விருந்தினர் பதிவு : வைஃபாலஜி
பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆயிரம் விஷயம் இருக்கிறது. அந்த நொடியில்தான் அறிமுகம் ஆகி இருந்தாலுமே கூட, எந்தக் கடையில இந்தப்புடவை வாங்கினே, இன்னிக்கு என்ன சமைச்சே, எப்படி அதைச் செய்யறது, குழந்தை சாப்பிடவே மாட்டேங்கறான், அந்த சீரியல் பார்த்தியா, இவர் வீட்டுக்கு வரை பத்து பத்தரை ஆயிடும்..விஷயத்துக்குப் பஞ்சமே இல்லை.
ஆனால் அதிக அறிமுகம் இல்லாத ஆண்கள் பேசிக்கொள்வதற்கான விஷயங்கள் மிகவும் குறைவே. ஆஃபீஸ் பற்றியோ சொந்த விஷயங்கள் பற்றியோ அறிமுகமில்லாதவக்ளிடம் பேச எப்போதுமே தயக்கம்தான். ஆனால் பொத்தாம் பொதுவாக, ஆஃபீஸ் பாஸைக் கிண்டல் அடிப்பதும் வீட்டு பாஸைக் கிண்டல் அடிப்பதும்தான் மிகச் சுலபமாக ஆண்களைக் கனெக்ட் செய்ய உதவும் விஷயங்கள். அதனால்தான் வைஃபாலஜி போன்ற விஷயங்கள் சூப்பர் ஹிட்டாகிவிடுகின்றன.
ஆனால் இது 4 வரி நோட் இல்லையா? சினிமாப்பாட்டுப் பற்றிதானே பேசவேண்டும்? வைஃபாலஜியை அழகாகச் சொன்ன சினிமாப்பாடல்கள் மிகக் குறைவுதான்.
செப்டம்பர் மாதம் வாழ்வில் துன்பத்தைத் தொலைத்து விட்டோம், அக்டோபர் மாதம் வாழ்வில் இன்பத்தைத் தொலைத்துவிட்டோம்.. துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ, இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் ஆனதே அப்போ..
இது ஒரு உதாரணம்தான், ஆனாலும் எனக்கு இந்தப்பாட்டு அந்த அளவுக்குப் பிடிக்காது. காரணம் 2.
1. மொழி நடை என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துபவன் நான். /ஆனந்த பாஷ்பத்தோடு அவளை நெருங்கி “என்னாம்மே இப்படிக்கீறே” என்றான்/ என்ற வரியைப்பாருங்கள். இதில் என்ன குறை? நினைக்கும் மொழிக்கும் பேசும் மொழிக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசம். கிட்டத்தட்டவாவது ஒரு கதையில்., பாட்டில் இந்த வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது என் அபிப்பிராயம். இந்தப்பாட்டில் மற்ற இடங்களில் எல்லாம் தூய தமிழைப் போட்டுவிட்டு எப்போ அப்போ என்று பேச்சுத்தமிழைக் கலந்திருக்கிறார் எழுத்தாளர். (மய்யா மய்யா பாடலிலும் இடஞ்சுட்டிப் பொருள்விளக்கு என்றெல்லாம் விளையாடிவிட்டு என் பேர் எழுதிருக்கு என்று கொச்சையில் இறங்கிவிட்டிருப்பார். )
2. பல்லவிக்குள் “பெண்கள் இல்லாத ஊரில் ஆண்களுக்கு ஆறுதல் கிடைக்காது – பெண்கள் இல்லாத ஊரில் ஆறுதலே தேவை இருக்காது” என்று பழைய ஜோக்கை உல்டா செய்த வரிகள். அதில் ஒன்றும் தப்பில்லை. இரண்டாவது பல்லவியில் அதையே ஆண்கள் பெண்களை இண்டர்சேஞ்ச் செய்திருக்கும் கற்பனைப்பஞ்சம்.
இவ்வளவு திட்டுகிறேனே, அப்போது நல்ல வைஃபாலஜிப்பாடலையும் அடையாளம் காட்டவேண்டும் இல்லையா?
கல்யாணம் செய்யக்கூடாது என்பதை எளிய உதாரணங்களோடு “எதிர்க்காத்துல எச்சி உமியாதே, நெருப்பாண்ட குப்பையக் கொட்டாதே” என்று ஆணி அடித்து விளக்கும் கந்தசாமியா ராமசாமியா என்ற கமலஹாசன் எழுதின பாடல்தான் அது.
“எதிரே ட்ராஃபிக்கு இல்லாத ரோடு இது.. குதிரை ஒண்ணு மட்டும் போட்டி ஜெயிக்கும் ரேஸு இது” ரெண்டு வரிதான். ஆண்களின் அத்தனைக் கஷ்டத்தையும் அடக்கி வைத்திருக்கிறார் கவிஞர் 🙂
“ஆறுபடை வூடு கட்னவரு கொஞ்சம் நாட்டி ஆனாரு, டபுளு டூட்டி செஞ்சாரு, அப்பால பட்ஜெட்டுத்தாளாம பழனிமலையில ஆண்டியா நின்னாரு.. தம்பி ஏழுமலையான் நிலையப்பார் எக்கச்சக்கமா கடனப்பார் – ஆண்டவனுக்கே இந்தக் கதின்னா அல்பங்க கதிய நினைச்சுப்பார்” – என்று மரணபயம் காட்டுகிறார்.
“ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு தத்து எடுத்துக்கயேன் – அதை நீ பெக்கத் தேவையில்லையே, உன்ன நாஸ்தி பண்ணுற கோஷ்டிகளால நோவத்தேவையில்லையே” என்று மாற்றுவழியும் காட்டுகிறார்.
போன பாடலில் சொன்ன இரண்டு குறைகளையும் அநாயாசமாகத் தூக்கி எரிந்திருக்கிறார் கமல். சென்னை முதலியார்க் குடும்ப டயலெக்டைப் படம்முழுக்கப் பேசியதோடு மட்டுமில்லாமல், அந்த வட்டாரவழக்கில் முழுப்பாடலையும் எங்கும் பிறழாமல் எழுதி இருக்கிறார். பல்லவியிலேயே கூட எதிர்க்காத்துல எச்சி உமியாதே ரிப்பீட் ஆகவில்லை – வரிக்கு வரி வித்தியாசம் நிச்சயமாகவே இருக்கிறது.
பொதுவாகவே பாடல்வரிகளை சிலாகிக்கும் எவரும் சென்னை பாஷைக் கவிதைகளை எல்லாம் தொட்டுக்கொள்ள மாட்டார்கள். “நைனா உன் நினைப்பால நான் நாஸ்தா துன்னு நாளாச்சி” என்னும் வா வாத்யாரே ஊட்டாண்டே வரிகள் எந்த மற்ற சிலாகிக்கப்படும் வரிகளை விடக் குறைந்ததில்லை என்பது என் எண்ணம்.
இந்த வசை என்னாற் கழிந்ததன்றே!
புத்தகங்களில் ‘ராம் சுரேஷ்’ எனப் பெயர் வாங்குவதற்கு முன்பாகவே (பின்பாகவும்) இணையத்தில் ‘பெனாத்தல் சுரேஷ்’ ரொம்பப் பிரபலம். உலகம் சுற்றும் (நிஜ) வாத்தியார். சீவக சிந்தாமணியைச் சுவையான நாவல் வடிவத்தில் தந்தவர். சமீபத்தில் இவரது இரண்டு த்ரில்லர் நாவல்கள் வெளிவந்துள்ளன.
பெனாத்தல் சுரேஷ் இணைய தளம்: http://penathal.blogspot.in/
ட்விட்டர்: https://twitter.com/penathal
Saba 3:23 pm on March 30, 2013 Permalink |
Amused by the wifeology blog, the other half had a good laugh 🙂 Sharing the link with other Y chromosomes.
amas32 (@amas32) 8:39 pm on March 30, 2013 Permalink |
ஒரு பாட்டை எடுத்து சிலாகித்து எழுதும் போது தான் மறைந்து கிடந்த அந்த பாட்டின் அருமை தூக்கலாகத் தெரிகிறது. அந்த விதத்தில் இன்று நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஓன்று. கமலே எழுதி, பாடி, நடித்தும் இருப்பது இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பு. அனுபவித்து செய்திருப்பார் 😉
சென்னையை மிகவும் நேசிப்பவள் நான், சென்னை தமிழை சற்றே கூடுதலாக! 🙂
amas32
GiRa ஜிரா 8:54 am on April 1, 2013 Permalink |
வைஃபாலஜின்னு தொடர் எழுதுனவருக்கு இந்தப் பதிவெல்லாம் சாதாரணம். ஆனா படிக்கிறவங்களுக்கு? ரசிக்க வைக்கும் ஒரு பதிவு.
கேட்ட பாட்டுதான். ஆனா அதுக்கு ஒரு அருமையான விளக்கம். நகைச்சுவை முந்திரிப்பருப்பு தூவிய பாயாசம் 🙂