Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:02 am on May 13, 2013 Permalink | Reply  

    மருதாணிச் சாறெடுத்து… 

    சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்காவின் ஓரமாக வரிசையாக வடக்கத்தி இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம் பெண்கள் கைகளில் விதம்விதமாக மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண அலங்காரத்திலும் மெஹந்தி முக்கியமாக இருக்கிறது.

    மெஹந்தி என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது.

    என்னுடைய சிறுவயதில் வீடுகளில் மருதாணி அரைத்து பெண்களும் சிறுமிகளும் இட்டுக் கொள்வார்கள். சிறுவர்களும் கூடத்தான்.

    மருதாணி இலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அம்மியில் அரைப்பவர்களும் உண்டு. அத்தோடு கொட்டைப்பாக்கு, புளி, தயிர் ஆகியவைகளையும் சேர்த்து அரைப்பவர்களும் உண்டு.

    வீட்டில் ஒருவர்தான் எல்லாருக்கும் மருதாணி இடுவார். இட்டு முடித்திருக்கும் போது அவர் விரல்கள் தாமாகவே சிவந்திருக்கும். அதெல்லாம் அந்தக்காலம். பிறகு மருதாணிச் செடிகள் வைக்க வீடுகளில் இடமில்லாமல் போன போது மருதாணிப் பொடி பாக்கெட்டுகளில் வந்தது. ஆனால் அது அவ்வளவு பிரபலமாகவில்லை. அதற்குப் பின்னால் வந்த மெஹந்தி கூம்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

    கை படாமல் இட்டுக் கொள்ள முடியும். மெல்லிதாகவும் இட முடியும். இப்படி வசதிகள் வந்த பிறகு மருதாணி அரைப்பது என்பதே இல்லாமல் போனது. அரைக்க விரும்பினாலும் எத்தனை வீடுகளில் அம்மி இருக்கிறது?

    இந்த மருதாணி திரைப்படங்களில் நிறைய வந்திருக்கிறது.

    மருதாணி விழியில் ஏன்” என்று கண்கள் சிவந்திருப்பதை வாலி அழகாக சக்கரக்கட்டி படத்தில் உவமித்திருக்கிறார்.
    மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில் நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறார்.
    மருதாணி வெச்ச பொண்ணு இவதான்” என்று கிராமத்துப் பெண்ணை அன்னை வயல் படத்தில் இனங்காட்டுகிறார் பழனிபாரதி.
    மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா” என்று கூட பாட்டு உண்டு.
    இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள் உண்டு. பட்டியல் பெரிது.

    மருதாணிக்கு மருதாணி என்று பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? அதன் பழைய பெயர் மருதோன்றி.

    இலையின் சாறினால் சிவந்த மரு தோன்றுவதால் மருதோன்றி என்று அதற்குப் பெயர். பழைய இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்திருக்கிறார்கள். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் இப்படியொரு பாட்டு.

    கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
    றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
    முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
    இன்சொற் பலவு முரைத்து

    இந்தப் பாடலுக்கு இரண்டு விதப் பொருள்கள் தோன்றுகின்றன. இரண்டையும் தருகிறேன். பொருத்தமானதைக் கொள்க.

    கார்காலம் வந்து விட்டது. கருவிளை மலர்கள் மாதரார் மாவடுக் கண்கள் போல விழித்துப் பூத்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணிப்பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டன காதலியின் கைகள். பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    அடுத்த பொருள். கார்காலம் வந்து விட்டது. தலைவியின் கண்கள் கருவிளை மலர்களைப் போன்று பூத்து தலைவன் வருகைக்காக விழித்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன. பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

    இந்தச் செய்யுளில் தோன்று என்று அழைக்கப்படுவது மருதோன்றி.

    அது சரி. யாரெல்லாம் தங்கள் கைகளில் மருதாணி இட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள்? 🙂

    அன்புடன்,
    ஜிரா

    163/365

     
    • amas32 11:17 am on May 13, 2013 Permalink | Reply

      மருதாணியை மிக்சியில் போட்டு அரைப்பது கடினம். சரியாகவே அரைபடாது. திப்பி திப்பியாக இருக்கும். அதற்கு அம்மி அல்லது கல்லுரல் தான் சரி. மருதாணி இட்டுக் கொள்ள பிடிக்காத பெண்களே இருக்க முடியாது என்று சொல்லல்லாம். சில வீடுகளில் சிறுவர்களும் முன் காலத்தில் இட்டுக் கொள்வர் 🙂 மணமகனுக்கு நலுங்கு வைப்பது போல கையில் மருதாணி இடுவதும் வழக்கம்.

      மருதாணி பூக்களுக்கு நல்ல நறுமணம் உண்டு. இரவு நேரத்தில் கும்மென்று மணம் வீசும். கதம்ப மாலையில் சேர்த்துக் கட்டுவது வழக்கம்.

      மருதாணி இட்ட கைகளால் உண்ணும்போது அந்த உணவுக்கும் தனி மணம் வரும். கையில் இட்ட மெஹந்தி கோலங்கள முதல் சில நாட்கள் நன்றாக இருந்தாலும் அதன் பின் கை மோர்குழம்பு மாதிரி ஆகிவிடும். ஆனால் அரைத்து இட்டுக் கொள்ளும் மருதாணி ரொம்ப நாட்கள் அழியாமல் அழகாகக் காட்சியளிக்கும் 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        உண்மை. உரல் அல்லது அம்மியில்தான் அரைக்க வேண்டும். ஒரேயொரு கொட்டைப்பாக்கையும் வைத்து அரைத்துவிட்டால் அட்டகாசம்.

    • vaduvurkumar 1:48 pm on May 13, 2013 Permalink | Reply

      பல முறை இட்டுக்கொண்டுள்ளேன்.

      • GiRa ஜிரா 9:47 am on May 15, 2013 Permalink | Reply

        சிறுவயதில் எல்லாரும் வெச்சிருப்போம்னு நெனைக்கிறேன். 🙂

    • kamala chandramani 2:29 pm on May 13, 2013 Permalink | Reply

      மருதாணிப்பூக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். நல்ல மணம் வீசும். 15 நாட்களுக்கு ஒருமுறை இட்டுக்கொள்ள நகங்கள் நகப்பூச்சு(nailpolish) பூசியதுபோல் அழகாக இருக்கும். கால் நகங்களுக்கு பாதுகாப்பு. கால் ஆணிக்கு மருந்து. உடலுக்கு குளிர்ச்சி. மெஹந்தி சீக்கிரம் போய்விடும். கைமணக்க நிறைய நாள் இருக்கும் மருதாணி.

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        மெஹந்தியில் ஏதோ கெமிக்கல் சேக்கிறாங்களாம். அதான் பக்குன்னு ஒடனே பிடிச்சுக்குதுன்னு சொல்றாங்க. என்னைக் கேட்டா மருதாணிதான் சிறப்புன்னு சொல்வேன் 🙂

    • saba 7:54 pm on May 14, 2013 Permalink | Reply

      இயற்கையாக இருக்கும் மருதாணிச் சாறு சந்ததி சந்ததியாக பாவிக்கப்பட்டது. ஒரு பக்க விளைவயும் தோற்றுவிக்கவில்லை.
      தற்போது கூம்புகளில் விற்கப்படும் ஒரு வகை black “ஹென்னா” தோல்களில் கெடுதலை விளைவிக்கிற்து.
      A chemical PPD is added to make the stain darker for the temporary tattoo and it creates rashes on the skin. these are mainly use in Bali , an Indonesian Island.
      check the link below:
      (http://www.expat.or.id/medical/blackhennareactions.html)

      • GiRa ஜிரா 9:48 am on May 15, 2013 Permalink | Reply

        சரியான தகவலை எடுத்துக் கொடுத்தீர்கள். இயற்கையான முறைகளை விட்டுவிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை.

  • G.Ra ஜிரா 11:37 am on March 7, 2013 Permalink | Reply  

    ஒரு சொல், பல பொருள் 

    பேசுறதையே பேசுற நீ” என்று தமிழ்த்திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. ”பாடுறதையே பாடுற நீ” என்று பாட்டு உண்டா?

    ஒன்றல்ல பல பாடல்கள் உண்டு. கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் கூட்டணி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இப்படிப் பாட்டுகள் நிறைய வந்தன. காய் பாட்டு. லா பாட்டு. மே பாட்டு என்று பல பாட்டுகள். பிறகு இந்த வகைப் பாடல்கள் திரைப்படங்களில் வழக்கொழிந்து போனாலும் ஒரு மிகமிக அருமையான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்தது.

    கண்களால் கைது செய்” என்று தலைப்பே கவித்துவமாக இருக்கும் ஒரு திரைப்படத்தில் வந்த பாடல் அது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். மெட்டமைத்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான். மெட்டு பாரதிராஜாவுக்கும் உடனே பிடித்துப் போய்விட்டது. அடுத்தது என்ன? பாட்டெழுத வேண்டியதுதானே.

    முதலில் ஒரு கவிஞர் வந்தார். முயன்று முடங்கினார். இன்னொருவரிடம் மெட்டு போனது. அவர் எழுதிய பாடல் மெட்டுக்குப் பொருந்தாமல் பட்டுப் போனது.

    இவ்வளவு அருமையான பாடலை விட்டுவிடவும் மனமில்லை. அப்போது வந்தார் ஒரு திடீர் கவிஞர். அவர் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர். ஈரநிலம் படத்திற்கு வசனமும் எழுதியவர். புதுக்கவிதை எழுதுகின்றவர்.

    ஆனால் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதேயில்லை. சொற்களை மெட்டு என்னும் நாற்காலிக்குள் அடிக்கடி உட்கார வைத்துப் பழகியதும் இல்லை. தமிழ் ஆர்வமும் கவிதை ஆர்வமும் கொண்ட அவர் மெட்டைச் செவி கொடுத்துக் கேட்டார். சற்று யோசனைக்குப் பிறகு மடமடவென்று வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டாராம்.

    தீக்குருவியாய்
    தீங்கனியினை
    தீக்கைகளில்
    தீஞ்சுவையென
    தீப்பொழுதினில்
    தீண்டுகிறாய் தந்திரா…..

    அப்பப்பா எத்தனை தீ! பாட்டு வரிகள் மெட்டுக்குள் கச்சிதமாகப் பொருந்திவிட்டன. ஹரிணியும் முகேஷும் அந்தப் பாடலை மிக அழகாகப் பாடி மெருகேற்றினர்.

    முன்பு சொன்ன காய் பாடல், மே பாடல், லா பாடல் போல இது ஒரு தீப்பாடல். எத்தனை தீ பாருங்கள். ஆனால் ஒவ்வொரு தீக்கும் ஒவ்வொரு பொருள்.

    தீக்குருவியாய் – சுறுசுறுப்பான குருவியாய்
    தீங்கனியினை – அழகான கனியினை
    தீக்கைகளில் – துடிப்பான கைகளில்
    தீஞ்சுவையென – இனிப்பான சுவையென
    தீப்பொழுதினில் – மிகப் பொருத்தமான பொழுதினில்
    தீண்டுகிறாய் தந்திரா………………

    அதெல்லாம் சரி. பாடலை எழுதியவர் யார்? சொல்லவே இல்லையே! அவருடைய இயற்பெயர் ரோஸ்லின் ஜெயசுதா. ஆனால் இனிமையாகப் பாடும் குரலால் தேன்மொழி என்ற பட்டப் பெயரே அவர் பெயராயிற்று.

    இவரைப் போன்ற கவிஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். இன்னும் நிறைய வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்ப்போம்.

    கவிஞர் தேன்மொழியின் பழைய பேட்டியொன்று – http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=169
    பாடலின் ஒளிச்சுட்டி : http://www.youtube.com/watch?v=7-gKENfRMxc

    அன்புடன்,
    ஜிரா

    096/365

     
    • Arun Rajendran 11:35 pm on March 8, 2013 Permalink | Reply

      வணக்கம் ஜிரா…

      வைரமுத்துவின் வரிகள்-னு நெனைச்சிட்டு இருந்தேன்…நல்ல பதிவு…பேட்டியின் தரவு தந்ததற்கு நன்றி…

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel