Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 8:53 pm on October 22, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: சிரித்து வாழவேண்டும் 

    வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்,சிரித்து  கவலையை மறக்க தெரிந்தவன்,சிரியுங்கள் மனிதர்களே,இதை விட மருந்தில்லை வாழ்க்கையிலே என்று அமரகாவியம் படத்தில் பாடல் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே என்ற கவியரசரின் வார்த்தைக்கு இசையோடு சிரிப்பை இணைத்து ரசிக்க வைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.வாய் விட்டு சிரிப்பது மன அழுத்ததை குறைக்கும் என்பதால் கோபபடும் போது கூட சிரிப்பது போல வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக காட்டியிருப்பார்கள்.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்,பொம்பளை சிரிச்சா போச்சு,சிரித்தாலும் போதுமே,ஆணவ சிரிப்பு ஆனந்த சிரிப்பு என்று பல சிரிப்பு பாடல்கள் இருந்தாலும் இந்த மூன்று பாடல்கள் மனம் கவரும் வகையில் அமைந்தவை. தமிழ் பாடல் உலகின் மூவேந்தர்கள் எழுதியவை.மூன்றுமே வித்தியாசமான சூழல் அமைந்தவை.

    இவரும் வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் போல “நல்ல மனிதர் போர்வையில் சிலர் செய்யும் அநியாயங்களை பட்டியலிட்டு மனம் நொந்து” சிரித்து பாடுவதாக அமைந்தது-

    “மேடையேறி பேசும்போது ஆறு போல பேசு-கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு-உள்ள பணத்தை பூட்டி வெச்சு வள்ளல் வேஷம் போடு,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்லகணக்கை மாத்தி கள்ளகணக்கை ஏத்தி நல்ல நேரம் பார்த்து நண்பனை ஏமாத்து”…சிரிப்பு வருது சிரிப்பு வருது”சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்த்து சிரிப்பு வருது…..என்று அருமையாக எழுதியிருப்பார் கவியரசர்.

    அடுத்து சில தீயவர்களால் மிரட்டப்பட்டு சிரிப்பையே தொலைத்திருந்த தன் தங்கை அச்சத்தை விட்டு சிரிக்கும்போது ஒரு அண்ணன் மனமகிழ்ந்து பாடும் பாடல் –

    “வசந்தம் சிரித்தாலே வண்ண தேன் பூ மலரும்,வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்

    அம்பிகை சிரித்தாலேஆலயம்அழகொளிரும் -அம்மமா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்”- என்று உவமையோடு கலக்கியிருப்பார் கவிஞர் வாலி-தங்கச்சி சிரித்தாளே செவ்விதழ் விரித்தாளே-மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே….

    இன்னொரு வகையான பாடல் -“கலகலவென சிரி கண்ணில் நீர் வர சிரி -சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர்,சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர் ” என்று ஒரு சிறிய விழாவில் நகைச்சுவை பரிமாற்றமாக அமைந்த பாடல்-பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமே,சிரி சிரி சிரி சிரி… என்று வித்தியாசமாக அமைந்த கவிஞர் வைரமுத்துவின் சிரிப்பு பாடல்.

    என்ன…கவலைகளை கொஞ்சம் ஒதுக்கி நாமும் சிரித்து மகிழ்வோமே ….

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:

    பாடல்-சிரிப்பு வருது சிரிப்பு வருது

    படம்-ஆண்டவன் கட்டளை

    எழுதியவர்-கவியரசர் கண்ணதாசன்

    பாடியவர்-சந்திரபாபு

    இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி

    பாடலின் சுட்டி- http://youtu.be/54qGTIOkuww

    பாடல்-தங்கச்சி சிரித்தாளே

    படம்-சிவப்பு சூரியன்

    எழுதியவர்-கவிஞர் வாலி

    பாடியவர்-மலேஷியா வாசுதேவன்

    இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடலின் சுட்டி- http://youtu.be/QML2Nn-fhy0

    பாடல்-சிரி சிரி சிரி சிரி

    படம்-ஆளவந்தான்

    எழுதியவர்-கவிஞர் வைரமுத்து

    பாடியவர்கள்-கமலஹாசன்,மகாலக்ஷ்மி ஐயர்

    இசை-ஷங்கர் இஷான் லாய்

    பாடலின் சுட்டி –  http://youtu.be/PySy84R-DDo

    நா. ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams

     
    • amas32 10:41 pm on October 22, 2013 Permalink | Reply

      அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு, இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு. இதுவும் ஒரு அருமையான் பாடல். ரிக்சாக்காரன் படத்தில் குழந்தையைப் பார்த்து MGR பாடும் பாடல். இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் அருமை.

      ஆளவந்தான் படப் பாடல், சிரி சிரி சிரி சிரி ஒரு வித்தியாசமானப் பாடல், எனக்கு ரொம்பவும் பிடிக்கும் 🙂

      நல்ல பதிவு, எப்பொழுதும் போல 😉

      amas32

      • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி amas32

    • Uma Chelvan 12:25 am on October 23, 2013 Permalink | Reply

      மார்கழி பனி போல் உடை அணிந்து
      செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து

      சிரித்தால் தங்க பதுமை..
      அட அட என்ன புதுமை …….very beautiful and a very very beautiful post!!!

      • rajinirams 9:37 am on October 23, 2013 Permalink | Reply

        Uma Chelvan மிக்க நன்றி

    • மின்னல்சுதா (@sweetsudha1) 1:12 pm on October 23, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு !! தகுந்த பாடல்களை மேற்கோளிட்டு காட்டியிருந்தது பதிவுக்கு அழகு சேர்த்தது !! இன்னும் நிறைய எழுதவும் !!

      • rajinirams 10:05 pm on October 23, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி

  • G.Ra ஜிரா 4:50 pm on September 23, 2013 Permalink | Reply  

    இன்னொரு நேசம் 

    அவனுக்கும் முன்பு திருமணம் ஆகியிருந்தது. அவளுக்கும் திருமணம் ஆகியிருந்தது. மனைவியைப் பறிகொடுத்தவன் அவன். கணவனால் துன்புறுத்தப்பட்டவள் அவள். கையிலோ சிறு குழந்தை.

    ஏதோவொரு நெருக்கம். ஏதோவொரு ஏக்கம். சாப்பிட்டவர்களுக்கு திரும்பத் திரும்பப் பசிக்கும் என்பது உலகவிதியல்லவா! சாப்பிடாமல் இருப்பதும் தவறல்லவா!

    தலைவாழையிலையிருக்கிறது. இலையில் பலவகை உணவுகள் இருக்கின்றன. சாப்பிடும் ஆசையும் இருக்கிறது. நன்றாகச் சாப்பிடும் உடல்வாகும் இருக்கிறது. ஆனாலும் சாப்பாடு அப்படியே இருக்கிறது.

    கண்களில் பசி இருந்தாலும் கைகளில் ஏதோவொரு தயக்கம். ஆனால் இருவரும் பழகப் பழக அந்தத் தயக்கம் உடைகிறது. காதல் புரிகிறது.

    நான் சொல்லிக் கொண்டிருப்பது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உண்டாகும் பாடல் காட்சி.

    பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டாம் காதல் என்பது இரவு முடிந்து பகல் வருவது போல இயல்பானது. ஆனால் பெண்ணுக்கு? வந்துவிட்டதே. அதுவும் எப்படி?

    உயிரிலே எனது உயிரிலே
    ஒரு துளி தீயை உதறினாய்

    தீயை உதறினால் என்னாவகும்? பக்கென்று பற்றிக் கொள்ளும். அப்படித்தான் பற்றி எரிகிறது அவளது உயிர். தீயென்றால் அணைக்கத்தான் வேண்டும். அணைப்பதற்கு அவன் வரவேண்டுமே!

    அவன் வந்தான். ஆனால் அவள் உணர்வினில் வந்தான். ஒவ்வொரு அணுவிலும் கலந்தான். உணர்வில் மட்டும் கலந்தால் போதுமா?

    உணர்விலே எனது உணர்விலே
    அணுவென உடைந்து சிதறினாய்

    பக்கத்தில்தான் அவன் இருக்கிறான். ஆனால் தொடமுடியவில்லை. கடலுக்கும் வானத்துக்கும் இடையே எவ்வளவோ தூரம். ஆனாலும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன. முட்டிக் கொள்கின்றன.

    அருகினில் உள்ள தூரமே
    அலைக்கடல் தீண்டும் வானமே

    சுவாசிப்பதற்கு கூட காற்று வேண்டும். ஆனால் நேசிக்கத்தான் இதயத்தைத் தவிர எதுவுமே தேவையில்லை. அந்த நேசம் கூட ஒருமுறை மட்டும் தான் வரவேண்டுமா? மறுமுறை வரக்கூடாதா? காதல் போயின் சாதல் மட்டும் தானா? ஒருமுறைதான் காதல் வரும் என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? இல்லையென்றால் கண்ணதாசன் சொன்னது போல் மறுபடியும் வருமா?

    நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா!
    நேசமும் ரெண்டு முறை வாராதா!

    காதல் வந்தாலும் கூடவே பண்பாட்டுக் கவலைகளும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. அவளுக்கும் அந்தக் கவலை உண்டு.

    ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
    பெண்ணாடீ நீ என்று முறைக்குதே
    என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே!

    தாமரை எழுதிய இந்தப் பாடலை படிக்கும் போது எனக்கு இன்னொரு திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. மழலைப்பட்டாளங்கள் படத்தில் வரும் “கௌரி மனோகரியைக் கண்டேன்” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்.

    அதிலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான். ஆறுகுழந்தைகளுக்குத் தாயான விதவைக்கும் ஆறு குழந்தைகளுக்கு தந்தையான மனைவியை இழந்தவனுக்கும் இடையே காதல் வருகிறது. அந்த நாயகியும் வேட்டையாடு விளையாடு நாயகியைப் போலத்தான் புலம்புகிறாள்.

    பருவங்கள் சென்றாலும் ராதை
    அவள் கவிராஜ சங்கீத மேதை
    கண் முன்பு அழகான ஆண்மை
    நான் கல்லல்ல கனிவான பெண்மை
    பண்பாடு என்பார்கள் சிலரே
    இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
    என் பாடு நான் தானே அறிவேன்
    உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்

    இப்படியாக ஏக்கப் பெருமூச்சு நாயகிகளைக் காதலிக்காத விடாத பண்பாட்டையும் சமூகத்தையும் என்ன சொல்வது! காதலிக்க வேண்டியவர்களை காதலிக்க விடாததாலோ என்னவோ குழந்தைக் காதலும் பொறுப்பற்ற விடலைக் காதலுமே காதல் என்று ஆகிவிட்டது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – உயிரிலே என் உயிரிலே
    வரிகள் – தாமரை
    பாடியவர் – ஸ்ரீநிவாஸ், மகாலஷ்மி ஐயர்
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வேட்டையாடு விளையாடு
    பாடலின் சுட்டி – http://youtu.be/vNy2IQ7RD-M

    பாடல் – கௌரி மனோகரியைக் கண்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மழலைப் பட்டாளம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/rn7wDu5IOe0

    அன்புடன்,
    ஜிரா

    296/365

     
    • amas32 9:26 pm on September 24, 2013 Permalink | Reply

      தாமரையின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு பெண்ணினால் பெண்ணின் உணர்வை அழகாகச் சொல்ல முடியும். மேலும் பெண் கவிஞர்களே அரிது.

      ஆனால் கண்ணதாசனும் ஒரு பெண் கவிஞருக்கு ஈடாகவோ அதற்கும் மேலோ நீங்கள் குறிப்பிட்டுள்ளப் பாடலில் உணர்வுகளை விவரித்து இருக்கிறார்!

      //பண்பாடு என்பார்கள் சிலரே
      இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
      என் பாடு நான் தானே அறிவேன்
      உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்//

      அற்புதமான வரிகள். கவியரசர் கவியரசர் தான்!

      amas32

    • Uma Chelvan 3:32 am on September 25, 2013 Permalink | Reply

      Nice and decent write up on a complicated subject. Kudos.

    • rajinirams 10:37 am on September 25, 2013 Permalink | Reply

      நீங்கள் எடுத்துக்கொண்ட பதிவும் அதற்கேற்ற பாடல்களும் வித்தியாசம் மட்டுமல்ல,சென்சிடிவான விஷயமும் கூட.மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.கவியரசரின் வரிகள் அற்புதம்,வைதேகி காத்திருந்தாள் படத்தின் வாலியின் வரிகளும் அருமையாக இருக்கும்-“தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது” என்று நாட்டிய பெண் அவர் மொழியில் பாடுவது போலவே எழுதியிருப்பார்.

  • என். சொக்கன் 6:21 pm on March 1, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : ஜோடிப் பாசம் 

    • படம்: ஜோடி
    • பாடல்: வண்ணப்பூங்காவைப் போல்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: மகாலக்‌ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ்
    • Link : http://thiraipaadal.com/tpplayer.asp?sngs=’SNGARR0201’&lang=en

    ஜோடி படப் பாடல் ட்யுன்கள், ஒரு ஹிந்திப் படத்துக்காக ரஹ்மான் போட்டது. இந்த மாதிரி அவர் நிறையப் படங்களுக்கு செய்திருக்கிறார். ஆனால் ஜோடி தான் ஆரம்பம் என நினைக்கிறேன்.

    அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருக்கும். “காதல் கடிதம் தீட்டவே” பாட்டுக்கு வைரமுத்துவே படத்தில் வந்து லீட் எடுத்துக் குடுப்பார்.

    ஆல்பத்தில் “வண்ணப்பூங்காவை போல்” என ஒரு பாடல் உண்டு. ஆனால் படத்தில் வராது.

    வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
    எங்கள் பொன் மாத பூக்களுக்கும் தாயல்லவா
    இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
    அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

    விண்மீன்களைக் கேட்டால் அண்ணன்கள்
    எல்லாம் பறித்து தருவார்கள்
    நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி
    ஒடித்து ஒடித்து தருவார்கள்
    ஒற்றைத் தங்கை எனக்காக உயிரை தருவார்கள்

    பாடல் வரிகளைப் பாருங்கள். அண்ணன்(கள்), தங்கை பாசத்தைப் பற்றி இருக்கிறது. ஜோடி படத்துக்கும் இந்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

     

    அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடலை எழுதிப் பதிவு செய்யவேண்டும் ? 

     

    இந்த ட்யுன்கள் ஒரு ஹிந்திப் படத்துக்குப் போட்டதல்லவா. அந்தப் படத்தின் பெயர் Doli Saja Ke Rakhna. அனியத்து புறவு/காதலுக்குமரியாதையின் ரீமேக்.

     

    ”காதலுக்குமரியாதை” கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தக் கதைக்கு இந்தப் பாடல் வரிகள் அப்படியே பொருந்துகிறதா?! :)) 

     

    ஆனால், இதற்குச் சம்பந்தமே இல்லாத ‘ஜோடி’ கதையில் இந்தப் பாடலை ஏன் எழுதவேண்டும்?

    கூகிளில் கிடைக்காத சில தகவல்கள் கூட ட்விட்டரில் கிடைக்கும். 🙂 ’ஜோடி’ பாடல்களை எழுதிய வைரமுத்து அவர்களின் மகன், திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்த மர்மத்தை ட்விட்டரில் அவிழ்த்தார்:

    • ’Doli Sajake Rakhna’ ஹிந்திப் படத்தை தமிழில் டப் செய்வதாக இருந்தார்கள், அதற்காக இந்தப் பாடல்கள் எழுதப்பட்டன, பதிவு செய்யப்பட்டன
    • ஆனால் பின்னர், அந்த டப்பிங் முயற்சி கைவிடப்பட்டது. இந்தத் தமிழ்ப் பாடல்கள் வீணாகும் சூழ்நிலை
    • ‘ஜோடி’ திரைப்படத்தின் இயக்குனர் அந்தப் பாடல்களை எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றி ஒரு கதை செய்தார், ‘வண்ணப் பூங்காவைப்போல்’ பாடல் அந்தக் கதைக்குப் பொருந்தவில்லை, ஆகவே அதனை விட்டுவிட்டார்
    • அந்த ட்வீட்கள் : 1, 2 & 3

    ஆக, “ஆனந்தக்குயிலின் பாட்டு” என்ற காதலுக்கு மரியாதை படப் பாடலின் அதே சூழ்நிலைக்கு ரஹ்மான் இசையமைத்த பாடல்தான், ‘ஜோடி’க்காக இப்படி மீண்டும் தமிழ் வடிவம் பெற்று வந்திருக்கிறது.

    காளீஸ்

    https://twitter.com/eestweets

     
    • @npodiyan 2:43 pm on March 2, 2013 Permalink | Reply

      ஊஞ்சல் என்று ஒரு ஆல்பம் வந்ததே(அதே மெட்டுகள் வேறு வரிகள்). அது தான் Doli Saja Ke Rakhnaவின் டப் என்று ரகுமானின் விக்கி பக்கம் சொல்கிறது. ஊஞ்சலிலுள்ள என் நெஞ்சுக்குள்ளே (அஞ்சாதே ஜீவா மெட்டு) பாடலின் வர்கள் முழுக்க கடல் வாசம் வீசுவது அது மணிவண்ணன் கேரக்டரின் பாடலோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வண்ணப் பூங்காவில் மெட்டில் 2 பாடல்கள் உண்டு (வரிகள் முழுக்க அண்ணன் பாசம்).
      Im confused.

    • Kalees 7:24 pm on March 2, 2013 Permalink | Reply

      ஜீவா பாட்டு மணிவ்ண்ணன் கேரக்டருக்குத்தான்

      ஆனந்தக்குயிலின் கூட 2 வெர்சன் உண்டு.so is வண்ணப்பூங்காவை.ஆச்சரியமில்லை.
      இந்த “ஊஞ்சல்” விசயம் தான் புதுசா இருக்கு. அதுப்பத்தி தகவலே இல்லை. எனிவே, தகவலுக்கு நன்றி.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel