Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 8:28 pm on October 22, 2013 Permalink | Reply  

  மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… 

  இன்றைக்கு எதைப்பற்றி நாலு வரி நோட் எழுதலாம் என்று நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்மீது ஓர் எறும்பு ஊர்ந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன?

  சட்டென்று ‘ருக்குமணி ருக்குமணி’ பாடல்தான் மனத்தில் ஓடியது. ‘சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு, சீனிக்குள்ள எறும்பு மாட்டிகிட்ட கணக்கு’ என்று அழகாக முதலிரவுக் காட்சியைப் பதிவு செய்திருப்பார் வைரமுத்து.

  வாலிக்கும் எறும்பு பிடிக்கும், அதைவிட, வார்த்தை விளையாட்டு பிடிக்கும், வைரமுத்துவைப்போலவே அவரும் சர்க்கரையாகக் காதலையும், எறும்பாகக் காதலர்களையும் வர்ணித்து ‘சக்கர இனிக்குற சக்கர, அதில் எறும்புக்கு என்ன அக்கறை?’ என்று கேட்பார் குறும்புடன்.

  வைரமுத்துவுக்குமட்டும் குறும்புத்தனம் இல்லையா என்ன? ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு?’ என்று காதலியைக் கேட்கவைத்து, ‘கண்ணே, நீ வெல்லமுன்னு கட்டெறும்பு தெரிஞ்சுகிச்சு’ என்று காதலனைப் பதில் சொல்லச்செய்வார்.

  வாலி இன்னொரு படி மேலே போய், கட்டெறும்பு காதலியைமட்டுமா? அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா!’

  காதலி சம்மதம் சொல்லிவிட்டால்தான் வெல்லம், இல்லாவிட்டால், கண்ணாடி ஜாடிக்குள் இருந்து கைக்கு எட்டாத குலாப் ஜாமூன். ‘இமய மலை என்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை’ என்று வைரமுத்துவின் வரி.

  எறும்பு காதலுக்குமட்டுமல்ல, மற்ற விஷயங்களுக்கும் உவமையாகும், ‘ஈ, எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ என்று கடவுளிடம் வேண்டும் சின்னப் பிள்ளைக்கு வாலி எழுத, ‘நம்பிக்கையே நல்லது, எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்பார் வைரமுத்து.

  என்ன திரும்பத் திரும்ப வாலி, வைரமுத்து? மற்ற கவிஞர்கள் யாரும் எறும்பை எழுதவில்லையா?

  ஏன் இல்லாமல்? ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்று அதிரவைத்து, ‘என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று தத்துவம் சொன்னாரே கண்ணதாசன்!

  இழிவாக நினைக்காதீர்கள், சிறு எறும்பும் கவி எழுத உதவும்!

  ***

  என். சொக்கன் …

  22 10 2013

  324/365

   
  • amas32 9:49 pm on October 22, 2013 Permalink | Reply

   a very different 4varinote from you! எறும்பூர கல்லும் தேயும், அது போல கொஞ்சம் கொஞ்சமாக காதலனும் காதலியின் மனதை விடா முயற்சியால் மாற்றிவிடலாம். அதற்கும் அந்த எறும்பு பழமொழி உதவுகிறது 🙂

   சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது, உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவும் 🙂 http://www.youtube.com/watch?v=0V7ezrT_d94

   amas32

  • rajinirams 4:51 pm on October 23, 2013 Permalink | Reply

   அடடா.கலக்கிட்டீங்க. எறும்பு பற்றிய பாடல்களை-நினைவு வைத்து தொகுத்தது-சான்ஸே இல்லை.நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது-அகரம் இப்போ சிகரம் ஆச்சு-என்னைக்கவர்ந்த வைர வரிகள்.கஜேந்திரா படத்தில் பா.விஜய்யின் பாடல் ஒன்று-எறும்பு ஒண்ணு என்னை வந்து என்னென்னமோ பண்ணுது…நன்றி.

 • mokrish 11:48 am on August 29, 2013 Permalink | Reply  

  கண்ணன் பிறந்தான் 

  இன்று கண்ணன் பிறந்த நாள். ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்த நாள்.

  அந்த ஒரு நாள் இரவில் நடந்த சம்பவங்கள்,  பல திருப்பங்கள் கொண்ட ஒரு த்ரில்லர். கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, இருள் சூழ்ந்த ஒரு சிறைச்சாலைக்குள், குழந்தை ஒன்று பிறந்தது. இரவோடு இரவாக, தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடிய யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்று நந்தகோபரிடம் ஒப்படைத்தார்.

  ஒப்பற்ற தேவகியின் மகனாகப் பிறந்து அந்த இரவிலேயே மற்றோர் ஒப்பற்ற பெண்ணாகிய யசோதையிடம் வந்து வளர்ந்தாய்.என்று சொல்லும் ஆண்டாள் பாசுர வரிகள்

  ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்-

  ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

  யசோதைக்கு அடித்தது மிகப்பெரிய ஜாக்பாட். அந்த மாயன் கோபாலகிருஷ்ணனை,  ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்டும் பெரும்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது. இதை  பாபநாசம் சிவன் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=efsqGgf2KUg

  என்ன தவம் செய்தனை யசோதா

  எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

  என்ன தவம் செய்தனை யசோதா

   என்ற வரிகளில் சொல்கிறார்.

  பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். இந்த core கருத்தை  கண்ணதாசன் அன்னை என்ற படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் (இசை ஆர். சுதர்சனம், பாடியவர் பானுமதி)

  http://www.youtube.com/watch?v=wigeyu943kM

  பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று

  பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

  காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா

  கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா

  வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார்

  பத்து மாத பந்தம் என்ற படத்தில் ‘இரண்டு தாய்க்கு ஒரு மகள்’ என்ற பாடலில் இதே கருத்தை மறுபடியும் சொல்கிறார். (இசை சங்கர் கணேஷ் பாடியவர் பானுமதி)

  ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

  ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

  கண்ணனும் உனைப்போலே பிள்ளை தானம்மா

  பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

  படத்தின் காட்சிக்கு ஏற்ற வரிகள். பாடல் வரிகளில் கண்ணன் கதையும் ஆண்டாள் பாசுரமும்  அடுக்கி எழுதுகிறார்.

  மோகனகிருஷ்ணன்

  271/365

   
  • pvramaswamy 11:57 am on August 29, 2013 Permalink | Reply

   All song selections superbly blend with excellent description. Great

  • Nagarajan 1:42 pm on August 29, 2013 Permalink | Reply

   annai – music by R Sudarsanam and not by KVM

  • rajinirams 3:06 pm on August 29, 2013 Permalink | Reply

   கிருஷ்ண ஜெயந்திக்கான பதிவு தாங்கள் இடுவதும் நல்ல பொருத்தமே:-)) தேவகி மகனாய் பிறந்து யசோதையிடம் வளர்ந்த கண்ணன் நிலையை வைத்து உருக்கமான பாடல்கள் கொண்ட நல்ல பதிவு. (பாடலின் சூழல் தெரியாது என்றாலும்) புகுந்த வீடு படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண்ணன் பிறந்த வேளையிலே தேவகி இருந்தாள் காவலிலே” பாடலும் அருமையான பாடல். நன்றி.

  • Kennedynj 4:34 pm on August 29, 2013 Permalink | Reply

   wonderful research Mohan. Can feel your enjoying the old epics. Thanks for passing the benefit of your readings to us. These writings keeps us enlightened.

  • amas32 4:44 pm on August 29, 2013 Permalink | Reply

   யசோதை பிரசவித்தாள். குழந்தை மாறியது அவள் தவறல்லவே. ஆனால் பிரசவித்த தேவகி குழந்தையைப் பிரிந்து அந்த தெய்வக் குழந்தையின் பால பருவத்தை அனுபவிக்காமல் போனது அவளுக்குப் பெரும் இழப்பு தான்.

   பல சமயம் நாம் யசோதை குழந்தை பாக்கியம் இல்லாதவள், அவளுக்கு ஓசியில் குழந்தை பாக்கியம் கிடைத்த மாதிரி எண்ணுவோம்.

   அவளின் பாக்கியம் இறைவனை சீராட்டிப் பாலூட்டி வளர்த்து, நெஞ்சார அணைத்து, அவன் செய்யும் தவறுகளையும் தண்டிக்கும் பேற்றினைப் பெற்றது தான்.

   யசோதா – கிருஷ்ணன் உறவு என்னை மிகவும் நெகிழச் செய்யும்.

   அற்புதப் பாடல்கள் மோகன கிருஷ்ணா! நன்றி 🙂

   amas32

 • mokrish 9:56 am on July 6, 2013 Permalink | Reply  

  கத்துக்கணும்! 

  ஆபீசில் புதிதாக சேர்ந்தவர்களுக்காக Orientation ப்ரோக்ராம் ஒன்றில் பேச அழைத்தார்கள். கல்லூரி படிப்பு முடித்து அவர்களது முதல் வேலைக்கு வந்திருக்கும் யுவன் யுவதிகளிடம் கம்பெனியின் வீர தீர பராக்கிரமங்கள், வரலாறு, பூகோளம் எல்லாம் சொல்லி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை ஜிகினா பேப்பர் ஒட்டி அவர்கள் கண் முன் விரிக்கும் முயற்சி. கல்லூரி என்ற கனாக் காணும் காலத்திலிருந்தவர்களுக்கு நிஜ உலகுடன் ஒரு அறிமுகம் கொடுக்கும் சம்பிரதாயம்.

  டெக்னாலஜி சார்ந்த அறிவுரைகளை விடுங்கள். அதன் பின் வரும் Abstract விஷயங்கள் கொஞ்சம் அதிகம்தான். அடித்து துவைத்துப்போட்ட கருத்துகள். ‘ஏட்டில் படித்தது கொஞ்சம்தான். இந்த வேலையில் உங்கள் அறிவு திறமை, நடத்தை, மனப்பான்மை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து உழைத்தால் உயர்வு’ என்ற செய்தியை மறுபடி மறுபடி வலியுறுத்தும் பேச்சு.

  “உங்கள் Comfort zone ஐ விட்டு வெளியே வாருங்கள், நிறைய இடையூறுகள் இருக்கும், உங்கள் பாஸ் வழிகாட்டுவார், டீம் வொர்க் முக்கியம், மற்றவர்களின் நிலை புரிந்துகொள்ள வேண்டும், அறிவு, திறமை தவிர நல்ல மனப்பான்மை, நேர்வழி, integrity எல்லாம் வேண்டும்”

  என்பதை ஒலியும் ஒளியும் சேர்த்து திணற திணற அடித்து…

  சட்டென்று ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது. அன்புக்கரங்கள் படத்தில் வாலி எழுதிய ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற பாடல் (இசை ஆர் சுதர்சனம் பாடியவர் டி.எம். சௌந்தரராஜன்)

  http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

  ஒண்ணா இருக்க கத்துக்கணும்

  இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்

  காக்கா கூட்டத்தை பாருங்க

  அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க

  என்று டீம் வொர்க் பற்றி சொல்லி பாடல் ஆரம்பம். அதன் பின் நிஜ உலகுக்கு வருவது, நமக்கு மேல் இருக்கும் தலைவன் என்று தொடர்கிறார்

  வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்

  அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்

  உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா

  அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா

  அடுத்து empathy, compassion என்ற கருத்தை, அடுத்தவரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லும் வரிகள்

  தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே

  அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே

  பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை

  இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை

  முடிவாக நாம் சந்திக்கும் இடயூறுகள், அவற்றை வெல்லும் வழி சொல்லும் எளிமையான வரிகள்.

  கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்

  வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்

  நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்

  நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

  நேர்மை தான் வெற்றியின் ரகசியமே. அவ்வளவுதானே மேட்டர் ? இனிமேல் இந்த onboarding, induction, orientation என்று எதுவாக இருந்தாலும் இந்த பாடலை ஒலிக்க விட்டு, பின் நேராக கேள்வி நேரம் நடத்தலாம் என்று ஒரு யோசனை.

  மோகனகிருஷ்ணன்

   
  • Uma Chelvan 7:19 pm on July 6, 2013 Permalink | Reply

   தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே

   அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே

   பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை

   இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை enna oru arumaiyana paadal!!!

 • G.Ra ஜிரா 10:02 pm on April 22, 2013 Permalink | Reply
  Tags: எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா   

  யாழிசை உந்தன் மொழி 

  துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
  இன்பம் சேர்க்க மாட்டாயா
  எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
  அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
  அல்லல் நீக்க மாட்டாயா
  பாடல் – பாவேந்தர் பாரதிதாசன்
  இசை – ஆர்.சுதர்சனம்
  பாடியவர்கள் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா
  படம் – ஓர் இரவு
  நடிகர்கள் – லலிதா, அக்கினேனி நாகேஸ்வரராவ்
  பாடலின் சுட்டி – http://youtu.be/MW4Rm1YkVuo

  திரைப்படப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா என்று விவாதிக்கும் நேரத்தில் இலக்கியங்களும் திரைப்படப் பாடல்கள் ஆனதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

  பாவேந்தரின் கவிதையில் நிறைந்து ததும்பும் தீந்தமிழானது யாழிசையாய் நெஞ்சில் கலந்து அல்லல் நீக்கி இன்பம் சேர்ப்பது உண்மைதான்.

  ஆனால் யாழ் பாரம்பரிய இசை மேடைகளில் இன்று இல்லை. ஆனாலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் வழியாகவும் யாழ் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

  அதையும் விட இன்னொரு எளிய வழி இருக்கிறது. அதுதான் விபுலானந்த அடிகளார் எழுதிய யாழ்நூல் என்ற நூலைப் படிப்பது. இலங்கை யாழ்பாணத்து மட்டக்களப்பில் பிறந்த மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய செறிவான நூல்தான் “யாழ்நூல்

  யாழ்நூல் 1947ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி இலங்கையின் திருக்கொள்ளம் புதூர் கோயிலில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனவாம். அந்த யாழ்களை இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம் அடிகளார் மீட்டி இன்னிசை பொழிந்தாராம். அந்த யாழ்களுக்கும் பின்னாளில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

  சரி. யாழின் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாக யாழ் மூன்று விதங்களில் வகைப்படுத்தபடும்.
  1. யாழின் வடிவம்
  2. யாழ் பயன்படுத்தப்பட நிலம்
  3. வாசிக்கப்படும் பண்கள் மற்றும் இசைமுறைகள்

  வடிவத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்
  வில்யாழ் – வில்லின் வடிவில் இருப்பது
  சீறியாழ் – சிறிய யாழ்
  பேரியாழ் – பெரிய யாழ். இதில் 21 நரம்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

  ஐவகை நிலங்கள் நாம் அறிந்ததே. அந்த நிலங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட யாழ்களும் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தந்த நிலப்பகுதிகள் இந்த யாழ்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
  குறிஞ்சியாழ்
  முல்லையாழ்
  மருதயாழ்
  நெய்தல்யாழ்
  பாலையாழ்

  இசை வளர்ச்சியின் அடிப்படையிலும் வாசிக்கப்படும் பண்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்.
  மகர யாழ்
  செங்கோட்டு யாழ்
  பேரியாழ்
  சகோடயாழ்
  மருத்துவயாழ்

  யாழ் வாசிக்கின்றவருக்குப் பண்ணறிவும் பாட்டறிவும் யாழிலக்கண அறிவும் நிறைந்திருக்க வேண்டும். யாழ் வாசிக்கின்றவரை யாழாசிரியர் என்றே அழைத்தார்கள்.

  யாழ் வாசிப்பதில் மிகச்சிறந்த திறம் பெற்றவர்களில் திரூநிலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். இவர் பக்தி இலக்கிய காலத்தவர். பாணர் குலத்தில் பிறந்திருந்ததால் திறமை இருந்தும் கோயிலின் வாயிலில் நின்றே யாழ் வாசிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானவர். இவரால் வாசிக்க முடியாதவாறு ஒரு பண்ணை திருஞானசம்பந்தர் பாடியதாகவும் சொல்வார்கள். அந்தப் பண் யாழ்முறிப்பண் என்றே அழைக்கப்பட்டது.

  தாம் பெற்ற மக்களின் மழகைக் குரலுக்கு அடுத்த படியாக குழலும் யாழும் இனிமை என்று திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

  குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
  மழலை சொல் கேளாதவர்

  அன்புடன்,
  ஜிரா
  142/365

   
  • amas32 2:52 am on April 23, 2013 Permalink | Reply

   I think Yaazh is very close to what we call Lute in English.
   துன்பம் நேர்கையில் மனத்துக்கு இதம் அளிப்பது நமக்கு நெருக்கமானவர்களின் ஆறுதல் வார்த்தைகளும் இனிமையான இசையும் தான். நமக்கு நெருக்கமானவர்களே இசைத்தார்கள் என்றால் துன்பம் நொடியில் விலகிவிடும் இல்லையா?

   /அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
   அல்லல் நீக்க மாட்டாயா/
   இந்த வரிகளும் அருமையாக உள்ளன!

   யாழைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் ஜிரா, நன்றி.

   amas32

  • GiRa ஜிரா 9:20 am on April 25, 2013 Permalink | Reply

   Lute, Harp and guitars are different types of யாழ்கள்.

   உண்மைதான். நெருக்கமானவர்களின் பேச்சு கூட பாடலாகுமென்று சொல்வார்களே.

 • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
  Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

  காசு மேலே, காசு வந்து… 

  ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

  ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

  அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

  பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

  எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
  பணத்தை எங்கே தேடுவேன்
  உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
  அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
  கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
  கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
  கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
  திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
  திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
  தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
  தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

  நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

  இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

  அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

  இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

  கையில வாங்கினேன்
  பையில போடல
  காசு போன எடம் தெரியல்லே
  என் காதலி பாப்பா காரணம் கேப்பா
  ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
  ஏழைக்கு காலம் சரியில்லே

  இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

  இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

  பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
  பூமேடை வாசல் பொங்கும் தேனாக
  ………………………………………………
  செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
  வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
  இன்பத்தின் மனதில் குளிப்பேன்
  என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

  இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

  காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
  வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
  அட சுக்கிரன் உச்சத்தில்
  லக்குதான் மச்சத்தில்
  வந்தது கைக்காசுதான்

  காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

  டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
  ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
  யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
  கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
  ……………………………………….
  கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
  கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

  என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

  பணம் என்னடா பணம் பணம்
  குணம் தானடா நிரந்தரம்

  பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

  பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
  எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
  கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
  காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
  டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

  அன்புடன்,
  ஜிரா

  114/365

   
  • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

   wow.. super.. thanks geeraa.. :)))))))

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

   ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி நண்பரே 🙂

  • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

   காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

   • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

    ஆமா ஆமா.

    ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

  • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

   போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

    அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel