ஊறல் சுவை

தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்
………………………
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்குறேன்

இந்தப் பாடல் சிந்துபைரவி படத்தில் ஒரு பிரபலப் பாடகன் குடித்து விட்டுப் பாடுவதாக அமைந்த பாட்டு. இந்தப் பாட்டில் குடிப்பதுக்கு நல்ல துணை ஊறுகாய் என்று வருகிறது. இந்தப் பாட்டில் மட்டுமல்ல அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற “கண்ணதாசன் காரைக்குடி” பாட்டிலும் ஊறுகாயும் வருகிறது.

கண்ணாடி கோப்பையிலே கண்ணை மூடி நீச்சலடி
ஊறுகாயை தொட்டுகினா ஓடிப்போகும் காச்சலடி

இப்படியாக பாட்டில் வரும் பாட்டில் எல்லாம் ஊறுகாயை இழுப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது என்பதைத்தான் முதல் பாட்டில் வைரமுத்துவும் இரண்டாம் பாட்டில் கபிலனும் காட்டியிருக்கிறார்கள்.

தண்ணி அடிக்கும் போது மட்டுந்தானா ஊறுகாய்க்கு வேலை?

இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். குடும்பவிளக்கு என்னும் நூலில் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரை உபசரிக்கும் முறையில் ஊறுகாய்களைப் பற்றி அடுக்குகிறார் பாருங்கள்.. ஆகா. பாட்டைப் படிக்கும் போதே வாயூறும். அந்த வரிகளைத் தருகிறேன். படித்துப் பாருங்களேன்.

இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை! வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் – நேருறவே
வெந்தயம் மணக்கஅதன் மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் – நைத்திருக்கும்
காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே
இட்டுமேல் மூடிவைத்தேன் தேடிப்பார்!

படித்தாலே எளிமையாகப் புரிந்து விடும் பாடல்தான். ஆனாலும் பாரதிதாசன் சொல்லும் ஒவ்வொரு ஊறுகாயையும் சற்று அலசலாம்.

இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை

எலுமிச்சை ஊறுகாய் உடனடியாகச் செய்து விடக் கூடியதல்ல. இன்று செய்து நாளை திங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஊறுகாய்களுக்கு ஓடிவிடுங்கள். உப்பில் எலுமிச்சை நன்றாக ஊற வேண்டும். சில அவசரக்குடுக்கைகள் எலுமிச்சையை வேகவைத்து ஊறுகாய் போடுவார்கள். ஆனால் அதில் கசப்பேறி விடும்.

ஆகையால் எலுமிச்சை ஊறுகாய் போடுகின்றவர்களை ”தயவுசெய்து வேகவைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொள்கிறேன். ஊற ஊறத்தான் ஊறுகாய்.

உப்போடு எலுமிச்சை நன்றாக ஊறிய பிறகு எலுமிச்சையின் தோலும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் இற்றுப் போய் கலந்து விடும். துண்டு துண்டாக எடுத்து இலையில் போட முடியாது. அல்வா பதத்தில் இருக்கும். அதனால்தான் இற்றுத் தேன் சொட்டும் எலுமிச்சை என்றிருக்கிறார் பாவேந்தர். ரசிகரய்யா நீர்!

வற்றியவாய் பேர் உரைத்தால் நீர் சுரக்கும் நாரத்தை

நாரத்தம் பழத்துக்கு இயல்பான சுவை புளிப்பு கலந்த கசப்பு. நாட்டு நாரத்தை மலைநாரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. நாட்டு நாரத்தை உருண்டையாகவும் மலைநாரத்தை சற்று நீளமாகவும் இருக்கும்.

ஏணி தோணி அன்னாவி நாரத்தை” என்றே ஒரு சொலவடை உண்டு. ஏணி எல்லாரையும் ஏற்றி விடும். ஆனால் அங்கேயே இருக்கும். தோணியும் பலரைக் கரையேற்றும் ஆனால் அங்கேயே இருக்கும். அன்னாவி(ஆசான்) பலரைக் கரையேற்றி மேல்படிப்புக்கு அனுப்புவார். ஆனால் அவர் அந்தப் பள்ளியிலேயே இருப்பார். அது போல வயிற்றுக்குப் போனது எதுவானாலும் அதைச் செமிக்க வைத்துவிடும் நாரத்தை முழுதாகச் செமிக்காது என்று சொல்வார்கள்.

நாரத்தையை எலுமிச்சை ஊறுகாய் போடுவது போலவே ஊறுகாய் போடலாம். இன்னொரு வகை உப்பில் ஊறவைத்து காய வைக்கும் வகை. இதில் மிளகாய்ப் பொடியே இருக்காது. வெறும் உப்பும் நாரத்தையும்தான். இன்னும் எளிமையாகச் சொன்னால் மோர்மிளகாய் செய்யும் அதே செய்முறைதான்.

அப்படி உப்பில் ஊறிக் காய்ந்த துண்டுகள் நாட்பட இருக்கும். ஒரு இணுக்கு கிள்ளி வாயில் போட்டலே… ஆகா…ஆகா. அதைச் சாப்பிட்டவர்கள் மறுமுறை நினைத்தாலே வாயில் நாவூறும். அதைத்தான் “வற்றியவாய் பேருரைத்தால் நீர் சுரக்கும் பேர் பெற்ற நாரத்தை” என்கிறார் பாவேந்தர். காய்ச்சல் காலத்தில் வாய்க்கு எதுவும் பிடிக்காமல் போகும் போது நாரத்தை ருசிக்கும் துணை.

மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் – நேருறவே
வெந்தயம் மணக்கஅதன் மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின் ஊறுகாய்

ஊறுகாய்களின் ராணி எலுமிச்சை என்றால் ராஜா மாங்காய். மாங்காய் ஊறுகாய் பிடிக்காது என்று யாரும் சொல்லக் கேட்டதேயில்லை.

மாங்காயில் மட்டுந்தான் விதவிதமான ஊறுகாய்களை உருவாக்க முடியும். மாங்காய்த் தொக்கு, ஆவக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மாவடு, இனிப்பு மாங்காய், உலர்த்திய மாங்காய் என்று பலப்பல வகைகள்.

பொதுவில் மாங்காய் ஊறுகாய்க்கு தாளிக்கும் போது நல்லெண்ணெய்தான் மிகப் பொருத்தம். அதில் சிறிது வெந்தயமும் பெருங்காயமும் கலந்துவிட்டால்… அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கக் கூட மக்கள் ஆயத்தமாக இருப்பார்கள்.

நாலு நாட்கள் வரக்கூட இன்ஸ்டண்ட் ஊறுகாய் முதல் நாலாறு மாதங்கள் தாண்டியும் சுவைக்கும் ஊறுகாய் செய்ய மாங்காயே உற்ற துணை.

நைத்திருக்கும் காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன்

எங்கள் ஊரில் பாட்டிகள் எல்லாம் இருந்த வரை சோறு வடித்துதான் பழக்கம். அந்த வடிநீரைக் கீழே ஊற்ற மாட்டார்கள். ஒரு பெரிய மண்பானையில் ஊற்றி வைத்துவிடுவார்கள். அது புளித்த நீராக மாறும். அதைத்தான் காடி என்பார்கள். காடி என்பது இன்று கடைகளில் கிடைக்கும் செயற்கை வினிகர் அல்ல. இயற்கையாகவே வீடுகளில் கிடைத்த புளித்தநீர்.

இந்த நீரில் மிளகாயையும் மிளகையும் ஊறப்போட்டு விடுவார்கள். அதிலேயே ஊறிக் கொண்டிருக்கும் மிளகாயை மோர்ச்சோற்றுக்கு சேர்த்துக் கொண்டால்.. அடடா! மேலே சொன்ன அத்தனை ஊறுகாய்களும் தோற்றுவிடும்.

அரிசிச் சோற்றுக்கு மட்டுமல்ல, கம்பஞ்சோற்றுக்கும், கேப்பைக் களிக்கும், சோளக் கூழுக்கும், குதிரைவாலி சோற்றுக்கும் பொருந்தும் ஒரே ஊறுகாய் ஜாடியில் நிறைந்திருக்கும் காடி மிளகாய்தான்.

கவிஞர்களுக்கு ரசனை மிகமிக அவசியம். அந்த ரசனை இருந்ததால்தான் ஊறுகாயைப் பற்றியும் இப்படியெல்லாம் பாரதிதாசனாரால் கவிதை எழுந்த முடிந்தது. அது சரி. அதனால்தானே அவருக்குப் பெயர் பாவேந்தர்.

பாவேந்தர் நான்கு ஊறுகாய்களோடு நிறுத்திக் கொண்டாலும் ஊறுகாய் வகைகள் எக்கச்சக்கம். உங்களுக்குப் பிடித்த ஊறுகாய் வகைகளைப் பற்றிச் சொல்லுங்களேன்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

பாடல் – தண்ணித் தொட்டி தேடி வந்த
வரிகள் – வைரமுத்து
பாடியவர் – கே.ஜே.ஏசுதாஸ்
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/AHB9TIC04Gc

பாடல் – கண்ணதாசன் காரைக்குடி
வரிகள் – கபிலன்
பாடியவர் – மிஷ்கின்
இசை – சுந்தர் சி பாபு
பாடலின் சுட்டி – http://youtu.be/6F1Nfw_Buvc

அன்புடன்,
ஜிரா

221/365