Updates from January, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:48 am on January 31, 2013 Permalink | Reply  

  உலகை மறந்த பூங்கோதை 

  • படம்: விஸ்வரூபம்
  • பாடல்: உன்னைக் காணாது
  • எழுதியவர்: கமலஹாசன்
  • இசை: சங்கர், எஹ்சான், லாய்
  • பாடியவர்கள்: கமலஹாசன், சங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=fJ0LEFx44bY

  பின்னிருந்து வந்து எனைப் பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு

  உலகுண்ட பெருவாயன் என் வாயோடு வாய் பதித்தான்,

  இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

  இந்தப் பூங்கோதை மறந்தாளடி!

  ’விஸ்வரூப’த்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை முதல்முறை கேட்கும்போதே, ‘ஆண்டாள் Dictate செய்ய, கமலஹாசன் எழுதியதுபோல் இருக்கிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டேன். அந்த அளவுக்கு இந்தப் பாடலின் வரிகளில் ஆழ்வார் நிழல். நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள் நேரடியாகவும், மற்ற பல ஆழ்வார்கள் நாயகி பாவத்திலும் எழுதிய காதல் வரிகளை அடியொற்றி மிக அழகான ஒரு நவீனக் காதல் பாடலை எழுதியுள்ளார் கமலஹாசன்.

  குறிப்பாக, ‘உலகுண்ட பெருவாயன்’ என்ற வர்ணனை பலரை ஈர்த்துள்ளது. திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரி அது:

  இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம், இலங்கு ஒலி நீர் பெரும்பௌவம் மண்டி உண்ட

  பெரு வயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம், பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ

  ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெருவாயர் இங்கே வந்து, என்

  பொருகயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

  தோழி,

  என் காதலனாகிய திருமால், பெரிய சத்தத்தை எழுப்பும் அலைகளைக் கொண்ட கடலுக்குள் மூழ்கி, அந்தத் தண்ணீர் மொத்தத்தையும் குடிக்கும் அளவுக்குப் பெரிய வயிறைக் கொண்டவன், உலகத்தையே கையில் ஏந்தி உண்ணும் அளவுக்குப் பெருவாயன், கருத்த மேகத்தைப்போன்றது அவனுடைய வண்ணம், பெரும் தவங்களைச் செய்த முனிவர்கள் சூழ, ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரத்துடன் அவன் இங்கே வந்தான்.

  ஆனால், அவன் இங்கேயே (என்னுடன்) நிரந்தரமாகத் தங்கவில்லை. ‘தண்ணீரால் சூழப்பட்ட திருவரங்கம்தான் என்னுடைய ஊர்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டான்.

  அவன் என்னை விட்டுப் பிரிந்ததால் சண்டையிடும் கயல் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களில் நீர் ததும்பியது, எனது உடல் மெலிந்தது, இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தன.

  சுமாரான விளக்கவுரைதான். ஆழ்வார் தமிழை அழகு குறையாமல் Remix செய்வது அத்தனை சுலபமில்லையே!

  ஆனால், இதை வைத்து உங்களுக்குக் காட்சி புரிந்திருக்கும். திருமாலின்மீது காதல் கொண்ட பெண், தன்னுடைய தோழியிடம் இப்படிச் சொல்கிறாள். திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான் என்று ஊகிக்கிறேன். ஆண் குரல்கள் பாடியிருப்பதுதான் ஒரே வித்தியாசம்.

  அதனால் என்ன? திருமங்கை ஆழ்வாரும் ஆண்தானே?

  ***

  என். சொக்கன் …

  31 01 2013

  061/365

   
  • Jayashree Govindarajan 11:07 am on January 31, 2013 Permalink | Reply

   “உலகமுண்ட பெருவாயா”- என்று முதலில் அழைத்தவர் நம்மாழ்வார். (ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி முதல் பாசுரம்)

   கமல் கவிதையில் எழுதிய “அதுஇதுஉது” (மன்மதன் அம்பு) கூட நம்மாழ்வாரிடம் எடுத்ததே.

  • amas32 (@amas32) 2:00 pm on February 1, 2013 Permalink | Reply

   தற்போது எனக்கு மிகவும் விருப்பமான வரிகளைக் கொண்ட திரைப்பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி 🙂

   ஆமாம், எனக்கும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது ஆழ்வார்கள் நினைவு தான் வரும். நாயகி பாவத்தில் எழுதப்பட்ட வரிகள். வைஷ்ணவ சம்பிரதாயப் படி திருமால் ஒருவனே ஆண் மற்ற அனைத்து ஜீவராசிகளும் பெண்கள் தான். அதனால் தான் காதல் ரசம் சொட்ட இருக்கும் பாடல் கூட பக்திப் பாடலாக உருமாறிவிடுகிறது!

   amas32

  • Mohanakrishnan 11:18 pm on February 1, 2013 Permalink | Reply

   சொன்னது நம்மாழ்வாரோ திருமங்கையாழ்வாரோ. ஆனால் திருமாலை உலகுண்ட பெருவாயனாக நேரில் பார்த்தது யசோதை தான் என்று நினைக்கிறேன். கண்ணனின் அந்த சின்ன வாயில் உலகம் கண்டவள் அவள்.

  • Mohanakrishnan 11:19 pm on February 1, 2013 Permalink | Reply

   எப்போதோ படித்த கவிதை ஒன்று

   ‘கண்ணன் வாயை திறக்கட்டும்
   உலகம் தெரியவில்லை என்றால்
   நீ யசோதை இல்லை’

 • G.Ra ஜிரா 8:26 am on December 5, 2012 Permalink | Reply
  Tags: அங்கவை, , எல்.ஆர்.ஈசுவரி, , , சங்கவை, பாரிமகளிர், பி.சுசீலா, ,   

  நாளும் நிலவும் 

  எம்.ஜி.ஆரை வைத்து பி.ஆர்.பந்துலு இயக்கிய இரண்டாவது படம் நாடோடி. இந்தப் படத்தில் ஒரு மிக இனிய பாடல். பாடலை இந்தச் சுட்டியில் கேட்கலாம்/பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=d_V7Kg6mmgs அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

  படம் – நாடோடி
  ஆண்டு – 1966
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா & எல்.ஆர்.ஈசுவரி
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  அன்றொருநாள் இதே நிலவில்
  அவர் இருந்தார் என் அருகில்
  நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை
  நீ அறிவாயே வெண்ணிலவே

  இந்தப் பாடலின் காட்சியமைப்பை முதலில் பார்க்கலாம்.

  இரண்டு பெண்கள். அவர்கள் சகோதரிகள்.
  இரவு நேரம். அதுவும் முழுநிலவு நேரம்.
  முன்பொரு முழுநிலவில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
  அன்று காதலன் கூட இருந்தான். காதற் களிப்போடு கூடி இருந்தான்.
  அந்த எண்ணம் சொற்களில் வண்ணம் பூசிக் கொண்டு பாடலாக வருகிறது. அதுதான் இந்தப் பாடல்.

  சரி. இதற்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடர்பு? உண்டு. உண்டு.

  புறநானூற்றில் ஒரு காட்சி.
  அங்கும் இரண்டு பெண்கள். அவர்கள் சகோதரிகள்.
  இரவு நேரம். அதுவும் முழுநிலவு நேரம்.
  முன்பொரு முழுநிலவில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
  அன்று தந்தை கூட இருந்தார். செல்வச் செழிப்போடு கூடி இருந்தார்.
  ஆனால் சினிமாப் பாடலில் வந்த சகோதரிகளைப் போல இவர்கள் நிலை இல்லை.
  அன்று இருந்த தந்தை இன்று இல்லை. மூவேந்தரும் கூடி அவர்களின் தந்தையைக் கொன்று விட்டனர். அதனால் இவர்கள் இருவரும் அனாதைகள். இல்லை. அனாதைகளாக்கப்பட்டவர்கள். பெரும்புலவர் கபிலரின் ஆதரவில் ஏழ்மையில் இருக்கும் நிலையினர்.
  அந்த எண்ணம் சொற்களில் சோகம் பூசிக் கொண்டு பாடலாக வருகிறது. அதுதான் இந்தப் பாடல்.

  அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
  எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
  இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
  வென்றெறி முரசில் வேந்தரெம்
  குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.

  இப்போது புரிந்திருக்குமே அந்தப் பெண்களின் தந்தை யாரென்று. அவர்தான் பார் புகழ் பாரி. மாரி(மழை) மட்டும் உலகுக்கு வளம் கொடுக்காது. மாரியை விடச் சிறந்த பாரியும் உண்டு என்று புகழ்ந்த பாரி அவர்களின் தந்தை.

  அந்தப் பெண்கள்தான் பாரிமகளிர். அவர்களின் பெயர்கள் அங்கவை-சங்கவை என்பவை. தமிழ் கற்ற அரும் பெண்கள்.

  கவியரசருக்கு இவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது. புறநானூறு படித்திருக்கிறார். சோக எண்ணம் பிரதிபலிக்கும் ஒரு பழைய பாடலில் இன்பச்சுவை பரவுமாறு ஒரு கவிதை எழுதுகிறார். அதுதான் “அன்றொருநாள் இதே நிலவில்” என்ற அழகான பாடல். அது அங்கவைக்கும் சங்கவைக்கும் கவியரசர் செய்த மரியாதை. அவருக்கு நன்றி.

  இன்றும் அங்கவை சங்கவை திரைப்படங்களில் வருகிறார்கள். பாவம். அங்கவை-சங்கவை-பொங்கவை என்ற நகைச்சுவைகளிலும் பழக வரும்படி அழைப்பதிலும் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். அப்படிச் செய்த மனப்பிறழ்வாளர்களை இறைவனும் தமிழும் மன்னிக்கட்டும்.

  அன்புடன்,
  ஜிரா

  004/365

   
  • Niranjan 9:16 am on December 5, 2012 Permalink | Reply

   ரொம்ப ரொம்ப அருமை. கண்ணதாசனும் சங்கத்தமிழும் இணையும் போது ஜிரா அவர்களின் தெரிவு ஜிரா போல் இனிக்கிறது.
   தினந்தோறும் இந்தப் பக்கத்தின் பக்கம் நான் வராமல் போனதே இல்லை. வாழ்க நும் தொண்டு.

  • BaalHanuman 12:17 am on December 6, 2012 Permalink | Reply

   அந்த நாள் அந்த நிலா…

   பாடியவர் – பாரி மகளிர்
   திணை – பொதுவியல்
   துறை – கையறு நிலை (நாட்டையும் தந்தையையும் இழந்த நிலையில் பெரிதும் கலங்கிப் பாடியது)

   அந்த மாதம்
   அந்த நிலவில்
   தந்தை இருந்தார்
   குன்றும் இருந்தது.
   இந்த மாதம்
   இந்த வெண்ணிலவில்
   வெற்றி முரசு வேந்தர்கள்
   குன்றும் கொண்டனர்
   எங்கள் தந்தையும் இல்லையே!

   -புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத் தொகுதி) – சுஜாதா

   • என். சொக்கன் 8:59 am on December 6, 2012 Permalink | Reply

    Thanks, the kind of extra details you add to #4VariNote are wonderful 🙂

  • BaalHanuman 12:21 am on December 6, 2012 Permalink | Reply

   12-12-12 அன்று வெளியாகவிருக்கும் சிவாஜி 3D படத்தில் 25 நிமிடம் கிட்ட குறைத்து இருக்கிறார்கள். அநேகமாக சர்ச்சைக்குள்ளான காட்சிகளான “அங்கவை சங்கவை” போன்றவை நீக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சிவாஜி பெரிய படம் அதனால் 25 நிமிடம் குறைத்தால் கூட சாதாரண படத்தின் நீளம் தான் இருக்கும்.

   –நண்பர் கிரியின் பதிவிலிருந்து…
   –http://www.giriblog.com/2012/12/sivaji-3d-preview.html

   • என். சொக்கன் 8:58 am on December 6, 2012 Permalink | Reply

    Thanks, the kind of extra details you add to #4VariNote are wonderful 🙂

   • GiRa ஜிரா 2:36 pm on December 7, 2012 Permalink | Reply

    ஐயா, முதலில் இந்தப் பதிவின் கடைசி வரியை நீக்கிவிடலாமோ என்று நினைத்தேன். ஒவ்வொருவரும் நாட்டில் ஒவ்வொன்று செய்கிறார்கள். அவர்களின் செயல்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பதா என்றொரு எண்ணம். அத்தோடு பதிவில் என் சொந்தக் கருத்தையும் சொல்ல வேண்டுமா என்ற யோசனை. ஆனால் அங்கவை சங்கவைக்கு மட்டுமல்ல.. தவறைத் தவறு என்று சொல்கிறவன் கூட அதைச் சொல்லலாமா கூடாதா என்ற கையறு நிலையில் இருப்பது சகிக்கமுடியாமல் இருந்தது. ஆகையால் அந்த வரிகளை அப்படியே விட்டுவிட்டேன்.

    உங்களைப் போன்ற பெரியவர்கள் புரிந்து கொண்டு மறுமொழியிட்டு இந்த “எடிட்டிங்” தகவல்களையும் சொன்னமைக்கு நன்றி. நன்றி. 🙂

  • anonymous 4:06 pm on December 6, 2012 Permalink | Reply

   அன்றொருநாள் இதே நிலவில் -ங்கிற சினிமா வரிகளுக்கு
   அற்றைத் திங்கள் அந் நிலவில் -ங்கிற சங்க வரிகள்…
   இப்படி உங்களுக்கு ஞாபகம் வந்தது மிக நன்று; மிக நன்றி!

   என்னவொரு இயைவான ஒப்புமை;
   சினிமாவில் = காதல் ஏக்கம்;
   சங்கத் தமிழில் = தந்தை ஏக்கம்; ஆயினும் கூடவே, வாழ்விலே காதல் அமைய இத்தனை பாடுகளா? என்னும் பெண் மனசு ஏக்கம்! பாரி மகளிர் பட்ட பாடு அப்படி;

   • அன்றொருநாள், அவர் இருந்தார் என் அருகில் = காதலன்
   • அற்றைத் திங்கள், எங் குன்றும் பிறர் கொளார் = தந்தையின் நண்பர்கள்

   அன்று மறுதலிக்காதவர்கள், இன்று மறுதலிக்கின்றார்களே என்ற ஏக்கம்;

   தமிழே (கபிலர்) படியேறிக் கேட்டும், அதற்கும் மதிப்பில்லை;
   மூவேந்தரிடம், தங்கள் தன்னலம் காத்துக் கொள்ளும் ஆசையால், முன்னாள் நட்பை இந்நாள் மறுதலிப்பு;
   அதுவும் பொதுவிலே வைச்சி, ஒரு பொண்ணை மறுதலிப்பது என்பது… அந்தப் பெண் எத்தனை பட்டு, இந்தப் பாட்டை எழுதினாளோ? முருகா!

   அற்றைத் திங்கள் அந்நிலவில் பாட்டுக்கு = முன்பு எழுத்தாளர் சொக்கன் எழுதிய பதிவு இங்கே = http://365paa.wordpress.com/2012/05/19/318/

   //அப்படிச் செய்த மனப்பிறழ்வாளர்களை இறைவனும் தமிழும் மன்னிக்கட்டும்//

   அப்படியே ஆகுக!
   இறைவனுக்கும், தமிழுக்கும் மேலான காதல் என்னுமோர் உணர்வு; அங்கவை சங்கவையின் மன உணர்வு – அதுவும் அவர்களை மன்னிக்கட்டும்!

   • anonymous 4:23 pm on December 6, 2012 Permalink | Reply

    நீங்க இட்ட இந்தப் பாடலைப் படிச்சிக்கிட்டு இருக்கும் போதே, மனசுக்குள், இன்னொரு பாட்டும் ஓடியது!

    சுசீலாம்மா – TMS பாடுவது;
    அதே அற்றைத் திங்கள்;
    அதே நிலாவைச் சாட்சி வச்சி;

    அன்று வந்ததும் இதே நிலா
    இன்று வந்ததும் அதே நிலா
    இன்பம் தந்ததும் ஒரே நிலா
    ஏங்க வைப்பதும் ஒரே நிலா

    முன்பு வந்த நிலா=இன்பம்; பின்பு வந்த நிலா=துன்பம்

    பேசச் சொன்னது அன்பு நிலா
    பிரியச் சொன்னது துன்ப நிலா
    தூங்கச் சொன்னது காதல் நிலா
    துடிக்க விட்டது கால நிலா…

    • வெறுமனே “இற்றை” மட்டும் பார்த்தா = மனுசனுக்கு ஒன்னுமே இல்லை! (ஒத்தைப்படை)
    • “அற்றை – இற்றை” -ன்னு பாக்கும் போது தான் வலியோ (அ) மகிழ்வோ!

    ஆனா அற்றையைப் பாக்க முடியாம இருக்குதா மனசுக்குள்ள?

    அற்றைத் திங்கள் = இன்ப நிலா
    இற்றைத் திங்கள் = துன்ப நிலா

    அற்றையோ, இற்றையோ…
    பாரி மகளிர் / புனிதா (எ) காரைக்காலம்மை போன்ற மனசு…
    = எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும்!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel