Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 12:09 pm on August 21, 2013 Permalink | Reply  

  கவிதைகளில் கவியரசர் 

  தமிழ் திரைத்துறைக் கவிஞர்களில் இன்றும் அதிகமாக கொண்டாடப்படும் கவிஞர் கண்ணதாசன் என்று சொன்னால் மிகையாகாது. கண்ணதாசன் இந்த உலகை விட்டு மறைந்து ஆண்டுகள் முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் கண்ணதாசன் இன்றும் நம்மோடு தமிழ்ப் பாடல்கள் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

  அப்படிப் பட்ட கவியரசரின் நண்பரான மெல்லிசை மன்னர் இப்போதெல்லாம் மேடைக்கச்சேரிகளில் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என்ற பாட்டை “கண்ணதாசன் புகழ் பாடுங்களே” என்றுதான் மாற்றிப் பாடுகிறார்.

  பொதுவாகவே பழைய கவிஞர்களை பாட்டில் வைப்பது பழைய தமிழ் வழக்கம். அதைத் திரைப்பாடல்களிலும் கண்ணதாசன் செய்திருக்கிறார்.

  கம்பன் ஏமாந்தான்” என்று எழுதினார். அதே பாடலில் “வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்” என்றும் எழுதினார்.

  அதே போல பின்னாளில் பாடல் வரிகளில் மற்ற கவிஞர்கள் பரவலாகப் பயன்படுத்தியதும் கண்ணதாசன் பெயரைத்தான்.

  அதை முதலில் தொடங்கி வைத்தது வாலிபக் கவிஞர் வாலி. “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ” என்று சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்துக்காக எழுதினார். காளிதாசனையும் கண்ணதாசனையும் ஒரே நிறையில் வைத்து அழகு பார்த்த வாலிக்கு வணக்கங்கள்.

  அடுத்து ஒரு பாடல் வந்தது. இந்தக் கவிஞர் ஒரு காதல் கவிதையை எழுதி விட்டார். அதில் தவறுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. பாடலைத் திருத்திக் கொடுக்க கவியரசர் இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தார். உடனே எழுதினார்.

  கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
  என் காதல் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு
  எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
  இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் தேர்ந்தெடுத்து

  இப்படி எழுத அந்தக் கவிஞர் கண்ணதாசனை மானசகுருவாக நினைத்திருந்தால்தான் முடியும். அப்படி நினைத்து எழுதியவர் கவிஞர் காளிதாசன்.

  வைரமுத்து அவர்களும் கண்ணதாசன் பாடல்களை ரசித்திருக்கத்தான் வேண்டும். அதனால்தான் ”வந்தேண்டா பால்காரன்” பாட்டில் “மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும் கூடு, கண்ணதாசன் சொன்னதய்யா” என்று எழுதினார். கண்ணதாசன் அப்படி எழுதியது “போக்கிரிராஜா” படத்தில் இடம் பெற்ற “கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு.. மனுசன் நெனச்சான் உலகம் ரெண்டாச்சு” என்ற பாடலில்.

  இப்படி ஒவ்வொரு கவிஞர்களும் கண்ணதாசனின் கவிதைச் சிறப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு பாட்டில் குறிப்பிடும் போது வந்தார் கவிஞர் கபிலன். கண்ணதாசனின் குடிப்பழக்கதை முன் வைத்து எழுதினார் ஒரு பாட்டு.

  கண்ணதாசன் காரைக்குடி
  பேரைச் சொல்லி ஊத்திக் குடி

  இதுதான் காலத்தின் மாற்றமா? கவிஞனின் எழுத்தை மதிக்காமல் அவன் தனிப்பட்ட குறையை முன்னிறுத்தி எழுதுவது என்ன நியாயம் என்று புரியவில்லை. கண்ணதாசன் குடித்தார். உண்மைதான். ஆனால் அவர் திறந்த புத்தகமாக வாழ்ந்தார். அப்படி எத்தனை பேர் இப்போது வாழ்கிறார்கள்!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  காளிதாசன் கண்ணதாசன் (இளையராஜா, பி.சுசீலா, ஜெயச்சந்திரன்) – http://youtu.be/iM4hXOpYAcM
  கண்ணதாசனே கண்ணதாசனே (தேவா, சித்ரா) – http://youtu.be/BMRQTScBZx4
  வந்தேண்டா பால்காரன் (தேவா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்) – http://youtu.be/MRZ7_WMGFSM
  கண்ணதாசன் காரைக்குடி (சுந்தர்.சி.பாபு, மிஷ்கின்) – http://youtu.be/6F1Nfw_Buvc

  அன்புடன்,
  ஜிரா

  263/365

   
  • rajinirams 1:40 am on August 25, 2013 Permalink | Reply

   செம பதிவு சார்.நீங்கள் சொன்னது போல் கண்ணதாசன் புகழை முதலில் வாலி தான் தொடங்கிவைத்தார்.பட்டுக்கோட்டை வார்த்தைகள போட்டு நம்ம புரட்சியாரு பாடிவச்ச பாட்டு என்றும் வாலி தான் எழுதினார். இன்னொரு பாட்டு வரியிலும் சொன்னான் அந்த கண்ணதாசன் பாட்டிலே என்று வரும்-சரியாக நினைவில்லை.கவியரசரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

 • என். சொக்கன் 1:34 pm on April 17, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : முன்னோர்கள் 

  வைகைப்புயலார் வடிவேலுவின் மேனேஜ்மெண்ட் தத்துவங்களில் ஒன்று “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”. 

   

  நமக்கு முந்தையக் காலத்தில் வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிந்துக் கொள்ள, அவர்களைப் பற்றிய பதிவுகள் அவசியம். 

   

  அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கிய தங்கள் முன்னோர்களை,அடுத்தடுத்த தலைமுறையினர் பதிவு செய்வது கலை,அறிவியல்,விளையாட்டுக்களில் பரவலாக இருப்பதுதான்.

   

  நாம் இப்பொழுது பார்க்கப்போவது பதிவுகள் என்பதை விட குறிப்புகள் எனச் சொல்லாம் 🙂 

   

  தமிழ்சினிமா பாடல்வரிகளில் , ஒரு கவிஞர்,தான் எழுதியப் பாடல்களில் வேறு கவிஞரின் பெயரை உபயோகப்படுத்தியப் பாடல்களைப் பார்க்கலாம்.

   

  ரொம்ப பின்னோக்கிப் போனால், வள்ளுவர்,கம்பன்,பாரதி – இவர்களது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன். 

   

  “கம்பன் ஏமாந்தான் “

  ”கம்பனை வம்புக்கிழுத்தேன்”

  “கம்பன் காணாத கற்பனை”

  “பாரதியை படிச்சுப்புட்டா பெண்களுக்கும் வீரம் வரும்”

   

  என இவர்கள் பெயர் உள்ள பாடல்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். அதனால் இவர்களை விட்டுவிடலாம்.

   

  Immediate முன்னோர்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

   

  இதில் சட்டென நினைவுக்கு வரும் பாடல்கள் இவை. 

   

  “கண்ணதாசனே ,எந்தன் காதல் வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடு”      எழுதியவர்- காமகோடியான் –

   படம் – மரிக்கொழுந்து

   

  “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ”

  எழுதியவர் – வாலி

  படம்  – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

   

  சொன்னான் அந்தக் கண்ணதாசன் பாட்டுல 

  ( யார் எழுதியதெனத் தெரியவில்லை.) 

  படம் – “வரவு எட்டண்ணா செலவு எட்டண்ணா

   

  எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில் தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!! –  

  எழுதியவர்-வாலி – 

  படம் “சந்திரமுகி”

   

  பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
  நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு – 
  எழுதியவர்- வாலி 
  படம் – ”தூங்காதே தம்பி தூங்காதே தம்பி”

   

  “வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலயே”  – 

  எழுதியவர் – சிம்பு 

  படம் -வல்லவன்

  ”வாலி, வைரமுத்து… உன்போல யாரு கவிதை யோசிச்சா?”

  எழுதியவர் : கார்க்கி

  படம்: ரெண்டாவது படம்

  மேற்கண்ட வரிகளை எழுதிய கார்க்கியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார், இந்தப் பாடல் வரியில் இடம்பெற்ற வாலி, வைரமுத்து இருவருமே, தங்களது சொந்தப் பெயரையே தங்களுடைய பாடல்களில் இடம்பெறச் செய்துள்ளார்கள். இப்படி:

  • ”எதிர் நீச்சலடி, அட ஜாலியா வாலி சொன்னபடி” (படம்: எதிர்நீச்சல், எழுதியவர்: வாலி)
  • “பாட்டு கட்டும் நம்ம வைரமுத்தைக் கேட்டு, பாரதிராசா சொன்ன கிராமத்தைக் காட்டு” (படம்: தமிழ்ச்செல்வன், எழுதியவர்: வைரமுத்து)

  காளீஸ்

  (http://www.twitter.com/eestweets)

   
  • rajinirams 11:05 pm on April 17, 2013 Permalink | Reply

   சூப்பர் சார். வரவு எட்டணா பட பாடல் வாலி எழுதியது,அஞ்சாதே படத்தில் (மக்கள் கவிஞர்:-))?)கபிலன் எழுதிய பாடல் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்தி குடி பாடலுக்கு -ஆரம்பத்தில் இந்த பாடலுக்கு லேசான எதிர்ப்பு தோன்றி மறைந்தது. ஒரு படத்தின் நாயகனே பாடலை பாடுவதற்கு முன் எழுதியவர் பெயரை சொன்ன பெருமை வாலிக்கு மட்டுமே-நேற்று இன்று நாளை படத்தில் எம்ஜியார் பாடல்-வாலி என்று சொல்லிவிட்டு “தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று”என்று பாடுவார்.திமுகவின் நகராட்சி ஊழல்கள் பற்றிஎல்லாம் அமைந்த அந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் முழங்கி அதிமுகவின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. நன்றி.

   • GiRa ஜிரா 2:22 pm on April 19, 2013 Permalink | Reply

    அதே போல இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்திலும் பாடல்-வாலி, இசை-இளையராஜான்னு வரும். ஒரே நாள் உனை நான் பாட்டுக்கு முன்னாடி

   • GiRa ஜிரா 2:46 pm on April 19, 2013 Permalink | Reply

    மிக நல்ல பதிவு. உண்மையிலேயே வரலாறு முக்கியம். இந்த மாதிரி பெயர்களைப் பயன்படுத்தும் போது இலக்கியங்களின் காலத்தையும் கணிக்க பின்னாளில் உதவும்.

  • amas32 6:16 pm on April 18, 2013 Permalink | Reply

   இது ஒரு ஜாலி போச்ட்! ரொம்ப நன்றாக உள்ளது 🙂 முந்தய தலை முறையினறை நல்ல முறையில் போற்றி குறிப்பிடுவது, அட்லீச்ட் குறிப்பிடுவத்உ வரலாறுக்கு முக்கியம் தான்!

   amas32

 • என். சொக்கன் 11:23 am on March 11, 2013 Permalink | Reply  

  அழகுக் கோலம் 

  • படம்: புருஷ லட்சணம்
  • பாடல்: கோல விழியம்மா
  • எழுதியவர்: காளிதாசன்
  • இசை: தேவா
  • பாடியவர்: கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=4aMwDU2lQ0M

  கோல விழியம்மா, ராஜ காளியம்மா,

  பாளையத் தாயம்மா, பங்காரு மாயம்மா,

  முத்து மாரியம்மா, பத்ர காளியம்மா,

  முண்ட கன்னியம்மா, எங்க சென்னியம்மா!

  பக்தி ரசம் நிறைந்த சினிமாப் பாடல் இது. நூற்றியெட்டு அம்மன் பெயர்களை மிக அழகாக மெட்டில் பொருத்தி (அல்லது, நூற்றியெட்டு அம்மன் பெயர்களைத் தொகுத்து மெட்டமைத்து) அவர்கள் எல்லாரையும் அழைத்துக் கதாநாயகி இறைஞ்சுவதாகக் காட்சி அமைப்பு.

  இதில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம், அந்த அம்மன் பெயர்கள், பெரும்பாலானவை மிக அழகான தமிழ்ப் பெயர்கள்.

  நான் பார்த்தவரை தமிழ்நாட்டில் பல ஆலயங்களில் இறைவன், இறைவிக்கு அருமையான தமிழ்ப் பெயர்கள் உண்டு. கூடவே அவற்றை வடமொழிப்படுத்தி ஒரு பெயரும் வைத்திருப்பார்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வடமொழிப்பெயர் பிரபலமாகிவிடும், அந்தச் சாமிக்கு ஒரு தமிழ்ப் பெயர் இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள்.

  வடமொழிப் பெயர் / சொற்கள் பிரபலமாவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இதன்மூலம் நாம் இழப்பது, அற்புதமான தமிழ்ச் சொற்களை.

  உதாரணமாக, இந்தப் பாடலின் முதல் அம்மன் பெயரை எடுத்துக்கொள்ளுங்கள், ’கோல விழி அம்மன்’.

  நமக்குத் தெரிந்து ‘கோலம்’ என்றால் வீட்டு வாசலில் போடுவது. ’அரிசி மாவுக் கோலத்தைப் போன்ற விழிகளைக் கொண்ட அம்மன்’ என்று ஓர் இறைவிக்குப் பெயர் வைப்பார்களா? எங்கேயோ இடிக்கிறது!

  அகராதியைப் பார்த்தால் தெரியும், ‘கோலம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘அழகு’ / ‘அலங்கரிப்பு’ / ‘தோற்றம்’ போன்ற பொருள்களும் உண்டு.

  உதாரணமாக,

  • திருப்பாவையில் ஆண்டாள் எழுதியது: ‘கோல விளக்கே, கொடியே விதானமே!’
  • சீதை கல்யாணத்தின்போது கம்பன் எழுதியது: ‘தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான்.’
  • மாலை நேரத்து வானத்தைப் பாரதிதாசன் எழுதியது: ‘குன்றின்மீது நின்று கண்டேன், கோலம், என்ன கோலமே!’

  ’கோலம்’ என்கிற வார்த்தையை இதே பொருளில் கோயில்களில் நிறையப் பார்க்கலாம், இறைவனின் நின்ற திருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் என்பார்கள்.

  சினிமாப் பாடலாசிரியர்களுக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை இது, ‘ஒரு கோலக்கிளி சோடி தன்னைத் தேடுது’ என்றால், அழகான கிளி தனக்கு ஓர் இணையைத் தேடுகிறது என்று அர்த்தம்.

  எல்லாம் சரி, நம்முடைய இன்றைய பேச்சுவழக்கில் ‘கோலம்’க்கு இந்தப் பொருள் உண்டா?

  நிச்சயம் உண்டு. குழந்தை முகத்தில் எதையாவது பூசிக்கொண்டு வந்து நின்றால், ‘என்ன கோலம் இது?’ என்று கேட்கிறோம். யாராவது அரைகுறையாக வேலை செய்தால், ‘அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்காதே’ என்கிறோம், ’மாப்பிள்ளையும் பெண்ணும் திருமணக் கோலத்தில் வந்து நின்றார்கள்’ என்கிறோம். ‘ஊர்முழுவதும் விழாக்கோலம் பூண்டது’ என்கிறோம்.

  நல்லவேளையாக, அத்தனை சுலபத்தில் நாம் ஒரு சொல்லை / பொருளை இழப்பதில்லை!

  ***

  என். சொக்கன் …

  11 03 2013

  100/365

   
  • elavasam 5:28 pm on March 11, 2013 Permalink | Reply

   கோலம் அத்தனை ஈசியா போகாது ப்ரதர். அலங்கோலம் என்ற சொல் இருக்கும் வரை கோலத்தின் இந்தப் பொருள் நினைவில் இருக்கும்.

   அப்புறம் காலம் செய்த கோலமடி என்று வரும் உன்னைச் சொல்லி குத்தமில்லை பாட்டையும் சொல்லி இருக்கலாமே. 🙂

  • amas32 (@amas32) 6:54 pm on March 11, 2013 Permalink | Reply

   Elavasam beat me into commenting about அலங்கோலம் 🙂 கோலத்தைவிட அலங்கோலம் நன்றாக நினைவுக்கு வந்துவிடுகிறது.

   நீங்கள சொல்வது போல காலப் போக்கில் தமிழ் பெயர்கள் மறைந்து வடமொழி பெயர்கள் தான் கோவில்களில் நிலைத்து விடுகின்றன. காஞ்சியில் யதொத்காரி பெருமாள் கோவில் எங்கு உள்ளது என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் என்றால் சிலருக்குத் தான் தெரிகிறது. http://www.divinebrahmanda.com/2013/02/sri-yathothkari-perumal-temple.html

   amas32

  • anonymous 6:55 pm on March 11, 2013 Permalink | Reply

   கோலங் கொள் நூறாம் பதிவுக்கு வாழ்த்துக்கள்;
   —-

   நீர்க் “கோல” வாழ்வை நச்சி
   நெடிது நாள் வளர்த்துப் பின்னை,
   போர்க் “கோலம்” செய்து விட்டார்க்கு
   உயிர் கொடாது அங்கு போகேன்!

   தார்க் “கோல” மேனி மைந்த
   என் துயர் தவிர்த்தி ஆயின்,
   கார்க் “கோல” மேனியானைக்
   கூடுதி கடிதின் ஏகி (என்றான்)
   —–

   காலம் கரைந்தாலும் “கோலம்” சிதைந்தாலும்
   பாசம் வெளுக்காது மானே..
   பூவே பூச்சூடவா வா…
   —–

   “கோலம்” செய் – துங்கக் கரிமுகத்து தூமணியே – நீயெனுக்குச்
   சங்கத் தமிழ் மூன்றும் தா!

  • anonymous 7:01 pm on March 11, 2013 Permalink | Reply

   பதிவில் ஒரு சிறு திருத்தம்…
   //முண்டக் கன்னி//

   முண்டகம் = தாமரை
   முண்டகக் கண்ணி = தாமரை விழியாள்

   • amas32 (@amas32) 7:38 pm on March 11, 2013 Permalink | Reply

    வருக! நீங்கள் வந்திருப்பது பெரு மகிழ்ச்சி 🙂

    amas32

    • anonymous 8:23 am on March 12, 2013 Permalink

     நன்றி; நலமா அம்மா? அவனும் நலமா? (வடபழனியான்)
     மன்னிக்க, என் இருப்பும் நிலைமையும் அப்படி!
     இன்று ஏதோ நெறைய இணையம் கெடைச்சுது;

     “இசை + தமிழ்” என்பதால் தட்டித் தடவி வந்தேன்; இனி அரிதே,
     பல மாதங்கள் கழித்து, இங்கு இத்தனை பேசியதே போதும்:)

   • anonymous 8:44 pm on March 11, 2013 Permalink | Reply

    இன்னொரு தமிழ்க் கடவுளாம் கொற்றவை!
     
    சிவராத்திரி அதுவுமா நவராத்திரிப் பதிவா இட்டிருக்கீங்க:)
    அவளுக்குச் “சிவை” –ன்னே பேரு; அவரு = சிவன், இவ = சிவை
     
    அன்னையின் 108 பேர்களும் “கோலம்” நிறைந்தவை!
    = கோல விழி அம்மன், உண்ணா முலை அம்மன்,
    = அறம் வளர்த்த நாயகி, செங்கண் மால் தங்கச்சி
    = வடிவுடை அம்மன், கொடியிடை அம்மன்
    —-
     
    இன்னொரு தமிழ்க் கடவுளாம் கொற்றவை!
     
    நீலி, சூலி, செல்லி -ன்னு எழிலான பெயர்கள்;
    ஆனா இந்தப் பேரெல்லாம், “ஒரு மாதிரி” பேர்கள்- ன்னு ஆக்கிட்டாங்க:(
     
    கற்பகாம்பாள், சாரதாம்பாள் –ன்னு பேரு தான், “decent”ஆ இருக்கு என்பது போல் ஒரு பாவனை வந்துருச்சி! யாரைச் சொல்லி நோக?:((
    (சோறு –ன்னா decency இல்ல, சாதம்-ன்னா decent feeling வருது –ங்கிறாப் போல இது ஒரு வித மன மாயை)
     
    நீங்களே வாய் விட்டுச் சொல்லிப் பாருங்க; அழகு மட்டுமல்ல, மனசுல அன்பும் சுரக்கும் (பொருள் விளங்குவதால்)

    மா மயிலாள் = கற்பகாம்பாள்
    அஞ் சொல் நாயகி = அபயாம்பாள்
    அறம் வளர்த்த நாயகி = தர்ம சம்வர்த்தினி

     
    இன்னும் நிறைய சொல்ல முடியும், தேவார வைப்புத் தலம் ஒவ்வொன்னுத்துக்கும்…
    ஆனா ஒரேயொரு பேரு மட்டும் சொல்லுறேன்; மனசுல போய் மணி அடிக்குதா –ன்னு நீங்களே பாருங்க = “வாழ வந்த நாயகி”
     
    ஸ்ரீவாஞ்சியாம்பாள் = வாழ வந்த நாயகி
     
    எது-ன்னு நீங்களே மனசைக் கேட்டு முடிவு பண்ணிக்கோங்க;
    ஸ்ரீவாஞ்சியம் –ன்னு ஊரு, மாயவரம் (மயிலாடுதுறை) பக்கம்; திருமணஞ் சேரியில் புதுசாத் திருமணம் ஆகி, அங்கிட்டு வாழ வந்து பொண்ணு இவ = வாழ வந்த நாயகி

   • anonymous 9:22 pm on March 11, 2013 Permalink | Reply

    //அலங்கோலம்//
     
    “கோலம்” என்ற எழிலான தமிழ்ச் சொல்லு;
    ஆனா “அலங்கோலம்” தான் ஞாபகம் வரும்-ன்னா என்ன செய்ய முடியும்?:(
    “கோல விழித் தாயே” தான் மனசு வைக்கணும்;
     
    ஆனா, “அலங்கோலம்” என்பதும் அழகான தமிழ்ச் சொல்லு-ன்னு தெரியுமா?
    அல் + அங் + கோலம்
     
    அம்-கோலம் = அழகான தோற்றம்
    அல் (அம்-கோலம்) = negative; அல் = எதிர்மறை விகுதி!

    அல்- வழக்கு, அல்-திணை (அஃறிணை)
    அல் எண்ணம் x நல் எண்ணம்
    = இப்பிடி நெறைய அல் இருக்கு;
     
    தொல்காப்பியர், அலங்கடையே, அலங்கடையே –ன்னு சொல்லுவாரு;
    = அல்+ (அம்-கடை); இறுதியாகச் சொல்லும் valid exceptions
    = Exception க்கு என்னவொரு தமிழ்ச்சொல்லு = அலங்கடை!
    அதே போல் தான் அல்+ (அங்-கோலம்)
     
    நாம, கிண்டலுக்குப் பேசிப் பேசியே, நல்ல பல தமிழ் சொல்லு எல்லாம் காவு குடுத்துட்டோம்:((
    ——
     
    இத, வடமொழிக்கும் சொல்லலாமே; ஆனா (பல பேருக்கு) மனசு வராது;
    “திவ்ய-குசுமம்” = சுகந்தமான மணம்
    கோயில் அர்ச்சனை-ல சொல்லுறது தான்; “கற்பகாம்பிகா ஸ்ரீ சரண, திவ்ய குசும, குங்குமாங்கித பூஜாம் கரிஷ்யே”
     
    “குசுமத்துல” என்னங்கடா “திவ்யம்”? –ன்னு கிண்டல் பண்ணிக்கிட்டடே இருந்தா என்ன ஆகும்?

    ஒவ்வொரு மொழிக்கும், அதன் அழகியல் எல்லைகள் உண்டு;
    அதைக் கிண்டல்/ குசும்பு/ எள்ளல் –ங்கிற பேரில், பேசிப்பேசியே, மொழியின் சொற் பிறப்பியலை விட்டுத் துரத்தீறக் கூடாது!
     
    இப்போ இருக்குற வாழ்வுக்கே கடினமான நிலைமையிலும், பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்! மன்னிக்க!
    ஆத்தாளை, அங்கமெல்லாம் பூத்தாளை,
    என் தமிழில் வேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

  • Saba-Thambi 7:07 pm on March 11, 2013 Permalink | Reply

   கோலாகலம் = ? அழகு சார்ந்த சொல்லா ?

   இன்னொரு பாடல் நினவுக்கு வருகிறது;
   படம்: நாளை நமதே
   பாடல்: நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது, அதன் கோல வடிவங்களில்…..

   • anonymous 7:18 am on March 12, 2013 Permalink | Reply

    Good afternoon sir,
    நீல நயனங்களில், கோல வடிவங்களில்… ரொம்ப நல்ல பாட்டு,
    சுசீலாம்மா நீஈஈல நயனங்களில் -ன்னு வீணை போல் இழுக்கும் பாட்டு; நினைவு படுத்தியமைக்கு நன்றி;

    one more…
    ஓகோ எந்தன் பேபி..கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட “கோலம்” காணலாம்:)
    one more…
    “கோல” மயில் போல் நீ வருவாயோ? கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயோ? பாலும் பழமும்…

    நிறைய “கோலம்” பாட்டு இருக்கு-ல்ல?:)
    ——-

    கோலாகலம் = இது வடமொழிச் சொல்லுங்க!

    கோலா-ஹலம் = இது “கலம்” -ன்னு மாறி, தமிழில் இன்னிக்கி புழங்குது; (பொருள்: ஆர்ப்பாட்டமான, பெருத்த ஓசையுடன்)
    http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=kolahalam&direction=AU

    • Saba-Thambi 6:02 pm on March 12, 2013 Permalink

     யாரோ அவர்களே !

     கோலாகலம் விளக்கதிற்கும், வட மொழி சொற்கள் இணயத்திற்கும் மிக்க நன்றி.

     சபா

  • anonymous 10:31 pm on March 11, 2013 Permalink | Reply

   //வடமொழிப் பெயர் / சொற்கள் பிரபலமாவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இதன்மூலம் நாம் இழப்பது, அற்புதமான தமிழ்ச் சொற்களை//
    
   இதை, இந்த 100ஆம் பதிவில் சொன்னமைக்காக,
   திருமுருகன் சார்பாக,
   உங்களைப் பல முறை “நமஸ்கரிக்கிறேன்”
    
   =அபிவாதயே, சிவ கோத்ரம், சங்கரா நாம அஹம், அஸ்மிபோ 
   =அனன்ய சரணஹ நமஸ்காரம்!
   ——
    
   வடமொழி மிக நல்ல மொழி தான்! = செம்மொழி
   வடசொற்கள் பிரபலம் ஆகட்டும்;
   ஆனா, எங்கு ஆகணுமோ, அங்கு ஆகணும்!
    
   சம்ஸ்கிருதம் ஓங்கிய பாடாலிபுத்ரம் (எ) Patna –வில், “மங்களாம்பாள், கமலாம்பாள், செளந்தரபுரீஸ்வரி” –ன்னு பேரு பிரபலம் ஆவதில் தப்பேயில்லை!
    
   ஆனா, உண்மை என்ன-ன்னா, ) Patna –விலேயே அப்பிடியெல்லாம் இன்னிக்கி பேரு வைக்க முடியாது:)
   சந்தோஷி மாதா, ஜீவன் கி மாதா-ன்னு இந்தி கலந்தே வைக்க முடியும்:))
    
   ஆனா,
   தமிழ் கொஞ்சும் அப்பர் பெருமான் வைப்புத் தலம்/ தேவாரத் தலம்; இங்க மட்டும் “அபயாம்பிகா” –ன்னு ஆயிருச்சி!:(
   மாத்துனது தான் மாத்துனாங்களே, ஒழுங்கா மாத்தப்பிடாதா?
    
   “அஞ்-சொலாள்” (அழகிய சொல்லாள்);
   அதை “அஞ்சலாள் (அஞ்சாதே) –ன்னு நினைச்சிக்கிட்டாங்க; Literalஆ “அபயாம்பாள்”-ன்னு மாத்தீட்டாங்க:(
   இதே போல திரு-மரைக்-காடு (மான் வாழ் காடு); அதைத் திரு-மறைக்-காடு –ன்னு நினைச்சிக்கிட்டு, வேதாரண்யம் –ன்னு ஆகிப் போச்சி; அதுக்குக் கதையும் கட்டியாச்சி:(
   ——
    
   தப்பா எடுத்துக்க வேணாம்; யாரையும் “பழிக்கும்” சுபாவம் எனக்குப் பிறவியிலேயே இல்லை!
   பெயர்ச் சொல்லில் கிரந்தம் தவிர்க்கக் கூடாது; ஸ்ரீதர் –ங்கிற ஒருத்தர் பெயருக்கு மதிப்பளிக்கணும் –ன்னு நினைக்கிறவன் தான்;
    
   =ஆனா, ஸ்ரீதரை, சிறீதர் –ன்னு யாராச்சும் எழுதினாக் கோபம் வருகுது அல்லவா?
   =அதே போலத் தானே, அஞ்-சொலாளை, அபயாம்பாள்-ன்னு மாத்தினா வரும்? (காலங் காலமா)
   =இந்த இரு-வழி நியாயம், two way truth மட்டும் நமக்குப் புரிவதே இல்லை:( பகை பாராட்டி விடுகிறோம்!
    
   தமிழ் மொழி, தனித்து இயங்க வல்லது தான்; ஆனா பண்பாடுகள் சற்றுக் கலக்கத் தான் செய்யும்!
   ஆனா, அது மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கலா இருக்கணும்; முதலுக்கே மோசம் போயீறக் கூடாது!
    
   =பல தமிழ்ச் சொற்கள் இப்படிச் செத்து விட்டன!
   சோறு=சாதம், சொல்=வார்த்தை, இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்
    
   =இன்னும் பல தமிழ்ச் சொற்கள் செத்துக் கொண்டே இருக்கின்றன!
   பண்பாடு=கலாச்சாரம்! எடுத்துக்காட்டு=உதாரணம்
    
   =ஒருபுடை உருவகம்= இன்னிக்கி “ஏக”தேச உருவகம்-ன்னு தான் இருக்கு பாடநூலில் கூட;
   Does Sanskrit Grammar have ஒன்றிரண்டு? Why shd Tamizh Grammar have ek & ekam? No answer:( மனசாட்சி is the answer
   ——
    
   அம்மா – அம்மன்; இதை இன்னிக்கி எல்லாருமே, “அம்பாள்” –ன்னு சொல்லுவது ஏனோ?
   பல வைணவத் தலங்களில் “தாயார்” –ன்னு தானே சொல்லுறாங்க?
    

   உய்ய வந்த நாச்சியார்
   என்னைப் பெற்ற தாயார்
   பொலிந்து நின்ற மாமகள்
   அலர் மேல் மங்கை

   ஆனா, ஒரு சிலர், இன்னிக்கி, ஆண்டாளையும், Godha ன்னு ஆக்கப் பாக்குறாங்க:( என்ன Goதாவோ?:(
    
   //வடமொழிப் பெயர் / சொற்கள் பிரபலமாவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இதன்மூலம் நாம் இழப்பது, அற்புதமான தமிழ்ச் சொற்களை//
    
   இந்த வாக்கியம் தான், என் நெடுநாள் – பெருத்த “மெளனத்தை” உடைச்சிருச்சி!
   தவறாகத் தொனித்து இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்! மற்றபடி அவரவர் மனசாட்சி; அதில், எங்கள் உண்ணா முலை அம்மன் – வாழ வந்த நாயகி நிக்கட்டும்!
   தமிழ்க் கடவுளாம், கொற்றவை திருவடிகளே தஞ்சம்!
    
   இந்த இனிய ஒரு 100, 
   தமிழ் இரு-நூறு, முருகு-முன் நூறு, நான் ஊற நானூறு, ஐ நூறு, துயர் அறு-நூறு, இசை எழு-நூறு –ன்னு எழில் கண்டு வாழ்க!!
    
   சொக்கன், இராகவன், மோகனகிருஷ்ணன் – இசைபட வாழ்க!

  • elavasam 12:30 am on March 12, 2013 Permalink | Reply

   அலம் என்றால் துன்பம் சஞ்சலம்.

   அலம்+கோலம் = அலங்கோலம்.

   துன்பத்தில் இருக்கும் ஒருவரின் நிலையே அலங்கோலம்.

   அலங்கரிக்கப்படாமல் போட்டது போட்டபடி கிடப்பது துன்பத்தில் இருப்பவர்களின் சுபாவம். இதுவே அலங்கோலத்தின் பொருள்.

   • Kannabiran Ravi Shankar (KRS) 9:23 am on March 12, 2013 Permalink | Reply

    சம்ஸ்கிருத அலம் = ஹலம் (துன்பம்/ கலப்பை/ தேள்)
    http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+halam&trans=Translate&direction=AU

    தமிழ் அலம் = நிறைவு/”திருப்தி”
    *அலம் வர அடியேற்கு அருள்வாயே, அருமயில் நடமிடும் குமரேசா (அருணகிரித் திருப்புகழ்)
    *அலம் புரிந்த நெடும் தடக்கை அமர வேந்தன் (ஆழ்வார் அருளிச் செயல்)

   • Kannabiran Ravi Shankar (KRS) 7:29 am on May 20, 2014 Permalink | Reply

    //அலங்கரிக்கப்படாமல் போட்டது போட்டபடி கிடப்பது துன்பத்தில் இருப்பவர்களின் சுபாவம்//

    நாலு நாள் அம்மா-அப்பா வீட்டுல இல்லை, வெளியூரு கல்யாணத்துக்குப் போயிருக்காக!
    வீடே போட்டது போட்டபடி, “அலங்கோலமாக்” கிடக்கு!

    இதுல எங்க வந்துச்சு ஓய், “துன்பம்”? = பசங்க பாடு “ஜாலி”; அம்மா-அப்பா வீட்டுல இல்ல:)))
    இந்த அலங்கோலம் = துன்பத்தில் இருப்பவர்களின் கோலமா?:)
    ——-

    //இதுவே அலங்கோலத்தின் பொருள்//

    அடேங்கப்பா!
    ஒரு நூலாதாரமும் குடுக்கல!
    அப்பறம் எப்படி “இதுவே” -ங்கிற ஏகாரம் ஒங்களுக்கு வருது?

    சம்ஸ்கிருத ஹலம்= துன்பம்!
    அதைத் தமிழில் ஒட்ட வச்சீறணும்; அதுக்கு இம்புட்டு ஏகாரம் போடுறீக?

    முகநூல் -ன்னு சிலர் எழுதுறாங்களா..
    ஒடனே “வதனப்” புத்தகம்-ன்னு மாத்து!
    எழுதி எழுதிப் பரப்பு = உங்க குணம், கண்கூடு:)
    ——-

    I did not want to talk harsh during those times..
    But today hit this page on google, when searching for something;
    Wanted to strongly register my protest on such “mentality” of ppl, who “intrude” into Tamizh:(

   • Kannabiran Ravi Shankar (KRS) 7:40 am on May 20, 2014 Permalink | Reply

    //உங்க “இலக்கியமே” = சம்ஸ்கிருத “லக்ஷியம் ங்கிற
    “வார்த்தையில்” இருந்து தான் வந்துச்சி ஓய்!

    மதுரை= தமிழ் இல்ல!
    கிரந்த ஹால-வாய் தான் உண்மையான தமிழ்

    ஹலம்= துன்பம்!
    அதுனால ஹலங்-கோலம்= அலங்கோலமாக்கி ஓட்ட வச்சீறனும்//

    *This is what causes the opposition from Tamizh people;
    *WHY YOU “INTRUDE” INTO OTHERS’ HERITAGE?

    எதிர்ப்பது = இந்தத் “திணிப்பை” மட்டுமே!
    சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி, Parasite போல் உறிஞ்சி,
    மூல மொழிச் சொற்களை அழிப்பதால் = மட்டுமே எதிர்ப்பு!
    —-

    ஒரு பெரும் தொல்-மொழியாம் தமிழ் மொழியின்
    மரபுச் சிறப்பைச், “சிறுமை” செய்து…
    உன் “இலக்கியமே” = என் “லக்ஷியம்” தான்டா!

    நீங்க -ன்னு இல்ல, Mr. இலவசம்;
    காஞ்சிப் பெரியவா முதற்கொண்டு, காலங் காலமாய்ச் செய்து வருகிறார்கள்:(
    பாத்துக்கோங்க = http://www.kamakoti.org/tamil/Kural74.htm

    Why this Mentality???
    Can u not grow Sanskrit, stand alone?
    Why intrude into others’ heritage?

    இந்த அடிப்படை “நியாயம்”,
    அறம் கூடப் புரியாமல், என்ன இறை வணங்கி, என்ன பயன்? = பகவான் “தர்ம” ரூபேண!

  • anonymous 8:07 am on March 12, 2013 Permalink | Reply

   வணக்கம் திரு. இலவசம்

   அலம் = ஹலம்

   வடசொல்லு தான்; (துன்பம்/ சஞ்சலம்/ ஓசை)
   ஹாலா-ஹலம் = துன்பம் தரும் விஷம்;
   தமிழில் “நுழைஞ்சி”, ஆலா-அலம் (ஆலகால விஷம்) -ன்னு மாறிப் புழங்குது;

   பஸ் ஏறினேன்; பிகரு சூப்பரு

   =பேச்சு வழக்கில், இப்படிக் கலந்து பேசினாலும்… பஸ்/ பிகரு எல்லாம் தமிழ் இல்லை-ன்னு பைத்தியம் கூடச் சொல்லீருவான்; இது ஒரு “ச்சும்மா”!
   =ஆனா, வடசொல் கலப்பு அப்படியில்ல; பாத்தீங்களா? “அலம்” தமிழ்-ன்னே நினைக்க வைக்குது; அப்படியொரு ஊடாடல்:(

   =வார்த்தை/அர்த்தம் -ன்னே பேசிப் பேசி,
   =சொல்லு/பொருளு -ன்னு பேச்சு வழக்கில் இருந்தே செத்துப் போயிருச்சி!

   Mummy -ன்னே அம்மாவைக் கூப்புடும் சில High Class குடும்பங்கள் உண்டு; பெருசா தப்பொன்னும் இல்ல;
   அதே போலத் தான், “அம்மா-அம்மன்” போயி, “அம்பாள்” -ன்னு கூப்பிடறதும்:( தப்பொன்னும் இல்ல; அவளும் பெத்த அம்மா தானே!

   “பண்பாடு” என்ற தமிழ்ச் சொல்லு செத்து, தமிழ்க் “கலாச்சாரம்” ஆகி வாழ்க!:(
   ——

   btw, அலங்கோலம் = தாங்கள் சொன்ன “ஹலம்” அன்று!
   அல் + (அம்-கோலம்)
   அல்=negation; அம்-கோலம்= அழகிய தோற்றம்

   நான் சொன்னா, “தமிழ் வெறி” + “எ.தெ.ஏகாம்பரத்” திமிராகப் பாவிக்கப்படும்; மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரைக் காட்டினாலோ, “தேய்ப்பிலட்டு->Tabletu” -ன்னு எள்ளி எள்ளி, இன்புற்று இருப்பதுவே! “டுமீல்” வாழ்க!:(

   அதனால் நல்-அறிஞர்கள் / இந்து-அறிஞர்கள் சொல்வதைப் பாருங்க;
   சித்தாந்த தீபிகை, ஆண்டு 1914 – அறிஞர்கள் நல்லசாமிப் பிள்ளை & குமாரசாமிப் பிள்ளை

   http://siddhantadeepika.blogspot.com/2012/09/the-word-ayal.html (last line of the post)

   “அலங்-கோலம்” = நற்றமிழ்ச் சொல்லே! இதில் allergy ஒன்னுமில்ல!
   “கோலம்” = அனைவரும் புழங்க வல்ல, இனிய தமிழ்ச் சொல்லே!
   ——

   //வடமொழிப் பெயர் / சொற்கள் பிரபலமாவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இதன்மூலம் நாம் இழப்பது, அற்புதமான தமிழ்ச் சொற்களை//
   என்று எழுதிய திரு. சொக்கனின் “பாதார விந்தங்களை” உண்மையாகவே பணிகிறேன்;

   • amas32 (@amas32) 12:19 pm on March 12, 2013 Permalink | Reply

    By not contributing like you have done today and staying incognito you are doing a dis service to your Tamil. That is all I can say.

    amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel