமயம்.

    வள்ளலார் அருளிய திருவருட்பாவின் இந்த அற்புத வரிகள் நம்ம வீட்டு தெய்வம் திரைப்படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இந்தப் பாடல் இடம் பெற்றது. என்ன… ஒரு திருமண மேடையில் விலைமகளொருத்தி ஆடிப்பாடுவதாக அமைந்த காட்சியில் பாடல் இடம் பெற்றது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    1. என்ன பொருத்தம் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/KJobbwySqRI
    2. எனக்கும் உனக்குந்தான் (டி.எம்.எஸ், பி.சுசீலா) – http://youtu.be/b_6C2Z3-8XQ
    3. மனைவி அமைவதெல்லாம் (கே.ஜே.ஏசுதாஸ்) – http://youtu.be/f4VxmTuaztQ
    4. எனக்கும் உனக்கும் இசைந்த (பி.சுசீலா) – http://youtu.be/m0urUMBv_ZA

    பின்குறிப்பு – என்ன பொருத்தம் பாடலிலும் எனக்கும் உனக்குந்தான் பொருத்தம் பாடலிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் நடித்தது என்ன அதிசயப் பொருத்தமோ!

    அன்புடன்,
    ஜிரா

    272/365

     
    • uma chelvan 9:57 pm on August 30, 2013 Permalink | Reply

      Very interesting post! ஆனால், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா இல்ல ஓடி போய் கல்யாணம் தான் கட்டிக்கலமா என்ற கால கட்டத்லில் பொருத்தம் எங்கே பார்கிறது???? எது எப்படி இருப்பினும், காதலின் போது நாம் ஒருவர் மீது வைக்கும் “பேரன்பு என்றும் பெரும் துன்பம் தான்”!!!

    • uma chelvan 11:42 pm on August 30, 2013 Permalink | Reply

      நாம் ஒன்றா வேறா? ஒன்றெனில் சரியானதைச்செய்யும் சக்தி வரட்டும், வேறெனில் வீணாய் கனவுகளில் காலம் கரையாதிருக்கட்டும்…. அன்பு சத்தியம் என்பதால் என் அவசரத்துக்கு உடனே வராது, ஆனாலும் காத்திருக்க திடம் கிடைக்கும் சன்னதியில்.
      நானென்றால் அது அவளும் நானும், ஆதலால் காத்திருத்தலும் அவளால், காத்திருத்தலும் அவளே !! A wonderful post by Dr. Rudhran….I think it is most appropriate for this post !!!

    • rajinirams 4:32 am on August 31, 2013 Permalink | Reply

      பதினாறு பொருத்தங்களையும் பட்டியலிட்டு.அதற்கு”பொருத்தமான”பாடல்களையும் கொன்டு அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்-பொருத்தம் இல்லாட்டி வருந்த தான் வேணும் என்ற வாலியின் வரிகளும்.பொருத்தமென்றால் புதுப்பொருத்தம் பொருந்தி விட்ட ஜோடி-நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி என்ற கவியரசரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது.நன்றி.

    • amas32 6:10 pm on September 2, 2013 Permalink | Reply

      சூப்பர் போஸ்ட் ஜிரா 🙂 ரொம்ப ரசித்துப் படித்தேன் 🙂 சமையல் குறிப்பில் தான் நீங்கள் வல்லவர் என்று நினைத்தேன், ஜோசியப் பொருத்தங்கள் பார்ப்பதிலும் நீங்கள் காழியூர் நாராயணன் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் 🙂

      //பொருத்தம் உடலிலும் வேண்டும்
      புரிந்தவன் துணையாக வேண்டும்// அடுத்த வரிகள் “கணவனின் துணையோடு தானே, காமனை வென்றாக வேண்டும்” என்று வரும் இல்லையா? கண்ணதாசன் கண்ணதாசன் தான்!

      amas32

    • Rajarajeswari jaghamani 5:50 pm on February 25, 2014 Permalink | Reply

      அருமையாக ரசிக்கவைத்த பாடல்களும் , பகிர்வுகளும் ..பாராட்டுக்கள்..!

  • என். சொக்கன் 8:36 pm on August 10, 2013 Permalink | Reply  

    மலரோன் 

    • படம்: ஜீன்ஸ்
    • பாடல்: அன்பே அன்பே
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: ஹரிஹரன்
    • Link: http://www.youtube.com/watch?v=2dr35kcmDe4

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்,

    அடடா, பிரம்மன் கஞ்சனடி!

    சற்றே நிமிர்ந்தேன், தலைசுற்றிப்போனேன்,

    ஆஹா, அவனே வள்ளலடி!

    சங்க காலம் தொடங்கி தமிழ்ப் பெண்களுக்கு Hourglass figureதான் லட்சிய உருவம். அதைக் குறிப்பிடும்வகையில் நூலிடை, கொடியிடை, துடி(உடுக்கு)யிடை என்றெல்லாம் வர்ணனைகள் அமையும். இதிலிருந்து கொஞ்சம் விலகி ‘இஞ்சி இடுப்பழகி’ என்றுகூட வாலி எழுதினார், அதற்கு இன்னும் விதவிதமாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்தப் பாடலில் வரும் ஆண் தன் காதலியின் மெல்லிடையைப் பார்த்துவிட்டு, அவளைப் படைத்தவன்மீதே சந்தேகப்படுகிறான், ‘அந்த பிரம்மன் பெரிய கஞ்சனா இருப்பானோ?’

    வைரமுத்துமட்டுமல்ல, வள்ளலாரும் பிரம்மனைக் கஞ்சன் என்கிறார்.

    என்னது? வள்ளலாரா? அருட்பா எழுதியவர் எப்போது அய்ஷ்வர்யா ராயைப் பார்த்தார்?

    இது ரொமான்ஸ் மேட்டர் அல்ல. ஆன்மிகம். திருவொற்றியூரைப்பற்றிப் பாடும்போது வள்ளலார், ‘கஞ்சன், மால் புகழும் ஒற்றி’ என்பார்.

    ‘மால்’ என்றால் திருமால், தெரிகிறது. அது யார் ‘கஞ்சன்’?

    ’கஞ்சம்’ என்றால் தாமரைப் பூ என்று அர்த்தம். அதன்மீது வாசம் செய்கிறவன் என்பதால், பிரம்மனுக்குக் கஞ்சன் என்று ஒரு பெயரும் உண்டு.

    ஆக, இடையில் சிக்கனம் காட்டி வேறிடத்தில் வள்ளலாக வாரி வழங்கினாலும், பிரம்மன் கஞ்சன்தான்!

    ***

    என். சொக்கன் …

    10 08 2013

    252/365

     
    • rajinirams 10:49 pm on August 10, 2013 Permalink | Reply

      கஞ்சம் என்றால் தாமரை என்று அறிய வைத்த நல்ல பதிவு. இதே போல புதியவன் படத்திலும் வரும் வைரமுத்துவின் வரிகள்-நானோ கண் பார்த்தேன்-இது என்ன கூத்து அதிசயமோ இளநீர் காய்க்கும் கொடி இதுவோ-பருவம் படைத்தான் அது பஞ்சம் இல்லை.அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை.நீயே அழகின் எல்லை. நன்றி.

    • GiRa ஜிரா 11:36 pm on August 10, 2013 Permalink | Reply

      கஞ்ச மலர்ச் செங்கயையும்-னு முருகனைப் பத்தி அருணகிரி எழுதியிருக்காரு. முருகனுடைய கை நமக்கெல்லாம் தஞ்சக் கையா இல்ல கஞ்சக் கையான்னு சர்ச்சை வந்திரும் போல.

    • amas32 5:49 pm on August 14, 2013 Permalink | Reply

      கஞ்சதளாய தாக்ஷி காமாக்ஷி கமலா மனோஹரி என்ற பாடலிலும் கஞ்ச என்பது தாமரைப் பூ என்ற பொருளில் தானே வருகிறது? http://www.youtube.com/watch?v=1t8Q4lkjwN8

      ஆனால் ஜீன்ஸ் பாடலில் வரும் கஞ்சன் என்ற சொல் கஞ்சத்தனத்தைத் தான் குறிப்பிடுகிறது இல்லையா?

      கஞ்சம் என்றால் தாமரை என்று சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி 🙂

      amas32

  • என். சொக்கன் 11:03 am on February 18, 2013 Permalink | Reply  

    நொடியில் பாயும் செந்நாரைகள் 

    • படம்: பிரம்மா
    • பாடல்: இவள் ஒரு இளங்குருவி
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=CztV3oi4aGc

    நான் பாடும் பாட்டு, தலையாட்டிக் கேட்டு,

    தினந்தோறும் பூப் பூக்கும் தோட்டங்களே!

    நீரோடைமீது நொடிப்போதில் பாய்ந்து

    இரை தேடும் செந்நாரைக் கூட்டங்களே!

    ’நொடிப் போது’ என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. ‘நொடிப் பொழுது’ (அதாவது ஒரு விநாடி நேரம்) என்பதன் சுருங்கிய / மருவிய வடிவம் இது.

    அதேசமயம், ‘போது’ என்பது ஒதுக்கவேண்டிய வார்த்தை அல்ல, இதே வடிவில், இதே பொருளில் அது பல இலக்கியங்களிலும் வருகிறது. உதாரணமாக, திருவருட்பாவில் வள்ளலார் ’போதுபோக்கினையே மனனே’ என்று எழுதுகிறார். இன்றைக்கு நாம் சர்வசாதாரணமாகச் சொல்லும் ‘பொழுதுபோக்கு’ என்ற வார்த்தையேதான்.

    ‘போது’ என்ற தனிச்சொல் இப்போது பரவலாகப் பேசப்படாவிட்டாலும், அது ஒரு கூட்டுச்சொல்லாகப் புழக்கத்தில் இருக்கிறது. நம்மையும் அறியாமல் நாம் அதைத் தினந்தோறும் பயன்படுத்துகிறோம்.

    இப்போது, அப்போது, எப்போது என்ற சொற்களின் முழு வடிவம், இந்தப் பொழுது, அந்தப் பொழுது, எந்தப் பொழுது. இதில் ‘பொழுது’ என்பது சுருங்கிப் ‘போது’ என மாறி, சுட்டும் ‘இந்த’, ‘அந்த’, ‘எந்த’ என்ற சொற்களும் இ, அ, எ எனச் சுருங்கி, இப்படி வேறுவிதமாக மாறிவிட்டது.

    அதேபோல், ‘பாடியபோது’, ‘சந்தித்தபோது’, ‘பிறந்தபோது’ போன்ற சொற்களும்கூட, ‘பாடிய பொழுது’, ‘சந்தித்த பொழுது’, ‘பிறந்த பொழுது’ என்றுதான் நீளும். இப்படி நாமே உணராத அளவு ‘பொழுது’க்குப் பதில் ‘போது’ என்ற வார்த்தை நம்மை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது.

    பொழுது, போதுதவிர, போழ்து என்றும் ஒரு வார்த்தை உண்டு. பெரும்பாலும் கவிதைகளில்மட்டும் பயன்படுத்துவார்கள். ’செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதுபோல.

    அது நிற்க. தமிழில் ‘போது’க்கு வேறு அர்த்தம் உண்டு: முதிர்ந்த மொட்டு. ‘காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும் இந்நோய்’ என்று காதல்பற்றி ஓர் அருமையான திருக்குறள் இருக்கிறது.

    ***

    என். சொக்கன் …

    18 02 2013

    079/365

     
    • amas32 10:37 pm on February 18, 2013 Permalink | Reply

      வினாடியையும் பொழுதையும் சுருக்கி நொடிப்போதில் என்று சொல்லும் பொழுதே எவ்வளவு குறைவு அந்த நேரம் என்பது நம் மனத்தில் படுகிறது. என்ன ஒரு அழகான மொழி நம் தமிழ் மொழி!

      amas32

  • என். சொக்கன் 11:58 am on January 28, 2013 Permalink | Reply  

    இனிப்பு! 

    • படம்: ப்ரியா
    • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
    • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

    என் ஜோடிக் கிளியே,

    கன்னல் தமிழே,

    தேனில் ஆடும் திராட்சை நீயே!

    பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

    ‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

    நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

    அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

    அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

    திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

    அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

    இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

    வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

    ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

    ***

    என். சொக்கன் …

    28 01 2013

    058/365

    (பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )

     
    • GiRa ஜிரா 12:52 pm on January 28, 2013 Permalink | Reply

      அட்டகாசம்.

      கம்பரும் கன்னல் பத்திப் பேசுறாரு.

      கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் என்று மன்மதன் கரும்பு வில் வெச்சிருக்கறதப் பத்திப் பேசுறாரு. இலக்கியத்துல கன்னல் தேடுனா எக்கச்சக்கமா அம்புடும்.

      இனிப்பைக் கொடுக்கும் தாவரங்குறதால அதுக்கு அவ்வளவு புகழ் போல.

    • amas32 (@amas32) 7:51 pm on January 28, 2013 Permalink | Reply

      The recent post by @elavasam http://elavasam.posterous.com/174635736 also refers to the same topic. Nice coincidence 🙂

      //கன்னல் தமிழே,// என்பது பி.சுசீலா அவர்கள் பாடிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

      amas32

    • elavasam 8:12 pm on January 28, 2013 Permalink | Reply

      இதெல்லாம் ஓவர். ரெண்டு நாள் முன்னாடி உம்மாலதான் நானும் கன்னல் பத்தி எழுதினேன். அதைப் படிக்காம இங்க வந்து போட்டி போஸ்ட் போடும் உம்மை என்ன செய்யலாம்?

      http://elavasam.posterous.com/174635736

    • elavasam 8:21 pm on January 28, 2013 Permalink | Reply

      @amas32 – உண்மையின் பக்கத்தில் நின்று போராடுவதற்கு நன்றி!! :))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel