உயிர்மூச்சு!

  • படம்: குஷி
  • பாடல்: கட்டிப்புடி கட்டிப்புடிடா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=XN4jzIORJtM

ஆக்ஸிஜன் இல்லாமல், இமயமலை ஏறாதே,

கற்பனை இல்லாமல், கட்டில்மேல் சேராதே!

தமிழ்ப் பாடல்களில் இலக்கியம் (பாரதிக்கு கண்ணம்மா, நீ எனக்கு உயிரம்மா), இலக்கணம் (இன்னிசை அளபெடையே), கலை (ரவிவர்மன் எழுதாத கலையோ), ஆங்கிலம் (கம்பன் எங்கே போனான், ஷெல்லி என்ன ஆனான்), வரலாறு (ராஜராஜ சோழன் நான்), புவியியல் (நதிகள் இல்லாத அரபு தேசம் நான்), தாவரவியல் (ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி, ஆணி வேர்வரையில் ஆடிவிட்டதடி), விலங்கியல் (கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை), கணக்கு(ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, உன்மேல் ஆசை உண்டு), ஜியாமிட்ரி (பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்) எல்லாம் வந்ததுண்டு, வேதியியல்?

வைரமுத்து இருக்க பயமேன்? ஆக்ஸிஜன்மேல் கவிஞருக்கு அப்படி என்ன பிரியமோ, தன்னுடைய பாடல்களில் இந்தப் பிராண வாயுபற்றிய விவரங்களை அள்ளித் தூவியிடுக்கிறார். உதாரணமாக, இந்தப் பாடலில் ‘மலையேற்றத்துக்கு ஆக்ஸிஜன் அவசியம்’ என்கிற உண்மையைச் சொல்லி, அதைக் குறும்பாகக் கட்டிலோடு இணைக்கிறார். கட்டிலேற்றத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன், ”கற்பனை”யாம். அட்டகாசம்!

அவரே எழுதிய இன்னும் சில ‘ஆக்ஸிஜன்’ வரிகள்:

‘அன்பே அன்பே’ பாடலில், ‘அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்.’

‘காதல் அணுக்கள்’ பாடலில், ‘ஓடுகிற தண்ணியில் ஆக்ஸிஜன் மிக அதிகம், பாடுகிற மனசுக்குள் ஆசைகள் மிக அதிகம்.’

வேதிப்பொருளாக அன்றி, வேகம் / துடிப்பு என்கிற அர்த்தத்திலும் வைரமுத்து ஆக்ஸிஜனைப் பயன்படுத்தியதுண்டு. ’உலக நாயகனே’ என்ற பாடலில் கமலஹாசனைப் புகழ்ந்து எழுதும்போது, ‘ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும், ஆக்ஸிஜன் குறையவில்லை’ என்பார் அழகாக.

ஆக்ஸிஜனுடைய அதே தத்தகாரம்தான் நைட்ரஜன், ஹைட்ரஜன், ஹீலியம், பேரியம், ரேடியம் எல்லாமே. ஆனால் ஏனோ, அவையெல்லாம் இந்த அளவுக்குப் பாடப்படவில்லை!

அது சரி, தமிழ்த் திரைப் பாடல்களில் அல்ஜீப்ரா உண்டா?

இல்லை என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது ‘எக்ஸ் மச்சி, வொய் மச்சி’ என்று ஒரு பாடல் சிக்கியது. பலே!

***

என். சொக்கன் …

07 08 2013

249/365