Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:56 pm on November 17, 2013 Permalink | Reply  

  தலைப்பு செய்திகள் 

  தமிழ் சினிமாவில் இருக்கும் கதைப்பஞ்சம் நமக்கு தெரியும். இருக்கும் சில கதைகளுக்கும் தலைப்பு தேடுவதே பெரிய வேலையாகிவிட்டது. பெரிய ஹீரோ – ஸ்டார் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகனின் பெயரையே தலைப்பாக வைக்கலாம். பலர் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரே தலைப்புக்கு நடக்கும்  வாய்க்கா தகராறு கொடுமை!

  1950களில் சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். இப்போது அந்த இரண்டாவது தலைப்பை tag லைன் என்று சொல்கிறார்கள். மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் என்ற (ஒரே) பெருமை மன்சூர் அலிகானின் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்துக்கே. ஒரேழுத்து தலைப்பும் உண்டு – சமீபத்திய கோ,  தயாரிப்பில் இருக்கும்  ஷங்கரின் ஐ.

  அன்றும் இன்றும் என்றும் நாவல்களுக்கும் / திரைப்படங்களுக்ககும் பாடல் வரிகளையே தலைப்பாக வைப்பது ஒரு வழக்கம்.  ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் ‘உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலின் வரிகளை தன் நாவல்களின் தலைப்பாக வைத்தார். தாமரை மணாளன் ஆயிரம் வாசல் இதயம் என்று ஒரு கதை எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி நிறைய படங்களின்  தலைப்பு ஒரு பாடலின் முதல் வரியே

  ஒரு அதிசயமான டைட்டில் தொடர் சங்கிலி கண்ணில் பட்டது. ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தின் தலைப்பாக்கி  அந்த படத்தின் பாடல் இன்னொரு படத்தின் தலைப்பாகி என்று ஒரு சங்கிலியில் நான்கு அருமையான பாடல்கள்.

  லக்ஷ்மி கல்யாணம் என்றொரு படம்.அதில் ராமனின் பல பெயர்களை வர்ணிக்கும் பாடல்   http://www.youtube.com/watch?v=DR2GFE0B5M0

  ராமன் எத்தனை ராமனடி

  அவன் நல்லவர் வணங்கும் தெய்வமடி

  ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch?v=cU9_w77CM1k

  அம்மாடி … பொண்ணுக்கு தங்க மனசு

  பொங்குது இந்த மனசு

  பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில்  வரும் பாடல் http://www.youtube.com/watch?v=tCpQUgKU4YI

  தேன் சிந்துதே வானம்

  உனை எனை தாலாட்டுதே

  தேன் சிந்துதே வானம் என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch?v=lc1v6uBKtKs

  உன்னிடம் மயங்குகிறேன்

  உள்ளத்தால் நெருங்குகிறேன்

  உன்னிடம் மயங்குகிறேன் என்றும் ஒரு படம் வந்தது. ஆனால் இந்த டைட்டில் சங்கிலி தொடரவில்லை என்று நினைக்கிறேன்.

  தலைப்புக்கும் கதைக்கும் பெரிய தொடர்பே இருப்பதில்லை. அபூர்வமாக சில நல்ல தலைப்புகள் கண்ணில் படும். என் டாப் பட்டியலில் இருக்கும் தலைப்புகள் முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வாலி, அழியாத கோலங்கள்

  மோகனகிருஷ்ணன்

  350/365

   
  • rajinirams 11:20 pm on November 17, 2013 Permalink | Reply

   நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ,சில மாதங்களுக்கு முன் இதை நினைத்தேன்-இதே போல இன்னொன்று- இருவர் உள்ளாம்=இதயவீணை தூங்கும்போது, இதயவீனை-இன்று போல என்றும் வாழக. இன்று போல் என்றும் வாழ்க-அன்புக்கு நான் அடிமை.அன்புக்கு அடிமையாகி நின்று விட்டது:-)) நன்றி.

  • rajinirams 3:06 am on November 18, 2013 Permalink | Reply

   இரு மலர்கள்-அன்னமிட்ட கைகளுக்கு,அன்னமிட்ட கை-16 வயதினிலே,16 வயதினிலே-செந்தூரப்பூவே,செந்தூரப்பூவேயுடன் நின்றது, தெய்வத்தாய்-வண்ணக்கிளி,வண்ணக்கிளி-மாட்டுக்கார வேலா,மாட்டுக்கார வேலன்-பட்டிக்காடா பட்டணமா.பட்டிக்காடா பட்டணமா-நல்வாழ்த்து நான் சொல்வேன்,நல் -வாழ்த்துக்களுடன் இனிதே முடிந்தது. அதே போல் நீ,தீ போன்ற ஓரெழுத்து படங்களும் வெளியாகின. மின்னலே பாடத்தில் வாலி எழுதிய அழகிய தீயே வரியை தன் படத்தில் தலைப்பாக வைத்ததற்கு அழகிய தீயே இசை வெளியீட்டு விழாவில் அவரை அழைத்து கெளரவப்படுத்தினார் அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.பல படங்களுக்கு தலைப்பை பாடல் மூலம் தந்திருந்தாலும் தன்னை கெளரவப்படுத்திய பிரகாஷ்ராஜை மனமார பாராட்டினார் வாலி.நல்ல பதிவு.பாராட்டுக்கள்.

