கண்ணே, கொஞ்சம் சிரி!

  • படம்: உயிருள்ளவரை உஷா
  • பாடல்: இந்திர லோகத்து சுந்தரி
  • எழுதியவர்: டி. ராஜேந்தர்
  • இசை: டி. ராஜேந்தர்
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. எஸ். சசிரேகா
  • Link: http://www.youtube.com/watch?v=jpoafTkAwv4

பொன் உருகும் கன்னம் குழிய,

ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்,

இந்த மானிடனும் மயங்கிவிட்டான்,

அந்த மானிடமே மனதை விட்டான்!

’முறுவல்’ என்றால், அட்டகாசமாக வாய் விட்டுச் சிரிக்காமல், உதட்டால்மட்டும் (கொஞ்சம்போல்) சிரிப்பது, பேச்சுவழக்கில் அதிகம் இல்லாவிட்டாலும், இன்றைக்கும் எழுத்தில் நிறையப் பயன்படுத்துகிற ஒரு சொல்தான் இது.

அதே சொல்லுக்கு, ‘பல்’ என்றும் ஓர் அர்த்தம் உண்டு, தெரியுமா?

நளவெண்பாவில் புகழேந்தியின் பாடல் ஒன்று, ‘முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப’ என்று தொடங்குகிறது. கடற்கரைக்கு வரும் அலைகள், அங்கே பல முத்துகளை விட்டுச் செல்கின்றன, அவற்றைப் பார்க்கும்போது, அழகிய பெண்களின் பற்களைப்போல் இருக்கின்றனவாம்.

இங்கே ‘முறுவல்’ என்றால் பல், ’திரள்’ என்றால் ஒன்றுசேர்தல், பல கவிதைகளைத் தொகுத்துள்ள ஒரு நூலைத் ‘திரட்டு’ என்று சொல்கிறோமே, அதன் வேர்ச்சொல் இதுதான். ஆக, ‘முறுவல் திரள்’ என்றால், பற்களின் கூட்டம், அல்லது தொகுப்பு.

’முறுவல்’ சரி, அதென்ன ‘புன்’?

ராமாயணத்தில் ராமனும் ராவணனும் முதன்முறையாகச் சந்தித்துக்கொள்ளும் காட்சியில், ‘புன் தொழில் ராவணன்’ என்கிறார் கம்பர். அதாவது, (இன்னொருவருடைய மனைவியை விருப்பமில்லாமல் கடத்திவந்து சிறைப்படுத்தியதன்மூலம்) சிறுமையான தொழிலைச் செய்துவிட்ட ராவணன்.

‘புன்’ என்றால் சிறிய / சிறுமையான / அதிகம் இல்லாத என்று பொருள் சொல்லலாம். புன்சிரிப்பு, புன்முறுவல், புன்னகை (புன் நகை) என்று சிரிப்புக்கு அடைமொழியாகவே நாம் மிகுதியாகப் பயன்படுத்தும் ஒரு சொல் இது.

’முறுவல்’போலவே, சிரிப்பைச் சொல்லும் இன்னொரு சொல் ‘மூரல்’. இதுவும் ‘புன்’ என்கிற அடைமொழியுடன் சேர்ந்து ‘புன்மூரல்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சில பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த இரண்டையும் சேர்த்து, அதாவது ’மூரல் முறுவல்’ என்றும் படிக்கிறோம், இது ‘கேட்டு வாசல்’, ‘நடுசென்டர்’போல அபத்தமாகத் தோன்றும், ஆனால் அங்கெல்லாம் ‘மூரல் = பல்’, ‘முறுவல் = சிரிப்பு’ (Or, Vice Versa) என்று புரிந்துகொள்ளவேண்டுமாம், அதாவது, பல் தெரியச் சிரிப்பது.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இன்னும் இரண்டு வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்!

முதலில், முறுகு.

ஹோட்டலில் நுழைந்தவுடன் ‘முறுகலா ஒரு தோசை’ என்று ஆர்டர் செய்கிறோம், இது ‘முள்’ என்பதிலிருந்து வந்தது, நாம் கடித்துத் தின்னும் முறுக்கு, நமீதா விளம்பரம் செய்கிற முறுக்குக் கம்பிகள் எல்லாமே இந்தக் குடும்பம்தான்.

இந்தச் சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உள்ளன:

  1. நேராக இல்லாமல் திரிக்கப்பட்டது / முறுக்கப்பட்டது
  2. சூட்டினால் கடினமானது.

அரிசி முறுக்குக்கும், வீடு கட்டும் கம்பிக்கும் இந்த இரண்டு பொருள்களும் பொருந்துகின்றன, ஆனால் தோசைக்கு இரண்டாவது அர்த்தம்மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

அடுத்து, முருகு.

கடினமான ‘முறுகு’வில் வல்லின ‘ற’க்குப் பதில் இடையின ‘ர’ சேர்த்தால், அர்த்தமே மாறிவிடுகிறது. இந்த ‘முருகு’வின் பொருள், அழகு, இளமை.

அதனால்தான், ’அழகன் முருகன்’ என்கிறோம், இடுகுறிப் பெயர் அல்ல, காரணப் பெயர்!

இப்போ, மாப்பிள்ளை முறுக்கு, மாப்பிள்ளை முருக்கு… இரண்டில் எது சரி? 😉

***

என். சொக்கன் …

094/365