முரண்களைக் கோத்து மாலை

எண்பதுகளின் துவக்கத்தில் வந்த படங்களில் ஒரு தலை ராகம் முக்கியமானது. நிறைய புதியவர்கள், கல்லூரி  ரயில்வே ஸ்டேஷன்  வித்தியாசமான களம் என்று சில அடையாளங்களுடன் வந்து மிகப்பெரிய Blockbuster வெற்றி பெற்றது. படத்தின் பாடல்கள் இசைக்காகவும் வரிகளுக்காகவும் பரபரப்பாக பேசப்பட்டன. இதில் எல்லா பாடல்களும் ஆண் குரலில் ஒலிக்கும். இது ஒரு தலை காதல் என்பதை குறிக்கவே என்று அந்த நாளில் கல்லூரியில் விவாதித்ததுண்டு.

எழுதி இசையமைத்தவர் என்று படம் வந்தபோது T ராஜேந்தருக்கு  முழு Credit கொடுக்கப்படாவிட்டாலும் பின்னர் வந்த வெற்றிகள் அவர் உழைப்புக்கும் வேர்வைக்கும் பேர் வைத்தது.

இதில் முரண்களைக்  கோர்த்து மாலை செய்த இனிமையான பாடல் ஒன்று உண்டு. காதல் கைகூடாது என்று வலியுடன் நாயகன் பாடும் பாடல். http://www.inbaminge.com/t/o/Oru%20Thalai%20Ragam/Ithu%20Kuzhanthai%20Padum.eng.html

நடக்க முடியாத அல்லது முரண்பட்ட அல்லது தொடர்ச்சியாக அமையாத அல்லது பொருத்தமில்லாத நிகழ்வாக சில உதாரணங்களை சொல்லி அதுபோலவே தன் காதலும் என்று சொல்லும் பாடல்.

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

பூபாளம் அதிகாலை ராகம் அது இரவில் பொருந்தாது. மேற்கில் உதயம் நடக்கவே நடக்காது. நதியில்லாத ஓடம் உபயோகமற்றது – என்று தன் காதலின் நிலை சொல்லும் வார்த்தைகள். (சமீபத்தில் ராம் படத்தில் வந்த ஆராரிராரோ பாடல்  குழந்தை பாடும் தாலாட்டாக)

சரணத்திலும் தொடரும் இந்த அமைப்பு – சில வரிகளைப்பாருங்கள்

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்

ஆனால் கூர்ந்து கவனித்தால் நாயகன் தன்  நிலையை நன்கு உணர்ந்திருக்கிறான் என்றே தோன்றுகிறது. சரணங்களின் முடிவில் வரிகளை கவனியுங்கள் .

உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

வாழ்வின் அர்த்தமின்மை, உலகை வெறுக்கும் நிலை, வாழ விருப்பமின்மை என்று கதை சொல்லும் பாடல்.

இது என்ன வகைப்பாடல்? இது போல் அது என்று சொல்லும் உவமை மாதிரி தோன்றவில்லை .இது Compound Similie என்று எங்கோ படித்த நினைவு ஆனால் இப்போது கூகிளினால் அது பொருந்தவில்லை. Incongruity , முரண்கள், Inverted Parallels , நெகடிவ் metaphor, என்று கலந்து கட்டி – ஆனால் கேட்டவுடன் ரசிக்கக்கூடிய வரிகள்.

இது போல் வேறு பாடல் உண்டா? கொஞ்சம் யோசித்தால் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் இந்த வகையோ என்று தோன்றுகிறது. அதில் களமும் காட்சியும் வேறு. நாயகியை சிரிக்கவைக்க மனதில் தோன்றியதை வாயில் வந்ததை குஷியாக பாடும் பாடல்

இது என்ன வகை ? தெரிந்தால் சொல்லுங்கள்.

மோகனகிருஷ்ணன்

107/365