நதிபோல ஓடிக்கொண்டிரு

திரைப்படத்தில் பாடல்கள் அவசியமா? இசையும் கவிதையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையற்ற இடையூறா? சுஜாதா ‘டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தார்.

பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே சரியான கேள்வி. ஒரு திறமையான கலைஞன் பாடல்களை கதையில் அழகாக நெய்துவிட முடியும். மகாநதி என்று படத்தின் டைட்டில். கதையின் பாத்திரங்களுக்கு கிருஷ்ணா, காவிரி, யமுனா, பரணி என்று நதிகளின் பெயர். கதை திருநாகேஸ்வரத்தில் தொடங்கி சென்னை, கொல்கத்தா என்று அலைந்து சென்னையில் முடியும். இதில் பாடல்களை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும்?

வாலி ஸ்ரீரங்கத்துக்காரர். காவிரி நதியை ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்குகிறார். படத்தின் பெரும்பான்மையான பாடல்களில் கதையின் ஒட்டத்தோடு காவிரி பற்றிய reference. ராஜா ஒரு அற்புதமான இசை இழை தருகிறார். திரைக்கதையுடன் கைகோத்து வலம் வரும் பாடல்கள்.

முதலில் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் பாடல் கங்கையின் மேலான காவிரியின் பெருமை சொல்லும் பாடல் (பாடியவர்கள் சித்ரா & குழுவினர்)

http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி

நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

அடுத்து விதிவசத்தால் சொந்த மண்ணை விட்டு விலகி சென்னை வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, பிரிந்து போகும் குழந்தையை ஒரு தாய் வழி அனுப்புவது போல காவிரி நதி நாயகனை வாழ்த்தும் வரிகள் (பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்)

http://www.youtube.com/watch?v=D2PyGX_K6IQ

அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்

ஐயா உன்கால்கள் பட்ட பூமித்தாயின் மடி

எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும்

காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்

ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்

இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி

தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி

இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி

இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி

சென்னையில் அவனுக்கு நிறைய சோதனைகள். செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம். ஆனால் அவன் தளரவில்லை என்ற வரிகளிலும் காவிரி ! (பாடியவர் கமல்ஹாசன்)

http://www.youtube.com/watch?v=VAzrswll0oQ

தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி

காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி

அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்

அன்னாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்

அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

நதியில் விழுந்த இலை போல திக்கு திசை தெரியாமல் ஓடி பல சோகம் கண்டு ஒருவழியாக வெளிவரும் நிலையில் ஒரு அற்புதமான பாடல் (பாடியவர் கமல்ஹாசன்)

http://www.youtube.com/watch?v=2H6CaBpol80

எங்கேயோ திக்கு திசை எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்

அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி

காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி

பசும் பொன்னே செவ்வந்தி பூவே இத்துடன் சோகம் சென்றதடி

ஒவ்வொரு பாடலிலும் காவிரி பற்றி ஒரு குறிப்பு. முதல் பாடலில் வளம் தரும் மகாநதி. அடுத்த பாடலில் வாழ்த்தி வழியனுப்பும் தாய் போல என்கிறார். இன்னொரு பாடலில் காவிரி மடியில் வாழ்ந்தவர் வீழ்வதில்லை என்கிறார். காவிரி தீரம் விட்டு வந்து பட்ட சோகம் சொல்கிறார். ஆனால் எல்லா பாடல்களிலும் முடிவில் ஒரு நல்ல வாக்கு. ஒரு பாசிடிவ் கருத்து. கதை சொல்லலில் பாடலையும் இணைக்கும் நயம்.

நதியிடம் நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நதி இலக்கை மறப்பதேயில்லை. கழிவுப் பொருட்களைக் கலந்தாலும், எல்லா தடைகளையும் மீறி ஓடிக்கொண்டேயிருக்கும். In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance என்று சொல்வார்கள். வாழ்க்கையும் அப்படியேதான்.

அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன்

மோகனகிருஷ்ணன்

365/365