பூக்கள் சொன்ன ரகசியம்

  • படம்: கூலிக்காரன்
  • பாடல்: குத்துவிளக்காக
  • எழுதியவர்: டி. ராஜேந்தர்
  • இசை: டி. ராஜேந்தர்
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=asEFE8rUXkM

பல வண்ணப் பூக்கள், பாடுது பாக்கள்

அது ஏன் தேன் சிந்துது?

அது நீ பூ என்குது!

இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ‘என்குது’ என்கிற வார்த்தையால் திகைத்துப்போனேன். ரீவைண்ட் செய்து மறுபடி தெளிவாகக் கேட்டேன், ‘என்குது’ என்றுதான் பாடுகிறார் எஸ். பி. பி.

’என்கிறது’ என்ற சொல்லின் சுருக்கம்தான் இது. ஆனால், சாதாரணமாக நாம் எழுத்திலோ பேச்சிலோ பயன்படுத்துகிற வார்த்தை அல்ல. பாடல்களில்கூட, மிக அபூர்வமாகவே தென்படுகிறது.

உதாரணமாக, ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ என்ற கவிமணியின் பிரபலமான குழந்தைப் பாடலில், ‘அம்மா என்குது வெள்ளைப் பசு’ என்று ஒரு வரி வரும்.

கவிமணி பாடலிலும் சரி, டி. ராஜேந்தரின் பாடலிலும் சரி, ‘என்குது’ என்பதற்குப் பதில் ‘என்கிறது’ என்று எழுதினால் மெட்டுக்குப் பொருந்தாது. அதையே கொஞ்சம் சுருக்கி ‘என்றது’ என்று எழுதினால் கச்சிதமாகப் பொருந்தும். இவர்கள் இருவரும் பிரபலமான அந்த வார்த்தையைத் தவிர்த்து வேண்டுமென்றே ‘என்குது’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன். அதற்கும் ஒரு தனி அழகு இருக்கிறதுதான்!

நல்லவேளையாக, நாமும் இந்தச் சொல்லைக் கைவிட்டுவிடவில்லை. கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தில் இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

உதாரணமாக, ‘கதவை இழுத்து இழுத்துப் பார்த்தேன், திறக்கமாட்டேங்குது’ என்று சொல்கிறோம் அல்லவா? அதன் எழுத்து வடிவம், ‘திறக்க மாட்டேன் என்குது’. அதுதான் பின்னர் ‘திறக்கமாட்டேனென்குது’ என்று மாறி, திரிந்து, ‘திறக்கமாட்டேங்குது’ என்று சிதைந்துவிட்டது!

அதாவது, ‘என்குது’ என்ற சொல்லின் சிதைந்த வடிவம்தான், இன்று நாம் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிற ‘ங்குது’ என்ற விகுதி.

இது உங்கள் மனத்தில் விளங்குவேன் என்குதா? விளங்கமாட்டேங்குதா? 😉

***

என். சொக்கன் …

09 10 2013

312/365