கவிதைகளில் கவியரசர்
தமிழ் திரைத்துறைக் கவிஞர்களில் இன்றும் அதிகமாக கொண்டாடப்படும் கவிஞர் கண்ணதாசன் என்று சொன்னால் மிகையாகாது. கண்ணதாசன் இந்த உலகை விட்டு மறைந்து ஆண்டுகள் முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் கண்ணதாசன் இன்றும் நம்மோடு தமிழ்ப் பாடல்கள் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அப்படிப் பட்ட கவியரசரின் நண்பரான மெல்லிசை மன்னர் இப்போதெல்லாம் மேடைக்கச்சேரிகளில் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என்ற பாட்டை “கண்ணதாசன் புகழ் பாடுங்களே” என்றுதான் மாற்றிப் பாடுகிறார்.
பொதுவாகவே பழைய கவிஞர்களை பாட்டில் வைப்பது பழைய தமிழ் வழக்கம். அதைத் திரைப்பாடல்களிலும் கண்ணதாசன் செய்திருக்கிறார்.
“கம்பன் ஏமாந்தான்” என்று எழுதினார். அதே பாடலில் “வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்” என்றும் எழுதினார்.
அதே போல பின்னாளில் பாடல் வரிகளில் மற்ற கவிஞர்கள் பரவலாகப் பயன்படுத்தியதும் கண்ணதாசன் பெயரைத்தான்.
அதை முதலில் தொடங்கி வைத்தது வாலிபக் கவிஞர் வாலி. “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ” என்று சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்துக்காக எழுதினார். காளிதாசனையும் கண்ணதாசனையும் ஒரே நிறையில் வைத்து அழகு பார்த்த வாலிக்கு வணக்கங்கள்.
அடுத்து ஒரு பாடல் வந்தது. இந்தக் கவிஞர் ஒரு காதல் கவிதையை எழுதி விட்டார். அதில் தவறுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. பாடலைத் திருத்திக் கொடுக்க கவியரசர் இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தார். உடனே எழுதினார்.
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் தேர்ந்தெடுத்து
இப்படி எழுத அந்தக் கவிஞர் கண்ணதாசனை மானசகுருவாக நினைத்திருந்தால்தான் முடியும். அப்படி நினைத்து எழுதியவர் கவிஞர் காளிதாசன்.
வைரமுத்து அவர்களும் கண்ணதாசன் பாடல்களை ரசித்திருக்கத்தான் வேண்டும். அதனால்தான் ”வந்தேண்டா பால்காரன்” பாட்டில் “மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும் கூடு, கண்ணதாசன் சொன்னதய்யா” என்று எழுதினார். கண்ணதாசன் அப்படி எழுதியது “போக்கிரிராஜா” படத்தில் இடம் பெற்ற “கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு.. மனுசன் நெனச்சான் உலகம் ரெண்டாச்சு” என்ற பாடலில்.
இப்படி ஒவ்வொரு கவிஞர்களும் கண்ணதாசனின் கவிதைச் சிறப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு பாட்டில் குறிப்பிடும் போது வந்தார் கவிஞர் கபிலன். கண்ணதாசனின் குடிப்பழக்கதை முன் வைத்து எழுதினார் ஒரு பாட்டு.
கண்ணதாசன் காரைக்குடி
பேரைச் சொல்லி ஊத்திக் குடி
இதுதான் காலத்தின் மாற்றமா? கவிஞனின் எழுத்தை மதிக்காமல் அவன் தனிப்பட்ட குறையை முன்னிறுத்தி எழுதுவது என்ன நியாயம் என்று புரியவில்லை. கண்ணதாசன் குடித்தார். உண்மைதான். ஆனால் அவர் திறந்த புத்தகமாக வாழ்ந்தார். அப்படி எத்தனை பேர் இப்போது வாழ்கிறார்கள்!
பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
காளிதாசன் கண்ணதாசன் (இளையராஜா, பி.சுசீலா, ஜெயச்சந்திரன்) – http://youtu.be/iM4hXOpYAcM
கண்ணதாசனே கண்ணதாசனே (தேவா, சித்ரா) – http://youtu.be/BMRQTScBZx4
வந்தேண்டா பால்காரன் (தேவா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்) – http://youtu.be/MRZ7_WMGFSM
கண்ணதாசன் காரைக்குடி (சுந்தர்.சி.பாபு, மிஷ்கின்) – http://youtu.be/6F1Nfw_Buvc
அன்புடன்,
ஜிரா
263/365
rajinirams 1:40 am on August 25, 2013 Permalink |
செம பதிவு சார்.நீங்கள் சொன்னது போல் கண்ணதாசன் புகழை முதலில் வாலி தான் தொடங்கிவைத்தார்.பட்டுக்கோட்டை வார்த்தைகள போட்டு நம்ம புரட்சியாரு பாடிவச்ச பாட்டு என்றும் வாலி தான் எழுதினார். இன்னொரு பாட்டு வரியிலும் சொன்னான் அந்த கண்ணதாசன் பாட்டிலே என்று வரும்-சரியாக நினைவில்லை.கவியரசரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.