காசு மேலே, காசு வந்து…
ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?
ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.
அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.
பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.
இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே
அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.
இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.
கையில வாங்கினேன்
பையில போடல
காசு போன எடம் தெரியல்லே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே
இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.
பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
………………………………………………
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
இன்பத்தின் மனதில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.
காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
அட சுக்கிரன் உச்சத்தில்
லக்குதான் மச்சத்தில்
வந்தது கைக்காசுதான்
காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
……………………………………….
கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்
என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.
பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0
அன்புடன்,
ஜிரா
114/365
மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink |
wow.. super.. thanks geeraa.. :)))))))
GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink |
நன்றி 🙂
காசு மேலே, காசு வந்து… | ரேணுகா 4:12 pm on March 25, 2013 Permalink |
[…] காசு மேலே, காசு வந்து…. […]
rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink |
ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.
GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink |
நன்றி நண்பரே 🙂
Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink |
காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!
GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink |
ஆமா ஆமா.
ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!
amas32 8:28 pm on March 25, 2013 Permalink |
போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂
amas32
GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink |
அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.
அண்ணாதுரை 1:42 pm on October 28, 2020 Permalink |
எங்கே தேடுவேன் கண்ணதாசனின் பாடல் ..The Hind-Randor Guy-The lyrics for all the songs were written by Srinivasan’s brother, ace lyricist Kannadasan, with the exception of one song, which was written by Bharathidasan, the rebel poet of Pondicherry. Sivaji Ganesan and Padmini played the lead, while the other members of the NSK drama group such as T. K. Ramachandran,V. K. Ramasami, C. S. Pandian, Krishnan and Mathuram played significant roles.
G.Ra ஜிரா 9:43 pm on October 28, 2020 Permalink |
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்தப் பதிவு எழுதப்பட்ட ஆண்டில் பணம் திரைப்படத்தை இணையத்தில் பார்க்கக் கிடைக்கவில்லை. அதனால் தகவலையும் சரிபார்க்க முடியவில்லை. பொதுவாக கலைவாணர் பாடல்களை எழுதிக் கொள்வார் என்பதாலும் அவருடைய படம் என்பதாலும் பொதுப்புத்தி முடிவுக்கு வந்திருந்தேன். சரியான தகவலைத் தந்தமைக்கு நன்றி. தற்போது இப்படம் யூடியூபில் உள்ளது. ஆனால் எழுத்தில் யார் பாடல்களை எழுதினார்கள் என்று இல்லை. விக்கிப்பீடியாவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தற்போது update செய்யப்பட்டுள்ளது.