Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 6:36 pm on November 23, 2013 Permalink | Reply  

  எது நடந்ததோ 

  நண்பர் புது வருட டைரி கொடுத்தார். முதல் பக்கத்தில் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசன மல்டி கலர் படம் போட்டு அதன் கீழே கீதாசாரம் என்று தலைப்பிட்டு ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்கும் சில வரிகள். இதுதான் கீதையின் சாரமா? இல்லை இதை கீதையின் சாரமாக ஏற்க முடியவில்லை என்கிறார் சோ. எனக்கு இது சிவகாசியில் flex banner எழுதும் ஒரு காலண்டர் கவிஞரின் கைவண்ணம் போல் இருக்கிறது.

  வேதத்தின் பொருளை விளக்கவே பகவத் கீதை சொல்லப்பட்டது என்று படித்திருக்கிறேன் களத்தில் தேரை நிறுத்திய பார்த்தன் போர் செய்ய திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு சோர்ந்து நடுங்கினான். காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. கண்ணன் கீதை உரைத்தான்.

  கர்ணன் படத்தில் இதே காட்சி. அர்ஜுனன் தன் ஆயதங்களை கீழே போட்டு கலங்கும்போது திரையுலகின் நிரந்தர கிருஷ்ண பரமாத்மாவான என் டி ராமாராவ் சொல்லும் அறம் தழைக்கவே கர்ம வீரன் செயல்படுகிறான் என்ற உபதேசம். கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேள்வி பதில் போல் அமைந்த காட்சி

  http://www.youtube.com/watch?v=3vN8DFxTMzE

  மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்

  மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்

  மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ

  விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ..

  என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்

  கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்

  மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே

  சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

  புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே

  கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான் கண்ணனே கொலை செய்கின்றான்

  காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

  மூன்று மணி நேர படத்தில் கீதைக்கு மூன்று நிமிட பாடல்தான். அதில் சொல்லவேண்டியதை சொல்லி கண்ணதாசன் காட்டும் வித்தை அருமை.

  பல வருடங்கள் கழித்து கண்ணதாசன் எழுதிய இன்னொரு கவிதை. வரிகள் நினைவில்லை. ஆனால் கதை இதுதான் அதில் அபிமன்யுவை இழந்த அர்ஜுனன் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறான். அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.

  மோகனகிருஷ்ணன்

   
  • amas32 1:18 pm on November 24, 2013 Permalink | Reply

   //அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.// :-))

   அதனால் தான் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று ஆதி சங்கரரும் பாடுகிறார். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று cycle of birth and death லேயே உழன்று கொண்டிருக்கிறோம். உய்வதில்லை.

   இன்று நீங்கள் கொடுத்திருப்பது எத்தனை அற்புத வரிகள் மோகனகிரிஷ்ணன்! 18 அத்தியாயங்களில் பகவான் கண்ணன் சொன்னதை சில வரிகளுள் அடக்கிவிடுகிறாரே கண்ணனின் தாசன்! மறுமுறை சொல்கிறேன் என்ன தவம் செய்ததோ தமிழ் மண் அவரை பெற்றதற்கு!

   amas32

  • GiRa ஜிரா 11:16 am on November 25, 2013 Permalink | Reply

   உபதேசம் அர்ஜுனனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் கர்ணனுக்குத் தேவைப்படவில்லை.

   அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்ன சொன்னாரோ அதன் படி கர்ணன் கடமையைச் செய்தான். எந்தப் பக்கம் இருந்தானோ அந்தப் பக்கத்துக்காகவே போரிட்டான். பாசம் தடுத்தது. ஆனாலும் தொடர்ந்து நன்றி மறவாது போரிட்டான். உயிரையும் கொடுத்தான்.

   நீங்கள் சொல்வதிலிருந்தும் என்னுடைய எண்ணவோட்டத்திலிருந்தும் அர்ஜுனனுக்கு உபதேசித்தது விழலுக்கு இறைத்த நீர்தான் போல.

   • kamala chandramani 12:55 pm on November 25, 2013 Permalink | Reply

    எத்தனை உபதேசங்களைப் பெற்றாலும் மரணம் மனிதனை அழத்தான் வைக்கிறது! அன்பைப் பெறுவதற்கும், அன்பு செலுத்தவும் ஆதாரமாக உள்ள ஸ்தூல சரீரம் இல்லாமல் போனதற்குதான் அழுகை.
    கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கைத் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்த யோகி. அதனால்தான் மேலே கொடுத்துள்ள பாடல் பிறந்தது.
    அருமையான பதிவு.’ ‘எது நடந்ததோ” -இந்த வரிகள் உண்மையில் கீதாசாரம் அல்ல என்று நானும் கேள்விப்பட்டேன்.

   • uma chelvan 7:26 pm on November 25, 2013 Permalink | Reply

    Very Well Said !!!

  • Deva 8:18 am on November 29, 2013 Permalink | Reply

   Nice. Need to listen the songs again to know kannadasan.

 • G.Ra ஜிரா 11:17 pm on October 30, 2013 Permalink | Reply  

  ஆசை நரைப்பதில்லை 

  காதலிக்க நேரமில்லை
  காதலிப்பார் யாருமில்லை
  வாலிபத்தில் காதலிக்க
  ஜாதகத்தில் வழியுமில்லை

  டிவியில் காதலிக்க நேரமில்லை படத்துக்காக கண்ணதாசன் வரிகளை சீர்காழி கோவிந்தரன் பாடிக்கொண்டிருந்தார்.

  வாலிபத்தில் காதலிக்க முடியாமல் போய் விட்டதே என்று வேதனைப்படும் முதியவரின் பாத்திரம் பாடும் பாடல் அது.

  காதல் என்றால் வாலிபத்தில் மட்டும் வருமா? வந்தாலும் வாலிபத்தோடு போய்விடுமா?

  இல்லை இல்லை என்று அடித்துச் சொல்கிறது கவியரசரின் இன்னொரு பாடல்.

  ஐம்பதிலும் ஆசை வரும்
  ஆசையுடன் பாசம் வரும்
  இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
  நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

  இது உண்மைதான் போலும். வயது ஆனாலும் கணவனும் மனைவியுமாக வாழும் வாழ்க்கையின் அனுபவங்கள் அந்தக் காதலை கூட்டத்தான் செய்யும். அதையும் அந்தப் பாடலில் அழகாக சொல்லியிருக்கிறார் கவியரசர்.

  வீடு வரும்போது ஓடி வரும் மாது
  நினைவில் இன்னும் நிற்கின்றாள்
  ஆறு சுவை செய்தாள் அருகிருந்து தந்தாள்
  அன்புமிக்க தாயாகின்றாள்

  என்ன அழகாகவும் எளிமையாகவும் கண்ணதாசன் கூறியிருக்கிறார். அவர் சொன்னதும் உண்மைதான். வயது கூடக் கூடத்தான் கணவனுக்கும் மனைவிக்கும் அன்னியோன்யம் கூடுமாம். அதற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கவியரசர். எதற்குதான் இவர் எழுதவில்லையோ!

  எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
  வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது

  இப்படி ஒரு கணவன் பாடினால் அதற்கு மனைவி என்ன எதிர்ப்பாட்டு பாட வேண்டும்?

  இந்த வயசில் தானே எனக்கு விவரம் புரியுது
  நீங்க ஏற இறங்கப் பார்க்கும் போது விளக்கம் தெரியுது

  அவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர்களது அன்னியோன்யத்தை. ஆனால் கொஞ்சமும் ஆபாசம் இல்லை. எவ்வளவு இயல்பாக தமிழ் விளையாடுகிறது. அப்படித்தான் இல்லறமும் இனிமையானது. ஒருவரையொருவர் எப்போதும் நினைத்துக் கொண்டு… நேரங்களில் அணைத்துக் கொண்டு… உயிரோடு உயிரை இணைத்துக் கொண்டு… அதுதான் வயதுகளையும் கடந்து நிற்கும் காதல்.

  காலம் தாண்டி கிடைக்கும்போது
  காதல் இனிக்கும் இனிப்பு
  கட்டி வெல்லம் கசந்து போகும்
  கட்டிப் பிடிக்கும் பிடிப்பு

  என்ன… கவிஞர்கள் சொல்வது சரிதானே?!?

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – காதலிக்க நேரமில்லை
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – சீர்காழி கோவிந்தராஜன்
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
  படம் – காதலிக்க நேரமில்லை
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wx6ID51LVyc

  பாடல் – ஐம்பதிலும் ஆசை வரும்
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – ரிஷிமூலம்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw

  பாடல் – எங்க வீட்டு இராணிக்கிப்போ
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – கிரகப் பிரவேசம்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-MH6-OkHvTk

  அன்புடன்,
  ஜிரா

  332/365

   
  • Saba-Thambi 4:13 am on October 31, 2013 Permalink | Reply

   வயதுகளையும் கடந்து நிற்பது துன்ப நேரங்ககளிலும் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுப்பது – marriage vows goes as —- for better for worse, for richer for poorer….

   துன்ப நேர பாடல் :

  • amas32 7:34 pm on October 31, 2013 Permalink | Reply

   காதலிக்க நேரமில்லை பாடல் அருமை ஆனால் சீர்காழியின் குரல் முத்துராமனுக்கு செட்டாகாது.

   அவ்வை ஷண்முகி படத்தில் ருக்கு ருக்கு ருக்கு பாட்டில் அவ்வை ஷன்முகியான கமல் மீனாவுக்குச் சொல்லும் “அன்பு 50,60 ஆனாலும் மலரும்” அறிவுரையைத் தவறாகப் புரிந்து கொண்டு கமலைப் பார்த்துக் காதல் மன்னர் ஜெமினி லுக் விடுவது களேபரக் காமெடி 🙂

   ஆனால் உண்மை அது தான். வயது ஏற ஏற தாம்பத்திய வாழ்க்கையில் புரிந்து கொள்ளும் தன்மை மிகும். அன்பு கூடும்.

   amas32

  • rajinirams 10:25 am on November 1, 2013 Permalink | Reply

   கணவன் மனைவி அன்பை எடுத்துக்காட்டும் அருமையான பதிவு.வாலி வரிகள் -வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா-மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா,நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி,நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி-கல்யாண மாலை வரிகளும் நாற்பது வந்தா வெள்ளெழுத்து அது யாருக்கும் உள்ள தலைஎழுத்து-நாற்பது வயதில் பாடல் வரிகளும் நினைவிற்கு வந்தன.

 • G.Ra ஜிரா 9:28 pm on October 8, 2013 Permalink | Reply  

  கம்பனுக்கும் தாசன் 

  தொலைக்காட்சியில் கொடிமலர் படம் ஓடிக்கொண்டிருந்தது. கணவன் குடும்பத்தால் கைவிடப்பட்ட கதாநாயகி வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள்.

  அந்த சோகக் காட்சியில் பின்னணியில் கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடலை சீர்காழி கோவிந்தாரஜன் பாடினார்.

  கானகத்தை தேடி இன்று போகிறாள்
  கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகி

  தெரிந்த பாடலாக இருந்தாலும் பாடலைக் கேட்டதுமே மனக்குரங்கு கம்பமரத்தில் தாவி விட்டது.

  ஆம். கம்பராமாயணத்தின் ஒரு உணர்ச்சி மிகுந்த பாடலில் இருந்து ஒரு வரி இந்தப் பாட்டில் கண்ணதாசனால் எடுத்தாளப்பட்டுள்ளது.

  அதுவும் ஒரு சோகக் காட்சிதான். ஆமாம். ஆமாம். ஒரு பெண் துயரப்படும் சோகக் காட்சிதான்.

  யாருக்குமே கிடைக்காத புகழ் அவனுக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையால் யாருக்கும் கிடைக்காத அவன் அவளுக்குக் கிடைத்தான்.

  அவனும் அவளும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகளும் பெற்றார்கள். ஆனாலும் அவன் கண் அவளை விட்டு இன்னொருத்தியை நாடியது.

  பிறன்மனை நோக்கியது பேராண்மையாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போர் தீர்ப்பு கூறியது.

  பெற்ற பெருமைகளை எல்லாம் தொலைத்தவன் உயிரையும் தொலைத்தான். அவனா தொலைத்தான்? அவள் அல்லவா அவனைத் தொலைத்தாள்.

  தொலைத்த சோகம் துரத்த போர்க்களத்துக்கு ஓடி வருகிறாள். விழுந்து கிடந்தவனை.. இல்லை இல்லை. விழுந்து கிடந்த அவன் உடலைப் பார்க்கிறாள்.

  துளைத்த அம்புகள் ஒன்றா இரண்டா? சல்லடையாய் அவன் உடல்.

  சலம்பல் இல்லாமல் கிடந்த உடலைக் கண்டவள் வாயில் புலம்பல்தான் வருகிறது.

  கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
  உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

  கள் ததும்பும் மலர் சூடிய சானகி மீது உன் மனதில் காதல் வந்ததே… அந்தக் காதல் உன்னுடைய உடம்பில் எங்கே இருக்கின்றது என்று இராமனுடைய அம்பு உன்னுடம்பைத் துளைத்துத் துளைத்துத் தேடியதோ!

  *[அந்த இராமன் உன்னைக் கொல்ல அம்பு விட்டனா? உன்னுடைய காதலைக் கொல்ல அம்பு விட்டானா?

  இராமனுடைய அம்பு காதலைக் கொல்லாமல் உன்னைக் கொன்று விட்டதோ?

  இல்லை. இராமனுடைய அம்பு அந்தப் பொருந்தாக் காதலைத்தான் கொன்றிருக்க வேண்டும். அந்தக் காதல் இறந்த பின்னே உன்னுடைய தவறை உணர்ந்து நீயே உயிரை விட்டிருக்க வேண்டும்.]

  வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
  எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடிழைத்தவாறே

  தெய்வத்தில் எல்லாம் பெரிய தெய்வம் உட்கார்ந்திருப்பது எங்கு தெரியுமா? உலகத்தில் பெரிய மலைகளுக்கெல்லாம் பெரிய மலை. அந்த மலையை எளிதாகத் தோளில் தூக்கிய உன்னுடைய உடம்பில் எள்ளளவும் இடமின்றி அம்பால் துளைத்தானே இராமன்!

  *[அவன் உன்னைக் கொல்ல நினைத்தானா! உன் உள்ளத்தில் இருக்கும் பொருந்தாக் காதலைக் கொல்ல நினைத்தானா! இல்லை. மனைவியைப் பிரிந்த சோகத்தைப் புரிய வைக்க என்னைக் கொல்ல நினைத்தான். அதனால் உன்னைக் கொன்றான்.]

  இவ்வளவு நேரம் இங்கு புலம்பியது மண்டோதரிதான். ஆம். கம்பராமாயணத்தில் இராவணன் மறைவுக்குப் பிறகு மண்டோதரி புலம்பிய பாடலில் வரும் வரியை எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் கவியரசர் கையாண்டிருக்கிறார்!

  என்னது? கண்ணதாசன் திருடிவிட்டாரா? இல்லை. இல்லவே இல்லை.

  கணவனாலும் குடும்பத்தாலும் கைவிடப்பட்ட அந்தக் கதாநாயகியை நினைக்கும் போது உத்தர காண்டத்தில் சந்தேகத்தால் காட்டுக்கு அனுப்பப்பட்ட சீதைதான் நினைவுக்கு வந்திருக்கிறாள்.

  ஆகவே அந்தப் பெண்ணையும் சீதையின் உருவமாகவே கண்டு பாடியிருக்கிறார் கண்ணதாசன். அதனால்தான் அவர் கவியரசர்.

  கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
  கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி!

  சீர்காழி கோவிந்தராஜன் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

  *அடைப்புக்குறிக்குள் இருப்பது கம்பன் சொன்னதல்ல. என்னுடைய கற்பனை.

  அன்புடன்,
  ஜிரா

  311/365

   
  • amas32 10:01 pm on October 8, 2013 Permalink | Reply

   ஆஹா! ஜிரா you have out done yourself today! whattey! கம்பனையும் கண்ணதாசனையும் என்ன ஒரு அருமையான் பாடல்களுடன் ஒப்பீடு செய்துள்ளீர்கள்!

   //கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
   உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி//
   கம்பனுக்குத் தான் மண்டோதரி என்ன சொல்லியிருப்பாள் என்று எப்படியொரு அற்புதக் கற்பனை!
   அதை மனத்தில் கொண்டு, சீதையாக அந்த கதாநாயகியின் நிலையை நினைத்து கவியரசர் புனைந்த வரிகள் அருமையிலும் அருமை.

   //கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி// அழகு!

   நன்றி ஜிரா 🙂

   amas32 .

 • G.Ra ஜிரா 1:24 pm on September 29, 2013 Permalink | Reply  

  ஒரு துளி தேன்! 

  ஒரு மிகப்பிரபலாமான கதை. கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

  ஒருவன் காட்டு வழியே சென்றான். திடீரென்று பெண் சிங்கமொன்று துரத்தியது. தப்பிக்க ஓடினான். ஆலமரம் ஒன்று வழியில் வந்தது. அதன் விழுதைப் பிடித்து ஏறினான். பாதி விழுது ஏறும் போதுதான் மரத்திலிருந்த மலைப்பாம்பைக் கவனித்தான். மேலே போனால் பாம்பு. கீழே இறங்கிலாம் பெண் சிங்கம்.

  தப்பிக்க வழியில்லாமல் அந்த விழுதில் தொங்கினான். அப்போது ஆலமரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டியது. அந்தத் துளி நாக்கில் விழுந்ததும் அவன் அதை ரசித்து ருசித்தான்.

  அந்த மனிதனின் நிலமைக்குப் பெயர்தான் வாழ்க்கை. பிறப்பும் எளிதில்லை. வாழ்வும் எளிதில்லை.

  ஆனால் அந்த ஒரு துளி தேனைச் சுவைக்கும் போது மலைப்பாம்பையும் பெண்சிங்கத்தையும் அவன் மறந்தது போல சிற்சில இன்பங்களில் வாழ்வியல் துன்பங்களை நாம் மறந்திருக்கிறோம்.

  இந்த உண்மை நமக்குப் புரிந்தால் நாம் அமைதியாவோம். முடிந்தவரை நல்லவராவோம்.

  புரியாதவர்கள் ஆடித் தீர்த்து விடுவார்கள். எதெற்கெடுத்தாலும் பிரச்சனை. எல்லாவற்றிலும் தவறு. அடுத்தவருக்கு முடிந்த வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுத்தல். கொள்ளையடித்தல். கொலை செய்தல். அரசியல் பிழைத்தல். வஞ்சகம் செய்தல். இன்னா செய்தல். நாவினால் சுடுதல். அமைதியைக் குலைத்தல். நீர்நிலைகளைக் கெடுத்தல். இயற்கையை அழித்தல். குழந்தைகளைத் துன்புறுத்துதல். இன்னும் எத்தனையெத்தனையோ தவறுகள்.

  ஆடித் தீர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம். ஆனால் எதுவும் தொடர்வதில்லை. ஒரு நாளில்.. ஒரு நிமிடத்தில்… அல்ல அல்ல. ஒரு நொடியில் அந்த ஆட்டம் அமைதியாகி விடுகிறது.

  ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று எழுதினார் உவமைக் கவிஞர் சுரதா. அத்தனை ஆட்டங்களும் அடங்குவதற்குத் தேவை ஒரேயொரு நொடிதான் என்பது மனிதனின் மிகப்பெரிய பலவீனம்.

  அந்த பலவீனத்தினால் உண்டாவது அச்சம். இறப்பின் மீதான அச்சம். அந்த அச்சம் ஏழைகளுக்கு மட்டும் வருவதல்ல. வேறுபாடே இல்லாமல் அரசன் முதல் ஆண்டி வரைக்கும் வியாபாரி முதல் விவசாயி வரைக்கும் வருவதுதான்.

  யோகிக்கும் உண்டு அந்த அச்சம். அச்சத்தைப் போக்கவும் மறைக்கவும் அவன் செய்வதுதான் யோகம். அதையே போகி வேறுவிதமாகச் செய்கிறான். போகத்தில் தன்னை மறைத்து இறப்பின் அச்சத்தைத் தள்ளிப் போடுகிறான்.

  அந்த அச்சம் இறப்பின் மீது மட்டுமல்ல… அது தொடர்பான அனைத்தின் மீதும் உண்டாகிறது.

  உலகத்திலேயே மிக மிக அமைதியான இடம் ஒன்று உண்டு. அங்கு சண்டை இல்லை. சச்சரவு இல்லை. மேலோர் இல்லை. கீழோர் இல்லை. செல்வந்தன் இல்லை. ஏழை இல்லை. எந்தப் பிரச்சனையுமே இல்லாத அமைதியான இடம் அது.

  ஆம். இடு/சுடுகாடுதான் அது. அங்கு யாரையாவது தனியாகப் போகச் சொல்லுங்கள். போகவே மாட்டார்கள். அந்த இடத்தைப் பற்றி கவிஞர் மருதகாசி அழகாக எழுதினார் ரம்பையின் காதலுக்காக படத்தில். பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா.

  சமரசம் உலாவும் இடமே
  நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

  அமைதியே இல்லாமல் ஓயாமல் சிந்தித்துச் சிந்தித்துக் குழப்பிக் கொண்ட எத்தனையோ உள்ளங்கள் அமைதியானது அங்குதான்.

  ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
  எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
  தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
  ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
  அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
  ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
  சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
  ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
  எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
  நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

  மனித வாழ்வில் இல்லாத அமைதியும் ஒற்றுமையும் பாகுபாடின்மையும் நிலவுவது அந்த ஒரு இடத்தில்தான்.

  சரி. இந்தப் பதிவைப் படிக்கும் போதே மனம் இவ்வளவு அமைதியாகிறதே… ஒரு மெல்லிய சோகம் மனதில் படிகிறதே. அப்படியிருக்க இந்த அச்சத்தை எப்படி வெல்வது? வெற்றி கொள்வது?

  புத்தபிக்குகள் எப்போதும் சோகமாக இருப்பார்களாம். ஏன்? பின்னால் நிகழப் போவதுக்கு முன்னாலேயே சோகம் அனுபவிப்பார்கள். துறவிகள் அனைத்தையும் துறந்து தவம் செய்யப் போய்விடுவார்கள்.

  நாமும் அப்படிச் சோகமாக இருக்கத்தான் வேண்டுமா? துறவு கொள்ளத்தான் வேண்டுமா? வேறுவழியே கிடையாதா? ஆண்டவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.

  காலக்கணக்கை முடிப்பதற்கு காலன் வந்தால் தானே அச்சம் வரும். ஆண்டவனே வந்தால்?

  எத்தனையோ யோகிகளும் சித்தர்களும் முனிவர்களும் காணக்கிடைக்காத அந்த அருட்பெருஞ்சோதியே வந்தால்?

  அப்படி ஒரு வழியைத்தான் அருணகிரியும் சொல்லிக் கொடுக்கிறார்.

  பாதி மதிநதி போது மணிசடை
  நாத ரருளிய குமரேசா
  பாகு கனிமொழி மாது குறமகள்
  பாதம் வருடிய மணவாளா
  காலன் எனை அணுகாமல் உனதிரு
  காலில் வழிபட அருள்வாயே

  அன்புடன்,
  ஜிரா

  302/365

   
  • rajinirams 2:55 pm on September 29, 2013 Permalink | Reply

   வாழ்வியல் தத்துவத்தை எளிமையாகவும் அழகாகவும் எடுத்து “காட்டு”ம் அருமையான பதிவு. “சமரசம் உலாவும் இடமே”-மருதகாசியின் என்ன அறுபுதமான வரிகள்.முகராசி படத்தில் இடம்பெறும் கவியரசரின் வரிகளும் அருமையாக இருக்கும்-பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்,அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்,அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை எட்டடி நின்று படுத்தான்,மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்-உண்டாக்கி வெச்சவங்க ரெண்டு பேரு-இங்கே கொண்டு வந்து போட்டவங்க நாலு பேரு. கவிஞர் வைரமுத்துவின் “கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே-இந்த வாழ்க்கை வாழ தான்,கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல”வரிகளும் சிந்தனையை தூண்டுபவை.”இறைவனின் திருவடியை பற்றுவதே சரி”என்ற அருணகிரியாரின் பாடலை சொன்னது முத்தாய்ப்பு.

  • Uma Chelvan 5:06 pm on September 29, 2013 Permalink | Reply

   ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது
   எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு…………..எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பட்தீப்” ராகத்தில் !! மரணம் என்பது எல்லோருக்கும் பொது!! ஆனால் “எங்கே” ” எப்படி” என்பதுதான் பெரிய கேள்விகுறி? அதில் தான் இறைவனும் இருக்கிறான்!!!!! .

  • amas32 4:00 pm on October 1, 2013 Permalink | Reply

   ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாட்டும் வாழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வருகிறது. அதற்காக முதலில் இருந்தே வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்க முடியாது. தலை கால் புரியாமல் ஆடாமல், நல்ல எண்ணங்களையும் செயல்களையும் செய்து வந்தால் முடிவும் அமைதியானதாக இருக்கும்.

   amas32

 • G.Ra ஜிரா 11:04 am on July 31, 2013 Permalink | Reply  

  கேள்வியும் பதிலும் 

  ஒரு கேள்வி என்று இருந்தால் அதற்கான பதில் தக்க பதிலாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதென்ன தக்க பதில்?

  ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். நண்பர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பழந்தமிழர் குங்குமம் வைத்தார்களா என்று பேச்சு வார்த்தை. அதற்கு நான் இப்படிச் சொன்னேன்.

  சங்ககாலத்தில் பெண்கள் நெற்றிக்குச் சாந்து இட்டுக் கொண்டார்கள். ஆனால் சங்க இலக்கியத்தில் குங்குமம் கிடையாது.

  நண்பரோ குறும்பர். அவரும் விடாமல், “அப்படியானால் சங்க இலக்கியத்தில் ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் எல்லாம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

  நான் சொன்ன குங்குமத்தோடு சேர்த்து நண்பர் சொல்வதெல்லாம் வாரயிதழ்களின் பெயர்கள். இந்தக் கேள்விக்கு நான் சிரித்து மழுப்பியிருக்கலாம். ஆனால் அது சுவையாக இருந்திருக்காது. நானும் ஒரு பதிலைச் சொன்னேன்.

  சங்க இலக்கியத்தில் ஆனந்த விகடன் கிடையாது. ஆனால் குமுதமும் நக்கீரனும் உண்டு

  இதை நண்பர்கள் ரசித்தார்கள். ஏன்? சங்க இலக்கியத்தில் குமுத மலர்களும் பெரும் புலவர் நக்கீரரும் உண்டே. இப்படி விடை சொல்வதுதான் தக்க விடை சொல்வது என்பார்கள்.

  அப்படி ஒரு பாடலை கேள்வியாக எடுத்துக் கொண்டு இன்னொரு பாடலை அதற்குத் தக்க விடையாகப் பொருத்த முடிந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. ஒரு முயற்சிதான். செய்து பார்ப்போமே! கண்ணதாசன் இருக்க கவலை ஏன்!

  எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
  அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
  அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

  கவியரசர் எழுதிய இந்த வரிகளில் இருக்கும் கேள்வியைத்தான் இன்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி எங்கே இருக்கிறது? அது தெரிந்தால் உலகம் அமைதியாகி விடுமே!
  அது தெரியாமல் மக்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?

  இருக்கும் இடத்தை விட்டு
  இல்லாத இடம் தேடி
  எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே
  அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே

  நிம்மதி எங்கு இருக்கிறது என்று புரிந்து அந்த இடத்தில் தேடாமல், எங்கெங்கோ அலைந்து எதிலெதிலோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்கள் எதுவும் அறியாதவர்கள். புரியாதவர்கள். இதுவும் கவியரசர் எழுதிய பாடல்தான்.

  அறிவில்லாத மக்கள் என்னதான் செய்வது? அவர்களுக்கு வழியே இல்லையா?

  இந்தக் கேள்விக்கும் ஒரு கண்ணதாசன் பாடலே உண்டு. முழுப்பாடலே இந்தக் கேள்விக்குத் தக்க பதில்தான்.

  முதலில் மனிதனின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்கிறார் கவிஞர். தீர்வைச் சொல்வதற்கு முன் பிரச்சனையைத் தெளிவாகப் புரியவைப்பதற்காக…

  ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்
  இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
  காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
  வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
  காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
  அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
  ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
  மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

  அடுத்தடுத்த வரிகளில் தீர்வை முன்வைக்கிறார் கவியரசர். அதிலும் முதலாக கடமையை நினைவுறுத்துகிறார்.

  எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
  எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
  நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
  அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

  நம்முடைய கருமத்தை நாம்தான் துடைக்க வேண்டும். நம்முடைய கடமையை நாம் தான் செய்ய வேண்டும் என்று சொன்ன கண்ணதாசன், அந்தக் கடமையைச் செய்வதற்குத் துணிவை அடுத்தடுத்த வரிகளில் தருகிறார்.

  ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
  இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
  பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
  பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

  கடமை புரிந்து விட்டது. அதற்கான ஊக்கமும் கிடைத்து விட்டது. ஆனால் எந்த நம்பிக்கையில் அதைத் தொடர்ந்து செய்வது?

  நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
  அதை நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க
  வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்ள
  எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல!

  இதைவிட நிம்மதி இழந்து அது எங்கே எங்கே என்று இல்லாத இடமெல்லாம் தேடியலையும் மனிதர்களை எப்படி அறிவுரை சொல்லித் திருத்துவது!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – இராமமூர்த்தி
  படம் – புதிய பறவை
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=G3oWKwrbVlg

  இருக்கும் இடத்தை விட்டு
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – சீர்காழி கோவிந்தராஜன்
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
  படம் – திருவருட் செல்வர்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=pbte64aTKPA

  ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – வாணி ஜெயராம்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – அபூர்வ இராகங்கள்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=51YPPoBKllg

  அன்புடன்,
  ஜிரா

  242/365

   
  • ranjani135 11:12 am on July 31, 2013 Permalink | Reply

   கேள்வியும் பதிலும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு ரசிக்க வைத்தன.
   எனது முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி!

  • rajinirams 12:54 pm on July 31, 2013 Permalink | Reply

   கவியரசரின் நம்பிக்கை தரும் வரிகளை எடுத்துக்காட்டிய நல்ல பதிவு. நாளைய பொழுது என்றும் நமக்கென வாழ்க.அதை நடத்திட ஒருவன் உண்டு கோயிலில் காண்க-என்ன அற்புத வரிகள். என்னடா பொல்லாத வாழ்க்கை என்று எழுதிய கவியரசர் வாழும்மட்டும் நண்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா ராசா.என்றும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார். நன்றி

  • Uma Chelvan 2:26 pm on July 31, 2013 Permalink | Reply

   Very nice post!

  • amas32 6:47 pm on August 1, 2013 Permalink | Reply

   அபூர்வ ராகம் படப் பாடல் அப்படியே கீதையின் சாரம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல எனக்கு நீங்கள் இங்கே பதிவில் போடும் பல பாடல்களும் கீதையின் சாரமாகவேத் தெரிகிறது 🙂 மூன்று பாடல்களும் அருமை!

   amas32

 • G.Ra ஜிரா 7:30 am on July 7, 2013 Permalink | Reply  

  வாழ்க! வாழ்க!! 

  வாழ்த்துவதற்கு இதயம் வேண்டும். ஒருவரை உளமாற உணர்வாற “வாழ்க! வாழ்க!!” என்று வாழ்த்துவதற்கும் ஒரு நல்ல இதயம் வேண்டும்.

  வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரையாவது வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது திரைப்படத்தில் வாழ்த்துப்பாடல்கள் வராமலா இருக்கும்!

  நல்வாழ்த்து நான் சொல்லுவேன். நல்லபடி வாழ்கவென்று” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினாரே. ஒருவரை எதற்காக வாழ்த்துகிறோம் என்பதற்கான காரணத்தை இதைவிட சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா!

  சரி. வாழ்த்தை எப்படிச் சொல்ல வேண்டும்? வாழ்க வாழ்க என்று எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரி சொன்னால் அதில் சுவை இருக்காது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் கவிஞர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி வாழ்த்தியிருக்கிறார்கள் என்று சில பாடல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வோமா!

  முதலில் பிறந்தநாள். கையில் ஒரு பரிசைக் கொடுத்து விட்டு வாழ்க என்றால் சரியாக இருக்கும். ஆனால் அது அந்தச் சூழலின் மகிழ்ச்சியைப் பெருக்குமா? இல்லை. இப்போதெல்லாம் கேக் வெட்டும் போது சுற்றி நின்று அனைவரும் “Happy Birthday To You” என்று பாடும் போது அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கிவிடுகிறது அல்லவா.

  அதையே அழகாக “என்னோடு பாடுங்கள். நல்வாழ்த்துப் பாடல்கள்” என்று நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் இடம் பெற்ற பிறந்தநாள் காட்சிக்காக எழுதினார். எல்லாரும் சேர்ந்து நல்வாழ்த்துப் பாடினால் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்புறும் என்பது வாலியின் கருத்து.

  அடுத்தது திருமணம். புதுவாழ்க்கை தொடங்கும் மகிழ்ச்சியான தருணம் என்றாலும் ஒரு மெல்லிய சோககும் இருக்கும். பிறந்த வீட்டை விட்டுப் புகுந்த வீட்டுக்குக் கணவனே எல்லாம் என்று செல்லும் பெண். இதுவரையில் பாராட்டிச் சீராட்டி வளர்த்த பெண்ணைப் பிரியும் பெற்றோர்கள் என்று உணர்ச்சிக் கலவையாக இருக்கும் அந்த இடம்.

  இந்தச் சூழ்நிலையில் எப்படி வாழ்த்துவது? நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் “பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்ற பாடலில் கண்ணதாசன் இப்படியெல்லாம் வாழ்த்துகள்.

  கொட்டியது மேளம்
  குவிந்தன கோடி மலர்கள்
  கட்டினான் மாங்கல்யம்
  மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
  கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
  கடமை முடிந்தது கல்யாணம் வாழ்க
  அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ்க
  ஆண்டவன் போலுன்னைக் கோயில் கொண்டாட
  பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி

  திரையிசைப் பாடல்களை எழுதுகின்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் படிக்க வேண்டிய அகராதியாக கவியரசர் இந்தப் பாட்டிலும் இருக்கிறார்.

  திருமணத்தின் முதற்பலன் குழந்தை. மக்கட்பேறு என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அப்படியொரு பெண் வயிறு நிறைந்து சுமக்கும் காலகட்டத்தில் அவள் மகிழ்ச்சிக்காக வளைகாப்பு நடத்துவது வழக்கம். அந்த வளைகாப்பில் அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் வாழ்த்தலாம்? கர்ணன் படத்தில் “மஞ்சள் முகம் நிறம் மாறி” என்ற பாடலில் கவியரசர் கண்ணதாசன் வாழ்த்துவதைப் பாருங்கள்.

  மலர்கள் சூட்டி
  மஞ்சள் கூட்டி
  வளையல் பூட்டி
  திலகம் தீட்டி
  மா தின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்

  குழந்தையைச் சுமக்கும் அந்தப் பெண்ணுக்கு மலர்களைச் சூட்டி மஞ்சளைப் பூசி கையிரண்டும் நிறைய வளையல்களை அடுக்கி திலகமிட்டு அலங்கரிப்பார்கள். இத்தனை செய்தாலும் அந்தப் பெண்ணின் மனம் மாங்காய் கடிப்பதிலேயே இருக்கும். அதைத்தான் கவியரசர் பாட்டில் காட்டுகிறார்.

  திருமணம் முடிந்தது. குழந்தையும் பிறந்தது. அது மட்டும் போதுமா? நீடு வாழ வேண்டாமா? பீடு வாழ வேண்டாமா? அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தாலும் உலகம் பெண்ணைத்தான் தீர்க்க சுமங்கலி என்று வாழ்த்துகிறது. சரி. அந்த தீர்க்கசுமங்கலியை எப்படி வாழ்த்துவது? மறுபடியும் கண்ணதாசனையே கேட்போம்.

  தீர்க்க சுமங்கலி வாழ்கவே
  அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
  காக்கும் தேவதை வாழ்கவே
  அவள் காக்கும் நல்லறம் வாழ்கவே

  தீர்க்கசுமங்கலி படத்துக்காக எழுதிய இந்த வரிகளிலிருந்து குடும்பத்தின் நல்லறத்தைக் காப்பது பெண்ணே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  சரி. பதவியில் இருக்கும் பெரியவர்களை எப்படி வாழ்த்த வேண்டும்? ஆண்டு அரசாளும் மன்னனை எப்படி வாழ்த்த வேண்டும்? இந்த முறை கவிஞர் முத்துலிங்கத்திடம் பாடம் கேட்கலாம். ராஜரிஷி படத்தில் கௌசிக மன்னனை எப்படி வாழ்த்திப் பாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

  கருணைக்கடலே வாழ்க வாழ்க
  காக்கும் நிலமே வாழ்க வாழ்க
  அறத்தின் வடிவே வாழ்க வாழ்க
  அரசர்க்கரசே வாழ்க வாழ்க
  அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
  அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
  இமயமலை போல் புகழில் உயர்ந்தாய்
  உனது கொடையால் மனதில் நிறைந்தாய்

  அரசனை வாழ்த்திப் பாடுகையில் அந்த அரசன் காட்டும் பண்பு நலன்களையும் ஆட்சி செய்யும் முறையையும் வாழ்த்திப் பாட வேண்டும். அதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறது.

  நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. அது உண்மை என்று இன்றைய நிலை நமக்குப் பாடமாக இருக்கிறது. அதனால்தான் அன்று பெரியவர்கள் “பொய்யாக் குலக்கொடி” என்று வையை ஆற்றைப் பாடினார்கள். இது போன்ற ஆறுகளைப் பாராட்டும் போது எப்படி வாழ்த்த வேண்டும்? காவிரியாற்றையே எடுத்துக் கொள்வோம். அகத்தியர் திரைப்படத்தில் கவிஞர் கே.டி.சந்தானம் காவியாற்றை எப்படியெல்லாம் வாழ்த்துகிறார் பாருங்கள்.

  நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
  நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
  உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
  உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
  புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
  அன்பு பொங்கிவரும் காவிரியே வாழியாவே

  ஆற்றினால் உண்டாகும் செழிப்பையும் அது நீக்கும் பசிப்பிணியையும் சொல்லி வாழ்த்த வேண்டும். இப்படியெல்லாம் வாழ்த்திக் கொண்டாடினால்தான் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.

  தெய்வத்தை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் வாழ்த்தியாகி விட்டது. ஆனால் தெய்வம் குடியிருக்கும் திருக்கோயிலை?

  தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
  தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே

  நிலைத்து நிற்க வேண்டிய கோயில் என்பதால் மொழியோடு தொடர்பு படுத்தி தமிழைப் போல நிலைநின்று வாழ்க என்று எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

  எல்லாம் இருப்பது போல இருந்தாலும் சிலருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருப்பதில்லை. ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வந்து கொண்டேயிருக்கும். அவர்களுக்கு எப்படி வாழ்த்துவது? மறுபடியும் படத்தில் வாலி கற்றுத் தருகிறார்.

  நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்

  ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான வாழ்த்து. வாழ்த்தப்படுகின்றவருக்கு அந்த வாழ்த்து அமைதியைக் கொண்டு வரட்டும் என்று வாலி அப்படி வாழ்த்துகிறார்.

  வாழ்த்துகள் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. வாழ்த்துவதற்கு சுற்றிலும் நல்ல உள்ளங்கள் இல்லாத பாவப்பட்ட உயிர்களும் உண்டு. அப்படியொரு உயிர் மற்றவர்களை வாழ்த்தும் போது மனதுக்குள் என்ன நினைக்கும்?

  எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
  நான் வாழ யார் பாடுவார்

  இப்படிப்பட்ட உள்ளங்களுக்கு ஆண்டவனே துணையிருந்து காப்பாற்ற வேண்டும்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (பட்டிக்காடா பட்டனமா/எம்.எஸ்.வி) – http://youtu.be/HkXXY_m6EIY
  என்னோடு பாடுங்கள் (நான் வாழ வைப்பேன்/இளையராஜா) – http://youtu.be/pzO8BBL_Zu8
  பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி (நெஞ்சிருக்கும் வரை/எம்.எஸ்.வி) – http://youtu.be/ZMUfKlNYulM
  மஞ்சள் முகம் நிறம் மாறி (கர்ணன்/ எம்.எஸ்.வி+டி.கே.ஆர்) – http://youtu.be/h-KP-0ifwQA
  தீர்க்கசுமங்கலி வாழ்கவே (தீர்க்கசுமங்கலி/ எம்.எஸ்.வி) – http://youtu.be/yLX9jP7O8Uo
  அழகிய கலை நிலவே (ராஜரிஷி / இளையராஜ) – http://youtu.be/_qEdcAxfPgs
  நடந்தாய் வாழி காவேரி (அகத்தியர்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/1RGZSokw_nI
  தஞ்சைப் பெரிய கோயில் (ராஜராஜசோழன்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/5DhrsSQ-2aY
  நலம் வாழ என்னாளும் (மறுபடியும்/ இளையராஜா) – http://youtu.be/JjRs0KjYzbo
  எல்லோரும் நலம் வாழ (எங்க மாமா/ எம்.எஸ்.வி) – http://youtu.be/KPM20P7HDLs

  அன்புடன்,
  ஜிரா

  218/365

   
  • amas32 7:47 am on July 7, 2013 Permalink | Reply

   அழகாக வாழ்த்துவதும் ஒரு கலை தான். வாழ்த்துகள் என்று வெறுமே சொல்வது எப்படி, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவது எப்படி. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? வாழ்த்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும். சிலர் வாயிலிருந்து வாழ்த்தே வராது. நல்ல வாழ்த்துக்களைக் கேட்க வேண்டும் என்றால் கவிஞகர்களிடம் தான் செல்ல வேண்டும். நீங்கள் இங்கே அருமையான பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள்!

   நாம் நிறைய நேசிக்கும் ஒருவரை வாழ்த்துவது எளிது. அதே பண்பு அனைவரையும் வாழ்த்தும் பொது நமக்கு வரவேண்டும். அதற்கு எளிமையான வழி எல்லோரையும் நேசிக்க வேண்டும் 🙂 பெரியாழ்வார் பெருமாளையே பல்லாண்டு பாடி வாழ்த்தியவர். அவருக்குள் தான் எத்தனை வாஞ்சை இருந்திருக்க வேண்டும்!

   வாழ்த்தும் போது வாழ்த்தைப் பெறுபவர் தேவை அறிந்து வாழ்த்துவதே சிறப்பு. அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுதானே வாழ்த்துபவருக்கும் பெருமை! 🙂

   amas32

  • Uma Chelvan 7:49 am on July 7, 2013 Permalink | Reply

   “Ennodu padungal” TMS version is far better then SPB vesion !!

  • Uma Chelvan 7:58 am on July 7, 2013 Permalink | Reply

   அடுத்தவரை வாழ்த்த நல்ல மனமும் உயர்ந்த குணமும் வேண்டும். amas சொன்னது போல் பெரியாழ்வார் “பெருமாளை” பல்லாண்டு வாழ வாழ்த்தியவர். எல்லோரயும் வாழ்த்துங்கள் , நமக்கு எந்த குறையும் வராது!!!

  • rajinirams 10:29 am on July 7, 2013 Permalink | Reply

   சூப்பர்.வாழ்த்துப்பாடல்கள் என்பது செண்டிமெண்டாக எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.தமிழில் வாழ்த்து பாடல்களுக்கு பஞ்சமே இல்லை.
   1)பேசும் தெய்வம்- வாலியின் நூறாண்டு காலம் வாழ்க.
   2)இதய வீணை- இன்றுபோல என்றும் வாழ்க-வாலி.
   3)சட்டம் என்கையில்-எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க-கண்ணதாசன்.
   4)ஊருக்கு உழைப்பவன்-பிள்ளை தமிழ் பாடுகிறேன்-காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க,கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க-முத்துலிங்கம்
   5)காளி -வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம்-கண்ணதாசன்.
   6)மனமார வாழ்த்துங்கள்-மனமார வாழ்த்துங்கள்.
   7)நெஞ்சில் ஓர் ஆலயம்-எங்கிருந்தாலும் வாழ்க-கண்ணதாசன்.
   8)நூற்றுக்கு நூறு-நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்-வாலி.
   9)அடுத்த வாரிசு- வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்-பஞ்சு அருணாசலம்.
   10)அன்னை ஓர் ஆலயம்-அம்மா-மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே
   வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்தவேண்டுமே -வாலி.
   11) இதயக்கனி-நீங்க நல்லா இருக்கணும்-புலமைப்பித்தன்.
   12)நல்லவனுக்கு நல்லவன்-எங்க முதலாளி-வாலி.
   13)முகமது பின் துக்ளக்-பாவலன் பாடிய புதுமை பெண்ணை,happy birthday to you -வாலி.
   14)நாம் மூவர்-பிறந்த நாள் இன்று- வாலி.
   15) வசந்த ராகம்-நான் உள்ளத சொல்லட்டுமா,”வாழ்க நீங்கள் வாழ்க”.
   வாழ்க நீங்கள் வாழ்க”.

  • suri 1:07 pm on July 9, 2013 Permalink | Reply

   theerka sumangali vazhkave was written by vali!

  • SRINIVASAN 8:23 am on July 14, 2013 Permalink | Reply

   Reblogged this on srinivasan s.

 • G.Ra ஜிரா 8:13 am on June 1, 2013 Permalink | Reply  

  இராகங்கள் பதினாறு 

  இன்றைய பதிவில் இரண்டு பாடல்களை ரசித்துப் பாராட்டப் போகிறேன்.

  இரண்டு பாடல்களையும் எழுதியவர்கள் வேவ்வேறு. இசையமைத்தவர்கள் வெவ்வேறு. பாடியவர்கள் வெவ்வேறு. நடித்தவர்களும் வெவ்வேறு. ஆனால் இயக்குனர் ஒருவரே. ஆம். திரு.ஏ.பி.நாகராஜன் இயக்கிய இரண்டு படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அவை.

  முதற்பாடல் – ஒரு நாள் போதுமா
  படம் – திருவிளையாடல்
  பாடியவர் – பாலமுரளிகிருஷ்ணா
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
  நடிகர் – பாலையா
  பாடலின் சுட்டி – http://youtu.be/ppnzHXqT5Sg

  இரண்டாம் பாடல் – வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்
  படம் – அகத்தியர்
  பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
  வரிகள் – உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
  இசை – குன்னக்குடி வைத்தியநாதன்
  நடிகர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர்
  பாடலின் சுட்டி – http://youtu.be/N-5btIpWZmQ

  இந்த இரண்டு பாடல்களிலும் இயக்குனரையும் தாண்டி காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை உண்டு. ஆம். சங்கீதத்தின் சிகரங்களாக இருப்பவர்கள் பாடுகின்ற பாடல்களாக இவை இருக்கின்றன.

  மீன்காரன் பாடினால் பாட்டில் மீனைப்பற்றி வரும். வேடன் பாடினால் மானைப் பற்றி வரும். விவசாயி பாடினால் பயிர் வகைகள் வரும். ஆய்ச்சியர் பாடினால் பாலும் தயிரும் ஓடும். ஆனால் இவர்கள் வாக்கேயக்காரர்கள். அதாவது சங்கீத சாம்ராட்டுகள். இவர்கள் பாட்டில் என்ன வரும்?

  இராகமும் தாளமும் அள்ளக் குறையாமல் வரும். இராகங்களின் பெயர்களையே பாடலின் வரிகளில் வைத்து விளையாடுகிறார்கள். அப்படி எழுதிய கவிஞர்களை முதலில் வணங்குகிறேன்.

  காலத்தில் திருவிளையாடல் பாடலே முந்தியது. ஆகவே அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.

  இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
  எழுந்தோடி வருவாரன்றோ
  இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

  எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
  தர்பாரில் எவரும் உண்டோ..
  எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

  கலையாத மோகனச் சுவை நானன்றோ
  மோகனச் சுவை நானன்றோ
  கலையாத மோகனச் சுவை நானன்றோ

  கான(ண)டா என் பாட்டுத் தேனடா
  இசை தெய்வம் நானடா

  பாட்டு வரிகளில் வருகின்ற இராகங்கள் தெரிகின்றதா? அவைகளை எடுத்துப் பட்டியல் இடுகிறேன், பாருங்கள்.

  எழுந்தோடி வருவாரன்றோ – தோடி இராகம்
  எனக்கிணையாக தர்பாரில் – தர்பார் இராகம்
  கலையாத மோகனச் சுவை – மோகன இராகம்
  காண(ன)டா என் பாட்டு தேனடா – கானடா இராகம்

  கவியரசர் எவ்வளவு அழகாக பாடல் வரிகளில் இராகங்களின் பெயர்களை பொருள் பொருந்திவரும்படி நெய்திருக்கிறார். அடடா!

  கவியரசர் அப்படிச் செய்தது முதற்படி என்றால் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பாடலை அடுத்த படிக்கு எடுத்துச் செல்கிறார். பாடல் முழுவதுமே இராகங்கள். அதுவும் போதாதென்று இன்னொரு புதுமையையும் செய்திருக்கிறார். அதைக் கடைசியாகச் சொல்கிறேன்.

  இது போட்டிப் பாட்டு. அகத்தியருக்கும் இராவணுக்கும் இடையில் இசைப்போட்டி. எல்லாரும் மீட்டிய வகையில் வீணை இசைத்தால் இவர்கள் இருவருக்கு மட்டும் எண்ணிய வகையிலேயே வீணை இசைக்கும். அப்பேர்ப்பட்ட மேதைகள். அதனால் பாடல் வரிகளும் மேதாவித்தனமாகவே இருக்கிறது. பதிவின் ரசிப்புத்தன்மைக்காக பாடலின் சிலவரிகளை நீக்கியிருக்கிறேன்.

  வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
  நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
  நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

  வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
  பைரவி துணைவன் பாதம் பணிந்து
  உன்னை வென்றிடுவேன்

  இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உன்தன்
  இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
  எழுந்தோடி வந்தான்

  ஆரபிமானம் கொள்வார் வெறும்
  அகந்தையினால் உனது
  அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
  ஆரபிமானம் கொள்வார்

  சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா?
  சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
  சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? இனிய
  சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?

  நாடகமா தர்பார் நாடகமா?
  அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும்
  அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?

  ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
  அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்?

  மோகன
  கானம் நான் மீட்டிடுவேன்
  மனோலயம் இல்லை உன் பாட்டினிலே

  பாகேஸ்வரியோ பரம்பொருளோ?
  பாற்கடலில் துயிலும் சாரங்கனோ?
  யார் வந்தால் என்ன காம்போதி
  ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்

  கௌரி மனோகரி துணையிருப்பாள்
  கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
  சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
  சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்

  பாடல் வரிகள் நாடகத்தனமாக இருந்தாலும் எத்தனையெத்தனை இராகங்கள் பார்த்தீர்களா? படிப்பதற்கு எளிமையாக எடுத்துக் கொடுக்கிறேன்.

  நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் – நாட்டை
  பைரவி துணைவன் பாதம் பணிந்து – பைரவி
  இசை கேட்டு எழுந்தோடி வந்தான் – தோடி
  ஆரபிமானம் கொள்வார் வெறும் – ஆரபி
  சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? – சண்முகப்பிரியா
  நாடகமா தர்பார் நாடகமா? – தர்பார்
  ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான் – ஹம்சத்வனி
  அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்? – வசந்தா
  மோகன கானம் நான் மீட்டிடுவேன் – மோகனா
  மனோலயம் இல்லை உன் பாட்டினிலே – மனோலயம்
  பாகேஸ்வரியோ பரம்பொருளோ? – பாகேஸ்வரி
  பாற்கடலில் துயிலும் சாரங்கனோ? – சாரங்கா
  யார் வந்தால் என்ன காம்போதி – காம்போதி
  கௌரி மனோகரி துணையிருப்பாள் – கௌரிமனோகரி
  கல்யாணி மணாளன் கை கொடுப்பான் – கல்யாணி
  சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் – சரஸ்வதி

  இராகங்கள் பதினாறு. ஆம். பாட்டில் வந்திருக்கும் இராகங்கள் பதினாறு. அடேங்கப்பா என்று மலைப்பாக இருக்கிறதல்லவா.

  அத்தோடு நின்றுவிடவில்லை உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள். சுரங்களையும் சொற்களாக மாற்றியிருக்கிறார்.

  சுரங்கள் “ச ரி க ம ப த நி” என்று ஏழு வகை என்பது தெரிந்திருக்கும். இந்தச் சுரங்களையே முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு சொற்களை உண்டாக்கியிருக்கிறார் கவிஞர். பாட்டாகப் பாடும் போது சுரங்கள் மறைந்து சொற்கள் வெளிப்படும்.

  ச ம ம – சமமா?
  ச ரி ச ம ம – சரி சமமா?
  நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
  ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!

  இப்படியாக பாட்டெழுதிய கவிஞர்களும் நம் நாட்டில் இருந்தார்கள் என்று நினைத்து நாம் பெருமை மட்டுமே பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

  அன்புடன்,
  ஜிரா

  182/365

   
  • anonymous 9:18 am on June 1, 2013 Permalink | Reply

   நலம் பெற வேண்டும் – நீயென்று
   இலை மறை காய் போல் – பொருள் கொண்டு…
   ——

   இராகங்கள் தவழும் இன்னிசைப் பதிவு
   முருகத் திரு. TMS அவர்களின் நினைவை மீண்டும் கிளறி விடும் பதிவு!

   இராக மாலிகை -ன்னு சொல்லுவாங்க;
   பல ராகங்களையும் கலந்து பாடும் பாட்டு!

   ஆனா, அந்தப் பாட்டிலேயே, இராகத்தின் பேரையும் வச்சி,
   அதையும் அந்த இராகத்திலேயே பாடுவது என்பது மிக அழகு!

   இதைச் சினிமாவில் சிற்சில இடங்களில் செஞ்சிருக்காங்க!
   ஆனா, முதலில் செஞ்சவரு யார் தெரியுமா?
   Murugan Talkies முதலாளியான = அருணகிரிநாதர்:)
   ——–

   • anonymous 10:11 am on June 1, 2013 Permalink | Reply

    கொல்லி -ன்னு ஒரு தமிழ்ப் பண் (இராகம்)
    அதைப் பாட்டில் பயன்படுத்தி, அதே பண்ணில், அந்தப் பாட்டையும் பாடிய அருணகிரி

    கந்தர் அலங்காரத்தில்…
    “கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை” -ன்னு ஒரு வரி வரும்;

    வள்ளி பேசுற பேச்சே, பண் போல இருக்காம்
    எந்தப் பண்? = கொல்லிப் பண் (நாத நாமக் கிரியை)

    அவள் நாதனின் நாமத்தைத் தானே, சதா “முருகா முருகா” -ன்னு காடு மேடெல்லாம் உளறிக்கிட்டு இருந்தா?
    அதான் போல = நாத நாமக் கிரியை
    இப்படிக், “கொல்லி-சொல்லி-வள்ளி” -ன்னு, பாடுன மொத ஆளு அருணகிரி:)
    ——

    நட்டபாடை, செவ்வழி
    தக்கேசி, கொல்லிக் காவளம்,
    இந்தளம், சீகாமரம், புறநீர்மை
    -ன்னு எத்தனை எத்தனையோ தமிழ்ப் பண்கள்…

    எல்லாம் போயிருச்சி:(
    தேவாரம்/ ஆழ்வார் பாசுரம் என்கிற Museum-ல்ல தான் பாக்க முடியும்;

    கர்நாடக சங்கீதம் -ன்னு ஒன்னையே பரக்கப் பரக்கப் பேசினா, இன்னொன்னு கேட்பார் அற்று போயிருச்சி:(
    ஏதோ, கர்நாடக சங்கீதத்திலேயே, தமிழ்ப் பாட்டா, இந்தக் காலத்தில் பாட ஆரம்பிச்சி இருக்காங்க! ஆனா இராகம் என்னமோ = கர்நாடகம் தான்! தமிழிசை அல்ல!

    எங்கேயோ போயிட்டோம்;
    சொல்ல வந்தது = பாட்டில் பண் பேரை வச்சி, அதே பண்ணில் பாடிய அருணகிரி!

  • anonymous 10:19 am on June 1, 2013 Permalink | Reply

   நீங்க குடுத்த ரெண்டு பாட்டும் ரொம்பப் பிடிக்கும்!
   குறிப்பா, பாலையா (பாலமுரளி)… “எனக்கு இணையாகத் தர்பாரில் எவரும் உண்டோ?” -ன்னு அதே தர்பார் ராகத்தில் பாடுவாரு…
   பாலையா Body Language அதுக்கு, செம:)

   உளுந்தூர்ப்பேட்டையார் பாட்டும், Top Class!
   யார் வந்தால் என்ன காம்போதி -ன்னு இராவணன் பாடும் போது, “கபோதி” ங்குறாப் போல லுக்கு விடுவாரு ஆர்.எஸ்.மனோகர்:)

   காம்போதி = சிவபெருமானுக்கு உரிய ராகம்;
   (வீணைக் கொடி உடைய வேந்தனே – பாட்டில் கூட, நிறைவா அது தான் வரும்!)

   சிவனுக்கு ஈடு யாரு? = அவ ஒருத்தி தானே?:)
   கௌரி மனோகரி துணையிருப்பாள் -ன்னு அகத்தியர் பாடி முடிச்சீருவாரு!
   ——

   ச ம ம – சமமா?
   நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?

   இதை எங்கே சொல்லாம விட்டுருவீங்களோ? -ன்னு, மனசைக் கையில் புடிச்சிக்கிட்டே படிச்சேன்; ஆனா கடைசீயாச் சொல்லீட்டீங்க; அதப் பாத்தப் பொறவு தான், மனசே நிம்மதியாச்சு:)

  • anonymous 10:28 am on June 1, 2013 Permalink | Reply

   இது போல இராகப் பெயர்கள் கொண்ட, இதர பாடல்கள்…

   உன்னால் முடியும் தம்பி படத்தில், “என்ன சமையலோ?”

   கல்யாணி = அரிசியில் கல்…ஆணி
   ராகம் வசந்தா; ருசித்து பார்க்க ரசம் தா
   கரி கரி கரி கரி – கறி காய்களும் இங்கே; கறி வேப்பிலை எங்கே?:)
   ———–

   இதே போல், “வீணைக் கொடியுடைய வேந்தனே”
   ராகம் பேரு, சொல்லுல ஒளிஞ்சி வராம, நேரடியாவே வந்துரும்

   காலையில் பாடும் ராகம் – பூபாளம்
   உச்சி வேளை ராகம் – சாரங்கா
   மாலையில் பாடும் ராகம் – வசந்தா

   இரக்கம் பற்றிய ராகம் – நீலாம்பரி
   மகிழ்ச்சிக்குரிய ராகம் – தன்யாசி
   யுத்த ராகம் – கம்பீர நாட்டை

   வெண்பா பாடுவது – சங்கராபரணம்
   அகவல் பா – தோடி
   யாழ் இசைக்கு – கல்யாணி

   கயிலை மலையானைக், கானத்தால் கவர்ந்த ராகம் – காம்போதி, காம்போதி, காம்போதி

  • anonymous 10:43 am on June 1, 2013 Permalink | Reply

   அட, எல்லாத்தையும் சொல்லிட்டு, சென்னையில் என் அம்மாவைப் பத்திச் சொல்லலீன்னா எப்படி?
   வாழ்க்கைல, பல விசயமெல்லாம், அவ கிட்ட போய் நிக்கும் போது தான், நடந்து இருக்கு!

   =திருமயிலை வாழ் கற்பகம்!
   =அவரு ஒதுக்கினாலும், அவனே அவனே -ன்னு மயிலா மாறித், தவங் கெடந்தவ!

   அவளை TMS பாடும் பாட்டுல தான், இராகத்தின் பேரு இழையோடுமே!
   கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
   நற்கதி அருள்வாய் அம்மா!
   ——-

   ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
   ** ஆனந்த பைரவியே ** ஆதரித்தாளும் அம்மா!

   ** கல்யாணியே ** கபாலி காதல் புரியும் அந்த
   உல்லாசியே உமா உனை நம்பினேன் அம்மா!

   தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
   ** ரஞ்சனியே ** ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
   ——–

   சும்மா, TMS இழுப்பாரு பாருங்க, ஒத்த தந்தித் தம்பூரா கணக்கா…
   யம்மாடியோவ்…
   கர்நாடக சங்கீதப் பிதாமகர்கள் கூட, அம்புட்டு உருக்கமாப் பாட முடியாது;
   உருக்கம் வேற, இலக்கணம் வேற = ரெண்டும் நிக்கும் TMS கிட்ட!

   இந்தப் பாடல் பற்றி எப்பவோ இட்ட பதிவு
   http://ammanpaattu.blogspot.com/2007/03/blog-post_27.html

   கற்பகவல்லி, சின்னஞ் சிறு கிளியே = ரெண்டும் நாதசுரத்தில் வாசிச்சிக் கேட்கும் போது, போற உயிரும், கொஞ்ச நேரம் நிக்கும்!
   மா மயிலாள் = கற்பகத்து அம்மன்;

  • Simulation 10:47 pm on June 1, 2013 Permalink | Reply

  • elavasam 10:07 am on June 2, 2013 Permalink | Reply

   /பாட்டாகப் பாடும் போது சுரங்கள் மறைந்து சொற்கள் வெளிப்படும்./

   இதற்கு ஸ்வராஷ்ட்ரப்ரயோக எனப் பெயர்.

   • anonymous 10:30 am on June 2, 2013 Permalink | Reply

    அது, ஸ்வ ராஷ்ட்ர அல்ல (தாய் நாடு)
    ஸ்வராக்ஷர
    = ஸ்வர + அக்ஷர (சுரம் + எழுத்து)

    சாமகான லோலனே, சதா சிவா -ன்னு கீர்த்தனை..

    ச, ம, க -ன லோலனே -ன்னு ஸ்வரம் போலவும் பாட முடியும்
    சாம கானத்தின் லோலனே -ன்னும் பொருள் வராப் போல, பாட முடியும்!

    = ஸ்வரமும் + அட்சரமும் இழைந்து ஓடுவது = ஸ்வராக்ஷரம்

  • Saba-Thambi 2:09 pm on June 3, 2013 Permalink | Reply

   பதிவு பிரமாதம். பலே பலே!

   இன்னொரு பாடல் -ஒரு சில ராக பெயர்களுடன்:

   • anonymous 2:48 pm on June 3, 2013 Permalink | Reply

    sooper song sir! – sri priya in grand

    ரஞ்சனி… சிவ ரஞ்சனி

    அதி காலையில் வரும் பூபாள ராகம்
    ஆனந்தத் தேன் தரும் கல்யாணி ராகம்
    என்ன சொல்லி என்ன பாட
    கம்பன் இல்லை கவிதை பாட
    class lines & a song for shankar ganesh to treasure

  • chinnapiyan 5:56 am on August 8, 2013 Permalink | Reply

   பதிவும் அருமை. வந்த விமர்சனக்கருத்துகளும் பலே. மிகவும் ரசித்து மகிழ்ந்தேன், நன்றி, வாழ்க ஜிரா

  • badrirag 8:43 pm on November 27, 2013 Permalink | Reply

   ”நீ ஒரு ராக மாலிகை என் நெஞசம் உன் காதல் மாளிகை” என்ற பாட்டில், வரிக்கு ஒரு ராகம் என்று பாடியிருப்பார் பாலு (SPB). அருமையான உவமைகள்.

  • isakki 3:03 pm on June 4, 2019 Permalink | Reply

   rangangalai kondu padum sangidha murai ethu?

 • G.Ra ஜிரா 11:47 am on April 7, 2013 Permalink | Reply  

  மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் 

  வாழ்க்கையில் கடன் வாங்காதார் யார்? இன்றைக்கு உலகமே கடனில் இயங்குகிறது. கடனுக்காக இயங்குகிறது. வீட்டுக் கடன், வண்டிக் கடன், தனிப்பட்ட கடன், சம்பளக் கடன் என்று எத்தனையெத்தனையோ கடன்கள்.

  இதையெல்லாம் தெரிந்துதானோ என்னவோ விஸ்வரூபம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இப்படி எழுதினார்.

  நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
  அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து

  மகாபாரதத்தில் வரும் கர்ணன் கூட செஞ்சோற்றுக் கடன் தீர்க்க உயிரையே கொடுத்தான். அதைக் கர்ணன் படத்தில் கவியரசர் இப்படியும் எழுதியிருக்கிறார்.

  செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
  சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
  கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா!

  கடன் வாங்கி விட்டால் உயிரைக் கூட கொடுத்து அடைக்க வேண்டி வரும் என்பதற்கு கர்ணன் கதை நல்ல எடுத்துக்காட்டு. ஆனாலும் “வஞ்சகன் கண்ணனடா” என்று சொல்வதன் வழியாக நாம் வாங்கும் கடனுக்கும் காரணம் கடவுளே என்று சொல்கிறார் கண்ணதாசன். அவனின்றி ஒரு அணுவும் அசையாத போது கடன் மட்டும் எப்படி அசையும்?!

  கடன் வாங்கியவருக்கு மட்டுமே துன்பம் கொடுக்கும். கொடுத்தவருக்கு இன்பம்தான். வட்டி என்னும் இன்பம் பெருகிப் பெருகி வரும். அதைச் சொல்லத்தான் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

  உலகத்தில் சிறந்தது எது
  ஒரு உருவமில்லாதது எது
  ஆளுக்கு ஆள் தருவதுண்டு
  அசலுக்கு மேலும் வளர்வதுண்டு
  உலகத்தில் சிறந்தது வட்டி

  ஆனால் கண்ணதாசன் காலம் இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள். கடன் அட்டையைப் (credit card) பெருமையாக பையில் எடுத்துக் கொண்டுதானே வாசலைத் தாண்டுகிறோம். இந்தச் சூழ்நிலையில் பாட்டு எழுதுகின்றவர்கள் கடன் வாங்கினால் தப்பில்லை என்றுதான் எழுதுவார்கள். நாடே கடன் வாங்குகிறது. பிறகென்ன என்ற எண்ணம் நாட்டின் வேர் வரை பரவிவிட்டதே!

  ஈஸ்வரா வானும் மண்ணும் ஃபிரண்ட்ஷிப் பண்ணுது
  உன்னால் ஈஸ்வரா
  ………………………………………………….
  கிளியின் சிறகு கடன் கேட்கலாம் தப்பில்லை

  ஒருவகையில் மக்கள் மனநிலையின் ஓட்டத்தைத்தான் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்தப் பாடல் காட்டுகின்றது. கண்ணதாசன் காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு பாடல் வந்தது. அதுவும் கடன் பாட்டுதான்.

  பெத்து எடுத்தவதான் என்ன தத்து கொடுத்துப்புட்டா
  பெத்த கடனுக்குதான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா

  மு.மேத்தா இந்தப் பாட்டை எழுதினார். இவர் கடனுக்காக உயிரைக் கொடுக்கும் கண்ணதாசன் காலத்துக்கும் கடன் வாங்கினால் தப்பேயில்லை என்னும் புதிய உலகத்துக்கும் இடைப்பட்டவர். கடனின் சோகம் புரிந்தவர். ஆனால் எதையாவது கொடுத்து அடைத்து விட முடியும் என்று நம்புகின்றவர். ஆனாலும் வட்டி கட்டியே வாழ்க்கை முடிந்து விடும் என்று நொந்து கொள்கிறார்.

  கதைப்படி பெற்ற தாயால் வளர்க்கப்படாத மகன் பாட்டு அது. பெற்ற கடனைத் தீர்ப்பதற்காக அன்னை மகனையே விற்று வட்டி கட்டியதாகப் பாடுகின்றார். ஆனால் பெற்ற கடன் தீர்க்கக் கூடியதா? அதனால்தான் ”வட்டியைக் கட்டிப்புட்டா” என்று பாடுகிறார். அசல் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

  கடன் பிரச்சனை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. அதையும் ஒரு பெண் எடுத்து எழுதியிருக்கிறார். அவர் பெயர் பொன்முடியார். ஒருவரிடம் இருந்து வாங்கினால்தான் அது கடன் என்பதில்லை. நாம் செய்ய வேண்டிய கடமை என்பதே ஒரு கடன் என்று எண்ணும் உயர்ந்த பண்புடைய காலத்தவர் இவர். செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத ஒவ்வொருவரும் கடன்காரரே என்ற இவரது கருத்து மிகச் சிறந்தது.

  ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
  சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
  வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
  நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
  ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி
  களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
  நூல் – புறனானூறு
  எழுதியவர் – பொன்முடியார்
  திணை – வாகை
  துறை – மூதில்முல்லை

  பெற்று நான்கு பேர் பார்க்க சிறப்பாக வளர்ப்பது ஒரு தாயின் கடன்(கடமை)
  பிள்ளைக்குத் தக்க கல்வியைக் கொடுத்து சான்றோனாக்குவது தந்தையின் கடன்(கடமை)
  செயலுக்குரிய வேல் போன்ற கருவிகளைச் செய்து கொடுத்தல் கொல்லற்கு கடன்(கடமை)
  நல்ல நெறிமுறைகளை நடைமுறைகளை செயல்படுத்துவது அரசாள்கின்றவரின் கடன்(கடமை)
  கடமை என்னும் போரில் களிறு போன்ற பிரச்சனைகளை வென்று மீளல் பிள்ளைகளின் கடன்(கடமை)

  ஒரு தாய் எழுதிய பாட்டல்லவா. அதனால்தான் நல்ல கருத்துகளை நயமகாகப் படைத்துள்ளார். இந்தப் பாடல்களின் வழியாக கடன் மீதான பார்வை காலகாலமாக மாறிக் கொண்டே வந்திருப்பதைப் பார்க்கலாம்.

  முடிப்பதற்கு முன்னால் ஒரு செய்தி. “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று ஒரு சொற்றொடர் பிரபலமானது. இதைக் கம்பர் சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால் கம்பராமாயணத்தில் இப்படி ஒரு வரியே இல்லை.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  நான் பட்ட கடன் எத்தனையோ (இசை-மெல்லிசை மன்னர்) – http://youtu.be/SxeODtxmL9M
  உள்ளத்தில் நல்ல உள்ளம் (இசை-மெல்லிசை மன்னர்) – http://youtu.be/GxG9EzeAXi4
  உலகத்தில் சிறந்தது எது (இசை-ஆர்.கோவர்தனம்) – கிடைக்கவில்லை
  பெத்த கடனுக்குதான் (இசை-இசைஞானி இளையராஜா) – http://youtu.be/XH9_BooSMtU
  ஈஸ்வரா வானும் மண்ணும் (இசை-தேவா) – http://youtu.be/wkv4XZb07Eo

  அன்புடன்,
  ஜிரா

  127/365

   
  • amas32 (@amas32) 6:21 pm on April 7, 2013 Permalink | Reply

   கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது கம்ப இராமயணத்தில் வராவிட்டாலும் அந்த உணர்வு என்னமோ உண்மை தான். எந்தக் கடனையும் செஞ்சோற்றுக் கடனோ, நன்றிக் கடனோ, பணக் கடனோ ஏதுவாக இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்தும் வரை மனத்தில் ஒரு தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்திக கொண்டே இருக்கும். அதைத் திருப்பித் தந்த பிறகு தான் நிம்மதி நம்மை தழுவும்.

   amas32

   • suri 1:42 am on April 27, 2013 Permalink | Reply

    naan patta kadan song was written
    by vaalee

  • GiRa ஜிரா 10:44 pm on April 7, 2013 Permalink | Reply

   உண்மைதான். கடன் இருக்கும் வரையில் நிம்மதி இருக்கத்தான் செய்யாது. ஆண்டவன் அருளினால்தான் எந்த நிலையிலிருந்தும் மீள முடியும்.

  • Raghu 8:03 pm on August 22, 2014 Permalink | Reply

   கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் – திரு வி க

 • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
  Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

  காசு மேலே, காசு வந்து… 

  ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

  ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

  அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

  பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

  எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
  பணத்தை எங்கே தேடுவேன்
  உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
  அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
  கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
  கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
  கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
  திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
  திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
  தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
  தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

  நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

  இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

  அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

  இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

  கையில வாங்கினேன்
  பையில போடல
  காசு போன எடம் தெரியல்லே
  என் காதலி பாப்பா காரணம் கேப்பா
  ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
  ஏழைக்கு காலம் சரியில்லே

  இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

  இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

  பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
  பூமேடை வாசல் பொங்கும் தேனாக
  ………………………………………………
  செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
  வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
  இன்பத்தின் மனதில் குளிப்பேன்
  என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

  இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

  காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
  வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
  அட சுக்கிரன் உச்சத்தில்
  லக்குதான் மச்சத்தில்
  வந்தது கைக்காசுதான்

  காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

  டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
  ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
  யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
  கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
  ……………………………………….
  கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
  கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

  என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

  பணம் என்னடா பணம் பணம்
  குணம் தானடா நிரந்தரம்

  பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

  பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
  எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
  கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
  காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
  டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

  அன்புடன்,
  ஜிரா

  114/365

   
  • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

   wow.. super.. thanks geeraa.. :)))))))

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

   ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி நண்பரே 🙂

  • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

   காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

   • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

    ஆமா ஆமா.

    ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

  • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

   போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

    அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

 • G.Ra ஜிரா 6:40 am on March 10, 2013 Permalink | Reply  

  நூற்றியெட்டில் கொஞ்சம் 

  முன்பொரு கட்டுரையில் கண்ணதாசன் எழுதிய அறுபடைவீடுகளைப் பற்றியும் மற்றொரு பதிவில் தமிழகத்தில் இருக்கும் பிரபல முருகன் ஆலயங்களைப் பற்றியும் பார்த்தோம்.

  தமிழ்த் திரையிசையில் பக்திப் பாடல்களில் மற்ற கவிஞர்களை விட கண்ணதாசனின் பங்களிப்பே நிறைய உள்ளது. இதற்குக் காரணம் ஏ.பி.நாகராஜன், கே.சங்கர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சாண்டோ சின்னப்பாத் தேவர் போன்றவர்கள் கவியரசரை மிகச் சிறப்பாக பக்திப் படங்களில் பயன்படுத்திக் கொண்டதுதான்.

  முருகன் கோயில்களைப் பற்றி எழுதிய கண்ணதாசன் வைஷ்ணவஸ்தலங்களைப் பற்றி எழுதாமல் இருப்பாரா? எழுதியிருக்கிறார். இறையருட் கலைச்செல்வர் கே.சங்கர் இயக்கிய சுப்ரபாதம் திரைப்படத்தில் ஒரு பாடலில் பிரபலமான தென்னாட்டின் வைஷ்ணவஸ்தலங்களைப் பற்றி எழுதியுள்ளார். நூற்றியெட்டு திவ்ய ஷேத்திரங்களின் பெயர்களும் பாடலில் வராவிட்டாலும் பிரபல ஸ்தலங்களைப் பாட்டில் வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

  அனந்தசயனனுக்கே எப்போதும் அடிமை கொண்ட ஒரு குடும்பம். அந்தச் சயனனுக்கு ஒரு கோயிலைக் கட்ட வேண்டுமென்று குடும்பத்தலைவனுக்கு ஒரு ஆசை. ஆசையை வைத்துக் கொண்டு பூசையைச் செய்யலாம். செங்கலைச் செய்ய முடியுமா? அப்படிச் செய்த செங்கற்களை அடுக்கி சுண்ணாம்பையும் பூசமுடியுமா?

  அதற்குள் பல சோதனைகள். அவனுடைய தம்பி சிறை செல்கிறான். தம்பி மனைவி சுயநினைவிழக்கிறாள். என்னதான் செய்வான் அந்த நாராயணதாசன்?! பாடுகிறான். வைகுந்தன் குடியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் ஓடுகிறான். துன்பங்களுக்கெல்லாம் விடை தேடுகிறான். அந்தச் சூழலில் வரும் பாடலைத்தான் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர் இசையமைக்க சீர்காழி கோவிந்தராஜனும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள்.

  இதே படத்தில் இன்னொரு பாடலில் வடக்கில் உள்ள சில விஷ்ணுஸ்தலங்களையும் அவைகள் தொடர்பான கதைகளையும் பாட்டாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர். அதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். இப்போது இந்தப் பாடலில் வரிகளுக்கு வருவோம்.

