Updates from January, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:48 am on January 31, 2013 Permalink | Reply  

  உலகை மறந்த பூங்கோதை 

  • படம்: விஸ்வரூபம்
  • பாடல்: உன்னைக் காணாது
  • எழுதியவர்: கமலஹாசன்
  • இசை: சங்கர், எஹ்சான், லாய்
  • பாடியவர்கள்: கமலஹாசன், சங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=fJ0LEFx44bY

  பின்னிருந்து வந்து எனைப் பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு

  உலகுண்ட பெருவாயன் என் வாயோடு வாய் பதித்தான்,

  இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

  இந்தப் பூங்கோதை மறந்தாளடி!

  ’விஸ்வரூப’த்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை முதல்முறை கேட்கும்போதே, ‘ஆண்டாள் Dictate செய்ய, கமலஹாசன் எழுதியதுபோல் இருக்கிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டேன். அந்த அளவுக்கு இந்தப் பாடலின் வரிகளில் ஆழ்வார் நிழல். நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள் நேரடியாகவும், மற்ற பல ஆழ்வார்கள் நாயகி பாவத்திலும் எழுதிய காதல் வரிகளை அடியொற்றி மிக அழகான ஒரு நவீனக் காதல் பாடலை எழுதியுள்ளார் கமலஹாசன்.

  குறிப்பாக, ‘உலகுண்ட பெருவாயன்’ என்ற வர்ணனை பலரை ஈர்த்துள்ளது. திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரி அது:

  இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம், இலங்கு ஒலி நீர் பெரும்பௌவம் மண்டி உண்ட

  பெரு வயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம், பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ

  ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெருவாயர் இங்கே வந்து, என்

  பொருகயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

  தோழி,

  என் காதலனாகிய திருமால், பெரிய சத்தத்தை எழுப்பும் அலைகளைக் கொண்ட கடலுக்குள் மூழ்கி, அந்தத் தண்ணீர் மொத்தத்தையும் குடிக்கும் அளவுக்குப் பெரிய வயிறைக் கொண்டவன், உலகத்தையே கையில் ஏந்தி உண்ணும் அளவுக்குப் பெருவாயன், கருத்த மேகத்தைப்போன்றது அவனுடைய வண்ணம், பெரும் தவங்களைச் செய்த முனிவர்கள் சூழ, ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரத்துடன் அவன் இங்கே வந்தான்.

  ஆனால், அவன் இங்கேயே (என்னுடன்) நிரந்தரமாகத் தங்கவில்லை. ‘தண்ணீரால் சூழப்பட்ட திருவரங்கம்தான் என்னுடைய ஊர்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டான்.

  அவன் என்னை விட்டுப் பிரிந்ததால் சண்டையிடும் கயல் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களில் நீர் ததும்பியது, எனது உடல் மெலிந்தது, இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தன.

  சுமாரான விளக்கவுரைதான். ஆழ்வார் தமிழை அழகு குறையாமல் Remix செய்வது அத்தனை சுலபமில்லையே!

  ஆனால், இதை வைத்து உங்களுக்குக் காட்சி புரிந்திருக்கும். திருமாலின்மீது காதல் கொண்ட பெண், தன்னுடைய தோழியிடம் இப்படிச் சொல்கிறாள். திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான் என்று ஊகிக்கிறேன். ஆண் குரல்கள் பாடியிருப்பதுதான் ஒரே வித்தியாசம்.

  அதனால் என்ன? திருமங்கை ஆழ்வாரும் ஆண்தானே?

  ***

  என். சொக்கன் …

  31 01 2013

  061/365

   
  • Jayashree Govindarajan 11:07 am on January 31, 2013 Permalink | Reply

   “உலகமுண்ட பெருவாயா”- என்று முதலில் அழைத்தவர் நம்மாழ்வார். (ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி முதல் பாசுரம்)

   கமல் கவிதையில் எழுதிய “அதுஇதுஉது” (மன்மதன் அம்பு) கூட நம்மாழ்வாரிடம் எடுத்ததே.

  • amas32 (@amas32) 2:00 pm on February 1, 2013 Permalink | Reply

   தற்போது எனக்கு மிகவும் விருப்பமான வரிகளைக் கொண்ட திரைப்பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி 🙂

   ஆமாம், எனக்கும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது ஆழ்வார்கள் நினைவு தான் வரும். நாயகி பாவத்தில் எழுதப்பட்ட வரிகள். வைஷ்ணவ சம்பிரதாயப் படி திருமால் ஒருவனே ஆண் மற்ற அனைத்து ஜீவராசிகளும் பெண்கள் தான். அதனால் தான் காதல் ரசம் சொட்ட இருக்கும் பாடல் கூட பக்திப் பாடலாக உருமாறிவிடுகிறது!

   amas32

  • Mohanakrishnan 11:18 pm on February 1, 2013 Permalink | Reply

   சொன்னது நம்மாழ்வாரோ திருமங்கையாழ்வாரோ. ஆனால் திருமாலை உலகுண்ட பெருவாயனாக நேரில் பார்த்தது யசோதை தான் என்று நினைக்கிறேன். கண்ணனின் அந்த சின்ன வாயில் உலகம் கண்டவள் அவள்.

  • Mohanakrishnan 11:19 pm on February 1, 2013 Permalink | Reply

   எப்போதோ படித்த கவிதை ஒன்று

   ‘கண்ணன் வாயை திறக்கட்டும்
   உலகம் தெரியவில்லை என்றால்
   நீ யசோதை இல்லை’

 • mokrish 10:43 am on January 30, 2013 Permalink | Reply  

  கேட்டதும் கற்றதும் 

  நண்பர் @nchokkan ‘ஒரு பாடலில் ஒரு வார்த்தை வேறு வார்த்தை போல் கேட்டது’ என்று சொல்லி அந்த புதிய வார்த்தையை ஒரு பதிவில் அழகாக விளக்கியிருந்தார். கான மயிலாட கண்டவுடன் சரி நாமும் ஜாலியாக இதே போல் வேறு பாடல்களை ஆராயலாம் என்று ஒரு முயற்சி.

  எனக்கு சில சந்தேகங்கள் – கவிஞரும் இசையமைப்பாளரும் சொல்வதை சில பல சமயங்களில் பாடகர்கள் சரியாக கேட்டுக்கொள்ளாமல் பாடுகிறார்களோ என்று சந்தேகம். அந்தமான் காதலி படத்தில் நினைவாலே சிலை செய்த பாடலில் திருக்கோவிலை ‘தெருக்கொவிலாய்’ பாடியதும் , பூவிழி வாசலில் யாரடி வந்தது என்ற பாடலில் கிளியே என்பதற்கு பதில் கிலியே என்று பாடியதும் ஏன் என்று புரியவில்லை. அப்போது ரொம்பவும் உறுத்தியது ஆனால் இப்போது எல்லாமே ‘பருவாயில்லை’ தான். சமீபத்தில் நெஞ்சுக்குள்ளே ஒம்ம என்ற கடல் பாடலில் கூட ‘வெல்ல பார்வையா வெள்ள பார்வையா என்று ஒரு விவாதம் நடந்தது.
   
  மௌன ராகம் படத்தில் வாலியின்  ‘நிலாவே வா’ என்ற பிரபல பாடலில் http://www.youtube.com/watch?v=-RdltrvAvJ8
   
  பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட 
  கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது 
  ஒரேயொரு பார்வை தந்தாலென்ன தேனே 
  ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன மானே 
   
  என்ற வரிகளை கேட்டவுடன் குழப்பம். காலங்காலமாய் பார்வைக்கு மானும் சொல்லுக்கு தேனும் தானே? அங்கங்கே மானே தேனே போட்டுக்க என்று சொன்ன கவிஞர் மானையும் தேனையும் மாற்றி போட்டுவிட்டரா? இருக்க முடியாதே. இதே பாடலில் முன்னால் வரும் வரிகளில் ‘பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை‘ என்று தேனையும் சொல்லையும் இணைத்து பாடிய வாலி ஏன் இப்படி மாற்றி போட வேண்டும்?அல்லது இசையமைத்தவரும் பாடியவரும் மெட்டில்  உட்கார்ந்தால் போதும் என்று interchange செய்தார்களா? தெரிந்தே செய்தார்களா? Poetic  Liberty என்பது இதில் உண்டா?
   
  சரி விடுங்கள். வேறு பாடல் பார்ப்போம்.   ராமு என்ற படத்தில் ஒரு பாடல். ஒரு பெண் ஒரு குழந்தையிடம் நான் உனக்கு சிற்றன்னையாக வர வேண்டும் என்று கூறும் பாடல் http://www.youtube.com/watch?v=1rC0ny8Q7bA
   
  முத்துசிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும் 
  முத்தம் ஒன்று சத்தம் இன்றி பிறந்து வரும் 
  அம்மம்மா அப்பப்பா 
  தித்திக்கும் சேதி வரும் 
   
  இதில் தித்திக்கும் சேதி என்பது எனக்கு ‘சித்திக்கும் தேதி’ என்று கேட்டது. அப்படியே கேட்டாலும் பொருள் மாறாமல் மெட்டும் குலையாமல் இருப்பது போல் தோன்றுகிறது.பாடலில் இருப்பது கவிதையாய் இருக்கிறது. எனக்கு கேட்டது கதை சொல்கிறது.
   
  அடுத்து சின்ன சின்ன ஆசை பாடலில் 
   
  பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை 
  சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை 
   

  என்ற வரிகள். முதலில் இது எனக்கு ‘சிற்றிடைக்கு மேலே சேலை கட்ட ஆசை’ என்றே கேட்டது. சரியாகத்தானே இருக்கிறது என்று நண்பனிடம் வாதாடி தோற்றுபோனேன்.  சித்திரை தான் இன்னும் அழகான அர்த்தம் கொடுக்கிறது.

  மோகன கிருஷ்ணன்

  060/365

   
  • Saba-Thambi 8:09 pm on January 30, 2013 Permalink | Reply

   வேற் று மொழி பாடகர்களின் உச்சரிப்பு ல,ள,ழ வரிசையிலும், ர,ற வரிசையிலும் காட்டிக் கொடுத்துவிடும் ஆனாலும் அப் பாடகரின் குரல் இனிமை இரசிகர்களின் மனதை வென்று விடும்.
   பூவிழி வாசலில் யாரடி வந்தது என்ற பாடலில் கிளியே அதற்கு நல்ல உதாரணம்

   • amas32 10:12 pm on January 30, 2013 Permalink | Reply

    இப்பொழுது வரும் பலப் பாடல்களில் வார்த்தைகள் எனக்குச் சரியாகவே புரிவதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று தவறான உச்சரிப்பு, இரண்டாவது வார்த்தைகளை மூழ்கடிக்கும் சத்தமான இசை. பழைய பாடல்களில் அந்த பிரச்சினையே கிடையாது. பி.சுசிலா, டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் மெல்லிசை மன்னர் இசையில் பாடியவை துல்லியமாகக் காதில் ஒலிக்கும்! இப்போ தமிழல்லாத வார்த்தைகள் பாடலின் ஆரம்பத்தில் வருவது இன்னும் தலை வேதனையாக உள்ளது 🙂 அனால் அதுவும் இசை தான். இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!

    amas32

 • G.Ra ஜிரா 11:05 am on January 29, 2013 Permalink | Reply  

  மாற்றான் தோட்டத்து மெல்லிசை 

  ஒரு இசையமைப்பாளர் பாடுவது என்பது மிக இயல்பான ஒன்று. ஒரு பாடகருக்குரிய குரலினிமை குறைவாக இருந்தாலும் ஒரு இசையமைப்பாளரின் குரலில் இருக்கும் பாவம் மிகச் சிறப்பானது.

  மெல்லிசை மன்னர் அவருடைய எத்தனையோ படங்களில் பாடியிருக்கிறார். பாலிருக்கும் பழமிருக்கும் பாடலில் சுசீலாம்மா பாலிருக்கும் என்று பாட நடிகர் திலகத்துக்கு ம்ஹும் என்று குரல் கொடுத்துப் பாடியது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் என்பதைச் சொன்னால்தால் தெரிந்து கொள்ள முடியும்.

  தன்னுடைய இசையில் வந்த பாடல்களையே பாடிக் கொண்டு வந்த மெல்லிசை மன்னரை இன்னொரு இசையமைப்பாளர் அவருடைய இசையில் பாட வைத்தார். அதன் பலன் இன்று ஜி.வி.பிரகாஷ்குமார் போன்ற இருபத்தைந்து வயது வாலிபனின் இசையிலும் எம்பது வயதைத் தாண்டிய மெல்லிசை மன்னர் பாடியிருக்கிறார்.

  அடுத்த இசையமைப்பாளர் இசையில் அதிகப்படியாகப் பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் என்று அடித்துச் சொல்லி விடலாம்.

  எம்.எஸ்.வி அவர்களை முதலில் அப்படிப் பாட வைத்தது இசையமைப்பாளர் வி.குமார். வெள்ளி விழா என்பது படத்தின் பெயர். “உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா” என்ற மிக அற்புதமான பாடல் மெல்லிசை மன்னரின் குரலில் சாகாவரம் பெற்றது. இணையத்தில் இந்தப் பாடலின் ஒலி-ஒளி வடிவமும் கிடைக்கிறது (https://www.youtube.com/watch?v=PS5C7QF0yXU).

  அடுத்து கோவர்த்தனம் இசையில் பாடிய வரப்பிரசாதம் என்ற பாடலும் பிரபலமானது. அந்தப் பாடல் வரப்பிரசாதம் என்ற படத்தில் இடம் பெற்றது. ஆனால் இந்தப் பாடல் ஆன்லைனில் கிடைக்கவே இல்லை. தனித்து இசையமைத்திருந்தாலும் கோவர்த்தனம் மெல்லிசை மன்னரிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். வரப்பிரசாதம் படத்தில் கங்கைநதியோரம் ராமன் நடந்தால் என்ற பாடல் மட்டும் இன்று இணையத்தில் கிடைக்கிறது. மிக அருமையான பாடல்.

  மெல்லிசை மன்னரின் இசைப்பயணத்தில் இசைஞானி இளையராஜாவை விட்டுவிட முடியுமா?

  தாய்மூகாம்பிகை படத்தில் ராஜா இசையில் நாரணன் தேவி திருமகளே என்று தொடங்கும் திருமகள் துதியைப் பாடியிருக்கிறார். அதே பாட்டில் கலைமகள் துதியை பாலமுரளிகிருஷ்ணாவும் மலைமகள் துதியை சீர்காழி கோவிந்தராஜனும் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இங்கு கேட்டும் பார்த்தும் ரசிக்கலாம் (https://www.youtube.com/watch?v=sVVBuQM4eJU). படத்தில் பாடலைப் பாடி நடித்திருப்பதும் மெல்லிசை மன்னரே.

  ஒரு யாத்ராமொழி என்று மலையாளப்படம். அதிலும் இளையராஜா இசையில் மெல்லிசைமன்னர் பாடியிருக்கிறார். எரிக்கனல் காட்டில் என்று தொடங்கும் உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். உள்ளத்து உணர்ச்சியை இசையும் குரலும் எப்படி வெளிக்கொண்டுவரும் என்பது புரியும். இந்தப் பாடலின் ஆடியோ வடிவம் ஆன்லைனில் கிடைக்கிறது (http://bsnl.hungama.com/fls_details.php?pid=26511).

  அண்ணனிடம் பாடியவர் தம்பியின் இசையில் பாடாமல் இருப்பாரா? நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் கங்கை அமரன் இசையில் ஓடம் எங்கே போகும் என்ற பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மூன்று இசையமைப்பாளர்களின் கூட்டணி. இசையை கங்கை அமரன் பார்த்துக் கொள்ள மெல்லிசை மன்னர் பாட (சங்கர்)கணேஷ் நடிக்க வந்த பாடல் இது. இதன் ஒளிவடிவம் கிடைக்கவில்லை. ஒலிவடிவம் இங்கு கிடைக்கிறது (http://music.cooltoad.com/music/song.php?id=404824).

  அடுத்து வந்தது காதல் மன்னன் திரைப்படம். இந்தப் படத்துக்கு இசை பரத்வாஜ். இந்தப் படத்தில் மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு என்ற பாட்டை எம்.எஸ்.வி பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவரே எம்.எஸ்.விதான் என்று வைரமுத்து ஒரு பேட்டியில் சொன்ன நினைவு. இன்னொரு பேட்டியில் பரத்வாஜ் தன்னுடைய இசையில் எம்.எஸ்.வி பாடியதைப் பெருமையாகக் குறிப்பிட்டார். உண்மை எதுவோ! மெல்லிசைமன்னர் பாடலைப் பாடி நடித்த காட்சி இங்கே http://www.youtube.com/watch?v=qpd8r5MvBcM.

  ராஜா இசையில் இரண்டு பாடல்களைப் பாடியவர் ரகுமான் இசையிலும் இரண்டு பாடல்களை இதுவரையில் பாடியிருக்கிறார். முதலில் வந்தது ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா என்ற பாடல். இடம் பெற்ற படம் சங்கமம். இந்தப் பாடலைத் தனியாகவும் ஹரிஹரனோடு இணைந்தும் பாடியுள்ளார் மெல்லிசை மன்னர். பாடலின் ஒளிவடிவம் இங்கே – https://www.youtube.com/watch?v=8WxTlj1ieu4

  அடுத்த பாடல் மிகவும் உணர்ச்சிமயமான பாடல். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற விடை கொடு எங்கள் நாடே என்ற பாடல். தனது கரகரப்பான குரலால் ஈழத்து மக்களின் சோகத்தையெல்லாம் கொட்டி விட்டார் மெல்லிசை மன்னர். இந்தப் பாடல் காட்சியில் இலங்கையில் திரையரங்குகளில் மக்கள் எல்லாரும் அழுதார்கள் என்பது கேள்விப்பட்ட செய்தி. இந்தப் பாடலின் ஒலி-ஒளி வடிவங்களை மற்றொரு முறை கேட்கும்/பார்க்கும் திறன் எனக்கில்லை (https://www.youtube.com/watch?v=HjNsz1yQ6Mo).

  சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்று பாடிய சிறுவன் இன்று இளைஞன். அதுவும் இசையமைப்பாளன். அந்த ஜி.வி.பிரகாஷ்குமார் இசையிலும் மெல்லிசை மன்னர் பாடியிருக்கிறார். மதராசப்பட்டினம் என்ற படத்தில் இடம் பெற்ற மேகமே ஓ மேகமே என்ற பாடல் அது. சலவைத் தொழிலாளர்கள் எல்லாம் இணைந்து பாடுவது போன்ற பாடல் அது. பாடலை இங்கே பார்க்கலாம் (https://www.youtube.com/watch?v=1Pl8_CgRWZo).

  தேவாவின் இசையில் மாணிக்க விநாயகத்தின் இசையிலும் மெல்லிசை மன்னர் பாடியிருக்கிறார் என்று கேள்வி. ஆனால் அவை திரைப்பாடல்களா பக்திப்பாடல்களா என்று தெரியவில்லை. மாணிக்க விநாயகம் இசையமைத்த ஒரு முருகன் பாடல்கள் தொகுப்பில் பன்னிரண்டு பாடல்களை மெல்லிசை மன்னரே பாடியது நினைவுக்கு வருகிறது. அவற்றை எங்கே தேடுவது?

  முன்பெல்லாம் சாகாவரம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்களாம். ஆனால் சில பாடல்கள் மெல்லிசை மன்னரின் குரலில் பாடப்பட்டு சாகாவரம் பெற்று விட்டன. படைப்புக் கடவுளான நான்முகனால் கொடுக்க முடியாத சாகாவரத்தை இந்த மெல்லிசைக் கடவுள் கொடுத்து விட்டார் என்றால் மிகையில்லை.

  அன்புடன்,
  ஜிரா

  059/365

   
  • amas32 (@amas32) 11:27 am on January 29, 2013 Permalink | Reply

   What research! நீங்கள் ஒரு ஞானச் சுரங்கம்! மெல்லிசை மன்னர் பாடி இருக்கும் பாடல்களில் ரஹ்மான் இசையில் பாடியவை தான் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. எந்தக் குரல் எந்தப் பாட்டுக்குப் பொருந்தும் என்று தேர்வு செய்வதில் இசையமைப்பாளரின் திறன் தெரிகிறது.

   //முன்பெல்லாம் சாகாவரம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்களாம். ஆனால் சில பாடல்கள் மெல்லிசை மன்னரின் குரலில் பாடப்பட்டு சாகாவரம் பெற்று விட்டன. படைப்புக் கடவுளான நான்முகனால் கொடுக்க முடியாத சாகாவரத்தை இந்த மெல்லிசைக் கடவுள் கொடுத்து விட்டார் என்றால் மிகையில்லை.//

   You are a great thinker and a writer 🙂

   amas32

  • தேவா.. 7:26 pm on January 29, 2013 Permalink | Reply

   மெல்லிசை மன்னர், SPB இசையிலும் பாடியுள்ளார். உன்னை சரணைந்தேன் படத்திற்காக..ராஜா, MSV and SPB மூன்று பேரும், நட்பு என்று ஒரு அருமையான பாடலை பாடியிருப்பார்கள்.

 • என். சொக்கன் 11:58 am on January 28, 2013 Permalink | Reply  

  இனிப்பு! 

  • படம்: ப்ரியா
  • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
  • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

  என் ஜோடிக் கிளியே,

  கன்னல் தமிழே,

  தேனில் ஆடும் திராட்சை நீயே!

  பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

  ‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

  அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

  அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

  திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

  அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

  இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

  வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

  ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

  ***

  என். சொக்கன் …

  28 01 2013

  058/365

  (பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )

   
  • GiRa ஜிரா 12:52 pm on January 28, 2013 Permalink | Reply

   அட்டகாசம்.

   கம்பரும் கன்னல் பத்திப் பேசுறாரு.

   கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் என்று மன்மதன் கரும்பு வில் வெச்சிருக்கறதப் பத்திப் பேசுறாரு. இலக்கியத்துல கன்னல் தேடுனா எக்கச்சக்கமா அம்புடும்.

   இனிப்பைக் கொடுக்கும் தாவரங்குறதால அதுக்கு அவ்வளவு புகழ் போல.

  • amas32 (@amas32) 7:51 pm on January 28, 2013 Permalink | Reply

   The recent post by @elavasam http://elavasam.posterous.com/174635736 also refers to the same topic. Nice coincidence 🙂

   //கன்னல் தமிழே,// என்பது பி.சுசீலா அவர்கள் பாடிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

   amas32

  • elavasam 8:12 pm on January 28, 2013 Permalink | Reply

   இதெல்லாம் ஓவர். ரெண்டு நாள் முன்னாடி உம்மாலதான் நானும் கன்னல் பத்தி எழுதினேன். அதைப் படிக்காம இங்க வந்து போட்டி போஸ்ட் போடும் உம்மை என்ன செய்யலாம்?

   http://elavasam.posterous.com/174635736

  • elavasam 8:21 pm on January 28, 2013 Permalink | Reply

   @amas32 – உண்மையின் பக்கத்தில் நின்று போராடுவதற்கு நன்றி!! :))

 • mokrish 11:39 am on January 27, 2013 Permalink | Reply  

  தங்கத்திலே ஒரு குறை 

  நாயகனோ நாயகியோ அல்லது வேறு  கதாபாத்திரமோ அங்கத்தில் குறைபாடுடன் சித்தரிக்கப்பட்டதுண்டு. சில நேரங்களில் கதையின் மையமாகவும் பல நேரங்களில் அனுதாப அலை வீச ஒரு Prop ஆகவும் இடம் பெரும் விஷயம். இதை வைத்து காமெடி செய்யும் insensitive காட்சிகளும் உண்டு.  கதையின் முக்கிய அம்சமாக வந்தால் திரைப்பாடல் இதை அழகாக Soft  ஆக கையாள்கிறது என்றே தோன்றுகிறது.. பாகப்பிரிவினையில் கண்ணதாசன்

  தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
  உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

  என்று இது ஒரு மேட்டரே இல்லை என்பது போல் ஆறுதல் சொல்லும் பாடல் இந்த கோலத்தின் முக்கிய புள்ளி. தொடர்ந்து ‘கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா, இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா’ என்று கவிதையாய் ஒரு motivation செய்தி சொல்கிறார். என் தம்பி படத்தில் முத்து  நகையே என்று ஒரு குழந்தையை வர்ணிக்கும் பாடலில்

  கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
  கையழகு பார்த்தால் பூ எதற்கு?
  காலழகு ….

  மேலே பாட முடியாமல் குறைபட்ட காலை பார்த்து வருந்திய கவிஞர் கோபப்பட்டு  முடிக்கும் வரிகளை பாருங்கள்.

  காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
  கருணை என்றொரு பேரெதற்கு ?

  இறைவனை உரிமையோடு சாடும், நிஜமான நியாயமான கோபம் காட்டும் கேள்வி.  பேசும், கேட்கும் சக்தி இல்லாத நாயகன் நாயகி பற்றி உயர்ந்தவர்கள் பட பாடலில் ‘ இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட’ என்றதும் வைரமுத்துவின் ‘கண்ணுக்குள் முள்ளை  வைத்து யார் தைத்தது’ என்பதும் இதே கோபம்தான்.

  நாயகி பேசாமடந்தையாய் இருக்கும் நிலையில் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்கள். முதலில் கொடி மலர் படத்தில்

  மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
  நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

  பேசமுடியாத காதலியை ‘மௌனமே’ என்று அழைத்து ஜாடையே போதும் நாம் பேச என்று சொல்லும் காதலன். அடுத்து

  முத்துச்சரமே என் பக்கமிருந்தால்
  வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
  முன்னமிருக்கும் இந்த சின்ன முகத்தில்
  பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

  கண்ணதாசன் சின்ன முகத்தில் கண்டதை  சமீபத்தில் வைரமுத்துவும்  இதயத்தில் பார்க்கிறார் மொழி படத்தில் இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை,இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்று தீர்மானம் போடுகிறார்.

  அடுத்த பாடல்வாழ்வு என் பக்கம் படத்தில் . மௌனம் என்பது ஒரு வகை மொழியின் பதம் என்று விளக்கும் வரிகள்.

  வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு
  தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
  தீபம் எப்போது பேசும் கண்ணே
  தோன்றும் தெய்வத்தின் முன்னே
  தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
  தீபம் சொல்லாதோ கண்ணே

  சில அற்புதமான உரையாடல்களில் வார்த்தைகளே  இல்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார். இதை கேட்டால்  அந்த பெண்ணே ‘குறையொன்றுமில்லை’ என்று நினைத்திருப்பாளோ என்று தோன்றுகிறது. அதை சொல்லத்தான் MSV அந்த  பாடலில் பெண்ணின் குரலில் ஒரு சந்தோஷமான ஹம்மிங் சேர்த்திருப்பார்.

  மோகனகிருஷ்ணன்
  57/ 365

   
  • amas32 8:21 pm on January 27, 2013 Permalink | Reply

   நீங்கள் இங்கே பேசுவதற்கு எடுத்துக் கொள்ளும் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் விருப்பமானவை 🙂 மொழி பாடலில் வரும் வரிகள் என்னை எப்பவும் மிகவும் ஈர்க்கும் வரிகள்.

   //கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா, இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா’//
   ரொம்ப மென்மையா physically challenged drawbackஐ சிறிய குறையாகக் காதலி எடுத்துக் கொள்ளும் விதத்தைக் கவிஞர் சூப்பராகக் கையாண்டுள்ளார்!

   //கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
   கையழகு பார்த்தால் பூ எதற்கு?
   காலழகு ….//
   இந்த இடத்தில் இசையைமைப்பாளர் ஒரு பாஸ் கொடுத்து பின் அந்த பாடல் வரிகள் கோபத்துடன் முடியும். அதற்கு இசையமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு!

   //மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
   நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்//
   அற்புதமான வரிகள்! ஆனால் இப்பொழுது காதலர்கள் இடையே எல்லாம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான் 🙂

   amas32

  • Saba-Thambi 9:02 pm on January 27, 2013 Permalink | Reply

   similar….
   Movie “Naanum oru penn” voice rendered by P. Sushila ” kanna karumai nira kanna..”

  • வடுவூர் குமார் 9:54 pm on February 11, 2013 Permalink | Reply

   வைர முத்துவின் “கண்ணுக்குள் முள்ளை” …..ஐயோடா என்று பயப்பட வைத்தது.கவிதையில் ஒரு வாள் வீச்சு அது.

 • G.Ra ஜிரா 11:43 am on January 26, 2013 Permalink | Reply  

  கம்யூனிசம் கொடுத்த பக்தி 

  நான்கு வருடங்கள் மட்டும் காய்த்து விட்டு மாயமாய்ப் போன ஒரு கவிமரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அன்று அந்த மரம் காய்த்த காய்கள் இன்றைக்கும் சுவைக்கும் நித்யகனிகள்.

  பட்டுக்கோட்டை கம்யூசினச் சிந்தனையுள்ளவர். வயலில் இறங்கி உழுத பாட்டாளி. இவர் பள்ளியில் படித்தது குறைவு. ஆனால் இவர் தமிழ் படித்த இடம் மிகப் பெரிய இடம். ஆம். பாண்டிச்சேரி கனகசுப்புரத்தினம் என்னும் பாவேந்தரிடம் தமிழ் படித்திருக்கிறார்.

  தமிழ்த் திரையிசையில் பெரும்பாலான பக்திப் பாடல்கள் கவியரசரால் எழுதப்பட்டவை. அடுத்து வாலி நிறைய எழுதியிருக்கிறார். இருவருமே பக்திமான்கள். பக்தி என்ற உணர்வில் ஊறியவர்கள். அந்த உணர்வில் நூற்றுக்கணக்கான பாடல்களையும் நூல்களையும் எழுதியுள்ளார்கள்.

  ஆனால் பட்டுக்கோட்டையார்? கடவுளே இல்லை என்று நம்புகின்றவர். அவரிடம் போய் சாமிப்பாட்டு யாராவது கேட்பார்களா?

  கேட்டும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டதுக்கு ஏற்ற சிறப்பையும் செய்திருக்கிறார் கவிஞர்.

  காளமேகத்தை உறியில் கட்டி அடியில் நெருப்பு வைத்து பாடச் சொன்னார்களாம். அந்த அளவுக்குச் சிரமம் வைக்காமல் பட்டுக்கோட்டை தனது பாட்டுக் கோட்டையைக் கட்டியிருக்கிறார்.

  உலகமே மேடையாய் நின்றிருக்க அதிலேறி உடுக்கை தட்டி ஆடுகின்ற ஈசனைப் பாட ஒரு பாட்டு!

  உமையை ஒரு பாகமாய்க் கொண்டு மதுரையில் ஆட்சி செய்த சொக்கனைப் பாட ஒரு பாட்டு!

  பட்டுக்கோட்டையாரிடமிருந்து வரும் வரிகளைப் பாருங்கள்!

  கங்கை அணிந்தவா
  கண்டோர் தொழும் விலாசா
  சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா
  நின் தாள் துணை நீ தா

  தில்லை அம்பல நடராஜா
  செழுமை நாதனே பரமேசா
  அல்லல் தீர்த்தாண்டவா வா வா
  அமிழ்தானவா வா

  எங்கும் இன்பம் விளங்கவே
  அருள் உமாபதே
  எளிமை அகல வரம் தா வா வா
  வளம் பொங்க வா

  பலவித நாடும் கலையேடும்
  பணிவுடன் உனையே துதிபாடும்
  கலையலங்கார பாண்டிய ராணி நேசா
  மலை வாசா! மங்கா மதியானவா!

  இந்தப் பாடலை எழுதியவன் கடவுளை நம்பாதவன் என்று யாரும் சொல்ல முடியுமா?

  ஒரு நல்ல கவிஞன் எந்தச் சூழல் கொடுத்து எழுதச் சொன்னாலும் எழுதுவான். பாவேந்தரும் முருகன் மேல் நூல் எழுதியிருக்கிறாரே. அவருடைய சீடர் எழுதமாட்டாரா!

  இந்தப் பாட்டு மட்டுமல்ல. பதிபக்தி என்ற படத்தில் பாட்டாளிக் கடவுளின் மேல் ஒரு பாட்டும் எழுதியிருக்கிறார்.

  அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
  நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)

  ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
  ஏழை எங்கள் நிலைமையைத்தான்
  எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

  சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
  கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி
  குறைகள் தீரக் கொடுமைகள் மாற
  கருணைக்கண்ணால் பாருமம்மா!
  கும்பிடுபோடும் ஏழை எங்கள்
  குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)

  இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது
  எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
  பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
  பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
  துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
  சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
  சூதுக்காரர் தொட்டிலிலே
  காதும் கண்ணும் கெட்டு-நல்ல
  நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை
  நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி

  கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,
  சடச்சி,பெரியாட்சி
  காட்சி கொடுக்கும் மீனாட்சி!
  தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
  ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று
  பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
  பசியும் பிணியும் பந்தயம் போடுது!
  கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
  தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
  தேவைக்கேற்ற வகையில் உன்னை
  போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
  தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்
  திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

  அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி
  உதிரக்காளி
  நடனக்காளி சுடலைக்காளீ!
  குறைகள் தீரக் கொடுமைகள் மாற
  கருணைக் கண்ணால் பாருமம்மா!
  கும்பிடுபோடும் ஏழை மக்கள்
  குடும்பம் வாழ வேணுமம்மா!
  நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)

  ஏழைகளின் தெய்வத்தைப் பாடும் போது ஒரு ஏழையாகவே இருந்து அவர்களின் துன்பங்களையெல்லாம் அடுக்கியே பாடுகிறார்.

  இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – தில்லையம்பல நடராஜா
  எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  பாடியவர் – டி.எம். சௌந்தரராஜன்
  படம் – சௌபாக்கியவதி
  இசை – பெண்ட்யால நாகேஸ்வரராவ்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4

  பாடல் – அம்பிகையே முத்து மாரியம்மா
  எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.ராமமூர்த்தி
  படம் – பதிபக்தி
  பாடலின் சுட்டி – http://www.raaga.com/channels/tamil/album/T0001760.html

  அன்புடன்,
  ஜிரா

   
  • amas32 8:09 pm on January 27, 2013 Permalink | Reply

   //சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா// இதை எழுதியது நாத்திகரான பட்டுக்கோட்டையார்! கமல்ஹாசன் என்ற நாத்திகர் எழுதியது //உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்// இரு கலைஞர்களுமே இறைவனை அனுபவித்து தான் எழுதியிருபார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது அதற்கு ஈடாக வேறு எதுவோ நான் அறியேன் பராபரமே! 🙂

   amas32

 • என். சொக்கன் 12:21 pm on January 25, 2013 Permalink | Reply  

  குளிருது! குளிருது! 

  • படம்: புன்னகை மன்னன்
  • பாடல்: வான்மேகம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=LpJFQyX4DmM 

  மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது,

  நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது,

  வானம், முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது,

  காதல் வென்றது!

  இயைபுத்தொடையில் தெறித்தது, குளித்தது, பலித்தது என்று எழுதிவந்த வைரமுத்து, நிறைவாக ‘குடைக்கம்பி துளிர்த்தது’ என்கிறார். அது என் காதில் ‘குளிர்த்தது’ என்று விழுந்தது.

  உண்மையில் ‘குளிர்த்தது’ என்று ஒரு வார்த்தை உண்டா? அது ‘குளிர்ந்தது’ என்றல்லவா இருக்கவேண்டும்?

  இங்கே ’குளிர்தல்’ என்பதுதான் வேர்ச்சொல், மலர்தல் ==> மலர்ந்தது, அதுபோல, குளிர்தல் ==> குளிர்ந்தது. சரிதானே? ‘மலர்த்தது’, ‘குளிர்த்தது’ என்று வருமா?

  கொஞ்சம் தேடினேன். ’குளிர்த்தல்’, ’குளிர்த்தது’ போன்ற வார்த்தைகள் இப்போது நம்மால் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ளன. கம்பனே பயன்படுத்தியிருக்கிறான்.

  சுந்தரகாண்டத்தில் அனுமனைப் பிடித்த ராவணன் படையினர் அவனுடைய வாலில் நெருப்பு வைக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சீதை அக்கினி தேவனைப் பிரார்த்தனை செய்கிறாள், ‘அனுமனைச் சுடாதே’ என்று வேண்டுகோள் (அல்லது கட்டளை) வைக்கிறாள். உடனே, அனுமனின் வால் குளிர்ந்துவிடுகிறது. இதைச் சொல்லும் கம்பன் வரிகள்: ‘தண்மையால் குளிர்த்தது அக் குரிசில் வால்.’

  ’அனுமன் வால் குளிர்த்தது’ என்று கம்பன் வர்ணிப்பது சரி என்றால், ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்று இந்தப் பெண் பாடினாலும் சரிதான்.

  ஆனால், ‘குளிர்ந்தது’க்கும் ‘குளிர்த்தது’க்கும் என்ன வித்தியாசம்? எதை எப்போது பயன்படுத்தவேண்டும்?

  அதையும் தேடினேன். எனக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. Logicalலாக யோசித்தபோது தோன்றியதை எழுதுகிறேன், பிழையிருந்தால் சுட்டிக்காட்டித் திருத்துங்கள்.

  1. ஒரு கப் காஃபி, சுடச்சுடக் கொண்டுவந்து வைக்கிறேன், அதை அப்படியே மறந்துவிடுகிறேன். ஒரு மணி நேரம் கழித்து, Hot Coffeeயாக இருந்த அது குளிர்ந்த Cold Coffeeயாக மாறிவிடுகிறது.

  2. கடையில் குளிர் நீர், ஐஸ் கட்டி போன்றவற்றைப் பயன்படுத்தி நேராக Cold Coffee தயாரிக்கிறார்கள்

  இந்த இரண்டுக்கும் ஒரு வித்தியாசம், முதல் காஃபி தானே குளிர்ந்தது, இரண்டாவது காஃபியை நாமாகக் குளிரச்செய்தோம். அதாவது #1 குளிர்ந்த காஃபி #2 குளிர்த்த காஃபி

  இங்கே அனுமனின் வால் தானாகக் குளிரவில்லை, அந்தப் பெண்ணின் குடைக் கம்பி தானாகக் குளிரவில்லை, சீதையின் பிரார்த்தனையும், மழைத் தண்ணீரும் அவற்றைக் குளிரச் செய்தன, ஆகவே குளிர்த்த வால், குளிர்த்த குடைக்கம்பி என்று பயன்படுத்துகிறோம்.

  இந்த விளக்கம் சரியா? தவறா? தீர்ப்புச் சொல்லுங்கள்!

  பின்குறிப்பு: இந்தக் கட்டுரை மொத்தமும், அந்தப் பாடல் வரிகள் ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்று அமைந்திருப்பதாக எண்ணி எழுதப்பட்டது. பின்னர் அது ‘ துளிர்த்தது’ என்று தெரிந்துகொண்டேன், So the article became null and void 🙂 ஆனாலும் எனக்கு இந்த அலசலை இழக்க மனம் இல்லை, கொஞ்சம் மாற்றியுள்ளேன் 🙂

  ***

  என். சொக்கன் …

  25 01 2013

  055/365

   
  • amas32 9:50 pm on January 25, 2013 Permalink | Reply

   You always think out of the box 🙂 Good read 🙂

   amas32

  • elavasam 4:12 am on January 26, 2013 Permalink | Reply

   குளிர்த்தது / குளிர்ந்தது – இதை முதலில் படிக்கும் பொழுது குளிர்த்தது என்பது எது குளிரச் செய்ததோ அது பற்றி இருக்குமோ என சந்தேகப்பட்டேன். அதாவது The ice made the water cold, as against the water became cold. ஆனால் அதுக்கு குளிரச் செய்தது அல்லது குளிர்வித்தது(?) என்றும் சொல்லலாமே எனச் சந்தேகம். நீங்க குடுத்த கம்பன் எடுத்துக்காட்டும் அதற்கு சரிப்படவில்லை.

   தொடர்ந்து படிக்க நீங்கள் சொல்வது நியாயமாகப்பட்டது. இராமகி அவர்களும் கூட கருத்தது / கறுத்தது என்பதற்கு became black / was blackened என்பது போல விளக்கம் சொல்லி இருந்த ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்.

   இது போன்ற ஒரு பதிவு ஒன்று முன்னர் எழுதி இருக்கிறேன். கட்டினான் கட்டுவித்தான் என்ற சொற்களை உதாரணமாகக் கொண்டு எழுதினேன். அதற்கான சுட்டி – http://tamildoubt.blogspot.com/2011/12/blog-post_14.html

 • mokrish 11:01 am on January 24, 2013 Permalink | Reply  

  அவள் ஒரு ராகமாலிகை 

  திரையிசை பாடல்கள்  கர்நாடக இசைவடிவத்தை சார்ந்து இருப்பதை  பார்த்திருக்கிறோம்.  கதையின் நாயகிக்கு ராகத்தின் பெயர் வைத்ததையும் பார்த்திருக்கிறோம். ரஞ்சனியும் பைரவியும் சிந்துவும் சஹானாவும் நீலாம்பரியும் கதையில் உலா வருவதுண்டு.

   சண்முகம் என்னும் நாயகனை நினைத்து நாயகி மறைந்திருந்து  பாடிய பாட்டை சண்முகப்பிரியா ராகத்திலும்

  அபூர்வமான நாயகியைப்பற்றி  அதிசய ராகத்தில் பாடல் அமைத்ததும்

  நாயகியின் பெயர் கொண்ட லலிதா ராகத்தில் இதழில் கதை எழுதியதும்

  இசை அமைப்பாளர்களின் இனிய கற்பனை. Creative Brilliance

  திரைப்பாடல் வரிகளில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ‘ராகம்’ டாப் டென் லிஸ்டில் வரும். ராகங்கள் பதினாறு உருவான வரலாறும் ராக தீபம் ஏற்றும் நேரமும்  நமக்கு தெரியும். சரி ராகங்களின் பெயர்களை அது பெண்ணின் பெயராய்  வருவதை தவிர்த்து  கவிஞர்கள் எப்படி பிரயோகிக்கிறார்கள்?   முதலில் நினைவுக்கு வருவது ‘இசை கேட்டு எழுந்தோடி’ என்று தோடியை கண்ணதாசன் சொன்னதுதான். தர்பாரில் எனக்கு இணை யாரென்று கேட்டதும் ஒரு நாள் போதுமா என்று கேட்ட அதே பாடலில் தான்.

  அகத்தியர் படத்தில் ஒரு போட்டி பாடலில் சில முத்துக்கள் உண்டு. எந்த ‘நாட்டையும்’ நாதத்தால் வென்றிடுவேன் என்பதும் ‘அனைத்தும் உன் ‘வசந்தா’னா என்பதும் நயம். இசையமைப்பாளர் இளையராஜா கவிஞராகவும் மாறி என்ன சமையலோ என்று விசாரித்து ‘களைந்திடு அரிசியை கல்யாணி – கல் ஆணி என்று சர்க்கஸ் காட்டுவார்.

  கண்ணதாசன் முழுவதும் ராகங்களின் பெயர்களை வைத்து  ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பெண் ஒன்று கண்டேன் படத்தில் அவளை ராகமாலிகையாய் கற்பனை செய்யும்  பாடல்.

   உன் மை விழி ஆனந்த பைரவி பாடும்

  உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்

  நீ ஒரு ராகமாலிகை

  உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

  என்று தொடங்கி எல்லா வரிகளிலும் ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை.

   நான் வாவென அழைக்கையில் விரைந்தோடி

  வந்து தழுவிடும் தேவ மனோஹரி

  ஆரபிமானமும் தேவையில்லை இந்த

  அகிலத்தில் உன் போல் பாவையில்லை

  நீ ஓடி வந்து தழுவினால் வேறு யார் அபிமானமும் எனக்கு தேவையில்லை என்று சொல்லும் காதல்.

  நீ எனக்கே தாரம் என்றிருக்க

  உன்னை என் வசந் தாவென நான் கேட்க

  என்று ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு அவன்  நெஞ்சினில் கொஞ்சும் ரஞ்சனியை அவன் தேடும் நாயகியை  பாடும் வரிகள் செய்யும் வித்தை  நயம்.

  பல்லவியும் சரணமும் ராகத்தின் பெயர்களில் சரணம் .

  மோகனகிருஷ்ணன்

  054/365

   
  • @npodiyan 2:51 pm on January 24, 2013 Permalink | Reply

   அருமை!

  • amas32 (@amas32) 2:55 pm on January 24, 2013 Permalink | Reply

   ராகங்களின் பெயர்களோடு அதே ராகத்தில் வரும் பாடல்கள் நம் நினைவில் நீங்காமல் நிற்பது அந்த ராகத்தின் பெருமை மற்றும் அப்படி இசை அமைத்தவர்களின் பெருமை, இரண்டையும் நமக்குக் காட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனைப் பாடல்களுமே வரிகளைப் படித்தவுடன் மனதில் பாடல் ஒலி கேட்கிறது.

   amas32

  • suri 12:13 am on February 26, 2013 Permalink | Reply

   hai, this song was written by Vaali. The heroine is Premila!

 • G.Ra ஜிரா 11:10 am on January 23, 2013 Permalink | Reply  

  இரு கன்னியர் 

  அரியது என்ன என்ற முருகனின் கேள்விக்கு ஔவை சொன்னது என்ன?

  அரியது கேட்கின் வரிவடிவேலோய்
  அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
  மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு
  நீங்கிப் பிறத்தல் அரிது

  ஊனமற்ற வாழ்க்கைதான் முதலில் சொல்லப்படும் அரியதாக இருக்கிறது. எல்லாம் இருப்பவர்களுக்கு இருப்பதன் பெருமை தெரியவில்லை. பெருமை தெரிந்த சிலருக்கு அது இருப்பதில்லை.

  வாழ்க்கையில் மட்டுமல்ல திரைப்படங்களில் ஊனமுள்ள பாத்திரங்கள் துன்பியல் பாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. ஊனமுற்ற ஒரே காரணத்துக்காக அந்த பாத்திரங்களும் அவைகளின் உறவுப் பாத்திரங்களும் திரையில் மிகுந்த துன்பப்படும். ஒரு வகையில் வாழ்க்கையிலும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.

  கல்லுக்கும் மரத்துக்கும் நமக்கும் உள்ள முதல் வேறுபாடே நாம் ஒரே இடத்தில் இல்லாமல் இருப்பது. அதற்கு உதவுவது நமது கால்கள். அது இல்லையென்றால்?!?! அப்படி இல்லாதவர்கள் பெண்கள் என்றால்? அந்தப் பெண்கள் திருமணம் ஆகாத கன்னியர் என்றால்? அந்தக் கன்னிகள் தமிழ்த் திரைப்படத்தின் பாத்திரங்கள் என்றால்?

  அவளால் நடக்க முடியாது. ஊர் அவளை நொண்டி என்று ஏளனம் பேசும். அவளுக்கும் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அவளுடைய குறையைத் தெரிந்து கொண்டதால் திருமணம் நடக்கவில்லை. அப்போது அவள் பாடுகிறாள்.

  தேர் வந்தது
  திருநாள் வந்தது
  ஊர்வலம் போகின்ற நாள் வந்தது
  ஓட முடியாமல் தேர் நின்றது!

  ஊர்வலம் செல்வதற்கான நாளும் வந்தது. தேரும் இருக்கிறது. ஆனால் ஓட முடியாமல் தேர் நின்றது. சே! என்ன ஒரு வருத்தமான நிலை. வாலி எழுதிய பாடல் இது.

  இன்னொருத்தி இருக்கிறாள். அவளுக்கும் இதே நிலைதான். ஆசைகள் மொட்டு விட்டுப் பூப்பூக்கும் இளம் வயது. அந்தப் பூவின் கண்ணிலும் ஒரு வண்டு தென்படுகின்றது. ஆனால் வண்டை அழைத்துச் சொல்லுமா மலர்? வாய் இல்லாத மலரும் ஒருவகையில் ஊனம்தானே. அந்த எண்ணத்திலேயே பாடுகிறாள்.

  மலரும் மங்கையும் ஒரு ஜாதி
  தன் மனதை மறைப்பதில் சரி பாதி
  தன் ஆசையின் கோலத்தை
  வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்
  கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

  இந்த வரிகளும் அந்த வண்டை அவளிடத்தில் இழுத்து வரவில்லை. வராத வண்டைப் பார்த்துப் பாடுகிறாள்.

  நீ வரவேண்டும். ஏன் வரவில்லை?
  நான் வரலாமா? ஒருக்காலுமில்லை… ஒரு காலுமில்லை!

  மலர்கள் வண்டை நோக்கிப் போவதற்கு வழி ஒருக்காலும் இல்லை என்று சொன்ன வேளையில் அவளுக்கு ஒரு காலும் இல்லை என்று சோகத்தையெல்லாம் கொட்டி விடுகிறாள். இப்படி சொற்சிலம்பம் ஆட கவியரசரை அன்றி யார் முடியும்!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

  பாடல் – தேர் வந்தது திருநாள் வந்தது
  படம் – காக்கும் கரங்கள்
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=pQOTkIekP9g

  பாடல் – மலரும் மங்கையும் ஒரு ஜாதி
  படம் – அன்னையும் பிதாவும்
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=Zutwx7oWk9E

  அன்புடன்,
  ஜிரா

  053/365

   
  • amas32 (@amas32) 3:07 pm on January 24, 2013 Permalink | Reply

   //ஊர்வலம் போகின்ற நாள் வந்தது
   ஓட முடியாமல் தேர் நின்றது!//
   கவியரசர் கவியரசர் தான்!

   உடல் ஊனத்தோடு நிறமும் ஒரு காராணம் ஆகிறது பெண்ணுக்குத் திருமணம் தடை பட. கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடல் அதைத் தான் அற்புதமாக விவரிக்கும். The tune is also soul wrenching one.

   amas32

   • Rajnirams 3:27 pm on February 11, 2013 Permalink | Reply

    காக்கும் கரங்கள் பாடல்களை எழுதியர் கவிஞர் வாலி ஆயிற்றே.

 • என். சொக்கன் 11:28 am on January 22, 2013 Permalink | Reply  

  ஏன் நின்றாய்? 

  • படம்: ஜீன்ஸ்
  • பாடல்: எனக்கே எனக்கா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

  ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது

  உன் கூந்தலில் நின்றாடத்தான்,

  பூமாலையே, பூச்சூட வா!

  பூவின் காம்பை ஒற்றைக் காலாக வர்ணித்து, அதனை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் முனிவர்களோடு ஒப்பிட்டு, ‘பூக்களின் இந்தத் தவம் எதற்காக? அவளுடைய கூந்தலில் சென்று சேர்வதற்காகதானா?’ என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் பாடல். ‘பூக்களின் தவத்தை முடித்து வை, அவற்றைப் பறித்து உன் கூந்தலில் சூடிக்கொள்’ எனக் காதலியிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கிறது.

  அருமையான இந்தக் கற்பனை, முத்தொள்ளாயிர வெண்பா ஒன்றில் இருக்கிறது. அதன் சாரத்தை இன்றைய காதல் பாட்டுக்கு ஏற்ப அழகாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

  கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

  நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

  வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

  கொண்டு இருக்கப் பெற்ற குணம்

  நல்ல மணம் கொண்ட, நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மத்தியில் நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, எதற்காக?

  எனக்கு விஷயம் புரிந்துவிட்டது, கூரான வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்தவன், விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்டவன், அந்தப் பாண்டியன் வழுதியின் மார்பைச் சென்று சேர நீ விரும்புகிறாய், அதற்காக இப்படி நாள்முழுவதும் தவம் இருக்கிறாய், சரிதானே?

  ***

  என். சொக்கன் …

  22 01 2013

  052/365

   
  • amas32 11:48 am on January 22, 2013 Permalink | Reply

   இந்தப் பாடலில் எல்லா வரிகளுமே அழகும் பொருட்செறிவும் நிறைந்தவை 🙂 நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகளும் ரொம்ப அழகு 🙂 பூமாலையே பூச்சூடவா என்ற வரியும் ஐஸ்வர்யாவின் அழக்குக்கு ஒரு feather in her cap 🙂

   amas32

  • kamala chandramani 2:52 pm on January 22, 2013 Permalink | Reply

   அருமையான விளக்கம், பூக்களைப் பார்க்கையில் தவம்தான் நினைவுவரும்.

  • GiRa ஜிரா 11:07 am on January 23, 2013 Permalink | Reply

   Wonderful.

   இதே கருத்தை வைமு வெள்ளி மலரே வெள்ளி மலரே பாட்டில் ஒற்றைக் காலில் நெடுவனம் கண்டாய் என்று மீள்பயன்படுத்தியிருக்கிறார்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel