கம்யூனிசம் கொடுத்த பக்தி

நான்கு வருடங்கள் மட்டும் காய்த்து விட்டு மாயமாய்ப் போன ஒரு கவிமரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அன்று அந்த மரம் காய்த்த காய்கள் இன்றைக்கும் சுவைக்கும் நித்யகனிகள்.

பட்டுக்கோட்டை கம்யூசினச் சிந்தனையுள்ளவர். வயலில் இறங்கி உழுத பாட்டாளி. இவர் பள்ளியில் படித்தது குறைவு. ஆனால் இவர் தமிழ் படித்த இடம் மிகப் பெரிய இடம். ஆம். பாண்டிச்சேரி கனகசுப்புரத்தினம் என்னும் பாவேந்தரிடம் தமிழ் படித்திருக்கிறார்.

தமிழ்த் திரையிசையில் பெரும்பாலான பக்திப் பாடல்கள் கவியரசரால் எழுதப்பட்டவை. அடுத்து வாலி நிறைய எழுதியிருக்கிறார். இருவருமே பக்திமான்கள். பக்தி என்ற உணர்வில் ஊறியவர்கள். அந்த உணர்வில் நூற்றுக்கணக்கான பாடல்களையும் நூல்களையும் எழுதியுள்ளார்கள்.

ஆனால் பட்டுக்கோட்டையார்? கடவுளே இல்லை என்று நம்புகின்றவர். அவரிடம் போய் சாமிப்பாட்டு யாராவது கேட்பார்களா?

கேட்டும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டதுக்கு ஏற்ற சிறப்பையும் செய்திருக்கிறார் கவிஞர்.

காளமேகத்தை உறியில் கட்டி அடியில் நெருப்பு வைத்து பாடச் சொன்னார்களாம். அந்த அளவுக்குச் சிரமம் வைக்காமல் பட்டுக்கோட்டை தனது பாட்டுக் கோட்டையைக் கட்டியிருக்கிறார்.

உலகமே மேடையாய் நின்றிருக்க அதிலேறி உடுக்கை தட்டி ஆடுகின்ற ஈசனைப் பாட ஒரு பாட்டு!

உமையை ஒரு பாகமாய்க் கொண்டு மதுரையில் ஆட்சி செய்த சொக்கனைப் பாட ஒரு பாட்டு!

பட்டுக்கோட்டையாரிடமிருந்து வரும் வரிகளைப் பாருங்கள்!

கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா
நின் தாள் துணை நீ தா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா

எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா!

இந்தப் பாடலை எழுதியவன் கடவுளை நம்பாதவன் என்று யாரும் சொல்ல முடியுமா?

ஒரு நல்ல கவிஞன் எந்தச் சூழல் கொடுத்து எழுதச் சொன்னாலும் எழுதுவான். பாவேந்தரும் முருகன் மேல் நூல் எழுதியிருக்கிறாரே. அவருடைய சீடர் எழுதமாட்டாரா!

இந்தப் பாட்டு மட்டுமல்ல. பதிபக்தி என்ற படத்தில் பாட்டாளிக் கடவுளின் மேல் ஒரு பாட்டும் எழுதியிருக்கிறார்.

அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)

ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
ஏழை எங்கள் நிலைமையைத்தான்
எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி
குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக்கண்ணால் பாருமம்மா!
கும்பிடுபோடும் ஏழை எங்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)

இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது
எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
சூதுக்காரர் தொட்டிலிலே
காதும் கண்ணும் கெட்டு-நல்ல
நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை
நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி

கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,
சடச்சி,பெரியாட்சி
காட்சி கொடுக்கும் மீனாட்சி!
தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று
பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
பசியும் பிணியும் பந்தயம் போடுது!
கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
தேவைக்கேற்ற வகையில் உன்னை
போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்
திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி
உதிரக்காளி
நடனக்காளி சுடலைக்காளீ!
குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா!
கும்பிடுபோடும் ஏழை மக்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா!
நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)

ஏழைகளின் தெய்வத்தைப் பாடும் போது ஒரு ஏழையாகவே இருந்து அவர்களின் துன்பங்களையெல்லாம் அடுக்கியே பாடுகிறார்.

இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களும் எழுதியிருக்கிறார்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – தில்லையம்பல நடராஜா
எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர் – டி.எம். சௌந்தரராஜன்
படம் – சௌபாக்கியவதி
இசை – பெண்ட்யால நாகேஸ்வரராவ்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4

பாடல் – அம்பிகையே முத்து மாரியம்மா
எழுதியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.ராமமூர்த்தி
படம் – பதிபக்தி
பாடலின் சுட்டி – http://www.raaga.com/channels/tamil/album/T0001760.html

அன்புடன்,
ஜிரா