ஏன் நின்றாய்? 

  • படம்: ஜீன்ஸ்
  • பாடல்: எனக்கே எனக்கா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது

உன் கூந்தலில் நின்றாடத்தான்,

பூமாலையே, பூச்சூட வா!

பூவின் காம்பை ஒற்றைக் காலாக வர்ணித்து, அதனை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் முனிவர்களோடு ஒப்பிட்டு, ‘பூக்களின் இந்தத் தவம் எதற்காக? அவளுடைய கூந்தலில் சென்று சேர்வதற்காகதானா?’ என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் பாடல். ‘பூக்களின் தவத்தை முடித்து வை, அவற்றைப் பறித்து உன் கூந்தலில் சூடிக்கொள்’ எனக் காதலியிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கிறது.

அருமையான இந்தக் கற்பனை, முத்தொள்ளாயிர வெண்பா ஒன்றில் இருக்கிறது. அதன் சாரத்தை இன்றைய காதல் பாட்டுக்கு ஏற்ப அழகாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம்

நல்ல மணம் கொண்ட, நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மத்தியில் நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, எதற்காக?

எனக்கு விஷயம் புரிந்துவிட்டது, கூரான வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்தவன், விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்டவன், அந்தப் பாண்டியன் வழுதியின் மார்பைச் சென்று சேர நீ விரும்புகிறாய், அதற்காக இப்படி நாள்முழுவதும் தவம் இருக்கிறாய், சரிதானே?

***

என். சொக்கன் …

22 01 2013

052/365