விருந்தினர் பதிவு : அம்மானை

”ஒரு பொன் மானை நான் காண தகதிமித்தோம்

ஒரு அம்மானை நான் பாட தகத்திமித்தோம்”

 பொன்மான் ஓகே! அதென்ன அம்மானை…?  ‘பொன் மானை’க்கு ரைமிங்காக வந்து அழகாக அமர்கிறதே…

அம்மானை என்றால் ஒருவகை ’சங்ககாலத்து விளையாட்டு’ என்கிறார்கள். சில பெண்கள் வட்டமாக அமர்ந்து ஒரு காயை (அம்மானைக் காய்)  வைத்து விளையாடும் விளையாட்டாம். நமது கிராமப்புறங்களில் விளையாடும் ‘சொட்டாங்கல்’ என்பது மாதிரியாகப் புரிந்து கொள்ளலாம். சில இடங்களில் இவ்விளையாட்டு ‘தட்டாங்கல்’ எனவும் வழங்கப் படுவதுண்டு.

சங்க காலப் பெண்டிர், இதை விளையாடுகையில், ஒரு பாடல் பாடி, அதன் இறுதிச் சொல் ‘அம்மானை’ என வரும்படி முடிப்பார்களாம்! அதனாலேயே அது அம்மானை.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தம் வீட்டுப் பெண்கள் சொட்டாங்கல் விளையாடுவதற்கு அண்ணன், தம்பிமார்கள் நல்ல கூழாங்கற்களுக்காக கண்மாய்களையும் ஊருணிகளையும் சுற்றிப் பெரும் தேடுதல் வேட்டையெல்லாம் நடத்திய கதைகளுண்டு. இப்போதோ, கிராமங்களில்கூட சொட்டாங்கல் விளையாடுகிறார்களா என்பதே சந்தேகம். இதில் எங்கிருந்து அம்மானைப் பாடலெல்லாம்?

சரி, ‘விளையாட்டு’க்காக நாயகியைப் பார்த்துப் பாடினாலும் அதில் இலாபமும் நியாயமும் உண்டு. ஆனால் இங்கு ஏன் ஒரு விளையாட்டையே பாடுகிறார் கவிஞர். விஜய. டி. இராஜேந்தர்?

இந்தப் பாடலில் வரும் அம்மானை என்பது விளையாட்டல்ல, பருவம்! அதாவது, அந்த விளையாட்டை விளையாடுவதற்கு உகந்த பருவம்!

தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பிள்ளைத்தமிழ், ஆண், பெண் குழந்தைகளுக்குரிய பருவங்களை வகுத்து வழங்கியுள்ள‌து. அதில் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரிய மூன்று பருவங்களுள் ஒன்று இந்த அம்மானை!

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று இப்போது புழங்கப் படும் பெண் வகைகளில், அம்மானைப் பருவத்திற்கான பெண்களாக பெதும்பையினரையும் மங்கையினரையும் குறிப்பிடலாம். அந்தப் பருவங்களில்தான் அவர்கள் அம்மானை விளையாடத் தொடங்குவதால் அப்படி அழைக்கப் படுகின்றனர்.

ஆக, கதாநாயகியை ஒரு குழந்தையாக பாவித்துக் காதலன் ‘பிள்ளைத் தமிழ்’ பாடுவதாக எழுதுகிறார் டி.ஆர்.

இதே ‘அம்மானை’ உள்ளிட்ட பருவங்களால் மதுரை மீனாட்சியம்மையைக் குழந்தையாக உருவகித்து, ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ இயற்றியவர் குமரகுருபரர். அவர் இந்தக் காதலுக்கு அருள்வாராக!

ராஜூ

பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம். கடந்த ஆறாண்டுகளாக தமிழிணைய வாசி. இது அது என்று வகை தொகையின்றி எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது பிடித்த செயல்.

வலைப்பூ: http://www.tucklasssu.blogspot.com
ட்விட்டரில்: http://www.twitter.com/naaraju