இலக்கணம் மாற்றுதோ

  • படம்: சங்கமம்
  • பாடல்: வராக நதிக்கரை ஓரம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=t3PObFxpoBI

பஞ்ச வர்ணக் கிளி நீ, பறந்தபின்னாலும்

அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு!

தமிழில் அடிப்படை எண்களைக் குறிப்பிடும் சொற்கள், சின்னக் குழந்தைக்கும் தெரியும்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்து.

ஆனால் இவற்றை உச்சரிக்கும்போது நாம் பல மாற்றங்களைச் செய்கிறோம். ‘ஒன்று’ என்பது ‘ஒண்ணு’ ஆகிறது, ‘இரண்டு’ என்பது ‘ரெண்டு’ ஆகிறது, இப்படியே மூணு, நாலு, அஞ்சு, ஒம்பது என ஆறு எண்கள் எழுத்திலிருந்து மாறுபடுகின்றன.

மற்றதெல்லாம்கூடப் பரவாயில்லை ஐ.ந்.து என்ற சொல் எப்படி அ.ஞ்.சு என்று மாறுகிறது? இந்த இரு சொற்களுக்கும் கொஞ்சம்கூடச் சம்பந்தம் இல்லையே, ’ஐ’க்குப் பதில் ‘அ’, ’ந்’க்குப் பதில் ‘ஞ்’, ‘து’க்குப் பதில் ‘சு’ என மூன்று எழுத்துகளும் மாறிவிட்டனவே, இது என்ன நியாயம்?

இப்படி ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் இன்னோர் எழுத்து தோன்றுவதைத் தமிழில் ‘போலி’ என்பார்கள். உதாரணமாக, ‘உரம்’ என்பதை ‘உரன்’ என்று எழுதுவார்கள், ‘மனம்’ என்பதை ‘மனது’, ‘மனசு’ என்று எழுதுவார்கள்.

இதுபோல் ஓர் எழுத்து இப்படி அப்படி மாறினால் பரவாயில்லை, இருக்கிற மூன்று எழுத்துகளுமே மாறினால்?

அதற்கும் இலக்கணப் பெயர் உண்டு, ‘முற்றுப் போலி’, அதாவது ஒரு சொல்லில் இருக்கும் அனைத்து எழுத்துகளும் முழுமையாக மாறி, போலி வடிவம் நிலை பெற்றுவிடுவது. ‘ஐந்து’ என்பது ‘அஞ்சு’ என மாறுவதுபோல.

சரி, இதற்கெல்லாம் ஏதாவது சூத்திரங்கள் உண்டா? அல்லது இஷ்டம்போல் மாற்றலாமா?

தமிழில் எல்லாவற்றுக்கும் தெளிவான வரையறைகள் உண்டு. பிழையைக்கூட இப்படிதான் செய்யவேண்டும் என்று வகுத்துவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

உதாரணமாக, ‘ஐந்து’ என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். மூன்று சூத்திரங்களின் அடிப்படையில் அது ‘அஞ்சு’ என எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

Rule 1 : தகரமும் சகரமும் ஒன்றுக்கொன்று போலியாக வரும்

இதன்படி, ஐந்து என்ற சொல்லில் 3வதாக வரும் ‘து’ என்ற எழுத்து மாறி, ‘சு’ என ஆகிறது, ‘ஐந்சு’

Rule 2 : நன்னூல் சூத்திரம், ‘ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே’, அதாவது, ஐ என்ற எழுத்தைத் தொடர்ந்து ‘ந’கர எழுத்து வந்தால், அது ‘ஞ’கரமாக மாறும்

இதன்படி, ‘ஐந்சு’ என்ற சொல்லில் ‘ஐ’யைத் தொடர்ந்து 2வதாக வரும் ‘ந்’ என்ற எழுத்து மாறி, ‘ஞ்’ என ஆகிறது, ‘ஐஞ்சு’

Rule 3 : அதே நன்னூலில் வேறொரு சூத்திரம், ‘அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்’, அதாவது ச, ஞ, ய என்ற எழுத்துக் குடும்பங்களுக்கு முன்னால் அ அல்லது ஐ வந்தால், அவை மாறித் தோன்றும், அதாவது, ‘அ’ என்பது ‘ஐ’ ஆகும், ‘ஐ’ என்பது ‘அ’ ஆகும்

இதன்படி, ‘ஐஞ்சு’ என்ற சொல்லின் முதலில் வரும் ‘ஐ’, அடுத்து வரும் ‘ஞ்’ காரணமாக, ‘அ’ என மாறுகிறது, ‘அஞ்சு’.

ஆக, ‘ஐந்து’ போச்சு (இலக்கண முறைப்படி) ’அஞ்சு’ வந்தது டும் டும் டும்!

***

என். சொக்கன் …

20 03 2013

109/365