விருந்தினர் பதிவு : யம்மா
எண்பதுகளில், தொண்ணூறுகளில் வந்த படங்களில் எல்லாம் தடுக்கி விழுந்தால் ஒரு காதல் தோல்விப் பாடலைக் கேட்கலாம். ஆண் பாடும் காதல் சோகப் பாடல்களே அவற்றில் அதிகம். பெண்ணின் காதல் தோல்வி சொல்லும் பாடல்களின் வீதம் மிகக் குறைவு. அப்படியே பாடல் கேசட்டில் இருந்திருந்தாலும் ஏதோ காரணத்தால் ”உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா”, போல கேசட்டோடு நின்று போகும் சில. (ராஜாதிராஜா பட கேசட்டில் இடம் பெற்ற இந்தப் பாடல் பின்னர் வேறு திரைப்படம் ஒன்றிற்கு உபயோகப்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு).
குத்து, ஃபேண்டஸி வகைப் பாடல்களின் ராஜ்ஜியமாக தமிழ்த் திரைப்பாடல் சூழல் உருமாறிய பின் சமீபத்தில் காதல் தோல்விப் பாடல்களுக்கான தேவை இங்கே குறைந்தே போனது. மின்னலே “வெண்மதி, வாரணம் ஆயிரம் “அஞ்சல” போல திடீரென்று சில பாடல்கள் குதித்து ஒரு ரவுண்டு வரும்.
அன்று முதல் இன்று வரை இந்தப் பாடல்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தோல்வியின் சோகத்தில் பாடப்படுவது; இரண்டு தோல்வியின் விரக்தியில் பாடுவது. முதலாவது தோல்வியின் சோகத்தில் புலம்புதல், இரண்டாவது புலம்பலோடு சேர்ந்து கொஞ்சம் திட்டுதலும்.
முதலாவது வகைக்கு உதாரணம் ’மலையோரம் வீசும் காத்து”, “வெண்மதி, அஞ்சல” வகைப் பாடல்கள். இரண்டாவது வகையில் சேர்பவை, “கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள், கம்பன் ஏமாந்தான்”தனமான பாடல்கள்.
முதல் வகையறாவில் சமீபத்தில் சேர்ந்து கொண்டது “ஏழாம் அறிவு” படத்தின் “யம்மா யம்மா காதல் பொன்னம்மா”. வெகு அரிதாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்.
பாடல்வரிகளுக்குச் சொந்தக்காரர் கபிலன்.
எஸ்.பி.பி. குரலைத் தவிர்த்துப் பாடலில் வேறேதும் சிறப்பு லேது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். சமீபத்தில் வெளியூர்ப் பயணத்தின்போது காரில் இந்தப் பாடலை ஆற அமர கேட்கையில்தான் இந்தப் பாடலின் நாலுவரி(களுக்கு) நோட்(ஸ்) கிடைத்தது J
இந்தப் பாடலின் முதல் சரணத்தின் கடைசி இருவரிகள் மற்றும் இரண்டாவது சரணத்தின் கடைசி இருவரிகளே அவை.
காதல் ஒரு போதை மாத்திரை;
அதை போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
”காதலில் விழுந்தவனுக்கு இறந்தபின் மூங்கிலில் கட்டித் தூக்கிச் செல்லப்படும் நிலைமையே சாத்தியம்” எனும் சாதாரண அர்த்தம்தான் இதற்கு என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். என் கோ-ப்ரதர் வேறோர் அர்த்தம் சொன்னார்.
“அது அப்படி இல்லை ஃப்ரெண்டு. போதை மாத்திரை எடுத்தவனை அந்த போதை மாத்திரைதான் கண்ட்ரோல்’ல வெச்சிருக்கும். ஆத்துல மூங்கில் அடிச்சிட்டுப் போனா அதோட பிரயாணத்தை ஆறுதான் தீர்மானிக்கும்; மூங்கில் தீர்மானிக்காது. அதுபோல ஆகிடும் காதல்ல விழுந்தவன் நிலைமை. ன்னு சொல்றாரு கவிஞர்”, என்றார்.
அட இந்த அர்த்தம்தான் சரியோ?
காதல் இல்லா ஊரு எங்கடா;
என்னை கண்ணைக் கட்டி கூட்டிப் போங்கடா
இது ரொம்ப சிம்பிள்! காதலால் நான் உற்ற துயர் போதும். காதல் இல்லாத ஊருக்கு என்னைக் கொண்டு போங்கள். தட்ஸ் இட்?
இல்லை! அத்தோடு முடியவில்லை அவனது கோரிக்கை. அவன் கோருவது தன் கண்ணைக் கட்டிக் கூட்டிப் போகச் சொல்கிறான். காதல் பித்தினில் தான் எந்த தருணத்திலும் அவளைத் தேடி இங்கேயே திரும்ப வந்துவிடும் நிலைமை ஏற்படலாம். அது கூடவே கூடாது. திரும்ப வரும் வழி நான் அறியாவண்ணம் என் கண்களைக் கட்டிக் கூட்டிப் போங்கள் என்கிறான்.
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஆர். எஸ். கிரி
என்னா சார் பெரிய அறிமுகம். கடந்த முப்பத்ந்தைந்து வருடங்களாக தமிழ் இலக்கியத்தில் உழல்பவர்; ழார் பத்தாய், ஜின்முன்கின் போன்றவர்களின் இந்திய வாரிசு’ன்னு எதுனா போடுங்க சாமி…
”என்னத்த சொல்ல” என்பதைத் தவிர தன்னைப் பற்றி சொல்ல ஏதுமில்லை எனக் குறிப்பிடும் கிரி கடந்த இருபது வருடங்களாக சென்னைவாசி, ஐந்து வருடங்களாக தமிழ்வலைவாசி. “பேசுகிறேன்” என்று மொக்கை போடச் செய்வார். “பாடுகிறேன்” என்று பிறரை ஓடச் செய்வார்.
நல்லவர், வல்லவர் என்று மட்டும் தன்னைப் பற்றி குறிப்பிட்டால் போதும் என்று கேட்டுக் கொண்டார்.
anonymous 7:52 pm on May 2, 2013 Permalink |
“மூங்கில் யாத்திரை” கூர்மையான நோக்கு; வாழ்த்துக்கள் கிரி
மூங்கில் -ன்னாலே உறுதி;
ஆற்றங்கரையில் வளரும் போது, மூங்கில் வெறுமனே காற்றில் ஆடும்; “ஜா”லியா இசை பாடும்;
அதுவே, காதல் எனும் ஆற்றில் விழுந்து விட்டால்?
அத்தனை உறுதியான மூங்கிலை, மேலே காற்றும் அலைக்கழிக்கும்; கீழே நீரும் அலைக்கழிக்கும்; பாவம் அந்தப் பயணம்;
காற்று = (வெளியில்) ஒலக வாழ்க்கை; நீர் = (மனசுக்குள்) காதல் வாழ்க்கை;
மூங்கில்=?
முருகனையே நம்பிச் சீரழிந்த உள்ளம்-ன்னு வச்சிக்கலாம்:)
அழகான இலக்கியப் பாட்டே இருக்கு, “மூங்கில் யாத்திரைக்கு”;
“மூங்கில் வந்தணைதரு முகலியின் ஆற்றினில்
வீங்கு வெந்துயர் இழுத்து அவன் வீடு எளி தாகுமே”
amas32 5:04 am on May 3, 2013 Permalink |
இந்தப் பாடலில் எனக்கும் இந்த இரு வரிகள் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். புல்லாங்குழலும் மூங்கிலால் தான். இறைவன் இசைக்கும் புல்லாங்குழலை செய்யப் பயன்படும் அதே மூங்கில் நம் கடைசி யாத்திரைக்கும் பயன் படுகிறது.
amas32
GiRa ஜிரா 8:46 am on May 3, 2013 Permalink |
நல்ல பதிவு கிரி. மூங்கிலின் பயணம் அருமையான விளக்கம். நதியோடு போனால் கரையுண்டு கண்ணே விதியோடு போனால் கரையேது என்ற வைரமுத்து வரிகள் நினைவுக்கு வருகின்றன.