Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

  நீ பார்த்த பார்வைக்கொரு 

  இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

  http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

  அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

  கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

  ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

  ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

  இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

  ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

  வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

  இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

  http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

  அப்படி பாக்குறதுன்னா வேணாம்

  கண் மேலே தாக்குறது வேணாம்
  தத்தி தாவுறதுன்னா னா னா
  தள்ளாடும் ஆசைகள் தானா
  என்ன கேட்காமல் கண்கள் செல்ல
  உன் பக்கம் பார்த்தேன்
  மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
  காணாமல் போனேன்

  கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

  இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

  இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

  இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

  இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

  இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

  நான் கேட்டதை தருவாய் இன்றாவது

  கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

  மோகனகிருஷ்ணன்

   
  • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

   நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
   மறைத்த முகத்திரை திறப்பாயோ
   திறந்து அகத்திரை இருப்பாயோ!!
   இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

   உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

   ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

   மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

  • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
   “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

  • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

   //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

   இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

   நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

   இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

   amas32

  • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

   I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

 • என். சொக்கன் 8:53 pm on October 22, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: சிரித்து வாழவேண்டும் 

  வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்,சிரித்து  கவலையை மறக்க தெரிந்தவன்,சிரியுங்கள் மனிதர்களே,இதை விட மருந்தில்லை வாழ்க்கையிலே என்று அமரகாவியம் படத்தில் பாடல் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே என்ற கவியரசரின் வார்த்தைக்கு இசையோடு சிரிப்பை இணைத்து ரசிக்க வைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.வாய் விட்டு சிரிப்பது மன அழுத்ததை குறைக்கும் என்பதால் கோபபடும் போது கூட சிரிப்பது போல வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள்.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்,பொம்பளை சிரிச்சா போச்சு,சிரித்தாலும் போதுமே,ஆணவ சிரிப்பு ஆனந்த சிரிப்பு என்று பல சிரிப்பு பாடல்கள் இருந்தாலும் இந்த மூன்று பாடல்கள் மனம் கவரும் வகையில் அமைந்தவை. தமிழ் பாடல் உலகின் மூவேந்தர்கள் எழுதியவை.மூன்றுமே வித்தியாசமான சூழல் அமைந்தவை.

  இவரும் வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல “நல்ல மனிதர் போர்வையில் சிலர் செய்யும் அநியாயங்களை பட்டியலிட்டு மனம் நொந்து” சிரித்து பாடுவதாக அமைந்தது-

  “மேடையேறி பேசும்போது ஆறு போல பேசு-கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு-உள்ள பணத்தை பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்லகணக்கை மாத்தி கள்ளகணக்கை ஏத்தி நல்ல நேரம் பார்த்து நண்பனை ஏமாத்து”…சிரிப்பு வருது சிரிப்பு வருது”சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது…..என்று அருமையாக எழுதியிருப்பார் கவியரசர்.

  அடுத்து சில தீயவர்களால் மிரட்டப்பட்டு சிரிப்பையே தொலைத்திருந்த தன் தங்கை அச்சத்தை விட்டு சிரிக்கும்போது ஒரு அண்ணன் மனமகிழ்ந்து பாடும் பாடல் –

  “வசந்தம் சிரித்தாலே வண்ண தேன் பூ மலரும்,வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்

  அம்பிகை சிரித்தாலேஆலயம்அழகொளிரும் -அம்மமா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்”- என்று உவமையோடு கலக்கியிருப்பார் கவிஞர் வாலி-தங்கச்சி சிரித்தாளே செவ்விதழ் விரித்தாளே-மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே….

  இன்னொரு வகையான பாடல் -“கலகலவென சிரி கண்ணில் நீர் வர சிரி -சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர்,சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் ” என்று ஒரு சிறிய விழாவில் நகைச்சுவை பரிமாற்றமாக அமைந்த பாடல்-பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமே,சிரி சிரி சிரி சிரி… என்று வித்தியாசமாக அமைந்த கவிஞர் வைரமுத்துவின் சிரிப்பு பாடல்.

  என்ன…கவலைகளை கொஞ்சம் ஒதுக்கி நாமும் சிரித்து மகிழ்வோமே ….

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:

  பாடல்-சிரிப்பு வருது சிரிப்பு வருது

  படம்-ஆண்டவன் கட்டளை

  எழுதியவர்-கவியரசர் கண்ணதாசன்

  பாடியவர்-சந்திரபாபு

  இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி

  பாடலின் சுட்டி- http://youtu.be/54qGTIOkuww

  பாடல்-தங்கச்சி சிரித்தாளே

  படம்-சிவப்பு சூரியன்

  எழுதியவர்-கவிஞர் வாலி

  பாடியவர்-மலேஷியா வாசுதேவன்

  இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்

  பாடலின் சுட்டி- http://youtu.be/QML2Nn-fhy0

  பாடல்-சிரி சிரி சிரி சிரி

  படம்-ஆளவந்தான்

  எழுதியவர்-கவிஞர் வைரமுத்து

  பாடியவர்கள்-கமலஹாசன்,மகாலக்ஷ்மி ஐயர்

  இசை-ஷங்கர் இஷான் லாய்

  பாடலின் சுட்டி –  http://youtu.be/PySy84R-DDo

  நா. ராமச்சந்திரன்

  பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams

   
  • amas32 10:41 pm on October 22, 2013 Permalink | Reply

   அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு, இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு. இதுவும் ஒரு அருமையான் பாடல். ரிக்சாக்காரன் படத்தில் குழந்தையைப் பார்த்து MGR பாடும் பாடல். இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் அருமை.

   ஆளவந்தான் படப் பாடல், சிரி சிரி சிரி சிரி ஒரு வித்தியாசமானப் பாடல், எனக்கு ரொம்பவும் பிடிக்கும் 🙂

   நல்ல பதிவு, எப்பொழுதும் போல 😉

   amas32

   • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

    மிக்க நன்றி amas32

  • Uma Chelvan 12:25 am on October 23, 2013 Permalink | Reply

   மார்கழி பனி போல் உடை அணிந்து
   செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து

   சிரித்தால் தங்க பதுமை..
   அட அட என்ன புதுமை …….very beautiful and a very very beautiful post!!!

   • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

    Uma Chelvan மிக்க நன்றி

  • மின்னல்சுதா (@sweetsudha1) 1:12 pm on October 23, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு !! தகுந்த பாடல்களை மேற்கோளிட்டு காட்டியிருந்தது பதிவுக்கு அழகு சேர்த்தது !! இன்னும் நிறைய எழுதவும் !!

   • rajinirams 10:05 pm on October 23, 2013 Permalink | Reply

    மிக்க நன்றி

 • G.Ra ஜிரா 4:42 pm on August 18, 2013 Permalink | Reply  

  ’இச்’சுவை 

  ஒரு இளம் டாக்டர் இருந்தார். எச்சில் பண்டங்களை விலக்கினாலே பாதி நோய் போய் விடும் என்று ஊருக்கெல்லாம் உபதேசித்துக் கொண்டிருந்தார்.

  அவருக்கும் காதல் வந்தது. காதல் வந்ததால் டாக்டரும் கவிஞரானார். காதலியிடம் சொல்வதற்காக ஒரு கவிதை எழுதினார்.

  எச்சில் பண்டம் விலக்கு
  அதில் முத்தம் மட்டும் விலக்கு

  எச்சில் பண்டங்களையெல்லாம் விலக்கச் சொன்ன அந்த டாக்டரே முத்தம் என்னும் எச்சில் பண்டத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறார். அதுதான் முத்தத்தின் வலிமை.

  அன்பை வெளிப்படுத்தும் எளிய முறைதான் முத்தம். முத்தமிடாத காதலர்கள் காதலின் சாபங்கள்.

  திரைப்படத்தில் முத்தக் காட்சிகளுக்காகவே பெயர் போன கமலஹாசன் எழுதி சங்கர் மகாதேவன் இசையமைத்த அந்தப் பாடல் விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம் பெற்றது.

  ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
  ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
  எதிர்பாராமலே அவன்………..
  எதிர்பாராமலே அவன்……. ஓ
  பின் இருந்து வந்து என்னை
  பம்பரமாய் சுழற்றி விட்டு
  உலகுண்ட பெருவாயன் – எந்தன்
  வாயோடு வாய் பதித்தான்

  உலகத்தையே படைத்தவனும் அந்த உலகத்தையே தன் வாயில் காட்டியவனும் ஆன ஆண்டவனுக்கே முத்தத்தை விலக்க முடியவில்லை. சாதாரண மானிடர்கள் என்ன செய்வார்கள்?!

  ஆண்களுக்கு மட்டும் தான் முத்தம் பிடிக்குமென்று யார் சொன்னது?

  கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,
  திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ

  இப்படி கவிதையாய்க் கதறி அழுததும் ஒரு பெண் தான். கிருஷ்ணனின் செங்கனியிதழின் சுவையை சுவைக்க விரும்புகிறாள். ஆனால் வாய்ப்புதான் கிடைக்கவில்லை. ஆண்டவர்களும் ஆள்பவர்களும் சாமானியர்களுக்காக இறங்கி வருவதில்லை என்பது ஆண்டாளுக்கே புரியவில்லை.

  வெண்ணை உண்டவன் வாய்ச்சுவை எப்படியிருக்கும்? அதில் கற்பூரம் மணக்குமோ? (அதென்ன சர்க்கரைப் பொங்கலா?) அல்லது தாமரை மலரின் மணம் வருமோ? (தாமரைக்குத்தான் மணமே கிடையாதே!) இல்லை தித்திப்பாகத்தான் இருக்குமோ? (பாயசம் குடித்த வேளையில் இந்த ஆயாச எண்ணம் தோன்றியிருக்குமோ!)

  ஆண்டாளாலால் முடிவுக்கு வர முடியவில்லை. முத்தச் சுவை எப்படியிருக்கும் என்று யாரைக் கேட்க முடியும்? கேட்டால் செருப்பால் அடிக்குமே சமூகம். அந்தக் கேசவனின் சங்கைக் கேட்கலாம் என்று முடிவுக்கு வருகிறாள்.

  அந்தச் சங்கை தானே வைகுந்தன் வாய் வைத்து ஊதுகிறான். அப்படியானால் அந்தச் சங்குக்கு பீதாம்பரனின் வாய்ச்சுவை தெரிந்திருக்க வேண்டுமல்லவா! அதனால்தான் சங்கிடம் கேட்கிறாள்.

  மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே
  விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே!

  இன்றைய கவிஞர்களில் முத்தத்தைப் பாடாத கவிஞர்களே இல்லை. எடுத்துப் பட்டியல் இட்டால் படத்துக்கொரு முத்தம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  பாடலின் சுட்டி – http://youtu.be/XuOgG2QWAgQ

  அன்புடன்,
  ஜிரா

  260/365

   
  • Uma Chelvan 7:04 pm on August 18, 2013 Permalink | Reply

   very nice write up………as you said, thousands of songs out there to discuss about this. One such a song in ………” நீல நதிக்கரை ஓரத்தில்
   நின்றிருந்தேன் ஒரு நாள்….
   உந்தன் பூவிதழ் ஈரத்தில்
   என்னை மறந்திருந்தேன்….பல நாள்!
   வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல்
   தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில்
   மூடி மறைத்திருந்தேன்..! ”
   (படம்: காக்கிச் சட்டை – பாடல்: பட்டுக்கன்னம்)

  • rajinirams 8:45 pm on August 19, 2013 Permalink | Reply

   இச்சை கொண்டு தாங்கள் போட்ட பதிவு மிக்க சுவை. பத்து பதினாறு முத்தத்தில் ஆரம்பித்தால் முத்தம் போதாதே.என்றும் எண்ணி சொல்லவா என் முத்தக்கணக்கு என பல முத்தப்பாடல்கள் உண்டு.திரையில் வந்த உதட்டு முத்த காட்சியென்றால் அது கமல்-காதரின் தோன்றிய சட்டம் என் கையில் படமே.இன்று வரை முத்த நாயகனாகவே இருக்கிறார். இதை வைத்து 4 நாட்களுக்கு முன் நான் போட்ட ட்விட்- திரையில் பல நடிகைகளின் வாய்க்கும் முத்தமிட கமலுக்கு மட்டுமே வாய்க்கும். நன்றி.

 • mokrish 10:13 pm on July 21, 2013 Permalink | Reply  

  கொஞ்சம் மிருகம் நிறைய கடவுள் 

  ஏதோ ஒரு சானலில் நடிகர் விவேக் ‘எனக்குள் தூங்கிக்கிட்டிருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பாதே’ என்று தேவர் மகன் spoof ல் பேசுவதைக் கேட்டேன். இது நாம் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.. ‘கோபம் வந்தால் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. அதே அர்த்தம். வார்த்தைகள் முன்னே பின்னே மாறி வரலாம்.

  அதென்ன மிருகம்? கண்ணதாசனைக் கேட்கலாம். சித்தி படத்தில் ஒரு பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் ஏ எல் ராகவன் குழுவினர்) கொஞ்சம் definition கிடைக்கிறது. ttp://www.youtube.com/watch?v=jelFpEUGkuc

  இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி

  மனிதன் ஆனதடா – அதிலே

  உள்ளம் பாதி கள்ளம் பாதி

  உருவம் ஆனதடா

  என்று ஆரம்பித்து ‘தந்திரத்தில் நரி தன்னலத்தில் புலி, அலைவதில் கழுதை’ போன்ற மனிதனை வனத்திலே விட்டு விட்டால் மிருகம் எல்லாம் வரவேற்கும் என்று நக்கல் செய்கிறார்.

  ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் ஆறு கட்டளை சொல்லும் ஆறு மனமே ஆறு பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) இன்னொரு பாதியையும் சேர்த்து விளக்குகிறார் http://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc

  ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்

  அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

  இதில் மிருகம் என்பது கள்ள மனம்,

  உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

  எல்லாரிடமும் தெய்வமும் மிருகமும் இருக்கும், பொதுவாக வெளியில் தெரியும் முகம் எது என்பதை வைத்தே சமுதாயம் ஒரு மனிதனின் தன்மையை எடை போடும். எப்போதும் பெருமாள் முகம் காட்ட ஆசைப்பட்டாலும் அவ்வப்போது சிங்க முகம் வெளியில் தெரியும். இதுவே நடைமுறை நிஜம். ஆளவந்தான் படத்தில் வைரமுத்து எழுதிய ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற பாடலில் மிருகமே ஜெயிக்கிறது என்று சொல்கிறார் http://www.youtube.com/watch?v=Gz_BunTylIM

  கடவுள் பாதி மிருகம் பாதி

  கலந்து செய்த கலவை நான்

  வெளியே மிருகம் உள்ளே கடவுள்

  விளங்க முடியாக் கவிதை நான்

  மிருகம் கொன்று மிருகம் கொன்று

  கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்

  ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று

  மிருகம் மட்டும் வளர்கிறதே

  கண்ணதாசன் ஆலயமணி படத்தில் சட்டி சுட்டதடா என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) இதே போராட்டம் பற்றி வேறு கோணம் சொல்கிறார். இறுதியில் தெய்வம் வெல்லும் என்கிறார். http://www.youtube.com/watch?v=DkIfGXXDP3g

  பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

  மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

  ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா

  அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

  உள்ளே ஒரு பெரும் போராட்டம். அதில் வெல்லப்போவது யார்? எப்போதும் தெய்வம் வெற்றி பெறுவது போல ஏதாவது match fixing பண்ண முடியுமா?

  மோகனகிருஷ்ணன்

  232/365

   
  • amas32 6:38 pm on July 24, 2013 Permalink | Reply

   புராண காலத்தில் அசுரன் தேவன் என்றுத் தனித் தனியாகப் பிரித்து இரு குலமாக வாழ்ந்தனர். கலி காலத்தில் ஒரு மனிதனுக்குள்ளேயே அரக்கத்தனமும் தெய்வ குணமும் ஒருசேரக் குடியிருக்கிறது. அதனால் அவனின் அந்த நேர இயல்புக்கேற்ப அவன் அசுரனா தேவனா என்று கணித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

   துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று ஒரு பழமொழி உள்ளது. ஆனால் சமயத்தில் அவருள்ளும் நல்ல குணம் தலைத்தூக்கும் பொழுது போற்றத்தான் வேண்டியுள்ளது!

   amas32

 • என். சொக்கன் 10:48 am on January 31, 2013 Permalink | Reply  

  உலகை மறந்த பூங்கோதை 

  • படம்: விஸ்வரூபம்
  • பாடல்: உன்னைக் காணாது
  • எழுதியவர்: கமலஹாசன்
  • இசை: சங்கர், எஹ்சான், லாய்
  • பாடியவர்கள்: கமலஹாசன், சங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=fJ0LEFx44bY

  பின்னிருந்து வந்து எனைப் பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு

  உலகுண்ட பெருவாயன் என் வாயோடு வாய் பதித்தான்,

  இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

  இந்தப் பூங்கோதை மறந்தாளடி!

  ’விஸ்வரூப’த்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை முதல்முறை கேட்கும்போதே, ‘ஆண்டாள் Dictate செய்ய, கமலஹாசன் எழுதியதுபோல் இருக்கிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டேன். அந்த அளவுக்கு இந்தப் பாடலின் வரிகளில் ஆழ்வார் நிழல். நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள் நேரடியாகவும், மற்ற பல ஆழ்வார்கள் நாயகி பாவத்திலும் எழுதிய காதல் வரிகளை அடியொற்றி மிக அழகான ஒரு நவீனக் காதல் பாடலை எழுதியுள்ளார் கமலஹாசன்.

  குறிப்பாக, ‘உலகுண்ட பெருவாயன்’ என்ற வர்ணனை பலரை ஈர்த்துள்ளது. திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரி அது:

  இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம், இலங்கு ஒலி நீர் பெரும்பௌவம் மண்டி உண்ட

  பெரு வயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம், பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ

  ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெருவாயர் இங்கே வந்து, என்

  பொருகயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

  தோழி,

  என் காதலனாகிய திருமால், பெரிய சத்தத்தை எழுப்பும் அலைகளைக் கொண்ட கடலுக்குள் மூழ்கி, அந்தத் தண்ணீர் மொத்தத்தையும் குடிக்கும் அளவுக்குப் பெரிய வயிறைக் கொண்டவன், உலகத்தையே கையில் ஏந்தி உண்ணும் அளவுக்குப் பெருவாயன், கருத்த மேகத்தைப்போன்றது அவனுடைய வண்ணம், பெரும் தவங்களைச் செய்த முனிவர்கள் சூழ, ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரத்துடன் அவன் இங்கே வந்தான்.

  ஆனால், அவன் இங்கேயே (என்னுடன்) நிரந்தரமாகத் தங்கவில்லை. ‘தண்ணீரால் சூழப்பட்ட திருவரங்கம்தான் என்னுடைய ஊர்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டான்.

  அவன் என்னை விட்டுப் பிரிந்ததால் சண்டையிடும் கயல் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களில் நீர் ததும்பியது, எனது உடல் மெலிந்தது, இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தன.

  சுமாரான விளக்கவுரைதான். ஆழ்வார் தமிழை அழகு குறையாமல் Remix செய்வது அத்தனை சுலபமில்லையே!

  ஆனால், இதை வைத்து உங்களுக்குக் காட்சி புரிந்திருக்கும். திருமாலின்மீது காதல் கொண்ட பெண், தன்னுடைய தோழியிடம் இப்படிச் சொல்கிறாள். திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான் என்று ஊகிக்கிறேன். ஆண் குரல்கள் பாடியிருப்பதுதான் ஒரே வித்தியாசம்.

  அதனால் என்ன? திருமங்கை ஆழ்வாரும் ஆண்தானே?

  ***

  என். சொக்கன் …

  31 01 2013

  061/365

   
  • Jayashree Govindarajan 11:07 am on January 31, 2013 Permalink | Reply

   “உலகமுண்ட பெருவாயா”- என்று முதலில் அழைத்தவர் நம்மாழ்வார். (ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி முதல் பாசுரம்)

   கமல் கவிதையில் எழுதிய “அதுஇதுஉது” (மன்மதன் அம்பு) கூட நம்மாழ்வாரிடம் எடுத்ததே.

  • amas32 (@amas32) 2:00 pm on February 1, 2013 Permalink | Reply

   தற்போது எனக்கு மிகவும் விருப்பமான வரிகளைக் கொண்ட திரைப்பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி 🙂

   ஆமாம், எனக்கும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது ஆழ்வார்கள் நினைவு தான் வரும். நாயகி பாவத்தில் எழுதப்பட்ட வரிகள். வைஷ்ணவ சம்பிரதாயப் படி திருமால் ஒருவனே ஆண் மற்ற அனைத்து ஜீவராசிகளும் பெண்கள் தான். அதனால் தான் காதல் ரசம் சொட்ட இருக்கும் பாடல் கூட பக்திப் பாடலாக உருமாறிவிடுகிறது!

   amas32

  • Mohanakrishnan 11:18 pm on February 1, 2013 Permalink | Reply

   சொன்னது நம்மாழ்வாரோ திருமங்கையாழ்வாரோ. ஆனால் திருமாலை உலகுண்ட பெருவாயனாக நேரில் பார்த்தது யசோதை தான் என்று நினைக்கிறேன். கண்ணனின் அந்த சின்ன வாயில் உலகம் கண்டவள் அவள்.

  • Mohanakrishnan 11:19 pm on February 1, 2013 Permalink | Reply

   எப்போதோ படித்த கவிதை ஒன்று

   ‘கண்ணன் வாயை திறக்கட்டும்
   உலகம் தெரியவில்லை என்றால்
   நீ யசோதை இல்லை’

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel