வேப்பமரம் புளியமரம்…

வசந்த் டிவியில் தினமும் மாலையில் வெவ்வேறு முருகன் கோவில்களின் படத்தொகுப்பை கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க  ஒளிபரப்புகிறார்கள். பலமுறை கேட்டதுதான். ஆனால் அன்று அந்த பட்டியலைக்  கூர்ந்து கவனித்தேன்.

வல்லபூதம் வலாஷ்டிக பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்
பெண்களை தொடரும் பிரம்ம ராட்சதரும் ்,
அடியனைக்  கண்டால் அலறி கலங்கிட

‘வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும்,உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்’ என்ற வேண்டுதல். http://muruganarul.blogspot.in/2012/10/8.html

பேய்களில் பூதங்களில் இவ்வளவு variety யா? அதிலும் ‘கொள்ளிவாய் பேய்’ என்ற பிரயோகம் சுவாரஸ்யமாக இருந்தது. கொஞ்சம் கூகிளினால் கிடைத்த தகவல் ஆச்சரியம்.  Marshlands எனப்படும் வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும், ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் என்று நம்பினர். நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் ஒரு விளக்கம் .மெதேன் வாயுவுக்கு ‘கொள்ளிவாயு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதுதான் கொள்ளிவாய் ஆனதா? ஆங்கிலத்திலும் Swamp Gas பற்றி இதே போல் படித்திருக்கிறேன்.

பேய்கள் பூதங்கள் என்றால் எனக்கு உடனே ஒரு பழைய திரைப்பாடல் நினைவுக்கு வரும். அரசிளங்குமரி படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா என்ற பாடல்.(இசை ஜி ராமநாதன், பாடியவர் டி எம் எஸ்) அதில் அவர் சொல்வது என்ன?   http://www.youtube.com/watch?v=7tlp04NBTM8

வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க – அந்த

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே -உந்தன்

வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே – நீ

அதிரடியான அறிவுரை. மகாகவி பாரதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொன்னதும் இதுதான்

வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

மகாநதி படத்தில் வாலியும் பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாதே என்று சொல்கிறார் http://www.youtube.com/watch?v=465RsI5PNOo ஆத்தங்கரையிலே  அரசமரத்தில, கோயில் குளத்துல, கோபுர உச்சியிலே பேய் இருக்குன்னு சொன்னாங்க அதை நம்பாதே என்கிறார் தொடர்ந்து எது பேய் எது பூதம் என்று definition சொல்கிறார்

அச்சங்கள் என்னும் பூதம்

உழைக்காம வம்பு பேசி அலைவானே அவன் பேய்

பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே  அவன் பூதம்

என்கிறார். பயம்தான் பேய் என்பது  பாரதி சொன்னதுதான்

பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பேய்’களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

இது எல்லா மதங்களிலும் இருக்கும் நம்பிக்கை. வேறு வேறு பெயர்கள். அவ்வளவுதான் ஆனால் கொஞ்சம் யோசித்தால் தீய எண்ணங்கள், பேராசை என்று மனிதனை தவறான பாதையில் செலுத்தும் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அதை சாத்தான் / பேய் என்று பல பெயர்களில் அழைத்தார்கள் என்று தோன்றுகிறது. அவற்றிலிருந்து விடுபட இறைவனை நோக்கி வேண்டுதல் வழக்கமாகியிருக்கும். கந்தர் சஷ்டி கவசம் சொல்வதும் அதுதான் கண்ணதாசன்

ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

ஆலய மணியோசை நெஞ்சில் கூடிவிட்டதடா

என்று சொல்வதும் அதையேதான்.

மோகனகிருஷ்ணன்

199/365