உலகை மறந்த பூங்கோதை

  • படம்: விஸ்வரூபம்
  • பாடல்: உன்னைக் காணாது
  • எழுதியவர்: கமலஹாசன்
  • இசை: சங்கர், எஹ்சான், லாய்
  • பாடியவர்கள்: கமலஹாசன், சங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=fJ0LEFx44bY

பின்னிருந்து வந்து எனைப் பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு

உலகுண்ட பெருவாயன் என் வாயோடு வாய் பதித்தான்,

இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

இந்தப் பூங்கோதை மறந்தாளடி!

’விஸ்வரூப’த்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை முதல்முறை கேட்கும்போதே, ‘ஆண்டாள் Dictate செய்ய, கமலஹாசன் எழுதியதுபோல் இருக்கிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டேன். அந்த அளவுக்கு இந்தப் பாடலின் வரிகளில் ஆழ்வார் நிழல். நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் ஆண்டாள் நேரடியாகவும், மற்ற பல ஆழ்வார்கள் நாயகி பாவத்திலும் எழுதிய காதல் வரிகளை அடியொற்றி மிக அழகான ஒரு நவீனக் காதல் பாடலை எழுதியுள்ளார் கமலஹாசன்.

குறிப்பாக, ‘உலகுண்ட பெருவாயன்’ என்ற வர்ணனை பலரை ஈர்த்துள்ளது. திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரி அது:

இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம், இலங்கு ஒலி நீர் பெரும்பௌவம் மண்டி உண்ட

பெரு வயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம், பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெருவாயர் இங்கே வந்து, என்

பொருகயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

தோழி,

என் காதலனாகிய திருமால், பெரிய சத்தத்தை எழுப்பும் அலைகளைக் கொண்ட கடலுக்குள் மூழ்கி, அந்தத் தண்ணீர் மொத்தத்தையும் குடிக்கும் அளவுக்குப் பெரிய வயிறைக் கொண்டவன், உலகத்தையே கையில் ஏந்தி உண்ணும் அளவுக்குப் பெருவாயன், கருத்த மேகத்தைப்போன்றது அவனுடைய வண்ணம், பெரும் தவங்களைச் செய்த முனிவர்கள் சூழ, ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரத்துடன் அவன் இங்கே வந்தான்.

ஆனால், அவன் இங்கேயே (என்னுடன்) நிரந்தரமாகத் தங்கவில்லை. ‘தண்ணீரால் சூழப்பட்ட திருவரங்கம்தான் என்னுடைய ஊர்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டான்.

அவன் என்னை விட்டுப் பிரிந்ததால் சண்டையிடும் கயல் மீன்களைப்போன்ற என்னுடைய கண்களில் நீர் ததும்பியது, எனது உடல் மெலிந்தது, இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தன.

சுமாரான விளக்கவுரைதான். ஆழ்வார் தமிழை அழகு குறையாமல் Remix செய்வது அத்தனை சுலபமில்லையே!

ஆனால், இதை வைத்து உங்களுக்குக் காட்சி புரிந்திருக்கும். திருமாலின்மீது காதல் கொண்ட பெண், தன்னுடைய தோழியிடம் இப்படிச் சொல்கிறாள். திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான் என்று ஊகிக்கிறேன். ஆண் குரல்கள் பாடியிருப்பதுதான் ஒரே வித்தியாசம்.

அதனால் என்ன? திருமங்கை ஆழ்வாரும் ஆண்தானே?

***

என். சொக்கன் …

31 01 2013

061/365