Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 11:48 pm on November 29, 2013 Permalink | Reply  

  இல்லாததுபோல் இருக்குது 

  கண்ணதாசன் முன்னாள் நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா ஒரு திறனாய்வு நூலில்.

  “கண்ணதாசன் அறியாப் பருவத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். இளமையின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக மாறிவிடுகிறார். அந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் எழுதிய பாடல்களில் கடவுள் ஏற்பு காணப்படவில்லையே தவிர கடவுள் எதிர்ப்பும் காணப்படாதது ஒரு வியப்பே”

  என்று தொடங்கி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதற்குத் தன்னுடைய உயிரினும் இனிய கொள்கையை முதற்பலியாகக் கொடுத்துவிட்டு வெகுகாலமாக இருட்டறையில் புழுங்கிக்  கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்.

  இயக்கத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் தீவிர கடவுள் நம்பிக்கை! திரைப்பாடல்களில் அதை அழகாக வெளிப்படுத்தினார். அவ்வப்போது உரிமையுடன் நிந்தாஸ்துதியும் பாடினார்

  கண்ணதாசன் சண்முகப்பிரியா என்ற படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை சூலமங்கலம் ராஜலட்சுமி & ஜெயலட்சுமி, பாடியவர் டி எம் எஸ்)

  இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே

  இறைவன் இல்லை என்று சொன்னான் ஒரு மனிதன் இங்கே

  என்று தொடங்கி

  இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்

  இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்

  நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும்தானா? நாத்திகம் என்பது நம்பிக்கையற்று இருப்பதா? யோசித்தால் ஆத்திகர்களைப்போலவே நாத்திகர்களும் ஒரு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஒரே தேவன்’ என்றோ இயற்கை  என்றோ பெயரிட்டார்கள். ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் பிரபலமான வசனம் “May the Force be with you” குறிப்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி.

  இரு தரப்பிலும் இருந்ததால் ஆத்திக-நாத்திக வாதத்தை மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் வெற்றி வேல் வெல்லுமடா என்ற பாட்டில் வைக்கிறார்.

  http://www.youtube.com/watch?v=DvFZurTDX1A

  வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா

  கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா

  என்று இறைவன் பெருமை  சொல்லும் அண்ணன். ஆனால் தம்பி நாத்திகவாதி.

  இறைவன் ஆளும் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான்

  ஒருவர் வாழ ஒருவர் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்

  என்ற stock  கேள்வி கேட்கிறான்.பக்தியில் உருகும் அண்ணன் ‘குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா ‘ என்று சொன்னால் ‘குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா என்று பாடும் தம்பி.  பசியால் குழந்தைகள் வாடும்போது பாலபிஷேகம் எதற்கு  என்ற வழக்கமான வாதம்தான்.

  ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?

  மோகனகிருஷ்ணன்

  362/365

   
  • amas32 9:43 am on November 30, 2013 Permalink | Reply

   //ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?//

   இது தான் என் சித்தாந்தமும். என் மகன், பாடலில் தம்பி கேட்கும் கேள்விகளை தான் என்னையும் கேட்பான். உண்டியலில் போடும் பணத்திற்கு வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பிடிவாதமாக சாப்பாட்டு பேக்கட் வாங்கிக் கொடுப்பான். சுவாமிக்கு அலங்காரம் இருக்கும் போது இன்னும் ஏன் மலர்கள் வாங்கிப் போகிறாய் என்று கேட்பான். இதே பதில் தான் சொல்லுவேன். அதையும் செய் இதையும் செய்.

   அன்பு இருக்கும் இடத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருப்பது அரிது. வெளிப்படாமல் இருந்து ஒரு நாள் பிரவாகமாக வெடிக்கும்.

   வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙂

   amas32

  • rajinirams 10:54 am on November 30, 2013 Permalink | Reply

   கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்,இறைவன் உலகத்தை படைத்தானா அவன் தான் ஏழ்மையை படைத்தானா-ஏழ்மையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக? பாடல் சூழ் நிலைக்கேற்ப இப்படியும்-கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே, இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்-மனிதன் இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்- இப்படியும் பாடல் எழுதிய கண்ணதாசன் இறைவனுக்கும் பெயரை வைத்தான் பாடலின் இறுதியில்”இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்
   இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்” என்று முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.முதலில் நாத்திகராக இருந்த கவியரசர் பின் இறைவன் திருவடி சரணடைந்து பக்தியில் திளைத்ததோடு பல பக்தி பாடல்களையும் இலக்கியங்களையும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காவியத்தையும் தந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 • mokrish 11:04 pm on November 15, 2013 Permalink | Reply  

  மணியே மணியின் ஒலியே 

  புறநகரில் இருக்கும் கோவிலில் தீபாராதனையின்போது பக்தர்களே கோவில் மணியடித்து வழிபடுகிறார்கள். விசாரித்தபோது கிடைத்த தகவல் – கோவில் நிர்வாகம் மின்சாரத்தில் இயங்கும் கருவியை வாங்கலாம் என்று திட்டம் போட்டபோது காலனியில் வாழும் மக்கள் ‘புதிதாக உலோகத்திலான கோவில் மணியே வாங்கலாம், மணியடிக்க வேலையாள் தேவையில்லை, பக்தர்களே அந்த வேலையை செய்வோம்’ என்று சொல்லி, நன்கொடைகள் மூலம் செய்து முடித்திருக்கிறார்கள். சபாஷ்.

  கணீர் என்று ஒலிக்கும் மணி, இனிமையான மங்கள வாத்திய இசை இவையே கோவிலுக்கு அழகு. ஐயப்பன் கோவிலில் கேட்கும் மேள வாத்திய (செண்டை ?) இசை அருமை.  இப்போது சென்னையில் பல ஆலயங்களில் பூஜையின் போது மின்சார இசைதான் கேட்கிறது. மத்தளம், மணி, சேகண்டி என்று பல வாத்திய ஒலிகளின் கலவையாக ஒலிக்கும் இசை. வாத்தியத்தின் வடிவமைப்பை ரசிக்கும் அளவிற்கு ஒலியை ரசிக்க முடிவதில்லை.

  என் பள்ளிப்பிராயம் முழுவதும் ஒரு சிறு நகரத்தில்தான். கோவிலிலும் நான் படித்த கிறிஸ்துவ பள்ளியிலும் பெரிய அழகான உலோக மணிதான். அந்த நாதம் அன்றாட வாழ்வின் பகுதியாக இணைந்தே இருந்தது. மகிழ்ச்சி துக்கம் என்று எல்லா உணர்வுகளிலும் ஒரு அருமையான தோழனாக வந்த Reverberating ஒலி.

  கண்ணதாசன் மணியோசை படத்தில் எழுதிய  ‘தேவன் கோவில் மணியோசை’ என்ற பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேளுங்கள்

  http://www.youtube.com/watch?v=VGChKUDqAZI

  தேவன் கோவில் மணியோசை

  நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

  பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்

  பாசத்தின் ஓசை மணியோசை

  ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

  உதவும் கோவில் மணியோசை

  தாயார் வடிவில் தாவி அணைத்தே

  தழுவும் நெஞ்சின் மணியோசை

  இது உறவினை கூறும் மணியோசை

  இவன் உயிரினை காக்கும் மணியோசை

  என் விருப்பம் பாரம்பரியமான மணியோசைதான். ஆகம சாஸ்திரப்படி கோவிலில் மணியடிப்பது துர்தேவதைகளை விரட்டவே என்று படித்தேன். மின்சார மணியிலும் அதை விரட்ட முடியுமே என்றால் என்னிடம் பதில் இல்லை.

  மோகனகிருஷ்ணன்

  348/365

   
  • lotusmoonbell 11:40 pm on November 15, 2013 Permalink | Reply

   வெண்கல மணிக்கென்றே இருக்கின்ற தனி ஒலிஅதிர்வு அலைகள் மின்சார மணியோசையில் கேட்க முடியாதுதான். எனக்கு அந்தக் கால புகை விட்டுக்கொண்டு ஓலி எழுப்பும் ரயில் வண்டிச் சத்தமும் நினைவுக்கு வருகிறது. கண்ணதாசனின் பாடல் அருமை. மணியோசையைப் போல மறக்கமுடியாதது.

  • Uma Chelvan 11:57 pm on November 15, 2013 Permalink | Reply

   Lotusmoonbell,……….சொன்னது போல் வெண்கல மணிக்கு என்று ஒரு தனி ஒலி அதிர்வு உண்டு. அதுவும் கோவிலுக்குள் இருக்கும் பொழுது அதன் ஒலி மிகுந்த positive energy கொடுக்கும்.

   மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
   அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
   பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே.
   பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.

   -அபிராமி அந்தாதி

  • amas32 8:25 am on November 16, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. வடபழனி கோவிலில் அபிஷேகம் முடிந்து தீபாராதனையின் போது இப்பொழுது மின்சார ஒலி தான் எழும்பப்படுகிறது. எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். நான் சிறுமியாக இருக்கும் பொழுதிலிருந்து வடபழனி முருகனை தரிசிக்கச் செல்பவள். அப்பொழுதெல்லாம் கணீரென்ற மணி வெண்கல ஒலி தான். கூடவே தாளம், அதுவும் வெங்கலத்தில். அந்தத் பெரிய தாளத்தை அடிப்பவர் சந்நிதிக்கு வெகு அருகில் நிற்பார். காண்டா மணி ஓசையோடும் தாளத்தின் ஓசையோடும் ஜகஜ்ஜோஜோதியாகத் தீபாராதனை நடக்கும் போது உடம்பு தானாகப் புல்லரிக்கும். இந்த மின்சார சத்தம் எப்போ முடியும், எப்போ நிம்மதியா தரிசிக்கலாம் என்றே தற்போது தோன்றுகிறது.

   நல்ல பாடல் தேர்வு 🙂

   amas32

 • mokrish 10:06 pm on November 9, 2013 Permalink | Reply  

  உண்ணும் உணவும் நீரும் தந்த 

  பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் முடிந்தவுடன் திரை போட்டு அலங்காரம். பின் மஹா நைவேத்தியம். மடப்பள்ளியிலிருந்து ஒருவர் மூடிய பாத்திரத்தில் கொண்டு வந்ததை வைத்து நைவேத்தியம்

  இது வழக்கில் வந்த சொல். சரியான சொல் – நிவேதனம் இது இறைவனின் கருணையைப் போற்றுகிற விஷயம்.  அறிவிப்பது அல்லது காண்பிப்பது என்று பொருள். இறைவனுக்கு நாம் உணவு படைப்பதில்லை. அவன் கருணையினால் கிடைத்ததை, அவனுக்குக் காண்பித்து, அவன் உத்திரவுடன் அதை நாம் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை. இது எல்லா மதங்களிலும் உள்ள நம்பிக்கை. அந்த கருணை நீடித்துக் கிட்ட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். ஆங்கிலத்தில் Meal Time blessing என்று ஒரு பாடல்

  Thank you for the world so sweet,

  Thank you for the food we eat.

  Thank you for the birds that sing,

  Thank you God for everything.

  இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவை? ஒளவையார் அருளிய நல்வழியில்  

  பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

  நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்

  துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

  சங்கத் தமிழ்மூன்றும் தா.

  விநாயகரிடம் ஒரு Barter டீல். அருணகிரிநாதர் கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி என்று விநாயகர் விரும்பி உண்ணும் உணவுப் பொருள்கள் சொல்கிறார். திருப்பாணாழ்வார்

  கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

  உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

  என்று கண்ணன் தின்ற வெண்ணெய் பற்றி சொல்கிறார். சிவனுக்கு அன்னம், அனுமனுக்கு வடை, முருகனுக்கு பஞ்சாமிர்தம், பெருமாளுக்கு லட்டு வெண்பொங்கல்,புளியோதரை என்று ஒரு பெரிய மெனு கார்ட் இருக்கிறது.

  நமக்கு கிடைத்த உணவை இறைவனிடம் காட்ட வேண்டும் என்றால் ஏன் இந்த லிஸ்ட்? மனப்பூர்வமாக எதையும் கொடுக்கலாம் என்பதே உண்மை. கண்ணப்பரும், குகனும், சபரியும் குசேலரும் தந்த எளிமையான நிவேதனங்களை இறைவன் ஏற்றுக்கொண்டானே?

  ஆதி பராசக்தி படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) ஒரு மீனவன் தான் தரும் எளிய உணவை ஏற்றுக்கொள்ள சொல்லும் வேண்டுதல்

  http://www.youtube.com/watch?v=gRkiCrHRA-A

  ஆத்தாடி மாரியம்மா-சோறு

  ஆக்கி வெச்சேன் வாடியம்மா

  ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்

  தின்னு புட்டுப் போடியம்மா

  பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்

  பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே

  பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்

  மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

  நிவேதனம் செய்ய multi cuisine உணவோ அலங்காரமோ தேவையில்லை. தேவர் படம் ஒன்றில் பக்தர் முருகனுக்கு ஒரு லாரி லோடு வழைப்பழம் அனுப்புவார். லாரி ஓட்டுநர் போகும் வழியில் இரண்டு பழங்களை பசியில் வாடும் ஒரு குழந்தையிடம் தருவார். முருகன் பக்தரின் கனவில் தோன்றி ‘ நீ அனுப்பிய இரண்டு வாழைப்பழங்கள் வந்தாச்சு நல்லா இருப்பா’ என்பார். பசித்திருக்கும் ஒருவருக்கு அளிக்கும் உணவே சிறந்த நிவேதனம்.

  மோகனகிருஷ்ணன்

  342/365

   
  • Uma Chelvan 12:28 am on November 10, 2013 Permalink | Reply

   அன்பே தளிகையாய் ஆர்வம் நறுநெய்யாய்
   என்புதோல் போர்த்திய என்னுடலில் – அன்பொடுவக்
   கார அடிசில் உயிர்சமைத் தேன்கண்ணா
   நேராய் நுழைந்தே அருந்து…………

   இராமுருகன் ராமசாமியின் பழைய கவிதை. மிகவும் அருமையான ஒன்று !!!

  • rajinirams 1:10 pm on November 10, 2013 Permalink | Reply

   ரொம்பவே வித்தியாசமான ,விரிவான,அருமையான “நைவேத்திய”பதிவு. முருகன் பக்தரின் கனவில் தோன்றி ‘ நீ அனுப்பிய இரண்டு வாழைப்பழங்கள் வந்தாச்சு நல்லா இருப்பா’ என்ற “டச்” சூப்பர். நான் “இறை” தேடும் சாக்கில் “இரை”தேடுவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரைக்கு தான்-சூப்பராக இருக்கும்:-))

  • amas32 3:53 pm on November 10, 2013 Permalink | Reply

   எந்தக் கோவிலில் எந்தப் பிரசாதம் நன்றாக இருக்கும் என்று பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு நோட்டு புத்தகத்தில் லிஸ்ட் போட்டு வைத்திருப்பதாக வரும். மேலும் அவர் இந்தத் தகவல்களை சேகரித்து வைத்து அதை “இன்பர்மேசன் இச் வெல்த்” என்று சொல்லும் டயலாக் ட்விட்டர்களிடையே ரொம்பப் பிரபலம் 🙂

   இதில் முக்கியமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த உணவையும் இறைவனுக்குப் படைக்காமல் (காட்டாமல்) உண்ணுவது மலத்தை உண்ணுவதற்குச் சமம் என்று ஒரு உபன்யாசகர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். மனத்தால் இறைவா இது உனக்கு என்று சொல்லி அந்தப் பண்டத்தை அவன் பிரசாதமாகச் சாப்பிடுவதை நம் வழக்கமாகிக் கொள்ள வேண்டும். அவன் பிராசதமாக நம் உள்ளேப் போகும் எந்த உணவும் அமிர்தமாக மாறி நம்மை வாழ வைக்கும் என்பது நம்பிக்கை.

   amas32

  • pvramaswamy 6:55 pm on November 10, 2013 Permalink | Reply

   Beautiful

 • G.Ra ஜிரா 9:27 pm on October 21, 2013 Permalink | Reply  

  பக்திப் பயணங்கள் 

  வெளிநாட்டுக்கு காதல் பாட்டுகள் பாட ஒரு கூட்டம் போனால் பக்திப் பாடல்கள் பாடவும் ஒரு கூட்டம் போயிருக்கிறது.

  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இறையருட் கலைச்செல்வர் என்று அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கிய திரைப்படங்களில் வெளிநாட்டிலுள்ள கோயில்களும் வரும். படத்தின் பாத்திரங்கள் அந்தக் கோயில்களுக்குச் சென்று அழுது தொழுது உருகி மருகிப் பாடுவார்கள்.

  அதைத் தொடக்கி வைத்தது செந்தமிழ்த் தெய்வமான முருகக் கடவுள்தான். ஆம். வருவான் வடிவேலன் படத்தில்தான் முதன்முதலில் இலங்கையிலும் மலேசியாவிலும் இருக்கும் முருகன் கோயில்கள் பிரபலமாயின.

  இலங்கையின் கதிர்காமம் மிகவும் தொன்மையான முருகன் கோயில். இன்று தமிழ் அடையாளங்களை இழந்து சிங்கள அடையாளங்கள் கூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். நினைக்க வருத்தமாக இருக்கிறது.

  கதிர்காம யாத்திரை என்பது மிகப்பிரபலம். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலில் கதிர்காம யாத்திரை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம் பெறவில்லை. அது குறையல்ல. படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொடுத்தார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

  கதிர்காமத்திலிருக்கும் மாணிக்க கங்கையில் மோகனா, சிக்கல் சண்முக சுந்தரம், மோகனாவின் தாயார் வடிவாம்பாள், முத்துராக்கு அண்ணன், நட்டுவனார் முத்துக்குமார சுவாமி, வரதன் என்று எல்லாரும் முழுகி எழும் போது வடிவாம்பாளின் கையில் மட்டும் ரேகை ஓடும் மரகதக் கல் கிடைக்கும். மற்றவர்களை விட அந்த அம்மையார் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  அந்தக் கோயிலில் படமாக்கப் பட்ட பாடல்தான் வருவான் வடிவேன் திரைப்படத்தில் இடம் பெற்ற “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு” என்ற கண்ணதாசன் பாடல்.

  கண்ணிழந்த கணவனைக் கூட்டிக்கொண்டு யாத்திரை வரும் மனைவி பாடுவதாக அமைந்த பாட்டு.

  நீயின்றி யாருமில்லை விழி காட்டு
  நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளி காட்டு

  பாடலின் இறுதியில் “நாங்கள் கதிர்காமம் வந்ததற்கு பலனில்லையோ” என்று இறைஞ்சுவார்கள். முருகனருளால் கண் கிடைக்கும்.

  இதே கதிர்காமத்தில் இன்னொரு பாடல் எடுக்கப்பட்டது. பைலட் பிரேம்நாத் திரைப்படத்துக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய வாலியின் பாடல் அது.

  குழப்பத்தில் இருக்கும் தந்தை அந்தக் குழப்பம் நீங்க முருகனை நோக்கி காவடி எடுத்துப் பாடுவதாக அமைந்த பாடல் அது.

  முருகன் எனும் திருநாமம்
  முழங்கும் இடம் கதிர்காமம்
  குருபரணே சரணம் உந்தன் சேவடி
  தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி

  அடுத்து நாம் போக இருப்பது மலேசியா. அங்குள்ள பத்துமலை முருகன் கோயில் படிகளில் ஏறப் போகிறோம். தயாரா?

  பத்துமலைத் திரு முத்துக்குமரனை
  பார்த்துக் களித்திருப்போம்
  இந்துக் கடலில் மலேசிய நாட்டில்
  செந்தமிழ் பாடி நிற்போம்

  பத்துமலையில் நடக்கும் தைப்பூசத் திருவிழா மிகப் பெருமை வாய்ந்தது. உலகில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் இந்துத் திருவிழா என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்ல… இந்துக்கள் மட்டுமல்ல… சீனர்களும் அயல்நாட்டவர்களும் கூட காவடி எடுத்து வந்து முருகனை வணங்குவார்கள். அதையும் பாட்டில் வைத்தார் கண்ணதாசன்.

  சேவல் கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவண்டி
  உடன் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் மோகத்தை தந்தவண்டி

  இந்தப் பாடலை கண்ணதாசன் ஒருவரே எழுதியிருந்தாலும் பாடியவர்கள் ஆறு பேர். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எம்.எஸ்.விசுவநாதன், எல்.ஆர்.ஈசுவரி என்று ஆறு பேரும் பாடக் கேட்பதும் பரவசம்.

  இதே பத்துமலையில் இன்னொரு பாடலும் எடுக்கப்பட்டது. “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்துக்காக. இதுவும் இயக்குனர் கே.சங்கர் இயக்கி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த திரைப்படம் தான்.

  கணவனை இன்னொருத்தியிடம் திருட்டுக் கொடுத்த பெண் வேண்டிக் கொண்டு காவடி ஏந்தி மலையேறுவதாக அமைந்த பாடல்.

  வந்தேன் முருகா பத்துமலை
  நீ உணராயோ என் பக்தி நிலை

  பாடலைப் பாடிய நாயகியின் கோரிக்கையை பத்துமலை முருகன் நிறைவேற்றி வைப்பதாக காட்சி அமையும்.

  சமீபத்தில் பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி பத்துமலையில் படம் பிடிக்கப்பட்டாலும் அது பக்திப் பாடல் அல்ல.

  தமிழன் எங்கு போனாலும் பக்தியையும் மூட்டை கட்டிக் கொண்டு போகிறான் என்பதற்கு இந்தப் பாடல்களே சாட்சி. அதே போல தமிழன் உலகெங்கும் எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையெத்தனை கோயில்களைக் கட்டினாலும் தமிழ்க் கோயில் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவை முருகன் கோயில்கள் மட்டுமே என்பது அசைக்க முடியாத உண்மை.

  அதுவுமில்லாமல் இந்தப் பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்த பெருமை எம்.எஸ்.விசுவநாதன் என்னும் முருக பக்தருக்கே கிடைத்திருப்பதும் சிறப்பு.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

  பாடல் – நீயின்றி யாருமில்லை விழி காட்டு
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – வருவான் வடிவேலன்
  பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/v/Varuvaan%20Vadivelan/Neeyndri%20Yaarumullai.vid.html

  பாடல் – முருகனெனும் திருநாமம்
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – பைலட் பிரேம்நாத்
  பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/p/Pilot%20Premnath/Murugenendra%20Thirunamam.vid.html

  பாடல் – பத்துமலைத் திரு முத்துக்குமரனை
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எஸ்.விசுவநாதன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – வருவான் வடிவேலன்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ZipRNDiFkjk

  பாடல் – வந்தேன் முருகா பத்துமலை
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – யாமிருக்க பயமேன்
  பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

  அன்புடன்,
  ஜிரா

  323/365

   
  • rajinirams 3:39 pm on October 22, 2013 Permalink | Reply

   கதிர்காமம் முருகன்-பத்துமலை முத்துக்குமரன் பாடல்களை கொண்ட பக்தி பரவசமூட்டும் முத்தான பதிவு.

  • Uma Chelvan 4:38 pm on October 22, 2013 Permalink | Reply

   நாம் மட்டும்மல்ல, ஒரு இடம் விட்டு மறு இடம் செல்லும் எல்லா இனத்தவருமே தம்முடைய மொழி, கலாச்சரம், கலை மற்றும் உணவு பழக்க வழக்கம் களை உடன் எடுத்து செல்கிறார்கள். இது எப்போதுமே நன்மை என்று சொல்ல முடியாது . சில சமயம் தாம் தான் உயரந்தவர் எனற எண்ணமும் கூடவே வருகிறது. Sunday evening நானும் என் பெண் மீனாக்ஷியும் (அவள் இங்கே பிறந்து வளர்ந்தாலும் , நான் மதுரை என்பதால் அந்த பெயர்) திரு. லால்குடி ஜெயராமனின் நினவு நடன நிகழ்சிக்கு சென்று இருந்தோம். இந்த நிகழ்ச்சி அவரின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அவரின் எதிர் பாராத மறைவு இதை ஒரு Homage ஆக மாற்றி விட்டது. நான்கு பாடல்களும் , மங்களமும் அவர் compose செய்த பாடல்கள். மீதம் மூன்று பாடல்கள் பாரதியாரின் கண்ணன் பாடல்கள். அதிலும் அவர் compose செய்த ” செந்தில் வேலவன்” என்ற பத வர்ணம் பார்க்க பார்க்க திகட்டதவை..

   திரு. லால்குடி ஜெயராம் மானின் தில்லானா https://community.worcester.edu/webapps/portal/frameset.jsp

  • Uma Chelvan 7:30 pm on October 22, 2013 Permalink | Reply

   Very sorry I gave a wrong u- tube link……..here we go………..Lalgudi Jayaraman’s Thillana

 • mokrish 5:55 pm on September 7, 2013 Permalink | Reply  

  ஆயுத எழுத்து 

  நேற்று சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் இந்தியாவின் பெருமை வாய்ந்த கலாசாரம்,  குருவை மதிக்கும் பண்பு என்ற வழக்கமான cliche சொற்பொழிவுகள்தான். ஒருவர் தினமும் காலையில் நாளிதழ்களில் செய்திகளைப் பார்த்தால் இது இந்தியாவா என்று சந்தேகம் என்றார். இன்னொருவர் ஊடகங்கள் விதிவிலக்குகள் மேல்தான் வெளிச்சம் போடும், ஆனால் இந்தியா ஒரு உன்னத தேசம் என்றார்.

  நிகழ்ச்சியின் இடையில் பாரதியின் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் பாடலை ஒலிபரப்பினார்கள். இந்தியா ஒரு மகத்தான தேசம் என்பதை பாரதியார் நம்பிய அளவுக்கு வேறு யாருமே நம்பவில்லை என்று தோன்றுகிறது. எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் நாட்டின் பெருமை சொல்கிறார்

  வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி

  மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

  பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

  பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

  திரையில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி ராமநாதன் இசையில் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்.  https://www.youtube.com/watch?v=eYJFwd85SDk

  உழவு, நெசவு, தொழிற்சாலைகள், நதி நீர் பங்கீடு, infrastructure, நிலத்தடியில் இருக்கும் வளம், கலை, ஓவியம் என்று  உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம் என்று சொல்லும் அற்புதமான வரிகள்.

  ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

  ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

  ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

  உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

  இந்திய அமைதி விரும்பும் நாடல்லவா? ஏன் மகாகவி ஆயுதம் செய்வோம் என்கிறார்? மாலன் ஒரு சிறுகதையில் இதற்கு ஒரு சுவாரசியமான twist தருகிறார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் நாயகன் சில நிகழ்வுகளை கண்டு மனம் வருந்தி மாற்றம் தேவை, அதற்கு ஆயுதம் ஏந்திய புரட்சி வேண்டும் என்றும் ஆனால் இதற்கு எழுத்துதான் சரியான ஆயுதம் என்றும் நினைக்கிறான். Pen is mightier than sword. மகாகவி ஆயுதம் செய்வோம் என்று சொல்லி உடனே நல்ல காகிதம் செய்வோம் என்று அதை qualify செய்கிறார் என்று ஒரு interpretation தருவான். பாரதி நினைத்தது வேறாக இருக்கலாம். ஆனால் எனக்கு மாலன் சொல்லும் கோணம் பிடித்திருக்கிறது.

  திரைப்பாடல்களில் ஆயுதம் காதல் கணைகளாகவும் அடித்தட்டு மக்களின் குரலாகவும் அடிக்கடி வரும். வேறு கோணம் இருக்கிறதா என்று தேடினால் ஆயுத எழுத்து படத்தில் வைரமுத்து ஜன கன மன என்ற பாடலில் (இசை / பாடியவர் ஏ ஆர் ரஹ்மான் )

  http://www.youtube.com/watch?v=nbUPFfxQzHA

   ஆயுதம் எடு ஆணவம் சுடு

  தீப்பந்தம் எடு தீமையை சுடு

  இருளை எரித்துவிடு

  என்று எழுதுகிறார். இதில் அறியாமை என்ற இருள் அழிக்க என்று பொருள் கொண்டால் அதற்கான ஆயுதம் எழுத்தறிவித்தல் தானே?  நல்ல காகிதம் என்பது நாளிதழ்கள்  மட்டுமல்ல நல்ல கல்வி முறையும் தானே?

  மோகனகிருஷ்ணன்

  280/365

   
  • rajinirams 1:21 am on September 8, 2013 Permalink | Reply

   என் அண்ணன் படத்தின் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடலில் “ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி வரவில்லையெனில் வா வாளை எடுத்து என்று எழுதி அது ஏற்கப்படாமல் “வெற்றி உன்னை தேடி வரும் பூ மாலை தொடுத்து என்று மாற்றினார்.நீங்கள் மனிதா மனிதா பாடலில் வைரமுத்துவும் “சாட்டைகளே”இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா”என்று எழுதியிருப்பார் என்றாளும் நீங்கள் சொன்னது போல் அறியாமையை விலக்க கல்வியே சிறந்த ஆயுதம்.நன்றி.

  • uma chelvan 6:01 pm on September 8, 2013 Permalink | Reply

   சிறந்த கல்வி ஒருவரை மிகவும் உயர்வான இடத்திருக்கு கொண்டு செல்லும். வைரமுத்து பாடலில் ” ஆயுதம் எடு ஆணவம் சுடு ” என்பது வேறு ஒரு விஷயம் அவர் மனதில் எப்பவும் கனன்று கொண்டே இருக்குமோ என்று நினைக தோன்றுகிறது.????

  • amas32 1:58 pm on September 10, 2013 Permalink | Reply

   சூப்பர் போஸ்ட் மோகன்

   //ஆயுதம் எடு ஆணவம் சுடு

   தீப்பந்தம் எடு தீமையை சுடு

   இருளை எரித்துவிடு//

   Lovely lines!

   முன்பெல்லாம் அவதாரங்கள் ஒரு அரக்கனை அழிக்க வடிவெடுத்தன. இன்றோ நம்முள்ளே தான் நல்லதும் தீயதும் அடங்கி இருக்கின்றது. இன்று தேடிப் பார்த்தால் ஒரு முழு நல்லவனும் இல்லை, ஒரு கேட்டவநிடமும் சில நற்குணங்கள் ஒளிந்துள்ளன. அதனால் நம்முள் இருக்கும் தீமையை அழிக்க கல்வி என்னும் ஆயுதத்தைக் கொண்டு தான் நிறைவேற்ற முடியும். அறிவுச் சுடர் கொண்டு தான் இருளை அகற்ற முடியும் 🙂

   amas32

 • mokrish 9:49 pm on August 20, 2013 Permalink | Reply  

  நடந்தாய் வாழி 

  போன வாரம் சென்னை கம்பன் கவிமன்றம் சந்திப்பில் நண்பர் @RagavanG காப்பிய இலக்கணம் என்ன என்பதை விளக்கினார்.   தொடர்ந்து பல விஷயங்களை பேசும்போது, கம்பன் சரயூ நதியை விவரிக்கும் அழகை குறிப்பிட்டார்.  காப்பிய இலக்கணம் பற்றி மேலே படிக்கலாம் என்று தேடியபோது தண்டியலங்காரம் கண்ணில் பட்டது.

  பெருங்காப் பியநிலை பேசுங் காலை

  வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று

  ஏற்புடைத் தாகி முன்வர வியன்று

  நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

  தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்

  மலைகடல் நாடு, வளநகர் பருவம்

  இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து

  என்று தொடங்கி தெளிவான இலக்கணம் வகுக்கிறது. அப்புறம் லேசாக மனமிறங்கி ‘கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்’ என்று ஒரு விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதியில்

  தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

  மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  என்ற விளக்கம் படித்தவுடன் ஏனோ எனக்கு சம்பந்தமேயில்லாமல் இதயக்கனி படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நீங்க நல்லாயிருக்கோணும் என்ற பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் எஸ் ஜானகி டி எம் எஸ்’) நினைவுக்கு வந்தது. http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA  இதுவும் ராமச்சந்திரன் என்ற நாயகன் பற்றிய பாடல்தான்.  இதிலும் மலை, ஆறு , நாடு, நகர் என்று ஒரு Reference இருக்கிறது.  பாடலின் துவக்கத்தில் வரும் வரிகள்

  தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்

  கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி

  தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி

  ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர

  நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

  வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட

  கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று

  அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து

  கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்

  தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்

  தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்

  காவிரியை வர்ணிக்கும் விதம் அருமை. இந்த நதியைப்போல்  எங்கள் வாழ்வை வளமாக்கும் தலைவா நீங்க நல்லாயிருக்கோணும் என்று பாடும் பாடல்

  செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி

  கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்

  பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே

  வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி

  எங்கள் இதயக் கனி இதயக் கனி

  நீங்க நல்லாயிருக்கோணும்

  ஒருவேளை புலமைப்பித்தன் எம்ஜிஆர் என்ற ஜானகி மணாளனைப் பற்றி காப்பியம் எழுதலாம் என்று ஆரம்பித்தாரோ? தெரியவில்லை

  மோகனகிருஷ்ணன்

  262/365

   
  • uchelvan 5:51 pm on August 21, 2013 Permalink | Reply

   கரை புரண்டு ஓடும் காவிரியை காண கண் கோடி வேண்டும். I had a surgery 3 weeks at Trichy, Surgeon ஸ்ரீ ரெங்கத்துகாரர். அவரை follow -up க்கு பார்க்க சென்ற போது..வாங்கம்மா!!!! என்றவர் உடனே, காலைலருந்து மனசு ரொம்ப சந்தோசமா இருக்குதம்மா, ஆறில் தண்ணீ போகுது என்றார்.. என்னாது ……..காலைலருந்து சந்தோசமா இருக்கீங்களா !!!! சொல்லவே இல்லை என்று வடிவேலு காமெடி போல் அதிர்ச்சியும் கொஞ்சம் நிம்மதியும் சுற்றி இருந்த junior டாக்டர்ஸ், நர்சுகளின் முகத்தில் !!! அடுத்த 45 நிமிடங்கள் தனது வாழ்கை வரலாறை சொல்லி முடித்து விட்டார்.. கிளம்புபோது. US வந்தா, கட்டாயம் வீட்டுக்கு வாங்க சார்,என்றேன். என்னை தவிர என் குடும்பத்தினர் அனைவரும் அங்கேதான் என்றார். நான் அவரை பார்த்து., உங்களுக்கு ( வைஷ்ணவர்களுக்கு ) அமெரிக்க தானே 109 திவ்ய தேசம் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை சார் என்றேன் . !!!!!. :)))))

 • என். சொக்கன் 11:36 pm on August 19, 2013 Permalink | Reply  

  விளக்கு வைத்தேன் 

  • படம்: திருமலை தென்குமரி
  • பாடல்: திருப்பதி மலை வாழும்
  • எழுதியவர்: தென்காஞ்சி பாரதிசாமி
  • இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
  • பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=MR0l_ja1qUA

  அன்பெனும் அகல் விளக்கை ஏற்றிவைத்தேன், அதில்

  ஆசையென்னும் நெய்யை ஊற்றிவைத்தேன்,

  என் மனம் உருகிடவே, பாடி வந்தேன், உன்

  ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்!

  பிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் பெயர் தென்காஞ்சி பாரதிசாமி என்று நேற்றுதான் தெரிந்துகொண்டேன். எளிய மொழியில் மிகவும் அழகான பக்திப் பாடல்!

  குறிப்பாக, இந்த நான்கு வரிகள், ஆழ்வாரின் இன்பத் தமிழ்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயலில் பூதத்தாழ்வார் எழுதிய முதல் வெண்பா. அதில், திருமாலுக்கு இப்படி ஒரு விளக்கை ஏற்றிவைக்கிறார்:

  அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,

  இன்பு உருகு சிந்தை இடுதிரியா, நன்புருகி

  ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு

  ஞானத் தமிழ் புரிந்த நான்.

  நாராயணா,

  என்னுடைய அன்புதான் விளக்கு,

  நான் உன்மேல் கொண்டடிருக்கிறஆர்வம்தான் நெய்,

  எந்நேரமும் உன்னையே நினைக்கின்ற அந்தச் சிந்தனைதான் திரி…

  இவற்றைக் கொண்டு ஞானத் தமிழின் துணையால் நான் உனக்கு ஒரு விளக்கு ஏற்றிவைத்தேன்!

  எளிமையான பாடல்தான். இல்லையா?

  இப்போது சினிமாப் பாட்டு வரிகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். அழகான பாசுரத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி எத்துணை பேர்க்குக் கொண்டு சேர்த்துவிட்டது இந்தப் பாடல்!

  ***

  என். சொக்கன் …

  19 08 2013

  261/365

   
  • rajinirams 1:03 am on August 20, 2013 Permalink | Reply

   அடடா-இந்த பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகமோ பூவை செங்குட்டுவனோ எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தேன்-பெரும்பாலும் எல்லோருமே அறிந்த இந்த அற்புதமான பாடலை எழுதியவர் தென் காஞ்சி பாரதிசாமி என்பதை “வெளிச்சத்திற்கு” கொண்டு வந்ததற்காகவே உங்களை பாராட்ட வேண்டும். நன்றி. திருமலை திருமாலை வாழ்த்தி வணங்க இது நல்ல தமிழ் வார்த்தை பூக்களை கொண்ட பக்திமாலை.

 • mokrish 11:49 pm on August 17, 2013 Permalink | Reply  

  கல்லிலே கலைவண்ணம் கண்டோர் 

  சென்னையில் எங்கள் அலுவலகம் வரும் அமெரிக்கர்களும்  ஐரோப்பியர்களும் மற்ற நாட்டினரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடிப்பது இரண்டு இடங்கள் – ஒன்று பனகல் பார்க் புடவை கடைகள் இன்னொன்று மாமல்லபுரம். ஒருமுறை ஜப்பானிலிருந்து வந்தவர்களுடன் மாமல்லபுரம் செல்ல வேண்டியிருந்தது. பார்த்த இடம்தான். ஆனால் உடன் வந்தவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள, எல்லா இடங்களையும் ஆர்வத்துடன் பார்த்தோம்.

  அதில் ஒருவர் கையில் இருந்த Lonely Planetல் இந்த இடம் பற்றி நிறைய விவரங்கள் படித்திருந்தார். அங்கே அவர் பார்த்த சிற்பங்களை Poetry in Stone என்று குறிப்பிட்டார். அட இது கல்லிலே கலை வண்ணம் தானே? குமுதம் படத்தில் கவி கா மு ஷெரிப் எழுதிய கல்லிலே கலை வண்ணம் என்ற பாடல் வரிகள்  (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் )

  http://www.youtube.com/watch?v=g-HUpdB_OeI

  கல்லிலே கலைவண்ணம் கண்டான் – இரு

  கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

  பல்லவர் கோன் கண்ட மல்லை போலப்

  பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை

  சொல்வதும் இதைத்தானே?

  வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன் பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி).  http://www.youtube.com/watch?v=TlR7UH3D-J8

  கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா

  அந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா

  ஓட்டுக்கல்ல சேர்க்காம ஒரே கல்ல குடைஞ்செடுத்து

  கட்டிவெச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா அதை

  கச்சிதமா சொல்ல வந்தேனே சின்ன ராஜா

  கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

  எப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா

  அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

  சர்வர் சுந்தரம் படத்திலும் மகாபலிபுரம் பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல் உண்டு.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா & குழுவினர்)

  http://www.youtube.com/watch?v=Uz_OGjZoPro

  சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

  கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

  ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

  ஆட விட்டான் இந்த கடலினிலே

  படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்

  பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்

  கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்

  காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்…

  அன்னமிவள் வயதோ பதினாரு

  ஆண்டுகள் போயின ஆறுநூறு

  இன்னும் இவள் முதுமை எய்தவில்லை

  என்னதான் ரகசியம் தெரியவில்லை

  கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில் “கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று எழுதியிருந்தார். எனக்கும்தான்.

  மோகனகிருஷ்ணன்

  259/365

   
  • rajinirams 8:51 pm on August 19, 2013 Permalink | Reply

   நினைவாலே சிலை செய்து அருமையான பதிவை செதுக்கி “சிற்பி”த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சிற்பி செதுக்காத பொற்சிலையோ.கண் கவரும் சிலையே இப்படி சி(ல)லை பாடல்களும் இருக்கின்றன. நன்றி.

 • mokrish 6:04 pm on July 30, 2013 Permalink | Reply  

  ஞாயிறு என்பது… 

  ஒரு நண்பர் வீட்டில் Solar power இன்வெர்ட்டர் வாங்கியிருக்கிறார். அவரிடம் கொஞ்ச நேரம் பேசியதில் எப்படி தேர்ந்தெடுப்பது, என்ன செலவு, என்ன நன்மைகள் என்று நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இவ்வளவு சுலபமாகக் கிடைக்கும் ஒளியையும் சக்தியையும் ஏன் நாம் இன்னும் முழுமையாக உபயோகிக்கவில்லை?

  சூரியன் என்ற மாபெரும் சக்தி உலகத்தையே இயக்கும் வலிமை கொண்டது. சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. சூரியன் இருளை அகற்றுகிறது. மேகங்களை உருவாக்கி மழையைப் பொழிகிறது, Photosynthesis, நமக்கு வைட்டமின் D தருகிறது என்றெல்லாம் பள்ளியில் படித்ததுதான்

  இந்தியா சூரியனை வழிபடும் தேசம். சூரியனை முன்னிறுத்தி நிறைய கோவில்கள் உண்டு..மிகவும் பழமை வாய்ந்த ரிக்வேதம் “ஒன்றானது, மெய்யானது, பேதமற்றது, அளவிட முடியாதது” என்றெல்லாம் சொல்லப்படும் பரப்பிரும்மத்தை சூரியனோடு ஒப்பிட்டு புகழ் பாடுகிறது. ஆனால் கவிஞர்கள் நிலவைப் பாடிய அளவு சூரியன் பற்றி பாடவில்லையோ?

  கர்ணன் படத்தில் கண்ணதாசன் எழுதிய ஆயிரம் கரங்கள் நீட்டி பாடல் ஒரு அபூர்வ முத்து.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்,)

  http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU

  ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

  அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!

  தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!

  தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

  தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!

  தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!

  ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

  நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

  எட்டே வரியில் அந்த கதிரவன் பெருமையெல்லாம் சொல்லும் சாகசம். ஆயிரம் கரம் என்று  ஒரு வர்ணனை. தாயினும் பரிந்து எல்லாரையும் அரவணைக்கும் குணம் சொல்லி, இருள் நீக்கம் தரும் ஒளியை சொல்லி , அனைத்து உயிர்களும் தழைக்க உதவும் பெருமை சொல்லி அந்த கொதிக்கும் நெருப்பை தூயவர் இதயம் போல் என்று கோடிட்டு காட்டி ஆனாலும் நெருப்பை தள்ளி வைத்து அதன் சாரம் மட்டும் தரும் அமைப்பை போற்றி – அற்புதமான பாடல் வரிகள்.

  ராவணனோடு யுத்தம்  செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த  அற்புத ஸ்லோகம் ஆதித்ய ஹ்ருதயம். அதன் சாரத்தை திரைப்பாடலில் தந்தவர் கண்ணதாசன்.

  கம்ப ராமாயணத்தில் அகத்தியர் போதிக்கும் இந்த நிகழ்ச்சி இல்லை என்று படித்தேன். தெரிந்தவர்கள் விளக்கவும்

  மோகனகிருஷ்ணன்

  241/365

   
  • Panbudan 6:42 pm on July 30, 2013 Permalink | Reply

   இது என்ன பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தமா ?

  • rajinirams 8:21 pm on July 30, 2013 Permalink | Reply

   சூப்பர். மிகவும் வித்தியாசமான பதிவு.புதிய தகவல்கள். ஒரு பக்தி புத்தகத்தில் ஆதித்ய ஹிருதயம் தசரத சரவர்த்தி அருளியது என்று போட்டிருக்கிறார்கள்.நன்றி.

  • Uma Chelvan 9:27 pm on July 30, 2013 Permalink | Reply

   European and north American countries produce solar power, though they get less sun( more winter, less summer months ) but, In India, we have hot summer year around, but still not effective technology ( or not effective politicians) to produce power from Sun!!!

  • amas32 9:45 pm on July 30, 2013 Permalink | Reply

   ஆமாம் ஆதித்திய ஹ்ரிதயத்தில் உள்ளதை அழகிய தமிழில் புரியும்படி சொல்லி உள்ளார் கவியரசர் கண்ணதாசன், அதுவும் எட்டே வரிகளில்!

   இப்பொழுது தான் வேறு ஒரு 4 வரிப் பாடலின் பின்னூட்டத்தில் கீதையையும் உபநிஷத்துக்களையும் எளியத் தமிழில் வாலியும் கண்ணதாசனும் பலத் திரைப்பாடல்கள் மூலம் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று எழுதினேன். அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

   amas32

  • GiRa ஜிரா 10:15 pm on July 31, 2013 Permalink | Reply

   நீங்கள் சொல்வது உண்மைதான். கம்பராமாயணத்தில் அகத்தியர் இராமனுக்கு ஆதித்த ஹிருதயம் உபதேசிப்பதில்லை. இராவணனோடு போரிட்டு இராமன் சோர்வு அடைந்தததால் அகத்தியர் உபதேசித்தார் என்கிறார் வால்மிகி. இராமனுக்கு சோர்வு ஏற்படவில்லை என்கிறார் கம்பர்.

  • Venkatramanan 11:23 am on April 1, 2018 Permalink | Reply

   //ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!// – இந்த வரி கமலஹாசன் வசூல்ராஜா படத்தில் அந்த ஆனந்த் எனும் கதாபாத்திரத்திடம் (கிட்டத்தட்ட கோமாவிலிருப்பவர்) முதலில் பேசும்போது உபயோகப்படுத்துகிறார். (பெரிதாக ஒன்னும் சொல்லாவிட்டாலும் அதை நினைவுபடுத்தியதற்கு நன்றி!)

 • G.Ra ஜிரா 7:30 am on July 7, 2013 Permalink | Reply  

  வாழ்க! வாழ்க!! 

  வாழ்த்துவதற்கு இதயம் வேண்டும். ஒருவரை உளமாற உணர்வாற “வாழ்க! வாழ்க!!” என்று வாழ்த்துவதற்கும் ஒரு நல்ல இதயம் வேண்டும்.

  வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரையாவது வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது திரைப்படத்தில் வாழ்த்துப்பாடல்கள் வராமலா இருக்கும்!

  நல்வாழ்த்து நான் சொல்லுவேன். நல்லபடி வாழ்கவென்று” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினாரே. ஒருவரை எதற்காக வாழ்த்துகிறோம் என்பதற்கான காரணத்தை இதைவிட சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா!

  சரி. வாழ்த்தை எப்படிச் சொல்ல வேண்டும்? வாழ்க வாழ்க என்று எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரி சொன்னால் அதில் சுவை இருக்காது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் கவிஞர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி வாழ்த்தியிருக்கிறார்கள் என்று சில பாடல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வோமா!

  முதலில் பிறந்தநாள். கையில் ஒரு பரிசைக் கொடுத்து விட்டு வாழ்க என்றால் சரியாக இருக்கும். ஆனால் அது அந்தச் சூழலின் மகிழ்ச்சியைப் பெருக்குமா? இல்லை. இப்போதெல்லாம் கேக் வெட்டும் போது சுற்றி நின்று அனைவரும் “Happy Birthday To You” என்று பாடும் போது அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கிவிடுகிறது அல்லவா.

  அதையே அழகாக “என்னோடு பாடுங்கள். நல்வாழ்த்துப் பாடல்கள்” என்று நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் இடம் பெற்ற பிறந்தநாள் காட்சிக்காக எழுதினார். எல்லாரும் சேர்ந்து நல்வாழ்த்துப் பாடினால் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்புறும் என்பது வாலியின் கருத்து.

  அடுத்தது திருமணம். புதுவாழ்க்கை தொடங்கும் மகிழ்ச்சியான தருணம் என்றாலும் ஒரு மெல்லிய சோககும் இருக்கும். பிறந்த வீட்டை விட்டுப் புகுந்த வீட்டுக்குக் கணவனே எல்லாம் என்று செல்லும் பெண். இதுவரையில் பாராட்டிச் சீராட்டி வளர்த்த பெண்ணைப் பிரியும் பெற்றோர்கள் என்று உணர்ச்சிக் கலவையாக இருக்கும் அந்த இடம்.

  இந்தச் சூழ்நிலையில் எப்படி வாழ்த்துவது? நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் “பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்ற பாடலில் கண்ணதாசன் இப்படியெல்லாம் வாழ்த்துகள்.

  கொட்டியது மேளம்
  குவிந்தன கோடி மலர்கள்
  கட்டினான் மாங்கல்யம்
  மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
  கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
  கடமை முடிந்தது கல்யாணம் வாழ்க
  அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ்க
  ஆண்டவன் போலுன்னைக் கோயில் கொண்டாட
  பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி

  திரையிசைப் பாடல்களை எழுதுகின்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் படிக்க வேண்டிய அகராதியாக கவியரசர் இந்தப் பாட்டிலும் இருக்கிறார்.

  திருமணத்தின் முதற்பலன் குழந்தை. மக்கட்பேறு என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அப்படியொரு பெண் வயிறு நிறைந்து சுமக்கும் காலகட்டத்தில் அவள் மகிழ்ச்சிக்காக வளைகாப்பு நடத்துவது வழக்கம். அந்த வளைகாப்பில் அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் வாழ்த்தலாம்? கர்ணன் படத்தில் “மஞ்சள் முகம் நிறம் மாறி” என்ற பாடலில் கவியரசர் கண்ணதாசன் வாழ்த்துவதைப் பாருங்கள்.

  மலர்கள் சூட்டி
  மஞ்சள் கூட்டி
  வளையல் பூட்டி
  திலகம் தீட்டி
  மா தின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்

  குழந்தையைச் சுமக்கும் அந்தப் பெண்ணுக்கு மலர்களைச் சூட்டி மஞ்சளைப் பூசி கையிரண்டும் நிறைய வளையல்களை அடுக்கி திலகமிட்டு அலங்கரிப்பார்கள். இத்தனை செய்தாலும் அந்தப் பெண்ணின் மனம் மாங்காய் கடிப்பதிலேயே இருக்கும். அதைத்தான் கவியரசர் பாட்டில் காட்டுகிறார்.

  திருமணம் முடிந்தது. குழந்தையும் பிறந்தது. அது மட்டும் போதுமா? நீடு வாழ வேண்டாமா? பீடு வாழ வேண்டாமா? அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தாலும் உலகம் பெண்ணைத்தான் தீர்க்க சுமங்கலி என்று வாழ்த்துகிறது. சரி. அந்த தீர்க்கசுமங்கலியை எப்படி வாழ்த்துவது? மறுபடியும் கண்ணதாசனையே கேட்போம்.

  தீர்க்க சுமங்கலி வாழ்கவே
  அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
  காக்கும் தேவதை வாழ்கவே
  அவள் காக்கும் நல்லறம் வாழ்கவே

  தீர்க்கசுமங்கலி படத்துக்காக எழுதிய இந்த வரிகளிலிருந்து குடும்பத்தின் நல்லறத்தைக் காப்பது பெண்ணே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  சரி. பதவியில் இருக்கும் பெரியவர்களை எப்படி வாழ்த்த வேண்டும்? ஆண்டு அரசாளும் மன்னனை எப்படி வாழ்த்த வேண்டும்? இந்த முறை கவிஞர் முத்துலிங்கத்திடம் பாடம் கேட்கலாம். ராஜரிஷி படத்தில் கௌசிக மன்னனை எப்படி வாழ்த்திப் பாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

  கருணைக்கடலே வாழ்க வாழ்க
  காக்கும் நிலமே வாழ்க வாழ்க
  அறத்தின் வடிவே வாழ்க வாழ்க
  அரசர்க்கரசே வாழ்க வாழ்க
  அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
  அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
  இமயமலை போல் புகழில் உயர்ந்தாய்
  உனது கொடையால் மனதில் நிறைந்தாய்

  அரசனை வாழ்த்திப் பாடுகையில் அந்த அரசன் காட்டும் பண்பு நலன்களையும் ஆட்சி செய்யும் முறையையும் வாழ்த்திப் பாட வேண்டும். அதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறது.

  நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. அது உண்மை என்று இன்றைய நிலை நமக்குப் பாடமாக இருக்கிறது. அதனால்தான் அன்று பெரியவர்கள் “பொய்யாக் குலக்கொடி” என்று வையை ஆற்றைப் பாடினார்கள். இது போன்ற ஆறுகளைப் பாராட்டும் போது எப்படி வாழ்த்த வேண்டும்? காவிரியாற்றையே எடுத்துக் கொள்வோம். அகத்தியர் திரைப்படத்தில் கவிஞர் கே.டி.சந்தானம் காவியாற்றை எப்படியெல்லாம் வாழ்த்துகிறார் பாருங்கள்.

  நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
  நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
  உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
  உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
  புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
  அன்பு பொங்கிவரும் காவிரியே வாழியாவே

  ஆற்றினால் உண்டாகும் செழிப்பையும் அது நீக்கும் பசிப்பிணியையும் சொல்லி வாழ்த்த வேண்டும். இப்படியெல்லாம் வாழ்த்திக் கொண்டாடினால்தான் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.

  தெய்வத்தை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் வாழ்த்தியாகி விட்டது. ஆனால் தெய்வம் குடியிருக்கும் திருக்கோயிலை?

  தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
  தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே

  நிலைத்து நிற்க வேண்டிய கோயில் என்பதால் மொழியோடு தொடர்பு படுத்தி தமிழைப் போல நிலைநின்று வாழ்க என்று எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

  எல்லாம் இருப்பது போல இருந்தாலும் சிலருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருப்பதில்லை. ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வந்து கொண்டேயிருக்கும். அவர்களுக்கு எப்படி வாழ்த்துவது? மறுபடியும் படத்தில் வாலி கற்றுத் தருகிறார்.

  நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்

  ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான வாழ்த்து. வாழ்த்தப்படுகின்றவருக்கு அந்த வாழ்த்து அமைதியைக் கொண்டு வரட்டும் என்று வாலி அப்படி வாழ்த்துகிறார்.

  வாழ்த்துகள் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. வாழ்த்துவதற்கு சுற்றிலும் நல்ல உள்ளங்கள் இல்லாத பாவப்பட்ட உயிர்களும் உண்டு. அப்படியொரு உயிர் மற்றவர்களை வாழ்த்தும் போது மனதுக்குள் என்ன நினைக்கும்?

  எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
  நான் வாழ யார் பாடுவார்

  இப்படிப்பட்ட உள்ளங்களுக்கு ஆண்டவனே துணையிருந்து காப்பாற்ற வேண்டும்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (பட்டிக்காடா பட்டனமா/எம்.எஸ்.வி) – http://youtu.be/HkXXY_m6EIY
  என்னோடு பாடுங்கள் (நான் வாழ வைப்பேன்/இளையராஜா) – http://youtu.be/pzO8BBL_Zu8
  பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி (நெஞ்சிருக்கும் வரை/எம்.எஸ்.வி) – http://youtu.be/ZMUfKlNYulM
  மஞ்சள் முகம் நிறம் மாறி (கர்ணன்/ எம்.எஸ்.வி+டி.கே.ஆர்) – http://youtu.be/h-KP-0ifwQA
  தீர்க்கசுமங்கலி வாழ்கவே (தீர்க்கசுமங்கலி/ எம்.எஸ்.வி) – http://youtu.be/yLX9jP7O8Uo
  அழகிய கலை நிலவே (ராஜரிஷி / இளையராஜ) – http://youtu.be/_qEdcAxfPgs
  நடந்தாய் வாழி காவேரி (அகத்தியர்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/1RGZSokw_nI
  தஞ்சைப் பெரிய கோயில் (ராஜராஜசோழன்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/5DhrsSQ-2aY
  நலம் வாழ என்னாளும் (மறுபடியும்/ இளையராஜா) – http://youtu.be/JjRs0KjYzbo
  எல்லோரும் நலம் வாழ (எங்க மாமா/ எம்.எஸ்.வி) – http://youtu.be/KPM20P7HDLs

  அன்புடன்,
  ஜிரா

  218/365

   
  • amas32 7:47 am on July 7, 2013 Permalink | Reply

   அழகாக வாழ்த்துவதும் ஒரு கலை தான். வாழ்த்துகள் என்று வெறுமே சொல்வது எப்படி, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவது எப்படி. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? வாழ்த்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும். சிலர் வாயிலிருந்து வாழ்த்தே வராது. நல்ல வாழ்த்துக்களைக் கேட்க வேண்டும் என்றால் கவிஞகர்களிடம் தான் செல்ல வேண்டும். நீங்கள் இங்கே அருமையான பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள்!

   நாம் நிறைய நேசிக்கும் ஒருவரை வாழ்த்துவது எளிது. அதே பண்பு அனைவரையும் வாழ்த்தும் பொது நமக்கு வரவேண்டும். அதற்கு எளிமையான வழி எல்லோரையும் நேசிக்க வேண்டும் 🙂 பெரியாழ்வார் பெருமாளையே பல்லாண்டு பாடி வாழ்த்தியவர். அவருக்குள் தான் எத்தனை வாஞ்சை இருந்திருக்க வேண்டும்!

   வாழ்த்தும் போது வாழ்த்தைப் பெறுபவர் தேவை அறிந்து வாழ்த்துவதே சிறப்பு. அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுதானே வாழ்த்துபவருக்கும் பெருமை! 🙂

   amas32

  • Uma Chelvan 7:49 am on July 7, 2013 Permalink | Reply

   “Ennodu padungal” TMS version is far better then SPB vesion !!

  • Uma Chelvan 7:58 am on July 7, 2013 Permalink | Reply

   அடுத்தவரை வாழ்த்த நல்ல மனமும் உயர்ந்த குணமும் வேண்டும். amas சொன்னது போல் பெரியாழ்வார் “பெருமாளை” பல்லாண்டு வாழ வாழ்த்தியவர். எல்லோரயும் வாழ்த்துங்கள் , நமக்கு எந்த குறையும் வராது!!!

  • rajinirams 10:29 am on July 7, 2013 Permalink | Reply

   சூப்பர்.வாழ்த்துப்பாடல்கள் என்பது செண்டிமெண்டாக எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.தமிழில் வாழ்த்து பாடல்களுக்கு பஞ்சமே இல்லை.
   1)பேசும் தெய்வம்- வாலியின் நூறாண்டு காலம் வாழ்க.
   2)இதய வீணை- இன்றுபோல என்றும் வாழ்க-வாலி.
   3)சட்டம் என்கையில்-எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க-கண்ணதாசன்.
   4)ஊருக்கு உழைப்பவன்-பிள்ளை தமிழ் பாடுகிறேன்-காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க,கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க-முத்துலிங்கம்
   5)காளி -வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம்-கண்ணதாசன்.
   6)மனமார வாழ்த்துங்கள்-மனமார வாழ்த்துங்கள்.
   7)நெஞ்சில் ஓர் ஆலயம்-எங்கிருந்தாலும் வாழ்க-கண்ணதாசன்.
   8)நூற்றுக்கு நூறு-நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்-வாலி.
   9)அடுத்த வாரிசு- வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்-பஞ்சு அருணாசலம்.
   10)அன்னை ஓர் ஆலயம்-அம்மா-மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே
   வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்தவேண்டுமே -வாலி.
   11) இதயக்கனி-நீங்க நல்லா இருக்கணும்-புலமைப்பித்தன்.
   12)நல்லவனுக்கு நல்லவன்-எங்க முதலாளி-வாலி.
   13)முகமது பின் துக்ளக்-பாவலன் பாடிய புதுமை பெண்ணை,happy birthday to you -வாலி.
   14)நாம் மூவர்-பிறந்த நாள் இன்று- வாலி.
   15) வசந்த ராகம்-நான் உள்ளத சொல்லட்டுமா,”வாழ்க நீங்கள் வாழ்க”.
   வாழ்க நீங்கள் வாழ்க”.

  • suri 1:07 pm on July 9, 2013 Permalink | Reply

   theerka sumangali vazhkave was written by vali!

  • SRINIVASAN 8:23 am on July 14, 2013 Permalink | Reply

   Reblogged this on srinivasan s.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel