பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.

”ஏன் உழவு செய்கின்றீர்கள்? விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.

இந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
படம் – தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.லீலா
பாடல் – ஏ.மருதகாசி
இசை – கே.வி.மகாதேவன்

அன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.

பொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா? நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.

தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
மையாடும் பூவிழியில்
மானாடும் நாடகத்தை
மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
நீ என்னை தேடுவதும்
காணாமல் வாடுவதும்
கடவுள் தந்த காதலடி வாடி
படம் – நிலவே நீ சாட்சி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

தை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா? எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா? புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா? புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா?

இருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்?

பூஞ்சிட்டுக் கன்னங்கள்
பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும்
தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
படம் – துலாபாரம்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
இசை – டி.தேவராஜன்

ஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.

வளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.

பொங்கலு பொங்கலு வெக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பூ பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
படம் – வருஷம் 16
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
இசை – இசைஞானி இளையராஜா

எப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
படம் – மகாநதி
பாடியவர் – கே.எஸ்.சித்ரா
பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
இசை – இசைஞானி இளையராஜா

இப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா?

ஆடுங்கடா என்னச் சுத்தி
நான் ஐயனாரு வெட்டுகத்தி
பாடப் போறேன் என்னப் பத்தி
கேளுங்கடா வாயப் பொத்தி
கெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
போக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்
படம் – போக்கிரி
பாடியவர் – நவீன்
பாடல் – கபிலன்
இசை – மணி சர்மா

இப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

அன்புடன்,
ஜிரா

044/365