  திருக்கோயில் கட்ட எண்ணி
  பொறுப்போடு வந்த என்னை
  வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே
  பலர் சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே

  காஞ்சி நகர் வரதராஜா
  உன் கருணை பெருமை என்ன லேசா
  வாஞ்சையுடன் எனக்கு அருள
  காஞ்சி வரதா நீ விரைந்தோடி வருக

  திருப்பணி செய்வதற்கு உடந்தை
  நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை
  தினம்தோறும் சேவை செய்ய வரவா
  ரங்க ஸ்ரீ வில்லிபுத்தூரின் தலைவா

  பூலோக வைகுந்தவாசா
  புகழ் ஓதும் ஸ்ரீ ரங்கநாதா
  ஸ்ரீ ரங்கநாதா ஸ்ரீ ரங்கநாதா
  திருவரங்கத்து ரங்கநாதா
  என் சேவைக்குத் துணைபுரிய வா வா

  அனந்த பத்மநாபா
  ஆனந்த விஷ்வரூபா
  திருவனந்தை பத்மநாபா
  உனக்குச் சிங்காரக் கோயில் கட்ட வா வா

  குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை
  நடக்கக் கொஞ்சுதம்மா இரண்டு சலங்கை
  வர வேண்டும் ஸ்ரீ கிருஷ்ண பாலா
  நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா

  பழமை நிறைந்த திருப்பதியே
  எங்கள் அழகர்மலைக் கருணைநிதியே
  சோளிங்கர் ஆள்கின்ற முகமே
  பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே

  தொண்டு செய்யும் அடியார்கள் தமக்கு உன் சோதனை போதுமடா
  சோதனை தீர்த்து உன் பாதமலர்களில் எங்களைச் சேர்த்திடடா
  கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா
  கோயில் திறந்திடவில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா
  வைகுண்டத்தில் சேர்த்திடடா வைகுண்டத்தில் சேர்த்திடடா

  நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
  வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
  ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா

  மைவண்ண மேனி கொண்ட ஸ்ரீ நாதா
  திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா
  மெய்க்கூந்தல் வேதவல்லி தலைமகனே
  கனல் நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே

  எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்
  அன்று எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்
  பித்துப் பிடித்து பெண்ணை அறியாயோ
  இன்று சித்தம் தெளிந்தது என்று அருள்வாயோ

  பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா
  பத்மாநாபனே வீரராகவா ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா
  ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா
  ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா

  இந்தப் பாடலில் காஞ்சிபுரம், குடந்தை, திருவில்லிபுத்தூர், திருவனந்தபுரம், திருவரங்கம், திருப்பதி, அழகர்மலை, சோளிங்கர்(திருக்கடிகை) ஆகிய திவ்யதேசங்களும் குருவாயூர் என்னும் அபிமானஸ்தலமும் பாடப்பட்டுள்ளன.

  இவ்வளவு சொல்லியாகி விட்டது. அதென்ன நூற்றியெட்டு திவ்யஸ்தலங்கள் என்ற தகவலையும் பார்த்து விடுவோம். பொதுவாக ஒரு கோயில் ஏழு புண்ணியங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம் புஷ்கரிணி ததா விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ என்பவை அந்த ஸ்பத(ஏழு)புண்ணியங்கள்

  இப்படி ஏழு புண்ணியங்களைக் கொண்ட ஒரு கோயிலில் அஷ்டமாக.. அதாவது எட்டாவதாக ஒரு புண்ணியமும் சேர்ந்தால் அந்தக் கோயில் திவ்யதேசன் எனப்படும்.

  அந்த எட்டாவதான புண்ணியம் எது? அது ஆழ்வார்களின் மங்களாசாசனம். கல்லால் ஆயிரம் கோயில்கள் கட்டலாம். ஆனால் அன்புள்ள ஒருவன் சொல்லால் பாடலைக் கட்டி இறைவனைத் தொழும் போதுதான் அந்த இடம் ஏற்றம் பெறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  இந்த நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இரண்டு பாற்கடலும் பரமபதமும். அவை பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் இருப்பவை நூற்றியாறுதான். இந்த நூற்றியாறு திவ்யதேசங்களுக்கும் அன்புள்ள நெஞ்சத்தோடும் அறமுடைய சிந்தையோடும் சென்றோரைப் பத்மநாப ஸ்ரீதரனே மற்ற இரண்டு திவ்யதேசங்களுக்கும் அழைத்துச் செல்வான் என்பது நம்பிக்கை.

  இந்த நூற்றியாறு திவ்யதேசங்களில் பன்னிரண்டு ஸ்தலங்கள் வடநாட்டிலும் மிச்சமுள்ள தொன்னூற்றாறு ஸ்தலங்கள் தென்னாட்டிலும் அமைந்துள்ளன. வடக்கே உள்ள பன்னிரண்டிலும் ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது.

  பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் வைஷ்ணவ திவ்யதேசங்களைப் பற்றி வரும் பாடல்கள் மிக அரிது. மிகமிக அரிது. அந்தச் சூழ்நிலையில் இப்படி இத்தனை திவ்யதேசங்களை தன்னுள் கொண்டு வந்த இந்தப் பாடலும் மிக அரியது. மற்றுமொருமுறை கண்ணதாசனுக்கு நன்றி.

  108 திவ்யதேசங்களின் பட்டியல் – http://ta.wikipedia.org/wiki/108_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
  பாடலின் சுட்டி – http://youtu.be/16j5oViE9u0

  ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் சுரேஷம்
  விஷ்வாதாரம் ககன சதுர்ஷம் மேகவர்ணம் சுபாங்கம்
  லஷ்மிகாந்தம் கமல நயனம் யோகிபிர்த்யான கம்யம்
  வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் சர்வலோக ஏகநாதம்

  நாராயணா! நாராயணா! நாராயணா!

  அன்புடன்,
  ஜிரா

   
  • anonymous 7:52 am on March 10, 2013 Permalink | Reply

   நல்ல பாட்டு – நல்ல படம்!
   அதுவும் “கணீர்” சீர்காழியோடு, ஒரு “பெண்குரல்” ஒத்துப் பாடுவது அம்புட்டு லேசில்லை;
   இந்தப் படம் முழுக்க = Voice of Vani!

   வாணி ஜெயராமின் குரல் = சுசீலாம்மா & ஜானகி -க்கு இடையே நிற்கும் குரல்!

   “குழைவு” அதிகம் இல்லாததால், ஒரு சிலருக்குக் “கண்டிப்பான” குரல் போலத் தோனும்; ஆனால், தமிழ்த் திரை இசையில் “குழையாத சோறு” = வாணி ஜெயராம்!

   தயிர் சாதத்துக்கு, சோறு குழையணும்; ஆனா பிரியாணிக்கு?

   பல நல்ல உணவு வகைகளுக்கு = குழைந்து விடாத சோறும் ஒரு அங்கம் அல்லவா! அப்படி ஒரு அதிசய ராகம் வாணியம்மா!
   ——-

   இந்தப் படத்திலேயே பாருங்க!

   ஆம்பிளைக் குரல் = பல பேரு;
   ஆனா பொம்பிளைக் குரல் = வாணி மட்டுமே!

   1. இந்தப் பாட்டு = திருக்கோயில் கட்ட எண்ணி = Vani & Seerkazhi
   2. கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் (my fave) = Vani & Yesudass
   3. உண்மை தெரிந்திருக்கும் ஒருவனய்யா = Vani
   4. one more song, forgot; கண்ணா-ராதா -ன்னு வரும் = Vani

   ஒரு படத்தின் அத்தனைப் பாட்டும் வாணிக்கே, தூக்கிக் குடுக்கணும்-ன்னா??
   அதுவும் MSV, அப்படி பண்ணுறார்-ன்னா சும்மா இல்லை!
   அதுவும் தன் “ஆஸ்தான” பாடகி, சுசீலாம்மாவையும் விஞ்சிக் குடுக்குறாரு-ன்னா?

   Yes, இந்தப் படத்தில், நாலு பாட்டும் வாணி பாட, ஒரே பாட்டு சுசீலாம்மா பாடுவாங்க! – உன்னைத் தான் நீ அறிவாய், by TMS & சுசீலாம்மா!

   நீங்க குடுத்த பாட்டு – என் மனசுக்குப் பிடிச்ச பாட்டு = Long Song, & a Pang Song!
   May be itz a coincidence or I am wrong,but
   many long songs, always go to Vani – dunno why! any thoughts?
   (இந்தப் பாட்டு, அபூர்வ ராகங்கள் பாடல்கள், ஆனா-கானா பாட்டு & so many..)

   • anonymous 10:23 am on March 10, 2013 Permalink | Reply

    ஒரேயொரு தகவல் செவ்வி செய்ய அனுமதி தாருங்கள்!

    //இப்படி ஏழு புண்ணியங்களைக் கொண்ட ஒரு கோயிலில் அஷ்டமாக.. அதாவது எட்டாவதாக ஒரு புண்ணியமும் சேர்ந்தால் அந்தக் கோயில் திவ்யதேசன் எனப்படும்//

    அல்ல!

    //ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம் புஷ்கரிணி ததா விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ//

    இவை வடமொழி சொல்பவை;
    வெறும் “சப்த புண்ணியம்” என்பதோடு சரி;

    ஆனா, இந்த வடமொழி நியமங்கள், ஆழ்வார் பாடிய ஒரு தலத்துக்கு அமைந்திருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை;

    எடுத்துக்காட்டாக, “ஸிந்து” = கடல்; “புஷ்கரிணி” = குளம்; புஷ்கரிணியே இல்லாத திவ்ய தேசங்கள் பலவுண்டு;

    திருச்செந்தூருக்கு அருகிலே துலை-வில்லி மங்கலம் என்னும் “திவ்ய” தேசம்
    தலைச் சங்க நாண் மதியம்
    கேரளத்தில், திரு-வல்ல-வாழ்

    இதே போல் “விமானம்” இல்லாத, பரம எளிய “திவ்ய” தேசங்களும் உண்டு!

    = “திவ்ய” தேசம் ஆகும் ஒரே தகுதி
    = ஆழ்வாரின் ஈரத் தமிழைப் பெற்றிருத்தல் மட்டுமே!

    ———

    வடமொழி வேதங்கள் சொல்லும் சம்பிரதாயங்களும், சடங்கு-விசாரணைகளும், குழப்பத்துக்குத் தான் இட்டுச் சென்றது;
    ஆனா, ஆழ்வார்களின் தமிழே, இறை நுட்பங்களுக்கும் தெளிவு தந்தது
    = இதை நான் சொல்லலை; வேதாந்த தேசிகன் என்று கொண்டாடப் படும் ஆசாரியர் சொல்கிறார்;

    “செய்ய தமிழ் மாலைகள் – யாம் தெளிய ஓதி
    தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

    ஆக…
    ஆழ்வார்களின் தமிழைப் பெற்று இருந்தால் = அது “திவ்ய” தேசம்!
    இல்லையேல், அது = தேசம்(தலம்)!

   • anonymous 12:38 pm on March 10, 2013 Permalink | Reply

    ஆழ்வார்களின் தமிழைப் பெற்று இருந்தால் = அது “திவ்ய” தேசம்!
    இல்லையேல், அது = “வெறும்” தேசம் (தலம்)!

    -ன்னு சொன்னேன் அல்லவா? அது என்ன “திவ்ய”?

    திவ்ய – தேசம்
    திவ்ய – பிரபந்தம்

    ஆழ்வார்கள் பாடினது தீந்-தமிழ் நூல் தானே?
    அதுக்கு எதுக்குத் “திவ்ய” -ன்னு ஒரு சம்ஸ்கிருத முன்னொட்டு?
    ——

    “திவ்ய பிரபந்தம்” -ங்கிற பேரே அவர்கள் வைக்கலை;
    “அருளிச் செயல்” -ன்னு தான் பேரு!

    ஆழ்வார்கள் வாழி, “அருளிச்செயல்” வாழி
    தாழ்வாது மில்குரவர் தாம்வாழி – ஏழ் பாரும்
    உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
    செய்ய மறை தன்னுடனே சேர்ந்து..

    இந்த வெண்பா சொல்லீரும், பேரு = அருளிச்செயல் -ன்னு;

    முன்பொரு முறை, உயர்திரு. சொக்கன் அவர்களிடம் எடுத்துச் சொன்ன போது, அவரும் இன்று வரை, “அருளிச் செயல்” -ன்னு போட்டு வருகிறார்; நன்றி
    ——

    “பிரபந்தம்” என்பது சைவத் திருமுறையிலும் உண்டு; 11 ஆம் திருமுறை!
    பிரபந்தம் (எ) வடசொல் = மாலை -ன்னு பொருள்!

    “திவ்ய பிரபந்தம்” -ன்னே இன்னிக்கி பரவல் (பிரபலம்) ஆகி விட்டது;
    = ஆனா இந்தப் பேரே, ஒரு “சதித் திட்டம்”:)))
    ——

    ஆலயங்களில், பல காலமாய், வடமொழிக்குத் தானே ஏற்றம்?
    வைணவம் மட்டும் விதி விலக்கா என்ன?
    அங்கே இருக்குறவங்களும் லேசுப் பட்டவங்க இல்ல; தமிழை அத்தனை சீக்கிரம் கருவறைக்குள் நுழைய விட்டுருவாங்களோ?

    9ஆம் நூற்றாண்டு!
    அது, திருவரங்கத்தில், புரட்சி ஒன்னு கிளம்பிய காலகட்டம்;
    நாத முனிகள் = இவரே ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர்;

    இசை கூட்டி, நடனம் அமைத்து, ஈரத் தமிழை இறைவன் முன்னே கொண்டு செல்ல ஆசை!
    ஆனா, சுலபத்தில் நடந்துருமோ? இன்னிக்கே கடினம்; 1200 yrs back?
    அதுக்கு, நாத முனிகள் செய்த “சதியே” = “திவ்ய” பிரபந்தம்:))

    பாசுரங்களைத் தொகுத்து = அதுக்கு சம்ஸ்கிருத போர்வை போர்த்தினாரு!
    “திவ்யப் பிரபந்தம்” – திவ்யமா இருக்கோன்னோ?:))

    வேத சப்தம் போல்… நீட்டி ஓதும் முறை உருவாக்கினாரு!
    அடடா, நம்ம வேதம் போலவே இருக்கே! எப்படித் தான் ஓதறாள்-ன்னு பார்ப்போமே-ன்னு கொஞ்சமா வழி விட்டாங்க….

    கப்-ன்னு பிடிச்சிக்கிட்டு, மொத்த ஆழ்வார் தமிழையும் உள்ளே நுழைச்சிட்டாரு:)))
    ——

    அவருக்குப் பின்னால் வந்த இராமானுசர் முதலானவர்களும்,
    எங்கே கால வழக்கத்தில், இந்தத் தமிழ்ப் பழக்கத்தை மாத்தீருவானுங்களோ? -ன்னு அஞ்சி, இதை ஒரு “நிறுவனப்படுத்தலாவே” செஞ்சி வச்சிட்டாங்க;

    இன்னிக்கி பரிதி மாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி), மறை மலை அடிகள் -ன்னு தனித் தமிழ்!
    ஆனா 600 yrs back? அப்பவே, ஜாமாதா ரிஷி = மணவாள மாமுனி -ன்னு பேரைத் தனித் தமிழா மாத்திக்கிட்டாங்க:)

    திருமஞ்சனமா? = நாரணா நீ ராட வாராய்!
    அலங்காரமா? = மாதவிப் பூச் சூட வாராய்!
    நைவேத்தியமா? = அப்பம் கலந்து வைத்தேன், அமுதுபடி செய்ய வாராய்
    தீபாராதனையா? = பல்லாண்டு பல்லாண்டு
    இரவு, தொட்டில் சேவையா? = இராகவனே தாலேலோ…
    மார்கழி மாதமா? = சுப்ரபாதம் பாடவே கூடாது; திருப்பாவை மட்டுமே!

    அர்ச்சகர்களே ஓதி ஆகணும்;
    மாட்டேன்-ன்னு சொல்ல முடியாது; வேற ஒருத்தரை வச்சி சொல்லிக்கோங்க-ன்னு சொல்ல முடியாது;
    “கோயில் ஒழுகு” ன்னு பொறிச்சி வச்சிட்டுப் போயிட்டாரு… அந்த “விதி”யை மீற வழியில்லாம, தொடர்கிறார்கள் இன்றும்:)))
    —————

    = இப்படி வந்தது தான் “திவ்ய”

    திவ்ய – தேசம் (திருத் தலம்)
    திவ்ய – பிரபந்தம் (அருளிச் செயல்)

    பாட்டாய்ப் பாடாமல், வேதம் போல் ஓதுதல்
    பாசுரங்களுக்கு, உரை எழுதினாலும்… அதுல மணிப்பிரவாளமா, வேதங்களுக்கு Reference காட்டி, எழுதும் பழக்கம்!

    அதான், உள்ளாற வந்துருச்சே! இனிமே இப்படி உரை எழுதுதல் தேவையில்லை!
    ஈடு = பாசுர உரைகள்,
    இனி எழுதறவங்க, இதை எளிய தமிழுக்குக் கொண்டு வந்துறணும்; இதுவே நோக்கத்தை முழுமை அடையச் செய்யும்;

    இந்தப் பதிவு (திவ்ய-தேசம் என்னும் திருத்-தலப் பதிவு), பல்லாண்டு வாழ்க!

   • anonymous 12:53 pm on March 10, 2013 Permalink | Reply

    அருணகிரிக்கும் இதே ஆசை தான்!

    திருமாலே – வண் தமிழ் பயில்வார் பின்னால் திரிகின்றவன் -ன்னு திருப்புகழிலேயே பாடி வச்சாரு!
    பைந்தமிழின் பின் செல்லும், பச்சைப் பசுங் கொண்டலே -ன்னும் ஏக்கம்!

    இராமானுசர் காலம் = 11 CE
    அருணகிரி காலம் = 15 CE

    அதே போல், சம்ஸ்கிருதப் போர்வை போர்த்தி, தமிழை உள்ளே நுழைக்க அருணகிரியும் எவ்ளோ முயற்சி செஞ்சாரு…
    அருணகிரியின் பல பாடல்களில், மணிப்பிரவாளம் என்னும் வடமொழி கூட்டுச் சொற்கள், அதிகம் வருவது, இந்தக் காரணத்தினால் தான்!

    இதைப் புரிஞ்சிக்காம, பல பேரு, தமிழ் இலக்கியத்தில் அருணகிரிக்கு இடமில்லை-ன்னுட்டாங்க:((

    ஆனா, டாக்டர் மு.வ, மு.மு. இஸ்மாயில் போன்றவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில்…
    இதைப் புரிந்து கொண்டு, சந்தத் தமிழ் முனியான அருணகிரிக்கு உரிய இடத்தினை அளித்தார்கள்!

    இணையம் இல்லாத் தனிமை; முருகன் ஆலயங்கள் பதிவும்-இன்னிக்கித் தான் பார்த்தேன்;
    என்னமோ தெரியல; இப்பதிவும் அப்பதிவும், கண்ணிலே கோலம்; வாழி மகிழ் சூழ்ந்து!

    இருப்பதெல்லாம் ஒரே “திவ்ய” தேசம் தான்;
    = “மனம்” என்னும் திவ்ய தேசம்

    = மனமே முருகனின் மயில் வாகனம்!

  • amas32 7:56 am on March 10, 2013 Permalink | Reply

   You out do yourself in every new post! ரொம்ப அருமையான ஒரு கட்டுரை. இப்பதிவை படிப்பவர்களுக்கே புண்ணியம் வந்தடையும். திவ்ய தேச விளக்கம் அருமை. பாடல் தேர்வும் அருமை. நான் இதுவரை கேட்டிராத பாடல். நன்றி.

   amas32

   • GiRa ஜிரா 10:03 am on March 10, 2013 Permalink | Reply

    இந்தப் படத்தின் விசிடி எங்கிட்ட இருந்தது. நெதர்லாந்திலிருந்து வர்ரப்போ எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன். வந்தப்புறம் முருகன் படங்கள்ளாம் திரும்ப வாங்கிட்டேன். ஆனா இந்தப் படத்தோட விசிடியோ டிவிடியோ எங்கயும் கெடைக்கல.

    படமும் நேபாளத்துல இருக்கும் கோயில்கள் வரைக்கும் வளைச்சு வளைச்சு காட்டியிருப்பாங்க. கெடைச்சா குடுக்குறேன். 🙂

  • amas32 7:57 am on March 10, 2013 Permalink | Reply

   Who is this anony commenter who is written such a nice pinnoottam? 🙂

   amas32

  • anonymous 8:14 am on March 10, 2013 Permalink | Reply

   பதிவில் உள்ள சம்ஸ்கிருத சுலோகத்தில், சற்றே திருத்தம் செய்ய அனுமதியுங்கள்; அது “சர்வ லோக ஏக நாதம்” அல்ல! “சர்வ லோகைக நாதம்”

   = சாந்தா காரம், புஜங்க சயனம், பத்ம நாபம், சுரேசம்

   (அமைதி வடிவு, இரண்டே கைகளில் ஒருக்களித்து சயனம்,
   தாமரைக் கொப்புள், காட்டுக்குத் தலைவன்)

   = விஸ்வா தாரம், ககன சதுர்ஷம், மேக வர்ணம், சுபாங்கம்

   (உலகுக்கு ஆதாரம், விண்வெளியாய் பரந்து..
   மேக நீல வண்ணமாய்ச், சுபம்/இன்பம் தரும் உடம்பு)

   = லஷ்மி காந்தம், கமல நயனம், யோகிபிர் தியான கம்யம்

   (திருமகள் கேள்வன், தாமரைக் கண்ணான்
   யோகிகள், இதயத்திலேயே தியானம் செய்யும் வடிவம்)

   = வந்தே விஷ்ணும், பவ பய ஹரம், சர்வ லோகைக நாதம்

   (விஷ்ணு வணக்கம், பிறவி/இறவி பயம் அறுப்போன்,
   அனைத்து உலகுக்கும் நாதமாய் விளங்குவோன்)

   • anonymous 8:23 am on March 10, 2013 Permalink | Reply

    கண்ணதாசனை எவ்ளோ மெச்சினாலும் தகும்!

    பாருங்க; அடுத்த பத்தியில் அரங்கம் -ன்னு ஆரம்பிக்கும் முன், அதுக்கு முந்தின பத்தியில் வில்லிபுத்தூரை வைச்சிட்டே ஆரம்பிக்குறாரு;

    //ரங்க ஸ்ரீ வில்லிபுத்தூரின் தலைவா//

    அது எப்படி வில்லிபுத்தூர், “ரங்க வில்லிபுத்தூர்” ஆகும்?
    சுத்த மோசம்; ஆணாதிக்கம்:)

    மாப்பிள்ளைகளே இப்படித் தான்; மாமனார் சொத்தையும் (ஊரையும்), தன் பேருக்கு, மாத்திக்கிருவாங்க! = ரங்க வில்லிபுத்தூர்;
    ஏன், இதே போல அரங்கத்தையும், “வில்லிரங்கம்” -ன்னு சொல்றது தானே? வாய் வருமா மாப்பிள்ளைக்கு?:)

   • anonymous 8:53 am on March 10, 2013 Permalink | Reply

    பதிவில் சிற்சில ஐயங்கள்; யாரேனும் சொல்லி உதவுங்கள்:

    //எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்
    அன்று எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்//

    இதுக்கு என்ன பொருள்?
    எல்லா வடிவினிலும் பெண் எடுத்தாய் = என்ன சொல்ல வராரு கவிஞரு?:)

    //எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்// = மீன், ஆமை, கேழல், ஆளரி (நரசிம்மம்), வாமனம்…
    //எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்// = இந்த வடிவில் எல்லாம் பெண்ணே எடுக்கலையே? ஏனோ?:)
    ——–

    //கனல் நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே//

    அலமேலு = அவன் மனைவி;
    அலமேலு வளர்த்தவனே -ன்னா, “அம்மா” ன்னு பொருள் வந்துருமே!

    அதான் “வளர்த்தவனே” -ன்னு போடலை; “வளர்ந்தவனே”

    கண்ணதாசனை “உன்னிப்பா” கவனிக்கும் பழக்கம் உள்ளவங்களுக்குத் தெரியும்;
    “ஆன்”மீகத்திலும், “ஆண்”மீகம் கமழச் செய்யும் வித்தை ;
    அதுவும் விரசம் இல்லாமல்; அது கண்ணதாசன் ஒருவனுக்கே தெரியும்!:)

    கனல் நிறைந்திருக்கும் அலமேலு
    = என்ன கனல்?
    = கற்புக் கனலா? காமக் கனலா?
    = அலமேலு “தனியாகவே” இருக்கிறாளோ?
    (அவள் வேறு ஊரில்; அவன் வேறு ஊரில்; மலையின் கீழே – மலையின் மேலே)

    இப்படித் “தனியாது – தணியாது” இருக்கும் அலர் மேல் மங்கை;
    = கனல் நிறைந்து இருப்பவள்;
    = அவள் மேல், அவன் வளர்ந்தால்? (கண் வளர்ந்தால்? துயில் வளர்ந்தால்??)
    = அல-மேலு-வளர்ந்தவனே; அலர்-மேல்-வளர்ந்தவனே -ன்னு கண்ணதாசன் காட்டும் “நுணுக்கம்”;
    ———

    The same he does in apoorva raagangaL too..
    பழனி மலையில் உள்ள வேல் முருகா – சிவன்
    பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா… பாட்டு ஞாபகம் வருதா??

    தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் – மங்கை
    தர்ம தரிசனத்தை தேடுகிறாள்;
    அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
    அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?

    செல்வாளோ? செல்வாளோ?
    கேள்வியின் நாயகனே – என் கேள்விக்குப் பதில் ஏதைய்யா?

  • துளசி கோபால் 8:32 am on March 11, 2013 Permalink | Reply

   அருமை! அந்தப்படம் சுப்ரபாதம் நான் பார்க்கலையேப்பா:( எப்போ வந்துச்சு?

   இன்னிக்குத்தான் நினைச்சேன் இதுவரை பார்த்தது ஒரு நாப்பத்தியஞ்சு தேறுமுன்னாலும் எழுதுனது ஒரு பத்தோ பனிரெண்டோதான். அவைகளை ஒரு ஃபோல்டரில் தொகுத்து வச்சுக்கணுமுன்னு …..

   நம்ம பதிவுலக நண்பர் லதானந்த் 103 பார்த்துருக்கார். நம கோபி ராமமூர்த்தி 99!!!

   புண்ணீயாத்மாக்கள்!!!

  • Nallooraan 9:38 am on March 11, 2013 Permalink | Reply

   ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம் புஷ்கரிணி ததா விமானம்
   can you please tell the tamil meaning of these?

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel