விருந்தினர் பதிவு: கண்ணதாசன் எழுத்தைப்போல

படம்: வேட்டைக்காரன்

இசை: விஜய் ஆண்டனி

பாடல்: கபிலன்

பாடகர்கள்: சுசித் சுரேசன், சங்கீதா ராஜேஸ்வரன்

கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு

குழலில்ல குழலில்ல தாஜு மஹால் நிழலு

சேவலோட கொண்ட போல சிவந்திருக்குது உதடு

உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

பருத்திப் பூவப் போல பதியுது உன் பாதம்

பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து

கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து

கார் குழலை கரிகாலன் காலுக்கு இதற்கு முன்னால் யாரவது ஒப்பிட்டு இருக்கிறார்களா தெரியாது, ஆனால் நல்ல கற்பனை! காதலன் சொல்லும் அந்த வரிக்கு காதலி, இல்லையில்லை அந்த கருமை தாஜ் மஹாலின் நிழைலை ஒத்து இருக்கிறது என்கிறாள். காதல் சின்னமான தாஜ் மஹால் மிகப் பெரியக் கட்டிடமும் கூட. அதன் நிழல் அடர்த்தியாகத் தன இருக்கும்.

சேவலோட கொண்டை நல்ல சிவப்பு நிறம். உதடும் அதே நிறம் என்று சொல்வது மிகவும் பொருத்தம். ஆனால் காதலி தன உதடுகளை மந்திரித்தத் தகடு என்கிறாள். உண்மை தானே? காதலனைக் கிறங்க வைக்கும் செவ்வாய் அவளுடையது, மேலும் அவள் உதடுகள் சொல்வதைக் கேட்டு பூம் பூம் மாடு போல தலையை ஆட்டத் தானேப் போகிறான். அதனால் அவள் உதடு மந்திரித்தத் தகடு தான்🙂

பருத்திப்பூ வெடித்து அதில் வரும் இலவம் பஞ்சு மெத்து மெத்தென்று இருக்கும். காதலியின் பட்டுப் பாதங்களுக்கு பஞ்சை உவமையாக்குகிறான் காதலன், ஆனால் காதலியோ வெந்த பச்சரிசி சோற்றைப் போல மெதுவாக தன் கால்கள் இருப்பதாகச் சொல்கிறாள். வடித்தப் பச்சரிசி சாதம் எப்பொழுதும் ரொம்ப மென்மையாக இருக்கும்.

இந்தப் பாடலின் பல்லவியில் வரும் கடைசி இரண்டு வரிகள் தான் என்னை இந்தப் பாடலுக்கே ஈர்த்தது. வலம்புரி சங்கு வளைந்து வெண்மையாகவும் மழ மழவேன்றும் இருக்கும். காதலியின் கழுத்தை வலம்புரி சங்கைப் போல வழுக்குகிறது உன் கழுத்து என்கிறான் காதலன்.  அவளோ வழுக்கும் அவள் கழுத்தை கண்ணதாசன் எழுத்து என்கிறாள். எனக்கு இந்த வரி ஏனோ ரொம்பப் பிடித்தது. கவிஞன் கற்பனைக்கு சுதந்திரம் உண்டு. தீவிர கண்ணதாச ரசிகர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் இந்த உவமை கச்சிதமாக இந்த இடத்தில் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.  கண்ணதாசனின் கவிதைகள் மிகவும் மென்மையாகவும் படிக்க நெருடல் இல்லாமல் எளிமையாகவும் இருக்கும்.

சுஷிமா சேகர்

பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு🙂

சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/