கை, செய்

கை என்னும் உறுப்புக்கு தெலுங்கில் செய் என்றே பெயர். வேலைகளை எல்லாம் செய்வதனால் அது செய் என்றழைக்கப்படுகிறது. பழைய தமிழ்ப் பெயர்தான். தமிழில் வழக்கொழிந்து தெலுங்கில் மட்டும் நிலைத்து விட்ட பெயர்.

அந்தக் கையை நிறைய தமிழ்ப் பாடல்களில் காணலாம் என்றாலும் இந்தக் கட்டுரையில் மூன்று பாடல்களை மட்டும் எடுத்துப் பார்க்க நினைக்கிறேன்.

முதலில் புலமைப்பித்தன் எழுதிய வரிகளைப் பார்க்கலாம்.

எதுகை அது உனது இருகை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒருகை உடல் தழுவ மறுகை குழல் தழுவ இன்பம் தேடட்டுமே
(பாடல் – அமுதத் தமிழில். படம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இசை-எம்.எஸ்.வி)

எதுகை பொருந்தி வரும். தொடர்ந்து வரும். நயமும் தரும். அப்படி அவன் கைகள் அவள் பெண்மைக்குப் பொருந்தியும் தொடர்ந்தும் நயமாகவும் வரட்டும் என்று விரும்புகிறாள். அவ்வாறாக ஒரு கை உடலையும் மறுகை குழலையும் தழுவும் போது அங்கு தவழும் இன்பத்துக்கு குறைவேது?

அடுத்தது கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பார்ப்போம். பாடலுக்கான காட்சியை முதலில் சொல்லி விடுகிறேன். அவள் பெயர் பத்மாவதி. அவள் அலர் அமர் திருமகளின் வடிவம். அவள் மணக்க விரும்புவது ஸ்ரீநிவாசனை. அந்த ஸ்ரீநிவாசனே ஒரு குறத்தியாக வந்து பத்மாவதிக்கு குறி சொல்லி ஆடிப் பாடும் பாடல் இது. அதற்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்களேன்.

மங்கை தண்கை மலர்க்கை
அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
பங்கய மலரே இருக்கை
அந்த பாற்கடல் நாயகன் துணைக்கை
(படம் – தெய்வத் திருமணங்கள், இசை – எம்.எஸ்.விசுவநாதன்)

அவளுடைய பெயரிலேயே குளிர்ந்த தாமரை இருக்கிறது. பத்மாவதியல்லவா. அந்த மங்கையின் கையும் குளிர்ந்த மலர்க்கையாம். அலைமகள் அள்ளி வழங்கும் செல்வம் நிறைந்த கை. அவளுடைய இருக்கை பங்கய மலர். அவளுக்கு பாற்கடல் பரந்தாமனே துணைக்கை.

ஏன் இத்தனை கைகள்? குறத்தி கை பார்த்துதானே குறி சொல்ல முடியும்!

இதையெல்லாம் விட என்னை ஆச்சரியப்படுத்தியது டி.ராஜேந்தரின் வரிகள். அவர் கைக்கு உவமை சொன்னது போல வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது
(பாடல் – மோகம் வந்து தாகம் வந்து, படம் – உயிருள்ளவரை உஷா, இசை – டி.ராஜேந்தர்)

ஐந்து விரல்களை ஐந்து தலைகளாக்கி கையை நாகம் என்று உவமித்தது நல்ல கற்பனை. மோகம் கொண்ட வேளையில் அவளுடைய கை ஐந்துதலை நாகம் போல நெளிவதாகச் சொல்வதும் பொருத்தம் தானே!

இதுவரை திரையிலக்கியம் பார்த்தோம். இனி பழந்தமிழ் இலக்கியம் கொஞ்சம் பார்க்கலாமா?

கை என்ற சொல் ஒரு அகவுணர்வைக் குறிக்கும். அந்த உணர்வு நிலைக்கு கைந்நிலை என்று பெயர்.

அதென்ன கைந்நிலை?

காமம் பாடாய்ப் படுத்தும் உடல் வாதையைக் கூடல் கொண்டு தீர்க்க யாரும் இல்லாத நிலை கைந்நிலை.

அந்த நிலையில் வருந்திடும் பெண்களைத்தான் சமூகம் கைம்பெண் என்று அழைக்கிறது.

அந்த உணர்வுநிலையை முன்னிறுத்தி சங்கம் மருவிய காலத்தில் ஒரு நூல் எழுந்தது. பதினென் கீழ்க்கணக்கு வரிசையில் கடைசியாக வைக்கப்பட்ட அந்த நூலின் பெயரே கைந்நிலை என்பதுதான்.

இந்த நூலை இயற்றியவர் பெயர் புல்லங்காடர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்து திணைகளிலும் கைந்நிலையை முன்னிறுத்தி எழுந்த ஒரே நூல் கைந்நிலை மட்டுமே எனலாம். அந்த நூலில் ஒரு அழகான பாடலைப் பார்க்கலாமா?

நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக்
கேச மணிந்த கிளரெழிலோ ளாக
முடியுங்கொ லென்று முனிவா னொருவன்
வடிவேல்கை யேந்தி வரும்

புன்னை மரத்து நன்மலரையும்
வேங்கை மரத்தின் பூவினையும்
சூடிக் கொண்ட கிளர் எழில் கூந்தலாள் நான்
பிரிவாற்றாமை துன்பம் வருத்துவதால்
அழிந்து போய்விடுவேனோ என்று அஞ்சி
எதற்கும் அஞ்சாதவனாய் தன்னுயிரை வெறுத்து
கையில் வேலேந்தி காட்டு விலங்குகளைத் தாண்டி
இரவில் வருவான்! இன்பம் தருவான்!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – அமுதத் தமிழில் எழுதும் கவிதை
வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
பாடியவர்கள் – ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
பாடலின் சுட்டி – http://youtu.be/RDARFimmHLg

பாடல் – மங்கை தண்கை மலர்க்கை
வரிகள் – கவியரசு கண்ணதாசன்
பாடியவர் – வாணி ஜெயராம்
இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தெய்வத் திருமணங்கள் (ஸ்ரீநிவாச கல்யாணம்)
பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள், இசை – டி.ராஜேந்தர்
படம் – உயிருள்ளவரை உஷா
பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

அன்புடன்,
ஜிரா

266/365