Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 10:08 am on May 9, 2013 Permalink | Reply  

  சென்னையில் ஒரு நாள் 

  கடந்த வாரம் ஆபீஸ் வேலையாய் தென் சென்னை, புற நகர், வட சென்னை , தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்கள் செல்லவேண்டியிருந்தது. தினந்தோறும் விரிவடையும் நகரம் பிரமிப்பாக இருந்தது.

  பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு வெயில் வேளையில் பயணம். -வழியெங்கும்  சாப்ட்வேர் நிறுவனங்கள் ,கல்லூரிகள். அதனால் நிறைய மிதவை (??) பேருந்துகள்  சாலையின் இரு புறமும் வீடு வாங்கலையோ வீடு வாங்கலையோ என்று கூவும் ப்ளெக்ஸ் விளம்பரங்கள். கண்ணுக்கு தெரியும் தூரம் வரை கட்டடங்கள் – புதிய, பழைய, முடிக்கப்படாமல் என்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், தரையும் கூரையும் சொந்தமில்லை ஆனால் இடையில்  உள்ள காற்று வெளி  (Air Pocket ) மட்டும் விற்பனைக்கு!

  சட்டென்று மனதில் ஓடியது  ‘ சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி’ என்ற வரிகள்.  உடனே மனம்  நாலு வரி நோட் அலைவரிசையில் sync ஆனது.அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கண்ணதாசன் அன்றைய (1967) மெட்ராஸ் பற்றி எழுதிய பாடல் http://www.youtube.com/watch?v=ujMYkmG6cqA

  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

  மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே

  சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

  கிராமத்திலிருந்து வரும் ஒருவன் நகரத்தின் அவலங்கள் சொல்லும் பாடல். அவசர வாழ்க்கையும் காது கூசும் மெட்ராஸ் பாஷையும் பற்றிய வருத்தம்.

  சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக

  வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக

  சீட்டுக்கட்டா? 1967ல் சென்னையில் அடுக்கு மாடி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஹவுசிங் போர்ட் வீடுகள் பார்த்து / LIC பார்த்து பாடுவது போல் காட்சி. அதுவே சீட்டுக்கட்டு என்றால் இன்றைய கட்டடங்களைப்பார்த்தால்  தீப்பெட்டிக் கணக்காக என்று பாடியிருப்பாரோ?  நகரத்தின்  தெருக்களிலே நிக்க ஒரு நிழலில்லையே  என்றும் அங்கலாய்க்கிறார் .

  பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே

  வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே

  காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே

  நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே

  இன்று நகரங்களில் ஷாப்பிங் மால்கள் தான் பப்ளிக் ஸ்பேஸ் என்னும்போது இன்றும் நிற்க நிழலில்லைதான். அதனால்தான் வங்கக்கடலோரம் காற்று வாங்க பெரும் கூட்டம்.என்கிறார்

  வைரமுத்துவும் ஒரு நகர்வல பாடல் எழுதியிருக்கிறார். மே மாதம் படத்தில் மெட்ராச சுத்திப்பாக்கப்போறேன் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

  மெரினாவில் வீடு கட்டப்போறேன்

  லைட் ஹவுசில் ஏறி நிக்கப்போறேன்

  இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு

  இதுக்கு உங்கப்பன் பேர் வக்க சொல்லப்போறேன்

  என்று ஜாலியான Fantasy கற்பனையில் ஆரம்ப வரிகள். சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம், ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்,, பாரின் சரக்கு பர்மா பஜார் என்று சென்னையின் ‘பெருமைகளை’ பட்டியல் போடுகிறார்.

  மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்

  ஆனா ஸ்டைலுன்ன இப்ப மினரல் வாட்டர்

  மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ சத்தம்

  என்றும் நக்கல் செய்கிறார். http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

  இரண்டு பாடல் காட்சிகளையும் பாருங்கள். சென்னை அழகுதான் முதல் பாடலில் வரும் அசல் ஸ்பென்சர் பிளாசாவும் சென்ட்ரல் ஸ்டேஷன் மேல் இருக்கும் murphy radio எழுத்துக்களும் அழகு.

  பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாடல்கள் இன்றும் பொருத்தமாய்… மாற்றங்களே இல்லையா?  சீட்டுக்கட்டு தீப்பெட்டியாகி, ஆட்டோ ஷேர் ஆட்டோவாகி.. இது வளர்ச்சியா?

  வெயில்தான். மின்வெட்டும் உண்டு. கொசுக்கள் ராஜ்ஜியம். கூவம் பார்த்தால் கோவம் வரும்.ஆனாலும் எனக்கு சென்னை பிடிக்கும். சொர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?

  மோகனகிருஷ்ணன்

  159/365

   
  • rajnirams 6:03 pm on May 9, 2013 Permalink | Reply

   சூப்பர் போஸ்ட்.நீங்கள் சொன்னது மாதிரி சென்னையிலேயே வளர்ந்த என்னை போன்றவர்களுக்கு சென்னை பெஸ்ட் தான்:-)) இரண்டு பாடல்களும் அருமை. அள்ளி தந்த வானத்திலும் கபிலன் எழுதிய ஒரு பாடல் “சென்னை பட்டணம்,எல்லாம் கட்டணம்” நல்ல பாடல்.

  • amas32 8:54 pm on May 9, 2013 Permalink | Reply

   ஆஹா, நீங்க நம்ம கட்சி மோக்ரிஷ்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் ஒரு காலத்தில் அவ்வளவு பிரபலம். கவிஞர் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியக்கிறேன். 67ல் பாடியது இன்றும் சரியாக இருக்கிறதே!

   எத்தனையோ ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் சென்னை போல வருமா? வருடம் முழுவதும் கோடை தான். அதனாலேயே மார்கழி மாதம் #ChennaiSnow என்று ட்விட்டரில் புகழப்படும் அளவு நமக்கு இங்கே குளிரே கிடையாது. மழை வந்தால் தெருவில் கால் வைக்க முடியாது. ஆனால் சென்னையின் சிறப்புத் தான் என்ன? வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. இங்கே இருக்கும் பிற மாநிலத்தவர் நிம்மதியாக வாழ முடியும். பேச்சில் மரியாதை கிடையாது தான் சென்னைவாசிகளுக்கு, ஆனால் மனத்தில் அன்பு உண்டு! எல்லாவற்றிற்கும் மேலாக மெரினா கடற்கரை! ஆ! என் இனிய சென்னையே! ரொம்பப் புகுழுகிறேனோ? :-))

   amas32

  • GiRa ஜிரா 10:23 pm on May 9, 2013 Permalink | Reply

   சென்னை என்று சொல்லடா
   தலை நிமிர்ந்து நில்லடா

   தப்பு தப்பு…

   சென்னை என்று சொல்லுங்க
   தலை நிமிர்ந்து நில்லுங்க

   நான் பெங்களூரில் ரொம்ப வருடங்களா இருந்துட்டேன். ஆனாலும் எனக்குச் சென்னை மேல ஒரு தனிப்பாசம் உண்டு.

   சின்ன வயசுல லீவுக்கு சென்னைக்குதான் வருவோம். டி.நகரில் அத்தை வீட்டில் தங்குவோம். டி.நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, அண்ணாசாலை, நுங்கம்பாங்கம், சத்யம்/தேவி/சன்/சாந்தி, மெரினா, பெசண்ட் நகர் பீச்னு எல்லாமே பிரமிப்பா இருக்கும்.

   இப்போ வாழ்க்கையே சென்னைன்னு ஆயிருச்சு. குறை சொல்லனும்னா எதுலையும் குறை சொல்லலாம். ஆனா சென்னை செல்லச் சென்னைதான். பெங்களூர்ல இருந்து வந்தும்… பெங்களூரையே மறக்க வெச்சது சென்னை. அதுதான் அதோட சிறப்பு.

   மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்னு கவியரசர் எழுதுனது திருக்குறள் மாதிரி. இன்னைக்கும் பொருந்துது. முருகன் அருளால் இந்த ஊரும் மக்களும் உலகமும் நல்லாயிருக்கனும்.

   எல்லாரையும் நல்லபடியா காப்பாத்தி நல்லவங்களாவும் நல்லறிவுள்ளவங்களாவும் வெச்சிரு முருகா!

 • G.Ra ஜிரா 12:35 pm on April 16, 2013 Permalink | Reply
  Tags: Suresh Peters   

  கண்ணகியும் சீதையும் 

  ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
  ஊசி போல ஒடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசி
  வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி ஃபார்மசி
  வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேண்டசி
  படம் – காதலன்
  பாடல் – வைரமுத்து
  பாடியவர் – சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது, ஏ. ஆர். ரகுமான்
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/y2uT02X8a94

  Take it easy policy. ஒரு காலத்தில் ஊரெங்கும் ஓடி உலகெங்கும் ஆடிய பாடல். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் பாடுவதாக எழுதப்பட்ட பாட்டு.

  ஆனாலும் இந்தப் பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாத/முடியாத ஒரு கருத்தையும் சேர்த்தே எழுதியிருக்கிறார்.

  கண்ணகி சிலைதான் இங்குண்டு
  சீதைக்கு தனியே சிலையேது

  இந்தக் கருத்தை ஏற்பாரும் உண்டு. மறுப்பாரும் உண்டு. எந்தவிதப் பாகுபாடும் இன்றி இந்தக் கருத்தைச் சிந்தித்தால் வைரமுத்து அவர்களின் இலக்கிய அறிவு விளங்கும். இன்றைக்கு வைரமுத்து சொன்னது அன்றைக்கே ஒரு பெரும் புலவரால் சொல்லப்பட்டதுதான். அதுவும் அவர் எழுதிய காப்பியத்தில் ஒரு பெண்ணின் வாயால் சொல்லப்பட்டது. ஆம். விளக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.

  சேரன் செங்குட்டுவனுக்கு ஒரு ஐயப்பாடு. சேரன் செங்குட்டுவன் தெரியும்தானே? இளங்கோவடிகளின் அண்ணன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன். அந்த செங்குட்டுவன் தன் மனைவியான வேண்மாளிடம் வியந்து கேட்கிறான். இரண்டில் எது சிறந்தது என்பது அவனது கேள்வி.

  உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும்
  செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்
  நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்? என மன்னவன் உரைப்ப

  புரியவில்லையா? இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இருவரும் செய்தது பெரிய செயல்கள். இவர்கள் இருவரில் கற்பு நலத்தை வியந்து பாராட்டத்தக்கவர் யார் என்பதுதான் அவனது கேள்வி. சரி. யாரந்த இரண்டு பெண்கள்?

  கணவன் இறந்தான் என்று தெரிந்ததும் அவனுடனே கிளம்பி விட்டவள் ஒருத்தி.
  கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தெரிந்ததும் நீதி கேட்டுப் போராடினாள் ஒருத்தி.

  இப்போது புரிந்திருக்குமே அந்த இரண்டு பெண்கள் யாரென்று. கணவனோடு உயிர் விட்டவள் பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவி. கணவனுக்காக நீதி கேட்டுப் போராடியவள் கண்ணகி.

  இவர்கள் இருவரில் யாருடைய கற்புநலத்தை வியப்பது? பாராட்டுவது? புகழ்வது?

  கேள்வி படுபயங்கர கேள்வி. இரண்டு சிறந்த பெண்களுக்குள் யாருடைய கற்புநலம் சிறந்தது என்று ஒரு ஆணுக்கு ஐயம். இன்னொரு வீட்டுப் பெண்ணைப் பற்றிப் பேசி சற்று வரம்பு மீறித்தான் சிந்தித்திருக்கிறான் செங்குட்டுவன்.

  அந்தச் சிந்தனையைத் திருத்தத்தான் வேண்டும். உலகுக்கும் புரிய வைக்கத்தான் வேண்டும். பெண்ணின் கற்பைப் பற்றி ஆண் பேசுவதே தவறு என்று இளங்கோவடிகள் கருதியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு பெண்ணின் வாயிலாக “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்று சொல்கிறார்.

  காதலன் துன்பம் காணாது கழிந்த
  மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
  அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
  பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்

  மேலே உள்ள வரிகள் சேரநாட்டரசி வேண்மாள் சொன்னவை. கற்பு பற்றி ஒரு பெண்ணின் கருத்தைப் பார்ப்போமே.

  கணவனோடு என்றும் உடன் நின்று, அவன் உயிரை விட்டதும் அவனுடனேயே ஒருத்தி உயிர் விட்டாள். அவள் பெரும் செல்வம் பெற்ற திருமகள். கணவனோடு அவள் விண்ணுலகில் என்றும் இருப்பதே அவளுக்குப் பிடித்த செல்வம். அதைத் தவிர எதுவும் அவளுக்குப் பிடிக்காது.

  ஆனால் கணவனுக்கு ஒரு குற்றம் இழைத்ததும் அதைத் தட்டிக் கேட்ட அறச் சீற்றத்தைக் கொண்டாளே.. அவளே பத்திக் கடவுள். அவளுடைய அந்தத் திறமே கற்பெனும் திண்மை. அவளுக்கே கோயில் கட்ட வேண்டும். அந்தக் கோயிலைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் குற்றத்தைத் தட்டிக் கேட்கும் எண்ணம் வரவேண்டும்.

  கோப்பெருந்தேவியின் இடத்தில் சீதையையும் பொருத்திப் பார்க்கலாம். அவளும் கணவனோடு சென்ற இடமெல்லாம் சென்றவள்தான். அவளுக்கு எது பொருத்தமாகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

  மறுபடியும் வைரமுத்து எழுதிய இந்த வரிகளைப் பாருங்கள். ஒரு புதிய பரிமாணம் புலப்படுமே!
  கண்ணகி சிலைதான் இங்குண்டு
  சீதைக்கு தனியே சிலை ஏது?

  அன்புடன்,
  ஜிரா

  136/365

   
  • rajinirams 1:10 pm on April 16, 2013 Permalink | Reply

   சீதைக்கு ஏராளமான கோயில்களில் தெய்வாம்சமான சிலையுள்ளது.கண்ணகிக்கு மெரினாவிலும் கேரளத்தில் மட்டுமே.மெரினா சிலையை யாரும் கும்பிடுவதில்லை.பலரது வீட்டில் பூஜையறையில் ராமர் படத்த்டன் கூடிய சீதை படத்தை வணங்கி வருகிறார்கள்.

  • amas32 (@amas32) 1:25 pm on April 16, 2013 Permalink | Reply

   ஆண்களே காவியங்களை இயற்றி வந்து விட்டதால் இந்த மாதிரி ஒரு எண்ணம் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தில் வேரூன்றி விட்டது. கற்பு என்பது என்ன? அது ஏன் பெண்ணுக்குத் தனிப்பட்ட ஒரு குணமாகிறது? அதுவும் தவிர பெண்ணின் பெருமை அந்த”கற்பில்” தான் அடங்கியிருப்பதாக ஒரு கருத்து ஆழ்ந்து, எல்லார் மனத்திலும் வேரூன்றி இருப்பதும் ஏனோ?

   சீதை உயிருடன் இருக்கிறாள் என்று கேட்ட மாத்திரத்தில் இராமனுக்குப் பாதி உயிர் திரும்பி வந்ததாம். அவள் கற்புக்கு எந்த வில்லங்கமும் வரவில்லை என்று தெரிந்ததும் மீதி உயிரும் வந்ததாம். சீதைக்கு நிகழ்ந்தது ஒரு விபத்து. அப்படியே அவள் களங்கப் பட்டிருந்தாலும் அவளை சிறை மீட்டு ஏற்றுக் கொள்பவனே சிறந்த ஆண் மகன். அங்கே ஒருத்தி இவனையே நினைத்து மாய்ந்து, உருகி, வெதும்பி ஏங்கிக் காத்துக் கிடக்கிறாள். அந்தத் தூய்மையான அன்புக்கு முன்னாடி கற்பு என்ன கற்பு!

   சேரன் செங்குட்டுவன் கேட்ட கேள்வியே தவறு. கோப்பெருந்தேவி கணவன் மேல் வைத்த அன்பால் அவன் இறந்த அடுத்த நொடி தானும் மாண்டாள். கண்ணகி கணவனுக்கு நேர்ந்த அநியாயத்தைக் கேட்டாள். அவனுக்கு இழைக்கப் பட்டது அநீதி என்று நிருபித்தாள். அதனால் ஏற்பட்ட அவளின் அறச் சீற்றம் மதுரையை எரித்தது. அவளிடம் இருந்த உண்மை ஊரை எரித்தது. கற்பு எங்கே வந்தது?

   கண்ணகி, சீதை இருவருமே நாம் வணங்கும் தெய்வங்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

   amas32

  • Saba-Thambi 3:41 pm on April 16, 2013 Permalink | Reply

   ஏனோ கீழ்வரும் பாடல் நினைவுக்கு வருகிறது.

   ப டம்: எங்கள் தங்க ராஜா (1973)
   lyricicst: kannadasan
   voice: TMS
   http://www.raaga.com/player4/?id=231985&mode=100&rand=0.3056239024735987

   You tube link: http://www.youtube.com/watch?v=jjtm8DcfFxI

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel