மருதாணிச் சாறெடுத்து… 

சென்னை தியாகராயநகரில் பனகல் பூங்காவின் ஓரமாக வரிசையாக வடக்கத்தி இளைஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் இளம் பெண்கள் கைகளில் விதம்விதமாக மெஹந்தி இட்டுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண அலங்காரத்திலும் மெஹந்தி முக்கியமாக இருக்கிறது.

மெஹந்தி என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது.

என்னுடைய சிறுவயதில் வீடுகளில் மருதாணி அரைத்து பெண்களும் சிறுமிகளும் இட்டுக் கொள்வார்கள். சிறுவர்களும் கூடத்தான்.

மருதாணி இலையை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அம்மியில் அரைப்பவர்களும் உண்டு. அத்தோடு கொட்டைப்பாக்கு, புளி, தயிர் ஆகியவைகளையும் சேர்த்து அரைப்பவர்களும் உண்டு.

வீட்டில் ஒருவர்தான் எல்லாருக்கும் மருதாணி இடுவார். இட்டு முடித்திருக்கும் போது அவர் விரல்கள் தாமாகவே சிவந்திருக்கும். அதெல்லாம் அந்தக்காலம். பிறகு மருதாணிச் செடிகள் வைக்க வீடுகளில் இடமில்லாமல் போன போது மருதாணிப் பொடி பாக்கெட்டுகளில் வந்தது. ஆனால் அது அவ்வளவு பிரபலமாகவில்லை. அதற்குப் பின்னால் வந்த மெஹந்தி கூம்பு மிகவும் பிரபலமாகி விட்டது.

கை படாமல் இட்டுக் கொள்ள முடியும். மெல்லிதாகவும் இட முடியும். இப்படி வசதிகள் வந்த பிறகு மருதாணி அரைப்பது என்பதே இல்லாமல் போனது. அரைக்க விரும்பினாலும் எத்தனை வீடுகளில் அம்மி இருக்கிறது?

இந்த மருதாணி திரைப்படங்களில் நிறைய வந்திருக்கிறது.

மருதாணி விழியில் ஏன்” என்று கண்கள் சிவந்திருப்பதை வாலி அழகாக சக்கரக்கட்டி படத்தில் உவமித்திருக்கிறார்.
மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை” என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில் நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறார்.
மருதாணி வெச்ச பொண்ணு இவதான்” என்று கிராமத்துப் பெண்ணை அன்னை வயல் படத்தில் இனங்காட்டுகிறார் பழனிபாரதி.
மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா” என்று கூட பாட்டு உண்டு.
இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள் உண்டு. பட்டியல் பெரிது.

மருதாணிக்கு மருதாணி என்று பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? அதன் பழைய பெயர் மருதோன்றி.

இலையின் சாறினால் சிவந்த மரு தோன்றுவதால் மருதோன்றி என்று அதற்குப் பெயர். பழைய இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்திருக்கிறார்கள். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் இப்படியொரு பாட்டு.

கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து

இந்தப் பாடலுக்கு இரண்டு விதப் பொருள்கள் தோன்றுகின்றன. இரண்டையும் தருகிறேன். பொருத்தமானதைக் கொள்க.

கார்காலம் வந்து விட்டது. கருவிளை மலர்கள் மாதரார் மாவடுக் கண்கள் போல விழித்துப் பூத்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணிப்பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டன காதலியின் கைகள். பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

அடுத்த பொருள். கார்காலம் வந்து விட்டது. தலைவியின் கண்கள் கருவிளை மலர்களைப் போன்று பூத்து தலைவன் வருகைக்காக விழித்திருக்கின்றன. எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன. பிரிந்து சென்ற தலைவன் வரவைச் சொல்ல முடியாத நிலையால் எதையும் சொல்லாமல் தவிர்த்தாள் தலைவி.

இந்தச் செய்யுளில் தோன்று என்று அழைக்கப்படுவது மருதோன்றி.

அது சரி. யாரெல்லாம் தங்கள் கைகளில் மருதாணி இட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள்? 🙂

அன்புடன்,
ஜிரா

163/365