தும்பு துலக்குதல்
- படம்: சத்தம் போடாதே
- பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
- எழுதியவர்: நா. முத்துக்குமார்
- இசை: யுவன் ஷங்கர் ராஜா
- பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
- Link: http://www.youtube.com/watch?v=GOc05aY_OWs
நீ சிணுங்கும் மொழி கேட்டால், சங்கீதம் கற்றிடலாம்!
தண்டவாளம் இல்லாத ரயிலை,
தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்!
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்!
’என்கிட்ட வம்பு, தும்பு வெச்சுக்காதே’ என்று அடிக்கடி சொல்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்?
‘வம்பு’ என்றால் வீண் சண்டை என்று பொருள், அது நமக்குத் தெரியும். அதென்ன தும்பு? ’காசு, கீசு’, ‘காப்பி, கீப்பி’ என்று சும்மா இணைத்துச் சொல்வதுபோல் பொருளற்ற ஒரு சொல்லா அது?
தமிழில் சும்மா ஓசை நயத்துக்காகச் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருளற்ற சொற்கள் ‘கிகர’ வரிசையில் அமைவதுதான் வழக்கம். குழந்தை, கிழந்தை, கல்யாணம், கில்யாணம், கம்ப்யூட்டர், கிம்ப்யூட்டர், பாட்டு, கீட்டு…
அந்த வழக்கத்தின்படி, வம்புக்குத் துணையாகக் கிம்புதானே வரணும்? ஏன் தும்பு? அப்படியானால் ‘தும்பு’வுக்கு வேறு அர்த்தம் இருக்கிறதோ?
என்னிடம் உள்ள தமிழ் அகராதியில் தும்புக்கு இரண்டு பொருள்கள் தந்துள்ளார்கள்: கயிறு / நார்.
உதாரணமாக, ‘தும்பை விட்டு வாலைப் பிடி’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் அர்த்தம், மாட்டைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அதன் கழுத்தில் உள்ள கயிறை(தும்பு)தான் பிடிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு வாலைப் பிடித்தால் பலன் இருக்காது.
வீட்டைச் சுத்தப்படுத்தும்போது, ‘ஒரு தூசு தும்பு இல்லாம க்ளீன் பண்ணிட்டேன்’ என்கிறோம். இங்கே ’தும்பு’வின் பொருள் நார், அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு சின்னஞ்சிறிய குப்பை.
ஒரே பிரச்னை, கயிறு, நார் என்ற இந்த இரண்டு விளக்கங்களும் ’வம்பு தும்பு’வுக்குப் பொருந்தாது. மூன்றாவதாக இன்னோர் அர்த்தம் இருக்கிறதா? கொஞ்சம் துப்(ம்)பு துலக்க முயற்சி செய்தேன்.
’தும்பு’ என்று நேரடியாக இல்லாவிட்டாலும், ‘தும்பு பிடுங்குதல்’ என்று ஒரு பயன்பாடு இருக்கிறதாம். அதன் பொருள் ஒருவர்மீது குற்றம் சொல்லுதல், Accusing, போட்டுக்கொடுத்தல்.
இந்தத் தும்பு அந்த வம்புவுடன் அழகாகப் பொருந்துகிறது. ‘அவன்கிட்ட வம்பு தும்பு வெச்சுக்காதே’ என்றால், அவனை வீண் சண்டைக்கு அழைக்காதே, அவனாக ஏதாவது தப்புச் செய்தாலும் இன்னொருவரிடம் சென்று போட்டுக்கொடுக்காதே’ என்று அர்த்தம் என ஊகிக்கிறேன்.
சரிதானா? உங்களுடைய விளக்கங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
***
என். சொக்கன் …
31 12 2012
030/365
Rie 2:40 pm on December 31, 2012 Permalink |
சீவக சிந்தாமணியில் இருக்குதாம் இந்த வார்த்தை. “தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன”. தும்பு அற இது சொல், அதாவது குழப்பாமல் தெளிவாகச் சொல்.
elavasam 11:40 am on January 1, 2013 Permalink |
ஐயா
என்னிடம் உள்ள அகராதியில் தும்பு என்ற சொல்லுக்குப் பொருளாக இப்படி இருக்கிறது.
தும்பு (p. 536) [ tumpu ] , s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.
தூசு தும்பில்லாது எனச் சொல்லும் பொழுது 4. dust என்பது பொருத்தமாக இருக்கிறது. வம்பு தும்பு எனும் பொழுது கடைசி பொருளான குற்றம் என்பது சரியாக வருகிறது.