  • amas32 2:31 pm on November 18, 2013 Permalink | Reply

   Very quaint post 🙂 I have also wondered about this like Rjnirams 🙂 At least movies with song line titles is plenty common among Tamil film productions. அதுவே படத்தைப் பாதி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீ தானே என் பொன் வசந்தம் என்று பெயர் சூட்டியது கௌதம் வாசுதேவ் மேனனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது 🙂

   amas32

 • mokrish 8:28 pm on August 11, 2013 Permalink | Reply  

  ராஜா என்பார் மந்திரி என்பார் 

  பிரபல செஸ் வீரர் காரி காஸ்பரொவ் எழுதிய How Life Imitates Chess படித்துக் கொண்டிருக்கிறேன். சீராக யோசித்தல், முடிவெடுக்கும் திறமை, வியூகம் அமைத்தல், என்று சதுரங்கம் தரும் பாடங்கள் பலவற்றை வணிக நிறுவன நிர்வாகத்தில் செயல்படுத்த முடியும் என்கிறார். செஸ் விளையாட்டு ஞாபக சக்தியையும் உள்ளுணர்வையும் மேம்படுத்தும் என்கிறார்.

  இந்த சதுரங்க விளையாட்டு பற்றி படித்தவுடன் கெளரவம் படத்தில் இரண்டு சிவாஜிகளும் ஆடிய life size செஸ் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பிரபல பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் டி எம் எஸ்) இருவருக்கும் இடையில் நடக்கும் வழக்கை சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிடுவார்

   https://www.youtube.com/watch?v=EjEa_j9kRbE

  மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே

  மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே

  ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே

  இந்த Board Games எனப்படும் சிறுபாடு விளையாட்டுகள் நமக்கு பல முக்கியமான வாழ்வியல் பாடங்கள் கற்றுத்தருகின்றன. சதுரங்க விளையாட்டில் ராஜா காப்பாற்றப்படவேண்டும். ஆனால் இதில் ராஜாவுக்கு பெரிய அதிகாரமோ சக்தியோ கிடையாது. கிட்டத்தட்ட ஒரு பார்வையாளன்தான். ராஜாவின் பக்கம் இருக்கும் ராணியும், மந்திரிகளும் ரத கஜ துரக பதாதிகளும் தான் காக்கவேண்டும்.

  வாழ்க்கையை ஆடு புலி ஆட்டம் என்று விவரித்து சபதம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்

  ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு

  போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு

  இங்கு ஆடுகள் மோதட்டும் புலியோடு

  வாலி இதில் வேறு கருத்து  சொல்கிறார் வெள்ளி விழா  படத்தில் கை நிறைய சோழி என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர்கள் பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி) ஒரு பக்கம் சதுரங்கம் இன்னொரு பக்கம் தாயக்கட்டம் என்று காட்சி.  இரண்டு விளையாட்டையும் குறிக்கும் வார்த்தைகளை வைத்து வாலி ஆடும் ஆட்டம்!  https://www.youtube.com/watch?v=AGM0KqoK3lY

   விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ

  பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ!

  எனக்கென்னவோ இந்த விளையாட்டுகளை வடிவமைத்தவர்கள் இதன் மூலம் பாடம் சொல்ல நினைத்தார்கள் என்றே தோன்றுகிறது. நாம் செய்யும் நல்ல காரியங்களை ஏணியாகவும் தீய செயல்களை பாம்பாகவும் கற்பனை செய்த பரம பதம், புலிகளை எதிர்கொள்ளும் ஆடுகளை கொண்ட ஆடு புலி ஆட்டம், சரியான முறையில் காய் நகர்த்தினால் ஊர் போய்ச்சேரலாம் என்று சொல்லித்தரும் தாயக்கட்டம், என்று எல்லா விளையாட்டுகளும் நமக்கு ஏதோ பாடம் சொல்லுவதுபோல் இருக்கிறது.

  மோகனகிருஷ்ணன்

  253/365

   
  • rajinirams 2:45 pm on August 12, 2013 Permalink | Reply

   வித்தியாசமான விளையாட்டு பதிவு-அதற்கேற்ற அருமையான பாடல்கள். இரு கோடுகள் படத்தில் மியூசிகல் சேர் விளையாட்டில் இரு நாயகிகளை வைத்து வாலியின் வார்த்தை விளையாட்டு-அன்று போல இன்று கூட போட்டி போட இருவருண்டு,கண்ணகியா மாதவியா வெல்வது-என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது.இதய மலரில் கண்ணதாசன்-என்றும் இந்த இதயம் ஒருவருக்கென்று கூறட்டும் விரைவினில் சென்று-என செண்டு மல்லி பூ போல் அழகிய பந்தை சொல்வதும் அருமையாக இருக்கும்.நன்றி.

  • amas32 5:41 pm on August 14, 2013 Permalink | Reply

   வாழ்க்கையை ஒரு விளையாட்டோடு ஒப்பிடுவது இந்த பாடல் வரிகளில் இருந்து தெரிகிறது. வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் நாமும் சதுரங்க ஆட்டத்தில் விளையாடுவது போல சரியான மூவ்களை செய்ய வேண்டியுள்ளது. வாழ்க்கையின் வெற்றியே அதில் தான் அடங்கியுள்ளது. பேக்கு மாதிரி இருந்தால் இளிச்சவாயன் என்ற பட்டத்தைக் கொடுத்து ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். அதனால் புலியிடம் இருந்துக் காத்துக் கொள்ளவும், ஏணியில் ஏறவும் கற்கவேண்டும்!

   amas32

 • mokrish 9:27 am on June 12, 2013 Permalink | Reply  

  உன் குத்தமா என் குத்தமா 

  கதவு அல்லது நிலைப்படி இடித்தது, முள் குத்தியது என்று நாம் அடிக்கடி சொல்லும் / கேட்கும் இந்த வார்த்தைகளில் ஒரு உளவியல் ஆராய்ச்சி செய்யலாம். ‘இது என் தவறல்ல, வேறு யாரோ அல்லது வேறு எதுவோ தான் காரணம்’ என்று தீர்க்கமாக நம்பும் மனம் இப்படித்தான் யோசிக்கும். சாதாரணமாகவே இப்படியென்றால் காதலில் எப்படியிருக்கும்?

  தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

  பைதல் உழப்ப தெவன்

  என்ற திருக்குறளில் காதலி கண்களைத்தான் குற்றம் சொல்கிறாள். கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது. காதல் வரப்போவதை உணராமல் அன்று பார்த்துவிட்டு, இன்று அழுதால் எப்படி (புதிய உரை : சுஜாதா) என்று கடிந்துகொள்கிறாள்.

  இன்னொரு பாடல் முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் காதலி தன் கண்ணே தனக்கு எதிராக செயல்பட்டால் என்ன செய்வது என்று புலம்புகிறாள்.

  கனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,

  நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்

  என்கண் இவையானால் எவ்வாறோ மாமாறன்

  தண்கண் அருள்பெறுமா தான்.

  http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=02240508&week=feb2405

  திரைப்பாடல்களில் கண்ணதாசன் இதை பலமுறை எழுதியிருக்கிறார். வாழ்க்கை படகு என்ற படத்தில் வரும் கண்களே கண்களே என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் P B ஸ்ரீநிவாஸ்) http://www.youtube.com/watch?v=RggMJODLIac

  கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்

  பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

  நெஞ்சமே நெஞ்சமே நினைப்பதை இனிமேல் நிறுத்தி விடு

  மஞ்சமே மஞ்சமே மயக்கத்தை இனிமேல் மறந்து விடு

  என்று இன்னும் விரிவாக்கி கண்களையும் நெஞ்சையும் குற்றம் சொல்கிறார்.

  யாருக்கும் வெட்கமில்லை படத்தில் வரும் பாடலில் (இசை ஜி கே வெங்கடேஷ் பாடியவர் எஸ் ஜானகி) கவிஞரின் Charge Sheet இன்னும் பெரிது

  என் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது

  என் கனியிதழ்கள் செய்த பாவம் சிரித்தது

  என் இதயம் அன்று செய்த பாவம் நினைத்தது

  அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

  கண்கள், இதழ்கள், இதயம், இறைவன் எல்லாம் சேர்ந்து செய்த பாவம் என்ற பாவனை.

  வைரமுத்து ரிதம் படத்தில் ‘யாரைக் கேட்டது இதயம் உன்னை தொடர்ந்து போக’ என்று காதலியின் சிணுங்கலையும் பூவெல்லாம் உன் வாசம் படத்தில்

  நெஞ்சே நெஞ்சே செல்வாயோ அவனோடு

  சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு’

  என்ற செல்லக் கோபத்தையும் சொல்கிறார்.

  ஆனந்த ஜோதி படத்தில் கண்ணதாசன் ‘நினைக்க தெரிந்த மனமே’ என்ற எவர் கிரீன் பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) முழுவதும் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்.

  http://www.youtube.com/watch?v=L20DiHoF518

  நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா

  பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…

  மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா

  மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா

  எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா

  படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா

  இதில் மனம், உயிர், கண், அன்பு, கைகள் இதழ்கள் என்று சாடிவிட்டு அதோடு திருப்தியடையாமல்

  கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா

  குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா

  பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா

  இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…

  என்று ஒரு அந்தாதி டைப் chargesheet தருகிறார்.

  மேற்கத்திய நாடுகளில் இந்த தினம் அந்த தினம் என்று நிறைய உண்டு. அதில் Blame Some One Else day என்ற ஜாலியான தினம் பற்றிய விவரங்கள் படித்தேன்

  http://www.ehow.com/how_2330857_celebrate-blame-someone-else-day.html. இந்தியாவில் நமக்கு தனியாக ஒரு நாள் தேவையில்லை – எல்லா நாளும் செய்வதுதானே!

  மோகனகிருஷ்ணன்

  193/365

   
  • Kannabiran Ravi Shankar (KRS) 10:42 am on June 12, 2013 Permalink | Reply

   இல்ல சார், பஸ் லேட்டு
   -இப்படித் தான் பெரும்பாலும் சொல்லுவோம்
   -ஆனா, குறித்த நேரத்தில் போனா, பஸ் சீக்கிரம் -ன்னு சொல்லுவோமா?:))
   I try to be as punctual as possible = I, I, I

   நம் பழியை, இன்னொன்றின் மேல் போடுவதை @mokrish காட்டியுள்ளார்
   ஆனா, அடுத்தவர் பழியை, நம் மீது போட்டுக் கொள்வது??
   ——–

   யாருப்பா அந்த “லூசு”? -ன்னு கேக்காதீக:) = ஆழ்வார்களும் நாயன்மார்களும் தான்!

   மனத்தில் ஓர் தூய்மை இல்லை
   வாயில் ஓர் இன்சொல் இல்லை
   எனக்கு இனி கதி என்ன சொல்லாய்
   அரங்க மா நகருளானே!

   குறிக்கோள் இலாது கெட்டேன் -ம்பாரு அப்பர் பெருமான்; மற்ற எவரையும் விட உண்மை தெறிக்கும் பாட்டில்!
   அவரா குறிக்கோள் இல்லாது கெட்டாரு?:)

  • anonymous 10:54 am on June 12, 2013 Permalink | Reply

   சினிமாப் பாட்டுக்கு வருவோம்…
   கண்ணும், மனசும் தான் ரொம்ப திட்டு வாங்கும்:) அப்பறமா கடவுள் திட்டு வாங்குவாரு:)

   உன் “கண்” உன்னை ஏமாற்றினால்
   என் மேல் கோவம் உண்டாவதேன்?:)

   பொன்னான “மனசே”, பூவான மனசே
   வைக்காத பொண்ணு மேல ஆசை -ன்னு TR சித்தர் பாடுவாரு:)
   ——-

   உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றமில்லை
   காலம் செய்த கோலமடி; கடவுள் செய்த குற்றமடி

   ஒரு மனதை உறங்க வைத்தான்; ஒரு மனதைத் தவிக்க விட்டான்
   இருவர் மீதும் குற்றமில்லை; இறைவன் செய்த குற்றமடி!!
   ——-

   அவ கூட போயி, மொதல்ல பேசுனது நீ தானே?-ன்னு, வித்தியாசமா “உதட்டைத்” திட்டும் பாட்டு கூட இருக்கு; என்னான்னு சொல்லுங்க பாப்போம்!

   • anonymous 10:57 am on June 12, 2013 Permalink | Reply

    //பிரிக்கத் தெரிந்த இறைவா, உனக்கு இணைக்கத் தெரியாதா?
    இணையத் தெரிந்த தலைவா, உனக்கு என்னைப் புரியாதா???//

    முருகா!
    இதுக்கு மேல பேச்சு வரலை, இன்னிக்கு!

  • Arun Rajendran 2:50 am on June 13, 2013 Permalink | Reply

   சார், அருமையானப் பதிவு…”accountability” நெலமைக்கு ஏத்த மாதிரி திரியரத அழகா சுட்டி இருக்கீங்க…இதே மாதிரி திட்டு வாங்குற வரிசைல விதியும் காலமும் தவறாம இடம் பிடிக்கும்…குற்றமனப்பான்மைல இருந்துத் தப்பிக்க இப்படியெல்லாம் பழி சுமத்தி மனச்சாந்தி அடைய வேண்டியதுதான்… 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel