Updates from March, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
  Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

  காசு மேலே, காசு வந்து… 

  ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

  ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

  அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

  பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

  எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
  பணத்தை எங்கே தேடுவேன்
  உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
  அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
  கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
  கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
  கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
  திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
  திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
  தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
  தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

  நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

  இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

  அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

  இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

  கையில வாங்கினேன்
  பையில போடல
  காசு போன எடம் தெரியல்லே
  என் காதலி பாப்பா காரணம் கேப்பா
  ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
  ஏழைக்கு காலம் சரியில்லே

  இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

  இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

  பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
  பூமேடை வாசல் பொங்கும் தேனாக
  ………………………………………………
  செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
  வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
  இன்பத்தின் மனதில் குளிப்பேன்
  என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

  இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

  காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
  வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
  அட சுக்கிரன் உச்சத்தில்
  லக்குதான் மச்சத்தில்
  வந்தது கைக்காசுதான்

  காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

  டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
  ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
  யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
  கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
  ……………………………………….
  கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
  கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

  என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

  பணம் என்னடா பணம் பணம்
  குணம் தானடா நிரந்தரம்

  பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

  பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
  எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
  கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
  காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
  டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

  அன்புடன்,
  ஜிரா

  114/365

   
  • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

   wow.. super.. thanks geeraa.. :)))))))

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

   ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி நண்பரே 🙂

  • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

   காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

   • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

    ஆமா ஆமா.

    ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

  • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

   போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

    அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

 • G.Ra ஜிரா 10:39 am on March 22, 2013 Permalink | Reply  

  தேசிங்கு ராஜா! 

  வரலாற்றுப் பின்னணியில் இப்போதெல்லாம் படங்கள் வருவதேயில்லை. ஆனாலும் காதற் பாடல்களில் நாயகனை வீரமுள்ளவனாகக் காட்ட வரலாற்று நாயகர்களாகக் குறிப்பிடுவதும் உண்டு. அதிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டது கட்டபொம்மனாகத்தான் இருக்கும். பாரி வள்ளலும் ராஜராஜசோழனும் திருமலை மன்னனும் கூட பாட்டில் வந்திருக்கிறார்கள்.

  இப்படி இவர்கள் வந்த பிறகு புதிதாக யாரையாவது குறிப்பிட வேண்டும் என்று நா.முத்துக்குமாருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் தேசிங்குராஜாவை அழைத்து வந்து விட்டார்.

  தேசிங்குராஜா தேசிங்குராஜா
  திருதிருதிருன்னு முழிப்பது ஏன்
  தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
  குறுகுறுன்னு பார்ப்பதென்ன
  படம் – டும் டும் டும்
  பாடல் – நா.முத்துக்குமார்
  பாடியவர்கள் – ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா
  இசை – கார்த்திக் ராஜா
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JHTZ43dRtLc

  சரி. யார் இந்த தேசிங்கு ராஜா? எந்த ஊர் ராஜா? அதை விளக்கமாகச் சொல்ல சிறிய வரலாற்றுப் பாடம் எடுக்க வேண்டும்.

  18ம் நூற்றாண்டிலே செஞ்சியை ஆண்ட சிற்றரசன் தேசிங்கு ராஜா. இன்றைய செஞ்சியில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைகளும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால் நாயக்கர்கள் ஆட்சி மறைந்த பிறகும் செஞ்சியில் சுவாரசியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

  தென்னாட்டையும் பிடிக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்குக் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் வீழ்ந்தன. மராட்டிய சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பிடம் இருந்து தப்பித்து செஞ்சிக் கோட்டைக்கு வந்து பதுங்கியிருந்தார்.

  இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சொரூப்சிங் தலைமையில் ஔரங்கசீப்பின் படை செஞ்சிக்கோட்டையைத் தாக்குகிறது. கிட்டத்தட்ட பதினோறு மாத முற்றுகைக்குப் பின்னர் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அந்த வெற்றியைப் பாராட்டி செஞ்சி ஆட்சியை சொரூப்சிங்குக்கே கொடுத்து விடுகிறார் ஔரங்கசீப்.

  அந்த சொரூப்சிங்குக்கும் ராதாபாய்க்கும் பிறந்த மகன் தான் தேஜ்சிங். அதாவது தமிழர்கள் உச்சரிப்பில் தேசிங்கு.

  வடக்கில் அதற்குள் ஔரங்கசீப் ஆட்சி முடிந்து ஷாஆலம் ஆட்சி தொடங்கியிருந்தது. அவரிடம் ஒரு குதிரை வந்தது. பரிகாரி என்று பெயரிடப்பட்ட குதிரை அழகும் கம்பீரமும் சேர்ந்த உயர்ந்த வகை. ஆனால் அதை யாரும் அடக்கி ஓட்ட முடியவில்லை.

  குதிரைப் பயிற்சியில் சிறந்திருந்த சொரூப்சிங் அழைக்கப்பட்டார். சொருப்சிங்காலும் அந்தக் குதிரையை பழக்க முடியவில்லை. ஆனால் அதை முடித்துக் காட்டினான் பதினெட்டு வயது தேஜ்சிங். அந்த வெற்றிக்குப் பரிசாக தேஜ்சிங்குக்கு பரிகாரியே கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேஜ்சிங்கின் ராஜபுத்ர இனத்திலிருந்தே பெண்ணெடுத்து திருமணமும் செய்து வைத்தார் ஷாஆலம்.

  அந்த பெண்ணின் பெயர் ராணிபாய். இவருடைய பெயரில் உருவானதுதான் இன்றைய ராணிப்பேட்டை என்று சொல்கிறார்கள். தலையைச் சுற்றுகிறதா? வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் சுற்றத்தான் செய்யும். 🙂

  மிகச் சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது தேஜ்சிங்குக்கு. அவனுடைய நண்பன் முகமதுகான் தேஜ்சிங்குக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தான். அவனிடமும் ஒரு குதிரை இருந்தது. அதன் பெயர் நீலவேணி. அதன் மேல் முகமதுகானுக்கு உயிர்.

  எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது ஆர்க்காட்டு நவாப் பிரச்சனையைத் தொடங்கும் வரை. ஆர்க்காட்டு நவாய் யார் வரி கேட்பதற்கு என்று போர் தொடங்கியது.

  எத்தனையோ திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போன்ற காட்சிதான். முகமதுகானுக்குத் திருமணம் வைத்த நாளில் போர் முரசு கொட்டியதாம். ஆகையால் திருமணத்தை நிறுத்தி விட்டு போருக்குப் புறப்பட்டானாம் முகமதுகான்.

  கொடும் போர் நடந்தது. போரில் வீர மரணம் அடைந்தான் தேஜ்சிங். அவனது மனைவி ராணிபாய் தீப்பாய்ந்து உயிர் விட்டார். முகமதுகானும் போரில் உயிரிழந்தான். அவனுடைய குதிரை நீலவேணியும் கொல்லப்பட்டது.

  நீலாம்பூண்டி என்னும் சிற்றூரில் தேஜ்சிங்கின் சமாதி உள்ளது. அருகிலேயே முகமதுகானுக்கும் அவனுடைய குதிரை நீலவேணிக்கும்.

  அன்புடன்,
  ஜிரா

  111/365

   
  • Arun Rajendran 4:08 pm on March 22, 2013 Permalink | Reply

   தமிழ் வகுப்புல வரலாறு பாடத்த நடாத்திக் காட்டி இருக்கீங்க…ஒரு நல்லப் பாட்ட எடுத்து ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி…தேசிங்கு கதை அரசல் புரசலாத்தான் கேள்விப்பட்டு இருக்கேன்..சுருக்கமா நிகழ்வுகள கோர்த்து கொடுத்து இருக்கீங்க..நன்றிகள் ஜிரா..

   • GiRa ஜிரா 11:04 pm on March 23, 2013 Permalink | Reply

    தேசிங்குராஜனைப் பற்றிய விவரங்களைத் தேடுனா அதீத புனிதப்படுத்துதலோட பக்தி ஜாலம் கலந்துதான் விவரங்கள் கிடைச்சது. பிறகு வேறு இடங்களில் தேடித்தான் பெயர் முதற்கொண்டு சரியான தகவல்களைக் கொடுக்க முடிந்தது 🙂

  • Saba-Thambi 5:32 pm on March 22, 2013 Permalink | Reply

   சிறு வயதில் படித்த ராஜா தேசிங்குவையும் அவனது குதிரையயும் நினவு படுத்தியதற்கு நன்றி. ஆனால் அதன் பின்னால் இருந்த சோகம் இன்று தான் அறிந்தேன். வரலாறு வகுப்பிற்கு நன்றி.

   • GiRa ஜிரா 11:06 pm on March 23, 2013 Permalink | Reply

    ஒவ்வொரு வரலாற்று நாயகனுக்கும் பின்னாடி ஒவ்வொரு சோகம் இருக்கத்தான் செய்யுது. அதுதானே வரலாறு. படாதபாடு பட்டு ஆட்சியைக் காப்பாற்றி ஒப்படைத்த மங்கம்மாளையே சந்தேகப்பட்டு சோறு போடாமல் கொடுமைப் படுத்திய பேரனையும் கண்டதுதான் தமிழகம்

  • amas32 (@amas32) 7:14 pm on March 22, 2013 Permalink | Reply

   கார்த்திக் ராஜாவுக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்பது என் எண்ணம். அவர் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை. இந்தப் பாடலில் நடன அமைப்பும் நன்றாக இருக்கும். பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி தேசிங்கு ராஜா (Tej Singh Raja) பற்றி சரித்திரக் குறிப்பை அழகாகக் கொடுத்து சூப்பரா ஸ்கோர் செய்து விட வேண்டும்!:-)))) வாழ்க ஜிர!

   amas32

   • GiRa ஜிரா 11:08 pm on March 23, 2013 Permalink | Reply

    கார்த்திக் ராஜா திறமையுள்ள இசையமைப்பாளர். மாணிக்கம் என்ற முதற்படத்தில் பி.சுசீலாவைப் பயன்படுத்தி முற்றிலும் புதுமையாக ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் அவர்.

    // பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி //

    என்னம்மா செய்யச் சொல்றிங்க? பாட்டுல எதாச்சும் நல்லது இருந்தா எடுத்துச் சொல்லாம போறதில்லையே. இல்லாதப்போ இந்த மாதிரி விவரங்களைச் சொல்ல பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel